செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வெடிபொருட்கள் அகற்றப்பட்டதும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் – அமைச்சர் ரிசாட்

badurdeen.jpg“இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வெடிபொருட்கள், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகு’மென மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதன்படி முதற்கட்டமாக மன்னார் மாவட்டத்திலும், இரண்டாம் கட்டமாக வவுனியா மாவட்டத்திலும், மூன்றாம் கட்டமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டத்திலும் மீள்குடியேற்றப் பணிகள் நடைபெறுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள சுமார் ஒரு இலட்சம் மக்களை தற்காலிகமாக குடியமர்த்த செட்டிக்குளம் பிரதேசத்தில் நான்கு நிவாரண கிராமங்கள் உருவாக்கப்படுகின்றன. இரண்டு கிராமங்களின் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு சகல வசதிகளுடன் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு நிவாரண கிராமங்களின் வேலைகள் நடைபெற்று வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மிகவிரைவில் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளது. சிலாவத்தை, நானாட்டான் பகுதியிலேயே முதலில் மீள்குடியேற்ற வேலைத்திட்டங்கள் நடைபெறும் மடு மற்றும் பிரதேசங்களிலும் படிப்படியாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறும். ஏ32 வீதி, ஏ9 வீதி திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பூநகரி பாலத்தைக் கட்டுவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முஸ்லிம்களை தமது நண்பர்களாக கருதி அணுக வேண்டும் – ஒபாமா

globe-news.jpgதுருக்கியின் நிலைப்பாடானது முஸ்லிம் நாடுகளுக்கு முக்கிய சமிக்ஞையொன்றை வெளிப்படுத்துவதாகவும் ஐரோப்பாவில் அந்நாடு உறுதியாக நிலைபெற்றிருப்பதற்கு களம் அமைத்துத் தருவதாகவும் உள்ளதென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். அமெரிக்காவுக்கும் துருக்கிக்குமிடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு கட்டமாக அந்நாட்டுக்கு இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ள பராக் ஒபாமா, துருக்கியின் ஸ்தாபகர் அதாதுருக்கின் ஞாபகார்த்த ஸ்தலத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடொன்றுக்கு ஜனாதிபதி பதவியேற்ற பின் ஒபாமா விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான துருக்கியின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறினார்.  துருக்கிக்கு விஜயம் செய்வதற்கு முன்பு ஞாயிற்றுகிழமை பராகுவேயில் உரையாற்றிய ஒபாமா, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முஸ்லிம்களை நண்பர்களாகவும் அயலவர்களாகவும் அணுக வேண்டும் என வலியுறுத்தினார்.

“அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முஸ்லிம்களை தமது நண்பர்களாகவும் அயலவர்களாகவும் அநீதி, சகிப்புத்தன்மையின்மை, வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தில் பங்காளர்களாகவும் கருதி அணுகுவதுடன் பரஸ்பர அக்கறை மற்றும் பரஸ்பர கௌரவம் என்பவற்றின் அடிப்படையில் முஸ்லிம் நாடுகளுடன் உறவுகளைக் கட்டியெழுப்ப ஊக்குவிக்கவும் வேண்டும் என ஒபாமா கூறினார். 

அமெரிக்க தூதுவர் பிளக் இராணுவ தளபதியுடன் சந்திப்பு

robert-sekaj01pg.jpgஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபட் ஓ. பிளெக் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகாவை திங்கட்கிழமை இராணுவ தலைமையகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது புதுக்குடியிருப்பு மீட்பு மற்றும் வன்னி நிலைமைகள் குறித்து இராணுவ தளபதி அமெரிக்க தூதுவருக்கு விளக்கிக்கூறியுள்ளார். அண்மைய இராணுவ வெற்றிகள் மற்றும் விடுதலை புலிகளின் வீழ்ச்சி தொடர்பில் இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளின் பல உயர்மட்ட தலைவர்கள் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் இதன் காரணமாக அவர்களால் இதற்கு பின்னர் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்றும் இராணுவ தளபதி அமெரிக்க தூதுவருக்கு விளக்கியுள்ளார்.

அத்துடன் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வருகின்ற சிவிலியன்களை பராமரிக்கும் செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத்தினர் சிறந்த தயார் நிலையில் உள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணி – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரு மாவட்டங்களில் இணைகிறது : ரவூப் ஹக்கீம்

election_ballot_cast.jpgஜனநாயக மக்கள் முன்னணி இம்முறை மேல்மாகாண சபை தேர்தலில் இரு மாவட்டங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சிறுபான்மை மக்களின் வாக்குகளைச் சிதறடிக்காது களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் உள்ள மக்களின் பிரதிநிதிகளாக தம்மை நிலை நிறுத்தும் பொருட்டு ஒற்றுமையுடன் இத்தீர்மானத்தினை இரு கட்சிகளும் எடுத்ததாக ரவூப் ஹக்கீம் இன்று கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிரணியிலுள்ள பல சிறுபான்மைக் கட்சிகளையும் ஒன்றிணைத்து வடக்கு கிழக்கிலும், வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க நாம் பாடுபடுவோம். அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் சிறுபான்மை மக்களின் உரிமை இழக்க நேரிடும் சந்தர்ப்பத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இது ஒரு ஆரம்பகட்டமே.

அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியுடன் 200 சிவில் அமைப்புகள் இணைந்து எதிர்வரும் 7 ஆம் திகதி ‘சுதந்திரத்திற்கான மேடை’ என்ற இயக்கத்தை ஆரம்பிக்கவுள்ளன. இந்த இயக்கத்திலும் இரு கட்சிகளும் இணைந்து செயற்படவுள்ளோம். தேர்தல் சட்டங்களை மறைமுகமாக மாற்றும் முயற்சியில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் மற்றக்கட்சிகளில் இருந்து உறுப்பினர்களைத் தனது பக்கம் அழைத்து, பதவிகள் வழங்கி, பெரும்பான்மை பலத்தை இன்றைய அரசு தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது.

வட கொரியாவைக் கண்டிக்க ஐ. நா. எடுக்கும் முயற்சியில் ரஷ்யா, சீனா நழுவல் போக்கு – முடிவேதுமின்றி சபை கலைந்தது

globe-news.jpgவட கொரியா நீண்ட தூர ஏவுகணையைப் பரீட்சித்தமை ஐ.நா வின் தீர்மானத்தை மீறும் செயல் எனக் கண்டித்துள்ள அமெரிக்கா, ஜப்பான், தென்கொரிய ஆகிய நாடுகள் ஐ.நாவில் அங்கம் பெறும் 15 நாடுகளும் இதைக் கண்டிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசரமாகக் கூடிய ஐ.நா. வட கொரியாவின் ரொக்கட் ஏவுகணை விடயமாக சில தீர்மானங்களைக் கொண்டுவர ஆலோசனை நடாத்தியது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரியபோதும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இது சம்பந்தமாக மெதுவான போக்கை கடைப்பிடிக்கு மாறுகோரின. ஆறு நாடுகள் கொண்ட விசேட குழு வட கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடாத்துகையில் இவ்வாறான ஆத்திரமூட்டும் செயல்களில் பியாங் யொங் நடந்துகொண்டமை கண்டிக்கப்பட வேண்டியது என்றும் ஐ.நா. அவசர கூட்டத்தில் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்தன.

ஐ.நா.வுக் கான அமெரிக்கத் தூதுவர் சுசானரைஸ் அமெரிக்காவின் ஆழ்ந்த கண்டனத்தை வட கொரியாவுக்குத் தெரிவித்தார். ஜப்பானுடன் இணைந்து வட கொரியாவைக் கண்டிக்க வேண்டிய பொருத்தமான வழிகளை விரைவில் நடைமுறைப் படுத்தவுள்ளதாகவும் சுகானா ரைஸ் சொன்னார்.

ஏவப்பட்ட ரொக்கட் வெற்றிகரமாக விண்வெளியில் சங்கமித்து செய்மதியுடன் செயற்படுவதாக வடகொரியா கூறினாலும், ரொக்கட் விண்வெளியைச் சென்றடைய வில்லை இடையில் தவறி விட்டதாக அமெரிக்காவும் தென் கொரியாவும் கூறின.

பிரான்ஸ் இந்த விடயத்தில் 15 நாடுகளும் ஒன்று பட வேண்டுமெனக் கோரியதுடன் ரஷ்யா, சீனா என்பன விரைந்து செயற்படல் அவசியம். வடகொரியாவை காப்பாற்ற ஐ.நா. வில் அங்கம் வகிக்கும் நாடுகள் செயற்படக்கூடாது எனத் தெரிவித்தது. வட கொரியாவின் செயல் ஐ.நா. வின் தீர்மானங்களை மீறும் செயல் எனத் தாங்கள் நம்பவில்லையென சீனா, ரஷ்யா என்பன கூறின. வட கொரியாவுக்கெதிராக பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்படும்போது சீனா, ரஷ்யா என்பன எதிர்த்து வாக்களிக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. முடிவுகள் எதுவுமின்றி சபை கலைந்தது.

“தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் மனோகணேசனின் கரத்தை பலப்படுத்த தேர்தலை பயன்படுத்தவேண்டும்’

election_ballot_cast.jpgதலைநகர் கொழும்பில் தமிழ் மக்களின் உண்மைக்குரலாக, உரிமைகளை பெறுவதற்கு உரிய விதத்தில் ஓங்கி ஒலிக்கும் குரல் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலைவர் மனோ கணேசன் என்பதை உலகமே அறியும் என்று கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் மேல்மாகாணசபைக்கான வேட்பாருமான ஏணி.எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

எமது தமிழ் சமூகத்தின் உரிமைகருதி, உயர்வு கருதி தனது சிந்தனையையும் , செயலையும் விரிவுபடுத்துவதோடு, உரிமைக்குரலை நேர்மையாக முன்வைக்கும் நிகரற்ற தலைவர் மனோகணேசன். கடந்த காலங்களில் நடந்தநிகழ்வுகளில் கடத்தல், காணாமல்போனோருக்காக கரிசனையுடன் கடமையாற்றிய அவரின் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகள் கொழும்பில் இப்படியும் ஓர் அரசியல்வாதியா! என்று வியந்து பார்க்கும் அளவுக்கு பெருமைக்குரியது.

நமக்காக, நமது சமூகத்துக்காக நற்சிந்தனையுடன் காரியமாற்றும் மனோகணேசனின் கரங்களை நாம் அனைவரும் பலப்படுத்தும் ஓர் அரிய சந்தர்ப்பம் மேல் மாகாணசபைத் தேர்தலாகும். கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் எமது ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் மூவர் போட்டியிடுகின்றோம். மூவருக்கும் தமிழ் மக்களின் விருப்பு வாக்குகள் மூன்றையும் அளித்து அமோக வெற்றிபெறச் செய்வது நமது தலைவர் மனோகணசேனின் கரங்களை பலப்படுத்தும் ஓர் அரிய கடமையாகும்.

கொழும்பு மாவட்டத் தமிழ் மக்கள் தங்களது விருப்பு வாக்குகள் மூன்றினையும் ஜனநாயக மக்கள் முன்னணிவேட்பாளர்களுக்கே அளித்து, அமோக ஆதரவை தெரிவிக்கவேண்டும். அதன் மூலம் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதிநிதித்துவம் மேலும் இரண்டில் மூன்றாக அதிகரிக்கப்படும் அதேநேரம் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் மேல் மாகாணசபையில் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

மேல் மாகாணசபையில் மூன்று பிரதிநிதித்துவத்தை பெறுவதன் மூலம் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரின் பலம் அதிகரிக்கப்படுகின்றது என்பதை நாம் நன்குணர்ந்து, ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்கு வாக்களிக்கும் அதேசமயம் மூன்று விருப்பு வாக்குகளையும் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்களுக்கே அளிக்க வேண்டியது தமிழ் மக்களின் தன்மானக்கடமையாகும்.

கொழும்பு மாவட்டத் தமிழ் மக்கள் வெல்லமுடியாத வேட்பாளர்களுக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்காது. வெற்றிபெறும் மூன்று வேட்பாளர்களையும் அமோக வெற்றி பெறச் செய்வதே ஆரோக்கியமான வாக்களிப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

உடனடியாக 20,000 பேர் இடம்பெயர்ந்து வவுனியா வருவர் என எதிர்பார்ப்பு

risadbadurudeen.jpgவன்னிப் பகுதியில் இருந்து மேலும் 20 ஆயிரம் பேர் உடனடியாக இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வருவார்கள் என அதிகாரிகள் மட்டத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே 50 ஆயிரம் பேர் வவுனியாவுக்கு வந்திருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புதிதாக வருபவர்களை பாடசாலைகளில் தங்க வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்வாறு வருபவர்களுக்கான தங்குமிடம், அடிப்படை வசதிகள் என்பவற்றைச் செய்து கொடுப்பது தொடர்பாக இன்று வவுனியா செயலகத்தில் அரச அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் கலந்து கொண்டார். இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி பிரிகேடியர் எல்.சி.பெரேராவும் இந்தக் கூட்டத்தில் சமூகமளித்திருந்தார்.

அடையாளம் காணப்பட்டுள்ள பாடசாலைகள் எவை என்பது பற்றிய விபரங்களை அமைச்சர் வெளியிடவில்லை. எனினும், அந்தப் பாடசாலைகளில் மலசலகூடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்யுமாறு வலயக் கல்விப் பணிப்பாளருக்கும், துறைசார்ந்த திணைக்களத் தலைவர்களுக்கும் உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு நாளை

அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தை ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. குறித்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படமுன் மாகாண சபைகளின் கருத்தை அறிந்து கொள்ள முடிவெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாளைய விசேட செயலமர்வில் இச்சட்டதிருத்தம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

புதிய உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கிணங்க , உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வட்டார ரீதியில் அதிக வாக்குகளைப்பெறுபவருக்கே வெற்றி என்ற அடிப்படையில் நடத்தச் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை கைவிடப்படுகிறது.

இலங்கை இராணுவத்திடம் மனித நேயம் இல்லாவிட்டால் வன்னியில் எஞ்சியுள்ள பகுதி துவம்சமாக்கப்பட்டிருக்கும் – அமைச்சர் டலஸ்

dalas_alahapperuma.jpgமனித நேயம் மிக்க இலங்கை இராணுவத்திடம் மனித நேயம் குறித்து சர்வதேச இராணுவங்கள் பாடம் கற்க வேண்டும். அந்தளவுக்கு யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் மனித நேயம் பேணுகின்றது. இந்த மனிதநேயத்தின் காரணமாகவே வடக்கில் எஞ்சியுள்ள கிலோமீற்றர் பிரதேசத்தை இராணுவம் தாக்கி துவம்சம் செய்யாமல் பொறுமையாக செயல்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப் பெரும தெரிவித்தார்.

பலாங்கொடை டிப்போவை 37 ஆவது மாதிரி டிப்போவாக தரமுயர்த்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறியதாவது,

கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒசாமா பின் லேடன் சிக்கியிருந்தால் மேற்கு நாடுகளின் இராணுவங்கள் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்குமா? இலங்கை இராணுவம் தமிழ்ப் பொது மக்களைப் பாதுகாப்பதற்காக மிகவும் மனித நேயத்துடன் பண்புடன் செயல்படுகிறது.  எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க உட்பட சர்வதேச உலகமும் புலிகளைத் தோற்கடிக்க முடியாது எனக் கூறி அவர்களுக்கு தாயகத்தின் ஒரு பகுதியை தாரை வார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கையில் நாட்டின் ஜனாதிபதியாக வந்த மகிந்த ராஜபக்ஷ இந்த யுத்தத்தை எமது இராணுவத்தால் வெற்றி கொள்ள முடியுமென திடசங்கற்பம் பூண்டு முப்படைகளையும் வழிநடத்தி இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை எமக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

பயங்கரவாதிகளான அல்ஹைடா அமைப்பிடம் கூட விமானங்கள், நீர்மூழ்கிகள், பயங்கர ஆயுதங்கள் இருக்கவில்லை. ஆனால் யாருமே நினைத்தும் கூட பார்க்க முடியாத அளவில் ஆயுத மயப்பட்ட புலிகளை எமது இராணுவம் வெற்றி கொண்டமை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். நாம் எந்தளவு வெற்றிகளை அடைந்தாலும் அவை சிங்களவர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. சகல இன மக்களும் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ வேண்டும். சிறுபான்மை சமூகங்களை அடக்கிய உலகில் எந்த நாடும் முன்னேறியதில்லை.

பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை எதிர்த்து புலம்பெயர் தமிழர் கிளர்ந்தெழ வேண்டும் : பழ.நெடுமாறன்

neduma2.jpgவன்னியில் பாதுகாப்பு வலயம் மீது படையினர் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவருமே கிளர்ந்தெழ வேண்டும் என பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார். மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயத்தில் லட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பதால், படையினர் தாக்குதலைத் தொடுத்தால் அவர்களே உயிரிழக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலுக்கு முன்னோடியாகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிகளுக்குள் மக்களோடு மக்களாக ஊடுருவியிருப்பதாகவும், மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் படையினர் அனைத்துலகின் நாடிபிடிக்கும் முன்னோடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 16ஆம் நாள் இந்திய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும், தமிழ்-சிங்கள புத்தாண்டு நெருங்கி வருவதாலும், அதற்கு முன்னர் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என நினைக்கும் இந்திய, இலங்கை அரசுகள் அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்தியத் தேர்தலுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.  புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் அரசுகளுக்கு இந்தத் தகவலை உடனடியாகக் கொண்டு சென்று, இலங்கை அரசை வலியுறுத்த அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.