அரசாங்கம் சுகாதார சேவையை மேம்படுத்தவென பாரியளவு நிதியை வருடாவருடம் முதலீடு செய்து வருவதாக மருத்துவத் துறை புத்திஜீவிகள் நேற்றுத் தெரிவித்தனர். இதன் பயனாக தென்னாசிரியாவில் மாத்திரமல்லாமல் உலகிலேயே சிறந்த சுகாதார சேவை வழங்கும் நாடு என்ற நற்பெயரை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
2002ம் ஆண்டில் நாட்டில் யுத்தமற்ற சூழல் நிலவிய போதிலும் அக்காலப் பகுதியில் சுகாதாரத் துறை உட்பட எந்தத் துறைக்கும் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுமில்லை உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்படவுமில்லை எனவும் அவர்கள் கூறினர். தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஒலி, ஒளி நிபுணத்துவக் கலந்துரையாடல் என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற செய்தியாளர் மாநட்டின் போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். இச் செய்தியாளர் மாநாட்டில் கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க, சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் தயாசிறி பெர்னாண்டோ, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் ரன்ஜனி கமகே ஆகியோர் கலந்துகொண் டார்கள்.
ச்செய்தியாளர் மாநாட்டில் பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க குறிப்பிடுகையில், அரசாங்கம் சுகாதார சேவையை மேம்படுத்தவென மொத்த தேசிய உற்பத்தியில் 2 சத வீதத்திற்கும் மேல் வருடா வருடம் செலவிட்டு வருகின்றது. யுத்தம் நடைபெற்ற போதிலும் அரசாங்கம் சுகாதார சேவை மேம்பாட்டுக்கான நிதியொதுக்கீடுகளைக் குறைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக மத்திய அரசின் கீழுள்ள ஆஸ்பத்திரிகள் மட்டுமல்லாமல் மாகாண சபைகளின் கீழுள்ள ஆஸ்பத்திரிகளும் பாரிய அபிவிருத்தி கண்டுள்ளன. உட்கட்டமைப்பு துறையும், மருத்துவ உபகரண வசதியும் மேம்படுத் தப்பட்டுள்ளன. இதற்கென மில்லியன் கணக்கான ரூபாவை அரசாங்கம் செலவிட்டிருக்கின்றது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூளையில் ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்குச் சிகிச்சை அளிக்கவென 2137 மில்லியன் ரூபா செலவில் தனியான சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. குருநாகல் போதனா ஆஸ்பத்திரியில் 110 மில்லியன் ரூபா செலவில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொழும்பு வடக்கு (ராகம), கொழும்பு தெற்கு (களு போவில), காசல் வீதி, லேடி ரிட் ஜ்வே ஆஸ்பத்திரிகள் உட்பட சகல ஆஸ்பத்திரிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம் சுகாதாரத்துறையின் மனித வள மேம்பாட்டிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. மஹிந்த சிந்தனையின் கீழ் 15000 தாதியர் பயிற்சிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு வருடா வருடம் டாக்டர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேபோல், ஏனைய துறைகளுக்கும் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.