ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்க தேசிய காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவரும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ஏ. எல். எம். அதாஉல்லா தெரிவித்தார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, வடக்கு, கிழக்கில் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற சிறுபான்மையினரின் அபிலாஷைகளை ஏற்கனவே நிறைவேற்றித் தந்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவுக்கும் முகமாகவே இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே இந்த நாட்டு சிறுபான்மை மக்களுக்கு மிகவும் பாதுகாப்பானது என்று திட்டவட்டமாக கூறுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் வழங்கவுள்ள ஆதரவு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
சகல இன மக்களும் சந்தோஷமாக வாழ வேண்டும், மீண்டும் சமாதானத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பிரதான நோக்குடனே தேசிய காங்கிரஸ் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கிலிருந்து கிழக்கை பிரித்து தரும்படியும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த போது கோரிக்கை விடுத்தோம். அது இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
30 வருடங்களுக்கு பிறகு ஜனாதிபதியின் தலைமையில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எமக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தை நாங்கள் மீண்டும் இழக்க தயாராக இல்லை. வடக்கு, கிழக்கில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த சில அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன. இதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.
ஐ.தே.க., முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சி தேர்தலுக்காக அரசியல் நடத்துபவர்கள். தேர்தல் காலங்களில் மாத்திரம் வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்கு வந்து மக்களை குழப்புபவர்களை இன்று மக்களே விரட்டி அடித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டின் மீதும், மக்களின் மீதும் அன்பு வைத்துள்ள ஒரே ஒரு தலைவர். எனவே சிலரது பொய்யான வாக்குறுதிகளை நம்பி முஸ்லிம் மக்கள் மீண்டும் ஒரு போதும் தவறிழைக்கப் போவதில்லை.
சமாதான ஒப்பந்தம் என்ற போர்வையில் அன்றைய தலைமைத்துவம் தோட்டாக்களை எடுத்துக் கொண்டு துப்பாக்கிகளை கொடுத்தது. அதனால் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமல் போனது. தற்பொழுது தோட்டாக்களுடன் துப்பாக்கியை கொடுத்ததன் மூலமே பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க முடிந்தது. இதற்கு சரியான சந்தர்ப்பத்தில் உரிய தீர்மான த்தை எடுக்கும் அரசியல் தலைமைத்துவம் அவசியம். பயங்கரவாதத்தை இல்லாதொழி த்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியமை க்காக தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாங்கள் வெற்றிபெறச் செய்ய முன்வந்துள்ளதால் சிங்கள மக்களும் முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.