செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வட பகுதிகளில் மக்கள் மீள் குடியேற்றப்படுவதற்கு முன்னர் அப்பகுதிகளில் தொல்லியல் ஆய்வுள் மேற்கொள்வது முக்கியமானதாம்!

வடக்கில்  மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக அங்குள்ள தொல்லியல் மையங்களை அடையாளம் கண்டு அவற்றை ஆய்வு செய்வது அவசியமானது என தொல்லியல் திணைக்கள பிரதிப் பொதுப் பணிப்பாளர் கலாநிதி நிமல் பெரேரா கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவனியா, மன்னார் உள்ளிட்ட வடமாகாணத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொல்லியல்சார் இடங்களை அடையாளம் கண்டு யு.என்.டி.பியின் நிதியுதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

30 வருடங்கள் வடபகுதியில் போர் நடைபெற்றதால் தொல்லியல் சார் இடங்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபடமுடியவில்லை. அதனால், தற்போது அப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் இடம்பெயர்ந்துள்ள பகுதிகளில் கண்ணிவெடிகள் மற்றும், வெடிபொருட்களை  அகற்றிய பின்னரே முழுமையாக மீள்குடியேற்றப்படுவர் என அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. அதனால் நிவாரண முகாம்களில் இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் ஊர்களில் மீள்குடியேற்றப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகளின் யுத்தத்திற்கு ஊக்கமளித்த ரிஎன்ஏ வட பகுதி மக்களின் அவலங்களுக்கு முக்கிய பொறுப்பு – பிரதி அமைச்சர் முரளிதரன்

Muralitharan_Vவடபகுதி மக்களின் இன்றைய அவலங்களுக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பும் முக்கியமாக பொறுப்பேற்க வேண்டும் என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தை நிறுத்த வேண்டும் எனக்கோரி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து தான் வெளியேறிய போதிலும், தமிழ்தேசியக்கூட்டமைப்பு யுத்தத்தை முன்னெடுப்பதற்கு புலிகளுக்கு ஊக்கமளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். வன்னி மக்களின் நிலைமைகள் திருப்தியடையக் கூடிய நிலையில் இல்லை என்பது உண்மை. ஆனால் குறைகளை மட்டும் கண்டுபிடிப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றம் கண்டு பிடிப்பது மிகவும் சுலபமானது. கூட்டமைப்பினர் குறைகளைக் கண்டு பிடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாது, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளில் முனைப்புக் காட்டவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டமைக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு. இவை இப்போது இரண்டு மாகாணங்களாக செயற்படுவதில் தவறில்லை. இரு மாகாண அலகுகளாக இயங்குவதன் மூலம் அதிகளவு வளங்களை ஒதுக்கீடு செய்யக்கூடிய சாத்தியம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.  மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘வெசாக்’ கொண்டாட்டத்திற்காக நயினாதீவுக்கு 27 ஆயிரம் சிங்கள மக்கள் வந்து சென்றுள்ளனர்!

யாழ். மாவட்டத்தில் இம்முறை நடைபெற்ற ‘வெசாக்’  பண்டிகை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தென்னிலங்கையிலிருந்து 27 ஆயிரம் பேர் நயினாதீவு நாகவிகாரைக்கு வந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையினர் மேற்படி மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். புங்குடுதீவு கடற்படையினரும், குறிக்கட்டுவான் பொலிஸாரும் இணைந்து இம்மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேற்கொண்டுள்ளனர்.

யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் யாழ்.மாவட்டத்தில் முன்னரெப்போதும் இல்லாத அளவில் ‘வெசாக்’கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியத்தின் போராளி மகரசிங்கம் காலமானார்!

Maharasingam_Sதமிழ்த் தேசியத்தின் போராளியான மகரசிங்கம் இன்று (யூன் 4 2010ல்) காலமானார். யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இலங்கை இனப் பிரச்சினை காரணமாக புலம்பெயர்ந்த மிக ஆரம்பகாலத்தவர் ஆவார். தென்கிழக்கு லண்டனில் உள்ள மருத்துவ இல்லத்தில் தனது 87வது வயதில் உயிர் நீத்துள்ளார்.

பிரித்தானியாவில் தமிழ் தேசியத்திற்கான போராட்டங்களை முன்னெடுத்ததில் மகரசிங்கம் குறிப்பிடத்தக்கவர். இவரே பிரித்தானியாவில் தமிழ் மக்கள் மீதான இனஒடுக்குமுறைக்கு எதிராக முதன் முதலில் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்.

Maharasingam_Sபிரித்தானியாவுக்கு தமிழ் மக்கள் அரசியல் தஞ்சம்கோரிப் புலம்பெயர்ந்த போது அவர்களுக்கான உதவி நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். தமிழ் அக்சன் கொமிட்டி என்ற அமைப்பை உருவாக்கி அதனூடாக அரசியல் தஞ்சம் கோரிப் புலம்பெயர்ந்தோருக்கு உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கி வந்தார். தமிழ் மக்கள் மீதான இனஒடுக்குமுறைக்கு எதிராகவும் அகதிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் மகரசிங்கம் ஐநா வின் வெவ்வேறு பிரிவுகளில் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வந்தவர்.

1980க்களின் இறுதிப்பகுதியில் பிரித்தானியத் தமிழர்களின் பிரதிநிதியாகத் தன்னை அறிவித்துக் கொண்ட மகரசிங்கம் அதற்கான கையெழுத்து வேட்டையையும் நடாத்தி இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை வன்னியில் இருந்திருந்தால் மகரசிங்கம் அவர்கள் நாட்டுப் பற்றாளராக கெளரவிக்கப்பட்டு இருப்பார்.

iifaவின் சிறந்த திரைப்படத்திற்கான விருது “த்ரி இடியட்ஸ்” திரைப்படத்திற்கு

iifa-colombo.jpgகொழும் பில் நடைபெற்ற iifa சர்வதேச இந்திய விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது “பா” திரைப்படத்திற்காக அமிதாப் பச்சனுக்கும் சிறந்த நடிகைக்கான விருது “பா” திரைப்படத்திற்காக விஜய பாலனுக்கும், “த்ரி இடியட்ஸ்” திரைப்படத்திற்காக கரீனா கப்பூருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஸ்டார் பிளஸ் புதுமுக நடிகைக்கான விருதை இலங்கையைச் சேர்ந்த ஜெக்குலின் பெர்ணான்டஸ் பெற்றுக்கொண்டார்.

சிறந்த திரைப்படத்திற்கான விருது விது வினோத் சொப்ரா தயாரித்த “த்ரி இடியட்ஸ்” திரைப்படத்திற்கு கிடைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் வழங்கப்பட்ட ஏனைய விருதுகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு :- 

ஸ்டார் பிளஸ் வருடத்தின் சிறந்த புதுமுக நடிகை :-  மாஹி கில்
ஸ்டார் பிளஸ் வருடத்தின் புதுமுக நடிகர் :- ஜாக்கி பக்னனி
குளோபல் கிறீன் விருது :- விவேக் ஒப ரோய்
சிறந்த இசையமைப்பாளர் :- பிரிதம் சக்ர போர்த்தி
சிறந்த பாடலாசிரியர்  :- ஸ்வானந்த் கேர்கிரே
சிறந்த பின்னணி பாடகி  :- கவிதா சேத்
சிறந்த பின்னணி பாடகர்  :- ஷான்
சிறந்த திரைக்கதை: 3 இடியட்ஸ்
சிறந்த ஒளிப்பதிவு: 3 இடியட்ஸ்
சிறந்த வசனம்: 3 இடியட்ஸ்
சிறந்த பின்னணிஇசை: 3 இடியட்ஸ்
சிறந்த எடிட்டிங்: 3 இடியட்ஸ்
சிறந்த ஒலிப்பதிவு: 3 இடியட்ஸ்
சிறந்த பாடல் பதிவு: 3 இடியட்ஸ்
சிறந்த ஆடையலங்காரம்: அனாஹிதா ஷெரோப், டோலி அஹ்லுவாலியா
சிறந்த கலை இயக்குநர்: சாபு சிரில்
சிறந்த சண்டைக் காட்சி இயக்குநர்: ஷாம் கௌஷல்
சிறந்த மேக்அப் கிறிஸ்றீன் டின்ஸ்லே, டொமினி டில்

கட்சிக்கு வெளியில் இருப்பவர்களே அதிக அழுத்தம் கொடுக்கின்றனர்-ரணில்

ranil.jpgகட்சிக்கு வெளியே இருப்பவர்களினாலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிக அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மல்வத்த பீட மகாநாயக்க தேரர் வண.திப்படுவாவய ஸ்ரீ சுமங்கல தேரரை நேற்று கண்டியில் வைத்து சந்தித்த போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்

கொழும்பில் கால்வாய் வழியாக பயணிகள் படகுச் சேவை- வெள்ளவத்தையிலிருந்து ஆரம்பம்

கொழும்பு கால்வாய் மார்க்கங்கள் ஊடாகப் பொதுமக்கள் போக்குவரத்துச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு திறந்த பல்கலைக் கழகத் திலிருந்து வெள்ளவத்தை வரை பல்கலைக் கழக மாணவர்களுக்கும் அதன் ஊழியர்களுக்குமாக கடற்படையினரால் நடத்தப்பட்டு வந்த படகுச் சேவை இப்போது பொதுமக்களுக்காகவும் நடத்தப்படுகின்றது.

கடந்த முதலாந் திகதியிலிருந்து இந்தப் படகுச் சேவையைப் பொதுமக்களும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனரென கடற்படையின் பேச்சாளர் கப்டன்அதுல செனரத் தெரிவித்தார். வெள்ளவத்தையில் காலை 7.30 முதல் 9.30 வரை படகுச் சேவை ஆரம்பிப்பதுடன் மாலை 4.30 முதல் 6.30 வரை நாவலையிலிருந்து சேவை ஆரம்பிக்கும் எனக் கடற்படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

பங்களாதேஷில் 3 நாள் துக்க தினம் – தீயில் கருகி இறந்தோர் எண்ணிக்கை 125 ஆக அதிகரிப்பு

04-dakka-fire.jpgபங்களா தேஷ் தலைநகர் டாக்காவில் தொடர் மாடி குடியிருப்புத் தொகுதியொன் றில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களது சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றன. 50 க்கும் மேற்பட் டவர்கள் எரிகாயங்களுடன் காப்பாற்றப்பட்டுள் ளனரென பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து, பங்களாதேஷில் மூன்று நாள் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆறு மாடிகளைக் கொண்ட இந்த தொடர்மாடி குடியிருப்புகளுக்கு அருகில் இருந்த மின் மாற்றியொன்று வெடித்துச் சிதறியதிலேயே தீ பற்றிக் கொண்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், தீ 300 அடி உயரத்துக்கும் மேல் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்ததாகக் கூறினர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் கட்டடத்துக்குள் சிக்கியவர்களை மீட்பதற்காக அங்குமிங்கும் ஓடினர். காயம் அடை ந்தவர்கள், தாகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேரின் நிலைமை கவ லைக்கிடமாகவுள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் பகுதியின் அருகில் உள்ள கயேட்டுவலி என்ற இடத்தில், வீடுகளில் இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தி இயங்கும் சிறு சிறு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து சட்ட விரோதமாக இரசாயனங்கள் இங்கே வைக்கப்பட்டிருந்தது தான் தீ மள மளவென்று பரவியதற்குக் காரணம் என்று தகவல்கள் கூறுகின்றன.

இட நெருக்கடியால் தீயணைப்பு வீரர்களால் முழுவதும் மீட்புப் பணியில் ஈடுபட முடியவில்லை. தீயை அணைப்பதில் காலையில் இருந்து தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இன்னும் பலர் அக்கட்டடத்துக்குள் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை, பிரதமர் ஷேக் ஹசீனா நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசு ஏற்கும் என்று அறிவித்தார். தீயில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் தரப்படும் என்றும் தெரிவித்தார். சம்பவம் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மூன்று நிபுணர்கள் குழு இதை விசாரிக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா 14 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்தோனேஷிய விஸா கட்டுப்பாடுகள் : தளர்த்துமாறு இலங்கை கோரிக்கை

இலங்கையர்களுக்கான விஸா கட்டுப்பாடுகளை இந்தோனேஷிய அரசாங்கம் தளர்த்த வேண்டும் என இந்தோனேஷியாவுக்கான இலங்கைத்தூதுவர் மேஜர் ஜெனரல் நந்தா மல்லவாரச்சி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தோனேஷிய உல்லாசப்பயணத்துறை அமைச்சர் ஜெரோ வாசிக்குடனான சந்திப்பின் போதே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஜகர்த்தாவிலுள்ள உல்லாசப்பயணத்துறை அமைச்சு அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இலங்கைக்கான இந்தோனேஷியத்தூதுவர் ஜஃபர் ஹுஸைன்,உல்லாசப்பயணத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

இந்தோனேஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகால ராஜதந்திர தொடர்புகள் காணப்படுகின்றன. இருநாடுகளுக்கு இடையில் பல்தரப்பு வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டுமானால் விஸா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவேண்டும் என்றும் மேஜர் ஜெனரல் நந்தா மல்லவாரச்சி வலியுறுத்தினார்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக முன்னாள் இராணுவத்தளபதி நியமிக்கப்படவுள்ளார்.

Mullaitivu_Districtமுல்லைத் தீவு மாவட்ட அரசாங்க அதிபராக முன்னாள் இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சி.ஆர்.டி.சில்வா நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக தற்போது கடமை புரியும் இமெல்டா சுகுமாரை அப்பதவியிலிருந்து விடுவித்து, வடமாகாணசபையில் அவருக்கு பிரதம செயலர் பதவி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Mullaitivu_Districtவடக்கு கிழக்கு மாகாண ஆளுநர்களாக முன்னாள் இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அரசஅதிபராக ஒரு முன்னாள் இராணுவத் தளபதி நியமிக்கப்படவிருப்பதான செய்தி தமிழ் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. வெலிஓயா, பதவியா, மகாவலி எச் வலயம் என்பனவற்றை உள்ளடக்கியதாக வன்னியில் அனைத்துப் பகுதிகளையும் சிங்கள மயமாக்கும் நோக்கத்துடன் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என தமிழ்மக்கள் பலருக்கு சந்தேகம் தோன்றியுள்ளது.