செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஜனாதிபதி மஹிந்த சார்பில் நேற்று கட்டுப்பணம்

elc-2010.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பாக நேற்று (7) தேர்தல் செயலகத்தில் கட்டுப் பணம் செலுத்தப்பட்டது.

ஐ. ம. சு. முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் ஐ. ம. சு. முன்னணி சார்பாக நேற்று கட்டுப்பணம் செலுத்தியதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி தெரிவித்தார்.

ஏற்கனவே 7 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் இது வரை 8 பேர் கட்டுப் பணம் செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 16 ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் ஏற்கப்படவுள்ளன.

பிரிட்டிஷ் நோர்வே தூதுவர்கள் யாழ். விஜயம்

பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் பீட்டர் ஹேய்ஸ், மற்றும் நோர்வே தூதுவர் டோர் ஹெட்ரம் ஆகியோர் இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று யாழ். குடாநாட்டுக்கு சென்றனர்.

இந்த விஜயத்தின்போது அவர்கள் இராணுவ மற்றும் கடற்படை தளபதிகளுட னும், யாழ். அரச அதிபர் உள்நாட்டு, வெளி நாட்டு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங் கள், ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் மற் றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊழி யர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து பேசுவர்.ஆணையிறவுக்கு செல்லும் அவர்கள் அங்கு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம் ஒன்றை பார்வையிடுவதுடன் யாழ்ப்பாணத்துக்கு அருகே உள்ள தீவுகளுக்கு சென்று அங்குள்ள மக்களையும் சந்திப்பார்கள்.

மனித உரிமை தேசிய திட்டம் நாளை மறுதினம் வெளியீடு

minister-mahinda-samarasinghe.jpgமனித உரிமை தொடர்பான தேசிய செயற் திட்டம் தயாரிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதுடன் டிசம்பர் 10 ஆம் திகதி அதனை வெளியிடத் தீர்மானித்துள்ள தாக அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜெனீவா மனித உரிமை கவுன்ஸிலின் மதிப்பீடுகளுக்கமைய தயாரிக்கப்பட்டுள்ள மேற்படி செயற்றிட்டத்தின் பிரதியொன்றை ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் கையளிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இச்செயற் திட்டத்தின் உள்ளடக்கம் அனைத்துக் கட்சிகள் பாராளுமன்ற நிலையியற் குழு மற்றும் சிவில் அமைப்புகள், பொது மக்களுக்கும் வழங்கப்படவுள்ளதுடன் அமைச்சரவை அனுமதியுடன் நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் பல சவால்களை வெற்றியுடன் எதிர்கொண்டு ள்ளது. மேலும் பிரச்சினைகள் சவால்கள் எம்மத்தியிலுள்ளன. பிரச்சினைகள் படிப் படியாகத் தீர்க்கப்பட்டு வருகின்றன.

ஐ.நா.வின் விசேட தூதுவர் முன்னாள் சிறுவர் போராளிகளை சந்தித்தார்

சிறுவர் களுக்கான ஐ.நா. வின் விசேட தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பற்றிக் கம்மெயார்ட் முன்னாள் சிறுவர் போராளிகளை நேற்று திங்கட்கிழமை சந்தித்ததுடன், அரசாங்க அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

புலிகளினால் பலவந்தமாக படைக்குச் சேர்க்கப்பட்டிருந்த சுமார் 300 சிறுவர்களை கம்மெயார்ட் சந்தித்ததாக ஐ.நா.வின் பேச்சாளர் கோர்டன் வைஸ் கூறினார். மட்டக்களப்புக்குச் செல்லவுள்ள கம்மெயார்ட் அதன் பின்னர் வவுனியாவுக்குச் சென்று அங்கு தொழில்பயிற்சி பெற்றுவரும் சிறுவர்களை பார்வையிடவுள்ளார். சுமார் 11 ஆயிரம் பேர் புனர்வாழ்வு நிலையங்களில் வைக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா இரட்ணாயக்கா ஏ.எவ்.பி.செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்

ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்ய பாடுபடுவேன – சுதந்திரக் கட்சியில்; இணைந்த எஸ்.பி. உறுதிமொழி

sb-dissanayake.jpgஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஓய்வு பெற்ற சரத்பொன்சேகாவைத் தோல்வியுறச்செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பனிப்புடன் பாடுபடுவதாக ஐ.தே.கட்சியிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்துகொண்ட எஸ்.பி.திஸாநாயக்க உறுதியளித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதியயின் வெற்றியை உறுதி செய்வதற்காக தாம் ஐ.தே.க வில் வகித்த பதவிகள் அனைத்தையும் உதரித்தள்ளிவிட்டு இவ்வாறு இன்று ஐ.மு.சு.கூட்டமைப்பில் இணைந்துகொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர், வலப்பனை தேர்தல் தொககுதியின் பிரதான அமைப்பாளர் மற்றும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து விலகிக் கொள்வதாக எஸ் பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை தாம் மேற்கொண்ட இந்த தீர்மானத்துக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்;றும் அவருடன் நெருங்கியவர்களும், தற்போது பாரிய நம்பிக்கையுடன் வந்திருப்பவர்களுமே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எஸ்.பி. திசாநாக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகாவுடன் நேற்று சம்பந்தன் சந்திப்பு

Sambanthan_Rஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக அரசுத் தரப்புடனும் எதிர்க்கட்சி தரப்புடனும் தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவது என்று த. தே.கூட்டமைப்பின் தலைமை தீர்மானித்திருக்கின்றது. இதன் ஓர் அம்சமாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் நேற்று மாலை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சு நடத்தினார்.

மதவாச்சி, கெப்பித்திகொள்ளாவ சோதனைச்சாவடி; பாஸ் நடைமுறை நீக்கம்

buss.jpgமதவாச்சி மற்றும் கெப்பித்தி கொல்லாவ சோதனைச்சாவடிகளில் நடைமுறையிலிருந்த வாகன பாஸ் முறைமை நேற்று முன்தினம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

இதற்கான அங்கீகாரத்தை பாது காப்பு அமைச்சு வழங்கியுள்ளது. இதன்படி நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலிருந்தும் வாகனங்கள் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ சோதனைச்சாவடி ஊடாக எவ்வித கட்டுப்பாடும் இன்றி சென்றுவர முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வாகன பாஸ் நடைமுறை நீக்கப்பட்டதை அடுத்து முதன் முறையாக கொழும்பிலிருந்து சென்ற வாகனங்கள் இச்சோதனைச்சாவடி களூடாக வவுனியா மற்றும் திருகோணமலை சென்றன.

காலி சிவன் கோவிலில் கொள்ளையர் அட்டகாசம் 17 விக்கிரகங்களை பெயர்த்தெடுத்துச் சென்றனர்

காலி சிவன் கோவிலுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த கொள்ளைக் கோஷ்டியொன்று நூறு வருடங்களுக்கும் மேல் பழைமை வாய்ந்த பெறுமதி மதிக்க முடியாத 17 விக்கிரகங்களைப் பெயர்த்துச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் தென் பகுதியில் தமிழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்தத் துணிகர கொள்ளை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பல அரசியல் பிரமுகர்களும் பொலிஸாரை வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது காலி நகரில் பஸ் நிலையத்திற்கு அருகிலும் நகரசபை மண்டபத்திற்கு முன்பாகவும் சிவன் கோவிலுள்ளது. ஆலயத்தின் நான்கு புறமும் பெரிய மதில் சுவர்கள் உள்ளன. ஆலயத்தின் முன்புறவாசல் காலிமாத்தறை வீதியிலும் பின்புறக் கதவு காலிகொழும்பு வீதியிமுள்ளது. கோயிலின் பாதுகாப்புக்காக காவலாளியும் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் வாகனமொன்றில் வந்த நான்கு பேர் கொண்ட கொள்ளையர் கோயிலின் பின்புற வாசல் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போது அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் இவர்களை தடுத்து நிறுத்த முனைந்ததுடன் உதவி கேட்டு குரல் எழுப்பியுமுள்ளõர்.

எனினும் ஆலயத்தைச் சுற்றி நான்கு புறங்களிலும் பெரிய மதில் சுவர்களிருந்ததால் அது வெளியே கேட்கவில்லை.  இதற்கிடையில் அந்தக் கொள்ளையர்கள் காவலாளியை மடக்கிப் பிடித்து அவரைக் கடுமையாகத் தாக்கிய பின் அவரது கையையும் காலையும் கயிற்றால் கட்டிப் போட்டு விட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால் அங்கிருந்த பெரிய சுற்றியல்கள் மற்றும் உளிகள் மூலம் சிவன் மற்றும் அம்மன் கோவில் கதவுளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து உள்ளே பூட்டப்பட்டிருந்த கதவுகளையும் உடைத்து விக்கிரகங்களை அடியோடு பெயர்த்துள்ளனர்.

ஐம்பொன் மற்றும் பவுணினாலான 14 பெரிய விக்கிரகங்களையும் மூன்று சிறிய விக்கிரகங்களையும் அவற்றின் இருப்பிலிருந்து பெயர்த்து பலத்த சிரமத்தின் மத்தியில் ஒன்றொன்றாக கோயிலினுள்ளிருந்து சுமார் 50 யார் தூரத்தில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு கொண்டு வந்து ஏற்றியுள்ளனர்.

மிகவும் பாரமான இந்த விக்கிரகங்களை தூக்கித் தூக்கி நிலத்தில் வைத்தவாறே வெளியே கொண்டு சென்றதற்கான அடையாளங்கள் உள்ளன. கொள்ளையர்கள் சிவன், முருகன், பிள்ளையார், வள்ளி, தெய்வானை, அம்மன், கிருஷ்ணர், சண்டேஸ்வரர் உட்பட 17 விக்கிரகங்களை பெயர்த்துச் சென்றுள்ளதாக ஆலய பரிபாலன சபைத் தலைவர் சேனாதிராஜா இரத்தினராஜா தெரிவித்தார். பெயர்த்தெடுக்கப்பட்ட அனைத்து விக்கிரகங்களும் நூற்றாண்டு பழைமை வாய்ந்தவை. இவற்றின் பெறுமதி மதிப்பிடப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரும் உடனடியாக அங்கு வந்து புலன்விசாரணைகளை ஆரம்பித்தனர். நேற்று மாலை வரை எவரும் கைதாகவுமில்லை.

தேர்தலைக் கண்காணிக்க 4 வெளிநாட்டுக் குழுக்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா உறுதியளிப்பு

dayananda_disanayake.jpgஜனவரி 26 இல் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க 4 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் வருகை தரவுள்ளன. ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய தேர்தல் ஆணைக்குழு என்பனவற்றைச் சேர்ந்த நான்கு குழுக்கள் தேர்தலை கண்காணிக்குமென தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தமக்கு அறிவித்திருப்பதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் திஸ்ஸ அத்தநாயக்க இத்தகவலை தெரிவித்தார்.எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரங்களைத் தடுப்பதற்கு அரசாங்க அதிகாரிகள் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்ததுடன், பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஐ.தே.மு. ஆட்சியமைக்கையில் அவர்கள் தொடர்பாக சட்டரீதியில் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் மூலம் ஐ.தே.கவின் வலதுசாரி சர்வாதிகாரம் அம்பலம்

ஐ. தே. க. சம்மேளனத்தில் வைத்து ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் ஐ. தே. க.வின் வலதுசாரி சர்வாதிகாரத் தோற்றம் அம்பலமாகியுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார். ஊடகங்களை அடக்கி, ஒடுக்கிய ஐ. தே. க.வின் கடந்த கால போக்கு இன்னும் மாறவில்லை என்றும் தனது சுயரூபத்தை ஐ. தே. க. வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று  நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது:- ஐ. தே. க. சம்மேளனத்திற்கு செய்தி திரட்டச் சென்ற ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஊடகவியலாளர்கள் அறுவர் நேற்று முன்தினம் ஐ. தே. க. தலைவரின் ஆதரவாளர்களால் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் கெமரா உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதோடு, வீடியோ ஒளிநாடாக்களும் பறிக்கப்பட்டுள்ளன. மலசலகூடத்தினுள் புகுந்து தப்ப முயன்ற இந்த ஊடகவியலாளர்கள் துரத்தித் துரத்தி தாக்கப்பட்டுள்ளனர். ஊர்மக்கள்தான் இவர்களை காப்பாற்றியுள்ளனர். இவர்களை பாரிய கும்பலொன்றே தாக்கியுள்ளது. தமது கடமையை நிறைவேற்றச் சென்ற வேளையிலேயே இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் செய்தி திரட்டுவதற்காக ஊடகவியலாளர்கள் சென்று வருகின்றனர். தமது உயரதிகாரிகளின் பணிப்பின் படியே இவர்கள் செய்தி திரட்டச் சென்றனர். இவர்கள் அரசியல் செய்வதற்காக ஐ. தே. க. மாநாட்டிற்குச் செல்லவில்லை.

இந்த மாநாட்டிற்கு அரசாங்க ஊடகங்களுக்கு அழைப்பு வழங்கவில்லையெனவும், ஊடகவியலாளர்கள் சிலர் தாக்கப்பட்டது தெரியாது எனவும் ஐ. தே. க. செயலாளர் கூறியுள்ளார். ஜனநாயகம், ஊடக சுதந்திரம் பற்றி பேசும் ஐ. தே. க. செயலில் அதற்கு மாறாகவே செயற்படுகிறது. கட்சியொன்றின் மாநாட்டில் செய்தி திரட்டச் செல்வதற்கு அனுமதி தேவையில்லை. ஐ. தே. க. வும் ஜே. வி. பி. யும் ஊடக சுதந்திரம் குறித்து பேசினாலும் ஊடக சுதந்திரத்திற்கு எதிராகவே செயற்படுகின்றன. கடந்த ஐ. தே. க. ஆட்சியில் பத்திரிகைகள் “சீல்” வைக்கப்பட்டபோது பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் தாக்கப்பட்டனர். ஆனால் ஐ. தே. க. தனது கடந்தகால போக்கை இன்னும் மாற்றவில்லை. ஐ. தே. க. வின் இந்த போக்கினால் மிகவும் பயங்கரமான நிலை உருவாகியுள்ளது.

தமது கூட்டங்களுக்கு அரச ஊடக நிறுவனங்களிலிருந்து யாரும் வரக் கூடாது எனவும், அவ்வாறு வந்தால் திரும்பிச் செல்ல மாட்டார்கள் எனவும் ஜே. வி. பி. அச்சுறுத்தியுள்ளது. மறுபக்கம் செய்தி திரட்ட வந்த அரச ஊடக நிறுவன ஊடகவியலாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் ஐ. தே. க. கூட்டங்களுக்கு செய்தி திரட்டச் செல்வதற்கு அரச ஊடக நிறுவனங்களில் பணி புரியும் ஊடகவியலாளர்களை அனுப்ப முடியாது. ஐ. தே. க. வினர் அவர்களை கொலை செய்து விடலாம். இந்தத் தாக்குதல் ஊடக சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் அச்சுறுத்தலாகும். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது சில தொலைக்காட்சி சேவைகள் 24 மணித்தியாலமும் அது குறித்து செய்தி வெளியிட்டன. ஆனால் தனியார் ஊடகம், அரசாங்க ஊடகம் என வேறுபாடு கிடையாது. அனைத்தும் ஊடகங்களே. அவற்றின் சுதந்திரத்தை பாதுகாக்கவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐ. ரீ. என். மற்றும் ரூபவாஹினி ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.