தெலங்கானா மக்களவை வெள்ளிக்கிழமை தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அமைச்சர்களுக்கு ஊதியம் மற்றும் படியை உயர்த்தும் மசோதா, உயர் நீதிமன்றங்களில் வர்த்தக வழக்குகளை கையாள தனிப்பிரிவு தொடங்குவது தொடர்பான மசோதா உள்பட 5 மசோதாக்கள் அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
கேள்வி நேரம் தொடங்கியதும் தனி தெலங்கானா மாநிலத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பலத்த குரல் எழும்பியது. தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 5 எம்.பி.க்கள் தெலங்கானாவை எதிர்த்து வாசகங்கள் அடங்கிய அட்டையை பிடித்தவாறும் கோஷம் எழுப்பியவாறும் அவைத் தலைவர் மீரா குமார் இருக்கையை சூழ்ந்து கொண்டனர்.
தனி தெலங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு டிசம்பர் 9-ம் தேதி அறிவித்தது. அந்த தினத்தை நாங்கள் கருப்பு தினமாக கருதுகிறோம். இதனால் அந்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திரும்பப்பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இவர்களை பின்தொடர்ந்து தெலங்கானா ஆதரவு காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளைவிட்டு எழுந்து அட்டையை கையில் ஏந்தியவாறு அவையின் மையப்பகுதிக்கு வந்து சூழ்ந்து கொண்டனர். இவர்களுடன் சேர்ந்து கொண்டு தனி தெலங்கானாவை ஆதரித்து தெலுங்கு தேச எம்.பி. சுரேஷும் குரல் கொடுத்தார்.
அதைப்போல, போடோலாந்து தனி மாநிலம் உருவாக்க வலியுறுத்தி போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர் எஸ்.கே.பிவிஸ் முத்தையாரியும் குரல் கொடுத்தார். அவரும் தனது இருக்கையை விட்டு எழுந்து அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.