செய்திகள்

செய்திகள்

செய்திகள்

விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு இராணுவச் சிப்பாய்களும் பிணையில் விடுவிப்பு.

விசுவமடுவில் இரு பெண்கள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதான குற்றச்சட்டில் வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த நான்கு இராணுவச் சிப்பாய்களுக்கும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த யூன் மாதம் 6ஆம் திகதி விசுவமடுவில் இரு பெண்கள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நான்கு இராணுவச்சிப்பாய்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு இராணுவச் சிப்பாய்களையும் பிணையில் விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி திருமதி கொஸ்வத்த பிணைமனு ஒன்றை கடந்த 10ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.  இம்மனுவை ஆட்சேபித்து பாதிக்கப்ட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் வாதாடியிருந்தார். வழக்கு விசாரணைகள் பூர்த்தியடைந்த நிலையில்  20ஆம் திகதி பிணைமனு மீதான தீர்ப்பினை வழங்குவதாக நீதவான் பெ.சிவகுமார் அறிவித்திருந்தார்.

இதன்படி நேற்று 20ஆம் திகதி புதன்கிழமை குறித்த நான்கு சிப்பாய்களுக்கும் நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கப்படுவதாக நீதவான் அறிவித்தார். இச்சிப்பாய்கள் 25 அயிரம் ரூபா காசுப் பிணையிலும், ஒவ்வொருவரும் மூன்று பேரின் ஐந்து இலட்ச ருபா சரீரப்பிணையிலும் செல்ல நீதவான் உத்தரவிட்டார். மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும் அறிவித்த நீதவான் குறித்த நபர்கள் வெளிநாடுகளுக்குப் பயணமாவதைத் தடுக்குமாறும் சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

மன்னாரில் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெள்ளிக்கிழமை ஆரம்பம். ஞாபகார்த்த விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

மன்னார் தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்ச் செம்மொழி மாநாடு மன்னாரில் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் தமிழியல் துறையில் அரும்பணியாற்றிய பெரியோர்களின் பெயரில் ஞாபகார்த் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

விருது பெறும் பதினைந்து பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்த்தூது தனிநாயகம் விருதை ஜின்னா சரிபுதீன், அறுமுகநாவலர் விருதை பேராசிரியர் சிவலிங்கராஜா, சுவாமி விபுலானந்தர் விருதை பேராசியரியர் அ.சண்முகதாஸ், சோமசுந்தரப்புலவர் விருதை கவிஞர் மேமன்கவி, வித்துவான் ரகுமான் விருதை திருமதி ந.சிறீதேவி, சுவாமி ஞானப்பிரகாசர் விருதை பேராசிரியர் எம்.ஏ.நுஹ{மான், கலாயோகி ஆனந்தகுமாரசாமி விருதை வை.சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி), சின்னத்தம்பி புலவர் விருதை வே. இறைபிள்ளை, முதுதமிழ் புலவர் நல்லதம்பி விருதை அகளங்கன், அறிஞர் சித்திலெப்பை விருதை நா.யோகேந்திரநாதன், தாவீது அடிகள் விருதை டொமினிக் ஜீவா, பண்டிதை செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி விருதை திருமதி லீலாம்பிகை செல்வராஜா, ஈழகேசரி பொன்னையா விருதை பத்திரிகையாளர் கானமயில்நாதன், இசைப்புலவர் ந.சண்முகரட்ணடம் விருதை திருமதி விஜயகுமாரி, சிரித்திரன் சிவஞானசந்தரம் விருதை ச.யோகரத்தினம் ஆகியோர் பெறுகின்றனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இருவர் காயம்.

கடந்த 18ஆம் திகதி கிளிநொச்சி பாரதிபுரத்தில் கட்டடம் ஒன்றின் இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்த போது குண்டு ஒன்று பெரும் அதிர்வுடன் வெடித்துள்ளது. இதனால் இருவர் படுகாயமடைந்தனர்.

கிளிநொச்சியில் தினமும்  குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்டு வருகின்றன. போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை துப்புரவாக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பல இடங்களில் வெடிபொருட்கள் மீடக்கப்பட்டு அவை செயலிழக்கப்படுவதாலும் தற்செயலாக நிகழும் பல குண்டுகள் வெடிப்புக்களாலும் இச்சத்தங்கள் கேட்டுவருகின்றன. இக்குண்டு வெடிப்பினால் பொதுமக்கள், துப்புரவாக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனவர்கள் பாதிப்படைகின்ற நிலையும் ஏற்பட்டள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகளில் மேலும் 500 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்.

due-00000.jpgபுனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் மேலும் 500 பெண்கள் இம்மாத இறுதியில் விடுவிக்கப்படுவர் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர  நேற்று தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடீவுற்ற நிலையில் 11,696  புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர். கடந்த ஒருவருடத்திற்கு மேலாக இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றது. ஓகஸ்ட் மாதம் வரை இவர்களில் 4,485 பேர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,881 ஆண்களும் 1,604 பெண்களும் அடங்குகின்றனர். இவ்வெண்ணிக்கையில் 594 சிறுவர்களும் அடங்குகின்றனர். இதில் பெண்கள் கணிசமான அளவில் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், இம்மாத இறுதியில் 500 பெண்கள் விடுவிக்கப்பட்டால் 27 பெண்கள் மட்டுமே புனர்வாழ்வு முகாமில் எஞ்சியிருப்பர் எனவும் அவர் குறிப்பட்டார்.

கர்தினாலாக மல்கம் ரஞ்சித் ஆண்டகை

copy.gifபரிசுத்த பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பர் 24 புதிய கர்தினால்களின் பெயர்களை அறிவித்திருக்கிறார். கொழும்பு மறைமாவட்ட ஆயர் மல்கம் ரஞ்சித் பாப்பரசருக்கு இரண்டாம் இடத்தை வகிக்கும் கர்தினாலாக நியமிக்கப்பட்டுள்ளார். 16 ஆவது பரிசுத்தப் பாப்பரசரினால் வத்திக்கானில் இலங்கை நேரப்படி நேற்று மாலை 3.45 மணியளவில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா,லத்தீன் அமெரிக்கா,ஆசியா,ஆபிரிக்காவுக்கான முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் இந்தக் கர்தினால்களில் அதிக எண்ணிக்கையானோர் இத்தாலியர்களாகும். 2 அமெரிக்கர்களும் இதில் அடங்கியுள்ளனர். புதிய கர்தினால்களில் வாஷிங்டன் டி.சி.யின் பேராயர் டொனால்ட் வூர்ல்,பேராயர் ஜேமன்ட் பர்க் ஆகியோர் அமெரிக்கர்களாவர்.  பேராயர் ரேமன்ட் பேர்க் வத்திக்கான் நீதிமன்றுக்கு தலைமை தாங்குகிறார். கருச்சிதைவுரிமைகளுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவிலுள்ள ஜனநாயகக் கட்சியை இவர் கடுமையாக விமர்சிப்பவராவார். இந்த அறிவிப்பை பாப்பரசர் புதன்கிழமை விடுத்திருக்கிறார். வார்சோ, மூளிக், கின்சாசா,  குயிற்றோ,  லூசாக்கா, சம்பியா, இலங்கை ஆகியவற்றுக்கு புதிய கர்தினால்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

லிற்றில் எய்ட் இன் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை நியமனம்! லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் மருந்துப் பொருட்களை விநியோகித்தது!

Mareeni_ManuelpillaiDr_LittleAidஇலங்கையில் பல்வேறு மனித நேய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் லிற்றில் எய்ட் அமைப்பின் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை பொறுப்பேற்றுள்ளார். செப்ரம்பர் 17 இல் இடம்பெற்ற ஆண்டுக் கூட்டத்தில் லிற்றில் எய்ட் உறுப்பினர்கள் இவரை ஏகமனதாகத் தெரிவு செய்தனர்.

உதவித் திட்டங்கள் 
மே 18 2009 ல் பிரித்தாகனிய பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் இதுவரை 20க்கும் மேற்பட்ட உதவித் திட்டங்களை முன்னெடுத்து உள்ளது. தமிழ் அமைப்புகளுடனும் சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்து இவர்கள் இந்த உதவித் திட்டங்களை முன்னெடுத்தனர்.

லண்டன் அகிலன் பவுண்டேசன், ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், தேசம், தீவக மேம்பாட்டு சமூகம் ஆகிய தமிழ் அமைப்புகள் லிற்றில் எய்ட் உடன் இணைந்து மனித நேயத் திட்டங்களை முன்னெடுக்கின்றன.

Medicine Without Border, Global Medical Aid, Book Abroad போன்ற சர்வதேச அமைப்புகளும் லிற்றில் எய்ட் உடன் இணைந்து உதவிகளை மேற்கொள்கின்றன. Medicine Without Border, Global Medical Aid ஆகியவற்றின் உதவியுடன் லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் பவுண்ட் பெறுமதியான மருத்துவ உதவிகளைப் (பெரும்பாலும் மருந்துப் பொருட்கள்) பெற்று பெரும்பாலும் வடக்கு கிழக்கில் உள்ள மருத்துவ மனைகளுக்கு விநியோகித்தது. அரசுசாரா நிறுவம் ஒன்று இவ்வளவு தொகையான மருந்துப் பொருட்களை இலங்கையில் பெற்று விநியோகித்தது இதுவே முதற் தடவையாகும்.

எதிர்காலம்
யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட லிற்றில் எய்ட் ஆரம்ப காலங்களில் முகாம்களில் இருந்த மக்களுக்கான உடனடித் தேவைகளை மேற்கொண்டது. மரக்கறி வகைகள், குழந்தைகளுக்கான பால்மா, துணிவகைகளை வழங்கியது.

மேற்கொண்டு இடைக்கால நீண்டகாலத் திட்டங்களையே லிற்றில் எய்ட் மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவது, ஆங்கலக் கல்விக்கு உதவுவது போன்ற நடவடிக்கைகளை லிற்றில் எய்ட் திட்டமிட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக புக் அப்ரோட் நிறுவனத்துடன் இணைந்து ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான நூல்கள் தருவிக்கப்பட்டு உள்ளது. இவை இன்னும் சில வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. மேலும் 20 வரையான கணணிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவையும் இன்னும் சில வாரங்களில் விநியோகிக்கப்படும். லிற்றில் எய்ட்க்கு முதலாவது காசோலையை  வழங்கிய எம் சூரியசேகரம் லண்டனில் இருந்து யாழ் சென்று மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு எடுப்பது குறிப்பிடத்தக்கது.

கணக்கு வழக்கு
புலம்பெயர் நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட பொது அமைப்புகளில் லிற்றில் எய்ட் அமைப்பு தனது கணக்கு கோவைகளை திறந்ததாகவும் வெளிப்படையாகவும் வைத்தள்ளது.

www.littleaid.org.uk என்ற இணையத்தளத்தில் கணக்கு வழக்குகளைப் பார்வையிட முடியும். இது ஏனைய அமைப்புகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ரஸ்டிகள் – உறுப்பினர்கள்
லிற்றில் எய்ட் இன் தலைவி: டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை, செயளாயினி: சர்மிளா பெர்னான்டோ. பொறுப்பான இரு பதிவிகளையும் பெண்களே வகிக்கின்றனர். தனாதிகாரி: சிறில் அல்பிரட், திட்ட இணைப்பாளர்கள்: சண் ராசையா, நிஸ்தார் மொகமட், ஜெயபாலன் தம்பிராஜா, ரரின் கொன்ஸ்ரன்ரைன். இவர்கள் இலங்கையின் பல்கலாச்சாரத்தன்மையை பிரதிபலிக்கும் வைகயில் அமையப் பெற்றுள்ளனர்.

‘ரஸ்டிஸ் வீக்’ இணையச் சஞ்சிகை லிற்றில் எய்ட் தலைவி மரினி மனுவேற்பிள்ளையை ஒரு வாரத்திற்கான ரஸ்டியாக தெரிந்து கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

லிற்றில் எய்ட் உதவித் திட்டங்கள்:

தற்போது இலங்கை சென்றுள்ள ரிற்றில் எயட் திட்ட இணைப்பாளர்களில் ஒருவரான ரி கொன்ஸ்ரன்ரைன் அங்கு சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றார். அவை பற்றிய விபரம் பின்னர் பதிவிடப்படும்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட உதவித் திட்டங்கள்:

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்துகிறது ‘அகம்’ திருகோணமலை இளைஞர் அமைப்பு

இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்தணர்வு உடன்பாடு
 
லிற்றில் எய்ட் காயப்பட்ட படைவீரர்களுக்கு இன்ரநெற் மையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது
 
எழுவைதீவில் நன்னீர் கிணறு: லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்த வேலைத்திட்டம்
 
மதங்களைக் கடந்து இணைந்து உதவும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் சென் அந்தனீஸ் கல்லூரியும்
 
200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் ஆல் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது!
 
சாதி மத இன பேதங்களைக் கடந்து லிற்றில் எய்ட் கரம் கொடுக்கின்றது.
 
புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!
 
முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!
 
1.54 மில்லியன் அமெரிக்க டொலர் மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் மூலம் தமிழ் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது! : த ஜெயபாலன்
 
வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்
 
துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்
 
மறக்கப்படும் வன்னி மக்களும், மறந்து போகும் புலம்பெயர் மக்களும். – லிற்றில் எய்ட்கள் தொடர வேண்டும்!!! : த ஜெயபாலன்
 
டென்மார்க்கில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் : லிற்றில் எய்ட்
 
லிற்றில் எய்ட் இன் சின்னச் சின்ன உதவிகள் : வி அருட்சல்வன்
 
வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்

தரக் குறைவான மருத்துவ மையங்கள் மீது NHS நடவடிக்கை !

NHS_Logoநோயாளர் களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்கத் தவறும் மருத்துவ மையங்கள் மீது பிரித்தானிய தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு என்எச்எஸ் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. தரமான சுகாதார சேவையை வழங்கத் தவறுபவர்களில் ஆங்காங்கே தமிழ் மருத்துவ மையங்களும் தமிழ் மருத்துவர்களும் சிக்கி உள்ளனர். இவர்களில் சிலரின் மீதான விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றது.

வடக்கு லண்டன் கலோடோனியன் றோட்டில் பல்வைத்திய நிலையத்தை நடாத்தி வந்த கைலாசம் பஞ்சநாதன் மீது விதிக்கப்பட்ட இடைக்காலக் கட்டுப்பாடுகளை Islington Primary Care Trust தற்போது நீக்கி உள்ளது.

2008 ஒக்ரோபரில் தொற்றுநோய் கட்டுப்பாட்டு செய்முறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதாக கைலாசம் பஞ்சநாதன் மீது குற்;றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு General Dental Councilக்கு முறைப்பாடுகள் சென்றன. 2009 நவம்பரில் கைலாசம் பஞ்சநாதனின் பல்வைத்தியநிலையம் சோதணைக்கு உள்ளானது. தொற்றுநோய்  கட்டுப்பாட்டை உறுதிசெய்வதற்கு கவனிக்கப்பட வேண்டிய 9 விடயங்களிலும் கைலாசம் பஞ்சநாதனின் வைத்திய நிலையம் தவறி இருந்ததை அச்கோதனை தெரியப்படுத்தியது. ஏப்ரல் 2009ல் மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களின் பதிவு பற்றிய ஓடிற்றில் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்தது.

ஆனால் தனது தவறை உடனடியாகவே கவனத்தில் எடுத்துக் கொண்ட கைலாசம் பஞ்சநாதன் தான் தொழில் செய்வதை இடைநிறுத்த முன்வந்ததுடன் தொழில்தர ஆலோசனையைப் பெற்று வைத்திய நிலையத்தின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக விசாரணைக் குழு தெரிவித்து உள்ளது.

2009 யூனில் சுயாதீன அமைப்பினு+டாக கைலாசம் பஞ்சநாதனின் வைத்திய நிலையம் மீளவும் சோதணைக்கு உட்படுத்தபக்பட்டது. தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்கு இருக்க வேண்டிய 9 விடயங்களும் இம்முறை தரமுடையதாக இருந்தது.

கைலாசம் பஞ்சநாதன் தொடர்ந்தம் தரத்தை உயத்தி வருவதில் திருப்தி அடைந்த விசாரணைக் குழு அவர் பாதிக்கப்பட்ட விடயங்களில் தரத்தினை உயர்த்தி உள்ளதை ஆதாரபூர்வமாக மதிப்பீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரால் தரமான சேவைகளை வழங்க முடியும் என்பதை அக்குழு ஏற்றுக்கொண்டது. அதனையடுத்து அவர் தொழிலை மேற்கொள்வதில் இருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.

தீர்வுக்கு முன் தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாடு ஏற்படவேண்டும் – ஜனாதிபதி

president.jpgஇனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னராக தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாடு ஏற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.”சில (தமிழ்) அரசியல் கட்சிகள் ஏற்கனவே சாதகமான முறையில் பதிலளித்துள்ளன. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவு கட்சிகள் உள்ளன. அவற்றின் மத்தியில் கருத்தொருமைப்பாட்டை நாம் எதிர்பார்க்கின்றோம். விசேடமாக அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் கருத்தொற்றுமையை எதிர்பார்ப்பதாக நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதை தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் தூதுக்குழுவானது பிரிட்டிஷ் தொழிற்கட்சி எம்.பி. போல் மேர்பி தலைமையில் ஜனாதிபதியைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபை நிர்வாகம் தொடர்பான கேள்வியின் போது உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கே முதலாவதாக முன்னுரிமை அளிக்கப்படுமென பிரிட்டனின் பொதுநலவாய பாராளுமன்றசங்கத் தூதுக்குழுவிற்கு கூறப்பட்டதாக அவுட்லுக் இணையத்தளம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. உள்ளூராட்சிசபைத் தேர்தல்களின் பின்னர் வட மாகாண சபைக்கு தேர்தல்கள் இடம்பெறும். கிழக்கில் பின்பற்றப்பட்ட நடைமுறை அங்கும் மேற்கொள்ளப்படும். பயங்கரவாதத்தைத் தோற்கடித்த பின்னர் கிழக்கில் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்ததாகவும் அங்கு தேர்தல்கள் திருப்திகரமானதாக நடத்தப்பட்டதாகவும் ஜனாதிபதி தூதுக்குழுவிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த முயற்சிகளை மேர்பி பாராட்டியுள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் சகல கட்சிகளும் உங்களின் நிலைப்பாட்டில் உள்ளன. இன்று இலங்கைக்கு உதவுவதற்குத் தயாராக அவை உள்ளன என்று மேர்பி கூறியுள்ளார்.இந்தத் தீவிலிருந்து பயங்கரவாதம் இல்லாமல் போய்விட்டதையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்துள்ளோம். இன்று புனர்நிர்மாணம், நல்லிணக்கம் அன்றாட நடவடிக்கையாக மாறியுள்ளதென்று மேர்பி கூறியுள்ளார்.

இலங்கைக்கு தான் முன்னர் மேற்கொண்டிருந்த விஜயத்தை அவர் நினைவுகூர்ந்தார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கிளிநொச்சி இருந்த சமயத்தில் அவர் அங்கு சென்றிருந்தார். இப்போது இங்குள்ள சூழ்நிலையானது பிரிட்டனின் நிலைமையை ஒத்ததாகவுள்ளது. சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வட அயர்லாந்தில் யுத்தத்தில் பிரிட்டன் வெற்றிபெற்றிருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடபகுதி மக்களில் அநேகமானோர் தற்போது தண்ணீர், மின்சாரம், பாடசாலைகள், சுகாதாரசேவைகள், கல்வி என்பனவற்றையே விரும்புவதாக தூதுக்குழுவிடம் ஜனாதிபதி விபரித்திருப்பதாக உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவித்தது. தமிழ் மக்கள் மத்தியில் அபிவிருத்தி தொடர்பான கோரிக்கையே உள்ளது. சமாதானமின்றி அபிவிருத்தியில்லை. அபிவிருத்தியின்றி சமாதானமில்லையென ஜனாதிபதி கூறியுள்ளார். நல்லிணக்கம் தொடர்பான முயற்சிகள் குறித்து தூதுக்குழுவிடம் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நான்காவது ஈழப்போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அப்பணியை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் சர்வதேச மன்னிப்புச்சபை,மனித உரிமைகள் கண்காணிப்பகம்,சர்வதேச நெருக்கடிக்குழு போன்ற அமைப்புகள் அதனை நிராகரித்தமையை இட்டு ஜனாதிபதி தாம் கவலையடைந்திருப்பதாகக் கூறியுள்ளார். ஐ.நா. உட்பட சகலரையும் உள்ளடக்கியது இவ் ஆணைக்குழு எனவும் உள்நாட்டில் ஏற்படுகின்ற தீர்வே இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமெனவும் வட அயர்லாந்திலிருந்தோ அல்லது வேறெங்கிலிருந்தோ அதனை கொண்டுவர முடியாதெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எமது சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டதாக தீர்வு அமைய வேண்டும். அதேசமயம், ஏனையோரின் அனுபவத்தை கற்றுக்கொள்ள நாம் தயாராகவிருக்கின்றோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.மேலும், சிறுவர் போராளிகளினதும் இளைஞர்களினதும் புனர்வாழ்வில் துரிதமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அதிகாரப்பகிர்வு தொடர்பாகக் கூறுகையில், மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வே அவசியமென்று கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் விரும்பியிருந்ததை கொடுக்க முடியாது என ராஜபக்ஷ அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அதிகாரப்பகிர்வு தொடர்பான ஏதாவது நியாயபூர்வமான விடயங்களில் சகல கட்சிகளினதும் கருத்தொருமைப்பாடு அவசியமெனவும் அதனை பாராளுமன்றத்தின் மூலம் வழங்க முடியுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். சகல கட்சிகளையும் இணக்கப்பாட்டுக்கு வருமாறு தான் ஊக்குவிக்க முடியுமெனவும் பாராளுமன்றமே இறுதியான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: thinakkural. 20.01.2010

வடபகுதி மக்களுக்கு முழுமையான அரசபணி. வடமாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

mainpic.jpgவெற்றி கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பது சகலரினதும் தலையாய கடமையெனவும் அதனைக் காட்டிக் கொடுக்க இடமளிக்கக் கூடாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வவுனியாவில் நேற்றுத் தெரிவித்தார். நாட்டில் ஒரு அரசாங்கமே உள்ளதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, 20 வருடங்களுக்கு மேல் கஷ்டப்பட்ட மக்களுக்கு மன நிறைவான சேவையை வழங்க வேண்டுமெனவும் சேவை வழங்குவதில் இன, மத பேதங்கள், பாரபட்சங்கள் இருக்கக் கூடாதெனவும் வலியுறுத்திக் கூறினார்.

தம்மிடம்வரும் மக்கள் மனமகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்லும் வகையில் அதிகாரிகள் செயற்படுவது அவசியமெனவும் கருணையுடனும் அன்புடனும் அவர்களுக்கு சேவை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். மக்கள் சேவையே மகேசன் சேவை எனக் கொண்டு மக்களுக்கான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வடக்கில் சில அதிகாரிகள் தம்மிடம் வரும் மக்களிடம் இன, குல பாகுபாடு காட்டி பாரபட்சமான வகையில் செயற்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எத்தகைய பேதம், பாரபட்சத்துக்கும் இடமின்றி சிநேகபூர்வமான சேவையை வழங்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

வட மாகாண அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்புத் தலைமையகத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்ஷ, ரிசாட் பதியுதீன், குமார வெல்கம உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட, பிரதேச செயலாளர்கள், மாவட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

வட மாகாண மக்களுக்கான சகல குறைபாடுகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நான் அதிகாரிகளைப் பணித்துள்ளேன். இது விடயத்தில் அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் தமது மக்களுக்கு சேவை செய்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் மக்களுக்கான சேவையை செய்வதற்காக கடமைப்பட்டுள்Zர்கள் என்பதை ஒரு போதும் மறந்து விடக் கூடாது.

வடக்கில் பாதை, பாடசாலை அபிவிருத்தி, போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் என சகல அடிப்படை வசதிகளையும் துரிதமாகப் பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட அனைவருக்கும் அதற்கான பணிப்புரைகளையும் வழங்கினார்.

தாமதத்தினை தவிர்த்து சேவைகளை திருப்திகரமானதாக வழங்க சகலரும் அர்ப்பணிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
mainpic.jpg

ஓமந்தையில் புகையிரதப் பாதை நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்.

mmm.jpgஓமந்தையில் புகையிரதப் பாதை நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். ஜனாதிபதியின் இவ்விஜயத்தின்போது போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, அமைச்சர் ரிசாத் பதியுதீன், நாமல் ராஜபக்ஷ எம்.பி., ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்ஷ, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, இராணுவத் தளபதி ஜஹத் ஜயசூரிய, பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.