ஜனநாயக மக்கள் முன்னணி இம்முறை மேல்மாகாண சபை தேர்தலில் இரு மாவட்டங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சிறுபான்மை மக்களின் வாக்குகளைச் சிதறடிக்காது களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் உள்ள மக்களின் பிரதிநிதிகளாக தம்மை நிலை நிறுத்தும் பொருட்டு ஒற்றுமையுடன் இத்தீர்மானத்தினை இரு கட்சிகளும் எடுத்ததாக ரவூப் ஹக்கீம் இன்று கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிரணியிலுள்ள பல சிறுபான்மைக் கட்சிகளையும் ஒன்றிணைத்து வடக்கு கிழக்கிலும், வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க நாம் பாடுபடுவோம். அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் சிறுபான்மை மக்களின் உரிமை இழக்க நேரிடும் சந்தர்ப்பத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இது ஒரு ஆரம்பகட்டமே.
அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியுடன் 200 சிவில் அமைப்புகள் இணைந்து எதிர்வரும் 7 ஆம் திகதி ‘சுதந்திரத்திற்கான மேடை’ என்ற இயக்கத்தை ஆரம்பிக்கவுள்ளன. இந்த இயக்கத்திலும் இரு கட்சிகளும் இணைந்து செயற்படவுள்ளோம். தேர்தல் சட்டங்களை மறைமுகமாக மாற்றும் முயற்சியில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் மற்றக்கட்சிகளில் இருந்து உறுப்பினர்களைத் தனது பக்கம் அழைத்து, பதவிகள் வழங்கி, பெரும்பான்மை பலத்தை இன்றைய அரசு தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது.