ஜனாதிபதித் தேர்தலில் சகலரினதும் பார்வை திரும்பியுள்ள அதேசமயம், பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுள்காலம் அடுத்த ஏப்ரலுடன் முடிவடையவுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழு இந்த நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
வட மாகாணத்தின் ஆசனங்களின் எண்ணிக்கை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 1987 இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையை தொடர்ந்து வடக்கு,கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தன. ஆயினும் 2006 அக்டோபரில் இந்த இணைப்பு சட்டரீதியற்றது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆகும். புதிய பாராளுமன்றத்திலும் அந்த எண்ணிக்கை இதே விதமானதாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 9 ஆசனங்களும் வன்னி மாவட்டத்துக்கு 5 ஆசனங்களும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 6 ஆசனங்களும் திருகோணமலை மாவட்டத்துக்கு 4 ஆசனங்களும் திகாமடுல்லவுக்கு 7 ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.