செய்திகள்

செய்திகள்

செய்திகள்

குவான்டனாமோ கைதிகளை அடைக்க சிறைக்கூடத்தை விலைக்கு வாங்கியது ஒபாமா அரசு

கியூபாவின் குவான்டனாமோ சிறையில் இருந்து அமெரிக்கா கொண்டு வரப்பட்ட கைதிகளை அடைக்க இல்லினாய்ஸ் மாகாணத்தில் புதிய சிறைக்கூடம் ஒன்றை ஒபாமா அரசு விலைக்கு வாங்குகிறது.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ரொபர்ட்உட்ஸ், ‘இல்லினாய்ஸில் உள்ள தாம்ஸன் சிறைக் கூடத்தை விலைக்கு வாங்குவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க சிறைக் கழகம் மேற்கொள்ள வேண்டும் என அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார் என்றார்.

குவான்டனாமோ சிறையில் இருக்கும் எத்தனை கைதிகள் இல்லினாய்ஸ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற விவரத்தை வெள்ளை மாளிகை வெளியிடவில்லை என்ற போதிலும் புதிய சிறைக் கூடத்தில் 100 கைதிகள் இருப்பார்கள் என இல்லினாய்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட்டர்பின் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவான்டனாமோ சிறையை நிர்வகித்த அதிகாரிகளே, இல்லினாய்ஸ் சிறைக்கூடத்தையும் நிர்வகிப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

க. பொ. த. (உ/த): தகவல் தொழில்நுட்ப பரீட்சை 20ம் திகதி

stu.jpgக. பொ. த. உயர்தர முதலாம் ஆண்டு மாணவர் களுக்காக நடத்தப்படும் பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை 20 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவிக்கிறது. முன்னர் அறிவிக்கப்பட்டதன்படியே குறிப்பிட்ட தினத்தில் பரீட்சைகள் நடைபெறுவதுடன் நாடு முழுவதுமுள்ள 843 பரீட்சை நிலையங்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கும் உரிய அனுமதி அட்டைகள் அந்தந்தப் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிபர்களிடமிருந்து அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு பரீட்சை ஆணையாளர் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகிலேயே சிறந்த சுகாதார சேவை வழங்கும் நாடு இலங்கை

அரசாங்கம் சுகாதார சேவையை மேம்படுத்தவென பாரியளவு நிதியை வருடாவருடம் முதலீடு செய்து வருவதாக மருத்துவத் துறை புத்திஜீவிகள் நேற்றுத் தெரிவித்தனர். இதன் பயனாக தென்னாசிரியாவில் மாத்திரமல்லாமல் உலகிலேயே சிறந்த சுகாதார சேவை வழங்கும் நாடு என்ற நற்பெயரை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

2002ம் ஆண்டில் நாட்டில் யுத்தமற்ற சூழல் நிலவிய போதிலும் அக்காலப் பகுதியில் சுகாதாரத் துறை உட்பட எந்தத் துறைக்கும் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுமில்லை உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்படவுமில்லை எனவும் அவர்கள் கூறினர். தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஒலி, ஒளி நிபுணத்துவக் கலந்துரையாடல் என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற செய்தியாளர் மாநட்டின் போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். இச் செய்தியாளர் மாநாட்டில் கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க,  சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் தயாசிறி பெர்னாண்டோ, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் ரன்ஜனி கமகே ஆகியோர் கலந்துகொண் டார்கள்.

ச்செய்தியாளர் மாநாட்டில் பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க குறிப்பிடுகையில், அரசாங்கம் சுகாதார சேவையை மேம்படுத்தவென மொத்த தேசிய உற்பத்தியில் 2 சத வீதத்திற்கும் மேல் வருடா வருடம் செலவிட்டு வருகின்றது. யுத்தம் நடைபெற்ற போதிலும் அரசாங்கம் சுகாதார சேவை மேம்பாட்டுக்கான நிதியொதுக்கீடுகளைக் குறைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக மத்திய அரசின் கீழுள்ள ஆஸ்பத்திரிகள் மட்டுமல்லாமல் மாகாண சபைகளின் கீழுள்ள ஆஸ்பத்திரிகளும் பாரிய அபிவிருத்தி கண்டுள்ளன. உட்கட்டமைப்பு துறையும், மருத்துவ உபகரண வசதியும் மேம்படுத் தப்பட்டுள்ளன. இதற்கென மில்லியன் கணக்கான ரூபாவை அரசாங்கம் செலவிட்டிருக்கின்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூளையில் ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்குச் சிகிச்சை அளிக்கவென 2137 மில்லியன் ரூபா செலவில் தனியான சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. குருநாகல் போதனா ஆஸ்பத்திரியில் 110 மில்லியன் ரூபா செலவில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொழும்பு வடக்கு (ராகம), கொழும்பு தெற்கு (களு போவில), காசல் வீதி, லேடி ரிட் ஜ்வே ஆஸ்பத்திரிகள் உட்பட சகல ஆஸ்பத்திரிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம் சுகாதாரத்துறையின் மனித வள மேம்பாட்டிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. மஹிந்த சிந்தனையின் கீழ் 15000 தாதியர் பயிற்சிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு வருடா வருடம் டாக்டர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேபோல், ஏனைய துறைகளுக்கும் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

தெலங்கானா விவகாரம் மக்களவையில் மீண்டும் புயலைக் கிளப்பியதால் அவை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

susmaa.jpgதெலங்கானா மக்களவை வெள்ளிக்கிழமை தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அமைச்சர்களுக்கு ஊதியம் மற்றும் படியை உயர்த்தும் மசோதா, உயர் நீதிமன்றங்களில் வர்த்தக வழக்குகளை கையாள தனிப்பிரிவு தொடங்குவது தொடர்பான மசோதா உள்பட 5 மசோதாக்கள் அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

கேள்வி நேரம் தொடங்கியதும் தனி தெலங்கானா மாநிலத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பலத்த குரல் எழும்பியது. தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 5 எம்.பி.க்கள் தெலங்கானாவை எதிர்த்து வாசகங்கள் அடங்கிய அட்டையை பிடித்தவாறும் கோஷம் எழுப்பியவாறும் அவைத் தலைவர் மீரா குமார் இருக்கையை சூழ்ந்து கொண்டனர்.

தனி தெலங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு டிசம்பர் 9-ம் தேதி அறிவித்தது. அந்த தினத்தை நாங்கள் கருப்பு தினமாக கருதுகிறோம்.  இதனால் அந்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திரும்பப்பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இவர்களை பின்தொடர்ந்து தெலங்கானா ஆதரவு காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளைவிட்டு எழுந்து அட்டையை கையில் ஏந்தியவாறு அவையின் மையப்பகுதிக்கு வந்து சூழ்ந்து கொண்டனர்.  இவர்களுடன் சேர்ந்து கொண்டு தனி தெலங்கானாவை ஆதரித்து தெலுங்கு தேச எம்.பி. சுரேஷும் குரல் கொடுத்தார்.

அதைப்போல, போடோலாந்து தனி மாநிலம் உருவாக்க வலியுறுத்தி போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர் எஸ்.கே.பிவிஸ் முத்தையாரியும் குரல் கொடுத்தார்.  அவரும் தனது இருக்கையை விட்டு எழுந்து அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்க தேசிய காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவரும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ஏ. எல். எம். அதாஉல்லா தெரிவித்தார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, வடக்கு, கிழக்கில் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற சிறுபான்மையினரின் அபிலாஷைகளை ஏற்கனவே நிறைவேற்றித் தந்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவுக்கும் முகமாகவே இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே இந்த நாட்டு சிறுபான்மை மக்களுக்கு மிகவும் பாதுகாப்பானது என்று திட்டவட்டமாக கூறுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் வழங்கவுள்ள ஆதரவு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

சகல இன மக்களும் சந்தோஷமாக வாழ வேண்டும், மீண்டும் சமாதானத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பிரதான நோக்குடனே தேசிய காங்கிரஸ் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கிலிருந்து கிழக்கை பிரித்து தரும்படியும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த போது கோரிக்கை விடுத்தோம். அது இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

30 வருடங்களுக்கு பிறகு ஜனாதிபதியின் தலைமையில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எமக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தை நாங்கள் மீண்டும் இழக்க தயாராக இல்லை. வடக்கு, கிழக்கில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த சில அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன. இதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.

ஐ.தே.க., முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சி தேர்தலுக்காக அரசியல் நடத்துபவர்கள். தேர்தல் காலங்களில் மாத்திரம் வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்கு வந்து மக்களை குழப்புபவர்களை இன்று மக்களே விரட்டி அடித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டின் மீதும், மக்களின் மீதும் அன்பு வைத்துள்ள ஒரே ஒரு தலைவர். எனவே சிலரது பொய்யான வாக்குறுதிகளை நம்பி முஸ்லிம் மக்கள் மீண்டும் ஒரு போதும் தவறிழைக்கப் போவதில்லை.

சமாதான ஒப்பந்தம் என்ற போர்வையில் அன்றைய தலைமைத்துவம் தோட்டாக்களை எடுத்துக் கொண்டு துப்பாக்கிகளை கொடுத்தது. அதனால் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமல் போனது. தற்பொழுது தோட்டாக்களுடன் துப்பாக்கியை கொடுத்ததன் மூலமே பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க முடிந்தது. இதற்கு சரியான சந்தர்ப்பத்தில் உரிய தீர்மான த்தை எடுக்கும் அரசியல் தலைமைத்துவம் அவசியம். பயங்கரவாதத்தை இல்லாதொழி த்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியமை க்காக தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாங்கள் வெற்றிபெறச் செய்ய முன்வந்துள்ளதால் சிங்கள மக்களும் முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

பொன்சேகா பக்கம் யாவரும் அணிதிரள்வது காலத்தின் தேவை ஆளும் தரப்பிலிருந்து வெளியேறிய அர்ஜுன

arjuna-ranatunga.jpgநாட்டில் புரையோடிப்போயுள்ள ஊழல், மோசடிகளை ஒழித்துக்கட்டி நல்லாட்சியை மலரச் செய்யும் பொருட்டு ஜெனரல் சரத் பொன்சேகாவின் பக்கம் எல்லோரும் அணிதிரளவேண்டியது காலத்தின் தேவையாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தான் இந்த முடிவை எடுக்காது விட்டால் அது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குச் செய்யும் துரோகமாகவே இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தரப்பிலிருந்து விலகி ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள அர்ஜுன ரணதுங்க வியாழக்கிழமை ஜெனரல் பொன்சேகாவின் கொழும்பிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அர்ஜுன ரணதுங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவதுநான் இந்த முடிவை அவசரப்பட்டு எடுக்கவில்லை. மிக நிதானமாக ஆராய்ந்த பின்னர் நாட்டின் நலன் கருதியே இந்த நிலைப்பாட்டை எடுத்தேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் என்ற வகையில் நான் இந்த முடிவை எடுக்காது விட்டால் அது அக்கட்சிக்குச் செய்யும் துரோகமாகும்.”கடந்த கால நிலைமைகள் பற்றி நன்கு யோசித்த நான் இந்த தீர்மானத்தை எடுத்தேன். இது எவரது அழுத்தத்தினாலும் எடுக்கப்பட்ட முடிவல்ல. நான் எப்போதும் எனது தேவைகளை விட தேவைகளுக்கே முன்னுரிமை வழங்கி செயற்பட்டிருக்கிறேன். நாட்டின் தேவைக்காக எனது தராதரங்களைக் கைவிட்டு கூட செயற்பட்டிருக்கிறேன்.

கடந்த காலங்களில் அரசில் இடம்பெற்ற விடயங்கள் பற்றி எனக்குத் தெரியும். யுத்த வெற்றிக்கு வழி நடத்தி செயற்பட்ட ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டிக்கு இறங்கியதும் எவ்வளவு கீழ்த்தரமாகத் தூற்றினார்கள் என்பதை நான் அறிவேன். இதேபோல் நான் எனது தலைமையில் 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய போது பாராட்டினார்கள். ஆனால், 1999 ஆம் ஆண்டு தோற்றதும் தூற்றினார்கள். அந்த நிலைமை தான் இன்று ஜெனரல் பொன்சேகாவுக்கும். இவ்வாறான விடயங்களுக்கு இடமளிக்க முடியாது.

இன்று கிரிக்கெட்டில் மட்டுமல்லாது அனைத்து விளையாட்டுகளிலும் மோசடி நிலவுகிறது. அவற்றை கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் விசாரணை கூட நடத்தப்படவில்லை. அரசுக்கு பல தடவைகள் எடுத்துக் கூறியும் அவை அரசின் காதுகளில் நுழையவில்லை.நான் இன்று எடுத்துள்ள முடிவு தொடர்பில் ஜெனரல் பொன்சேகா மீது சேறு பூசுவது போல் நாளை என்மீது சேறு பூசுவர், நாட்டைக் காட்டிக்கொடுத்தவர், தேசத் துரோகி என்றெல்லாம் துற்றுவர்.

நான் இன்னமும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராகவே இருக்கின்றேன். ஆனால், நாளை என்ன நடக்கும் என்பதை என்னால் எதுவும் கூற முடியாது. நாட்டின் நலனுக்காகவே இந்த முடிவை எடுத்தேன் எனக் கூறினார். செய்தியாளர் ஒருவர் உங்கள் சகோதரர் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆதரவு உங்களுக்குக் கிட்டுமா எனக் கேட்டபோது பதிலளித்த அர்ஜுன ரணதுங்க கூறியதாவது அவர் எனது உடன் பிறந்த சகோதரர். அது குடும்ப உறவு அதனைப் பிரிக்க முடியாது, இதில் அரசியலை கலக்க விரும்பவில்லை. எனது அரசியல் நிலைப்பாட்டில் அவர் இருக்க வேண்டுமென்று நான் கட்டுப்படுத்தமாட்டேன். எனக்குச் சரியெனப்பட்டதை நான் செய்திருக்கின்றேன்.

நாட்டை சரிசெய்வதற்கு இது தான் இறுதிச் சந்தர்ப்பம். ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காகவே நாம் ஒன்றுபட்டுள்ளோம். வேறெந்த குரோதங்களும் எமக்குக் கிடையாது. ஊழல் மோசடியில்லாத நாடாக இலங்கை மலர வேண்டும் எனவும் அவர் கூறினார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவு உங்களுக்குக்கிட்டுமா என செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது குறுக்கிட்டு அதற்குப் பதிலளித்த ஜெனரல் சரத் பொன்சேகா அர்ஜுனவினதும் சந்திரிகாவினதும் உண்மையான சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களும் எனக்கு ஆதரவளிப்பர் என்று தெரிவித்தார்.

சுவிஸ் சூரிச் நகரில் புலரும் பொழுது – அரசியல் ஆய்வரங்கு : இலங்கை மக்கள் ஐனநாயக பேரவை!

சுவிஸ் சூரிச் நகரில் கலை இலக்கிய அரசியல் உணர்வாளர்களின் கரங்கள் இணைந்து எழுதும் புலரும் பொழுது!

மௌன அஞ்சலி மரியாதை! வரவேற்புரை!…. தலைமையுரை!

திருக்கோணேஸ்வர நடனாலயம் வழங்கும் பரதநாட்டியம்!…
 
கண்டிய நடனம்!… கவிதா நிகழ்வு!…

சுவிஸ் maxim அரங்க குழுவுடன் இணைந்து செயற்படும் நாடக அரங்க செயற்பாட்டாளர் விஐயசாந்தன் வழங்கும்
பூச்சியம்!

நவீன தனிநடிப்பு அரங்கம்.

சிறப்பு விருந்தினர்கள் உரை!
 
திரு. வி. சிவலிங்கம்!
அரசியல் ஆய்வாளர், இலண்டன்
திரு. எஸ். தவராஜா
சட்டத்தரணியும், அரசியல் சட்டவல்லுனரும், இலண்டன்
திரு. அழகு குணசீலன்!
அரசியல் சமூக அக்கறையாளர் சுவிஸ்

தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு!
எது?… எங்கிருந்து தொடங்குவது?. என்ன செய்வது?

பொது மக்களுடன் அரசியல் ஆய்வாளர்களும், அரசியல் சட்ட வல்லுனர்களும் கலந்து கொண்டு கலந்துரையாடும் திறந்த அரசியல் ஆய்வரங்கு! இந்நிகழ்வில் கலந்து கொண்டு எமது மக்கள் முகம் கொடுக்கும் உடனடிப்பிரச்சினைகள் குறித்தும், அரசியலுரிமை பிரச்சினை குறித்தும் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களும் இறுதியில் தொகுக்கப்பட்டு இலங்கை அரச தரப்பின் கவனத்திற்கு அறிக்கை மூலம் சமர்ப்பிக்கப்படும். உங்கள் கருத்துக்களையும் சுதந்திரமாக தெரிவிக்கலாம்!

இரவு நிகழ்ச்சிகள்
இசை அபிநயம்!.. இன்னிசை நிகழ்ச்சி!!
பிரவேசம் இலவசம்!

காலம்: 19.12.2009 பிற்பகல் 15.00 மணிக்கு
இடம: Gemeinschaftzentrum Affoltern Bodenacker 25, 8046 Zürich
தொடர்புகளுக்கு: 076 2913532, 079 5506976, 076 4732717

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்:
இலங்கை மக்கள் ஐனநாயக பேரவை! சுவிஸ்

யாழ் – கண்டி பஸ் சேவை இன்று ஆரம்பம் – இலங்கை போக்குவரத்து சபை தகவல்

buss.jpgயாழ்ப் பாணத்திற்கும் கண்டிக்குமிடையிலான பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இன்று கண்டியில் இருந்து 3.30 மணிக்கு யாழ்ப்பாணத்துக்கான பஸ் புறப்படவுள்ளன. இது மாத்தளை,  தம்புள்ளை,  மதவாச்சி மற்றும் வவுனியா ஊடாக யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளது.

நாளை யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்கான பஸ் சேவை இடம்பெறவுள்ளதாக இ.போ. சபை மேலும் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான கட்டுப்பாட்டைத் தளர்த்தியது கனடா

canada.jpgஇலங் கையில் சமாதான சூழல் காணப்படுவதுடன், பாதுகாப்பு நிலைவரம் சீரடைந்துள்ளதால் கனடா அரசு இலங்கை தொடர்பாக பேணிவந்த சுற்றுலாப் பயணிகளுக்கான பிரயாணக்கட்டுபாடுகளைத் தளர்த்தியுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில் இலங்கையில் அவதானமாகப் பயணங்களை மேற்கொள்ளலாம் என்று கனடா அரசு தெரிவித்துள்ள போதிலும் இலங்கைக்கு விஜயம் செய்யும் அந்நாட்டுப் பிரஜைகள், இலங்கைக்குள் அனாவசிய பிரயாணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள கனடா தூதுவர் புரூஸ் லெவி, விடுதலைப் புலிகளுடனான தீவிரயுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இலங்கை புதிய யுகம் ஒன்றிற்குள் பிரவேசித்துள்ளதை இது எடுத்து காட்டுகின்றது. புலம்பெயர் இலங்கையர்கள் மிகக் கூடுதலாகக் கனடாவில் குடியேறியுள்ள நிலையில் அதிக அளவிலான கனேடிய மக்கள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடிய பிரஜாவுரிமை பெற்ற அநேகமான இலங்கையர்கள், அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்கும் முதலீடுகளை மேற்கொள்ளவும் இலங்கைக்கு வருகைதரலாம் என்று நம்புகிறோம்  என்று கூறினார். 

ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டி – இலங்கை முற்போக்கு முன்னணியின் மனு நிராகரிப்பு

sri_election.jpgஇலங்கை யின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக ஜனவரி 26 இல் நடைபெறும் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 23 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும் ஒருவருடைய வேட்பு மனு, தேர்தல்கள் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து 22 பேரே தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்று அறிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுக்காலை கொழும்பு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது. நேற்றுக்காலை 9.00 மணிமுதல் 11.00 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட 18 கட்சிகள் மற்றும் 05 சுயாதீனக் கட்சிகளின் 23 வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவின் முன்னிலையில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

நேற்றுக்காலை 9.00 மணிக்கு ஆரம்பமான வேட்பு மனுத்தாக்கல் 11.00 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து 11.00 மணியிலிருந்து 11.30 மணிவரை வேட்பு மனு தொடர்பான ஆட்சேபனைக்கான காலம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆட்சேபனை சமர்ப்பிப்பு முடிவடைந்ததும் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் வெளியிட்டார். இதற்கிணங்க மூன்று வேட்பு மனுக்களுக்கெதிராக ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதிலொரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஏனைய இரண்டு வேட்பு மனுக்களுக்கான ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது.

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வேட்பு மனு தொடர்பாக ஆட்சேப மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.  மேற்படி மனுக்களை சமர்ப்பித்தவர்களும் சரத் பொன்சேகா அமெரிக்கப் பிரஜையெனவும் இலங்கை பிரஜையல்லாத ஒருவரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள க்கூடாதெனவும் குறிப்பிட்டிருந்தனர். இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க மனுதாரர்கள் விரும்பினால் நீதிமன்றத்தில் இதனைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் தெரிவித்தார்.

 இலங்கை முற்போக்கு முன்னணியின் வேட்பாளர் பீற்றர் நெல்சன் பெரேராவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதற்கான காரணத்தைத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர், ஒரு கட்சிக்கு இருவர் உரிமை கோரியுள்ளதாகவும் எனினும் அவ்விருவருமே அக்கட்சிக்கு உரித்துடையவர்களல்லர் எனவும் தெரிவித்தார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதற்தடவையாகும்.

சிறிதுங்க ஜயசூரிய (ஐக்கிய சோசலிசக் கட்சி)
எம்.பி.தெமினிமுல்ல (ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு)
சரத் மனமேந்திர (நவ சிஹல உறுமய)
அச்சல அசோக்க சுரவீர (ஜாதிக சங்வர்தன பெரமுன)
புனாகொட தொன் பிரின்ஸ் சொலமன்
அநுர லியனகே (ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சி)
பத்தரமுல்லே சீலரதன தேரர் (ஜனசெத பெரமுன)
ராஜபக்ஷ பேர்சி மஹிந்த (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி)
விக்ரமபாஹு கருணாரத்ன (இடதுசாரி முன்னணி)
ஐ.எம்.இல்யாஸ் (சுயேச்சை)
விஜே டயஸ் (சோசலிச சமத்துவக் கட்சி)
கார்திஹேவா சரத் சந்திரலால் பொன்சேகா (புதிய ஜனநாயக முன்னணி)
சரத் கோன்கஹகே (ஐக்கிய தேசிய மாற்று முன்னணி)
கே.ஜீ.ஆர்.எல்.பெரேரா (எமது தேசிய முன்னணி)
மீரா மொஹிதீன் மொஹமட் முஸ்தபா (சுயேச்சை)
கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (சுயேச்சை)
டபிள்யூ.எம்.யூ.பி. விஜேகோன் (சுயேச்சை)
எம்.சீ.எம்.இஸ்மயில் (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி)
ஹித்தக ஒஸ்வல்ட் அருண த சொய்ஸா (ருஹுணு ஜனதா பக்ஷய)
சனத் பின்னதுவ (தேசிய மக்கள் கட்சி)
எதுருகே சேனாரத்ன சில்வா (தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி)
சன்ன ஜானக சுகத்சிறி கமகே (ஐக்கிய இலங்கைஜனநாயக முன்னணி)
வேகட வித்தாரணகே மஹிமன் ரஞ்சித் (சுயேச்சை)