செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கிளிநொச்சியில் நினைவுத் தூபி

gotabaya.jpgகிளி நொச்சியில் படை நடவடிக்கைகளின்போது உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூறும் வகையில் இன்று காலை அங்கு நினைவுத்தூபி ஒன்று திறந்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். வடக்கு மண்ணை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்ததுபோல் வடபகுதி மக்களின் உள்ளங்களையும் படையினர் வென்றெடுக்க வேண்டும் என்று இந்த வைபவத்தில் பேசிய அவர் கூறினார்.

காலி மாவட்டத்தில் பல இடங்கள் நீரில் மூழ்கின; இயல்பு பாதிப்பு

galle-rain.jpgகாலி மாவட்டத்தில் குறுகிய மூன்று மணித்தியாலயங்களில் 181.6 மில்லி மீட்டர் அதிகூடிய மழை வீழ்ச்சி நேற்று பதிவாகி இருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ். ஏ. ஆர். ஜயசேகர தெரிவித்தார்.

அண்மைக்காலத்தில் குறுகிய நேரகாலத்தில் காலி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பெற்றுக்கொண்ட அதிகூடிய மழை வீழ்ச்சி எனவும் அவர் கூறினார். நேற்று காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரையான காலப்பகுதிலேயே இம்மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். காலி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று அதிக மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டிருப்பதுடன் பல வீதிகளும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் காலி மாவட்ட இணைப்பாளர் லெப்டீனண்ட் கேர்ணல் அசித ரணசிங்க தெரிவித்தார். வக்வெல்ல வீதியிலுள்ள சங்கமித்த, கொக்கலகட சந்தி, பத்தேகம வீதியிலுள்ள தங்கெதா சந்தி, கஹத்துவவத்தை சந்தி, பலப்பிட்டி மடபாத்த கிராமம், கராப்பிட்டிய வீதியிலுள்ள பேகல சந்தி உட்பட பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணத்தினால் பல பிரதேசங்களுக்கான சீரான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. கராப்பிட்டிய பொதுவைத்தியசாலையின் 16 வது வார்ட், நீதிவான் நீதிமன்ற கட்டடம் உட்பட பல இடங்களும் நீரில் மூழ்கி இருந்ததாகவும் அவர் கூறினார்.

வானிலை அவதான நிலையம் 24 மணி நேரப்படியே மழை வீழ்ச்சியைப் பதிவு செய்கிறது. அந்தவகையில் 1992 ஆம் ஆண்டில் கொழும்பு மாவட்டத்தில் 492 மில்லி மீட்டர் அதிகூடிய மழை வீழ்ச்சியும் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி அங்கொடையில் 207 மில்லி மீட்டர் அதிகூடிய மழை வீழ்ச்சியும் பதிவானதாகவும் வானிலை அவதான நிலைய அதிகாரி கூறினார்.

நடைபாதை வியாபாரிகளுக்கு புதிய வர்த்தக தொகுதி நிர்மாணம்

president.jpgஇரு வாரத்தினுள் கட்டிமுடிக்க ஜனாதிபதி பணிப்பு; தற்காலிகமாக ரூ. 2 ஆயிரம் வழங்கவும் நடவடிக்கை

கொழும்பு நகரின் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போதிராஜ மாவத்தையில் புதிய வர்த்தக தொகுதியொன்றை நிர்மாணிக்குமாறும், அதனை 2 வார காலத்தில் கட்டி முடிக்குமாறும், அதுவரை அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (4) பிற்பகல் புறக்கோட்டை சுயவேலையாளர் சங்க பிரதிநிதிகளை அலரிமாளிகையில் சந்தித்து பேசினார். புறக்கோட்டையில் நடைபாதை வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டதைய டுத்து ஏற்பட்ட நிலை தொடர்பாக பேசுவதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நடைபாதையில் செல்வோருக்கு அசெளகரியம் ஏற்படாத வகையிலும், நகரத்தின் அழகுக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் சிறிய வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை நடத்திச் செல்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் முறையான திட்டமொன்றை துரித கதியில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் இந்திய விசா விண்ணப்ப நிலையம் நேற்று திறப்பு

ashok-a-kanth.jpgஇந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்த நேற்று யாழ்ப்பாணத்தில் இந்திய விசா விண்ணப்ப நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

2008 பெப்ரவரி மாதத்திலிருந்து இந்திய விசா விண்ணப்ப நிலையத்தைக் கொழும்பில் வெற்றிகரமாக நடத்திவரும் குளோபல் நிறுவனத்தினரே இதையும் நடத்துவர்.

இந்த வைபவத்தில் உரையாற்றிய இந்திய உயர் ஸ்தானிகர் இந்த நிலையமானது நீண்ட தூரம் கொழும்புக்குப் பிரயாணம் செய்து இந்திய விசா விண்ணப்பங்களைக் கையளிக்கும் யாழ்ப்பாணத்திலும் மற்றும் அயல் பிரதேசங்களிலும் வசிக்கும் மக்களுக்குப் பேருதவியாகவிருக்கும் எனக் கூறினார். இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஆரம்பிக்கப்படும் இந்த வசதிக்கமைய விசா விண்ணப்பதாரர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள விசா நிலையத்தில் தங்கள் விண்ணப்பங்களைப் பாரம் கொடுத்து மீண்டும் அந்த நிலையத்திலேயே தங்கள் கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

இல. 8 பிறவுண் றோட் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள இந்திய விசா விண்ணப்ப நிலையம் திங்கள் முதல் வெள்ளிவரை 8.00 மணி முதல் 7.00 மணி வரை திறந்திருக்கும்.

இணையத்தளம் www.vfs-in-lk.com ஊடாக விண்ணப்பப் பத்திரங்கள் மற்றும் விசா சம்பந்தமான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ளலாம். விசா சம்பந்தமான விசாரணைகளை info.inlk@vfshelpline.com என்ற மின் அஞ்சல் மூலம் பெறலாம்.

IVAC யின் துணைபுரி தொலைபேசி 011-4505588.

மஹரகமவில் ‘டெய்லி மிரர்’ ஊடகவியலாளர் மீது தாக்குதல்

jeyasekara.jpg ‘டெய்லி மிரர்’ பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சந்துன் ஏ. ஜயசேகர நேற்று காலை மஹரகமவில் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட வைபவம் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்றபோதே, பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சிலர் இவரைத் தாக்கியதாக ‘டெய்லி மிரர்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஊடக அடையாள அட்டையைக் காண்பித்தும் உள்ளே சென்று செய்தி சேகரிக்கக் குறித்த ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சிலர் அவரை தகாத வார்த்தைளால் ஏசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேற்படி வைபவ செய்தியைச் சேகரிப்பதற்கு, ஊடகத் துறைக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றதையடுத்தே அவர் அங்கு சென்றதாகவும், கூறப்படுகிறது. தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ‘டெய்லி மிரர்’ தெரிவிக்கின்றது. 

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக கலாநிதி சரத் அமுனுகம

sarath.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகராக கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. 

பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷவின் வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி திருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர்  பல்கலைக்கழக பட்டதாரியாவார். 1962 ஆம் ஆண்ட அரசாங்க சேவையில் இணைந்த இவர்  பின்னர்  அரசிலில் இணைந்து பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

காதர் ஹாஜி தனித்துச் செயற்பட முடிவு

cadar.jpgகண்டி மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காதர்ஹாஜியார் பாராளுமன்றத்தில் தனித்துச் செயற்பட முடிவுசெய்துள்ளதாக நம்பகமாகத் தெரியவருகின்றது. கட்சித் தலைமையுடன் ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள் காரணமாகவே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கட்சியில் அவர் வகித்த தேசிய முஸ்லிம் அமைப்பாளர் பதவி உட்பட ஏனைய பதவிகளை அவர் ஏற்கனவே இராஜினாமாச் செய்துள்ளமை இங்கு நினைவூட்டத்தக்கது.

அவசர காலச் சட்டம் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

parliament2.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர்  டி.எம். ஜயரத்னவால் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணை இரண்டு தினங்கள் விவாதிக்கப்பட்ட பின்னர் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதற்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐ.தே.கவும் எதிர்த்து வாக்களித்தன. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

புதிதாக 4 அமைச்சர்கள் 6 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன் பதவிப் பிரமாணம்

arumugam.jpgபுதிதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள 4 நான்கு அமைச்சர்களும் 6 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி இல்லத்தில் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனா;.

அமைச்சர்கள்

ஆறுமுகன் தொண்டமான் – கால்நடைவளர்ப்பு கிராமிய சமூக அபிவிருத்தி
பேராசிரியர் திஸ்ஸவிதாரண – தொழில்நுட்ப ஆராய்ச்சி
கெஹலிய ரம்புக்வல – ஊடகம் மற்றும் தகவல்துறை
எஸ். பி. திஸாநாயக்க – உயர் கல்வி

பிரதி அமைச்சர்கள்
சரத் அமுனுகம – நிதி மற்றும் திட்டமிடல்
மேர்வின் சில்வா – நெடுஞ்சாலைகள்
மகிந்தானந்த அளுத்கமகே – இளைஞர் விவகாரம்
பைஸர் முஸ்தபா – சுற்றாடல்
எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன – புத்தசாஸன மற்றும் சமய விவகாரம்
ஜகத் பாலசூரிய – தொழில் மற்றும் தொழில் பயிற்சி

அவசரகால சட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது இளைஞர், யுவதிகளே – நாமல்

chamal.jpgநாட்டிற்காக, நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக குரல் கொடுக்கக் கூடிய இளைஞர் சமுதாயம் ஒன்றை உருவாக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு அவசரகாலச் சட்டம் அற்ற நாட்டை உருவாக்குவோம் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது கன்னி உரையில் தெரிவித்தார்.

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. பிரதமர் டி. எம். ஜயரட்ன அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ஷ எம். பி. உரையாற்றினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனினும் பயங்கரவாதம் முழுமையாக அணைந்துவிடவில்லை. இன்னும் நீறுபூத்த நெருப்பாக எரிந்துகொண்டு தான் உள்ளது. எனவே அவசரகாலச் சட்டம் படிப்படியாக அகற்றப்பட வேண்டும்.

அவசரகாலச் சட்டம் இறுதியாக 2005ஆம் ஆண்டுகளில் அமைச்சர் லஷ்மன் கதிர்காமரின் படுகொலையுடன் தான் அமுலுக்கு வந்தது. என்னுடைய வயதையும் விட கூடுதல் வயது இந்த அவசரகாலச் சட்டத்துக்கு உள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுவதுமுள்ள என்னைப் போன்ற சகோதர, சகோதரிகள் அனைவரும் அவசரகாலச் சட்டத்தினுள்தான் வாழ்ந்தார்கள். இளைஞர், யுவதிகள் தான் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டியதன் நேரம் நெருங்கியுள்ளது- எனினும் உடனடியாக செய்ய முடியாது.

பயங்கரவாதம் தோன்றியதற்கான அடிப்படை என்ன என்பது பற்றி பார்ப்போமானால் முன்னேற்றமடையாத கஷ்டப் பிரதேசம் தான் பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக இருந்துள்ளது.

குறிப்பாக சேகுவேராவும் இவ்வாறான கருத்தைத்தான் கூறியிருந்தார். பின்தங்கிய, கஷ்டப் பிரதேசத்திலிருந்து தான் புரட்சிகள் ஆரம்பமாகியுள்ளன. இதனையே பிரபாகரனும் தெரிவித்திருந்தார். பின்தங்கிய கஷ்டப் பிரதேசத்திலிருந்து வரும் இளைஞர்கள், யுவதிகளே தனது அமைப்பில் தங்கி இருப்பவர்கள் என்றும், வசதியாக நகர்ப்புறத்தில் வாழ்பவர்கள் தங்குவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

கஷ்டப் பிரதேசம், என்ற சொல்லுக்கு இடமில்லாமல் கிராம மட்டத்தில் அபிவிருத்தி முன்னெடுக்கப்படல் வேண்டும். எமக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்துவதுடன் இந்நாட்டின் இளம் சமுதாயத்திற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

கிராம மட்டத்தில் அபிவிருத்தியை முன்னெடுக்காவிடின் மீண்டும் ஒரு புரட்சி, அல்லது கெரில்லா அமைப்பு உருவாவதை தடுத்துவிட முடியாது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 1948ம் ஆண்டு லக்ஷ்மன் ராஜபக்ஷவையும், 1970 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், 2010 ஆம் ஆண்டு தன்னையும் மிகவும் குறைந்த இளம் வயதில் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக வாக்களித்த அம்பாந்தோட்டை மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக நாமல் ராஜபக்ஷ தனது கன்னிப் பேச்சை ஆரம்பிக்கும் போதே தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்காக இல்லை. வீதிகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருக்கிறது என 1954 ஆம் ஆண்டு டி. ஏ. ராஜபக்ஷ இந்த சபையில் தெரிவித்திருந்தார்.

1970 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இவ்வாறான கூற்றை இந்தச் சபையில் தெரிவித்திருந்தார். கிராம அபிவிருத்தி, உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படு த்த வேண்டும் என்ற தேவை அன்றே உணரப்பட்டது என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.