வட கொரியா நீண்ட தூர ஏவுகணையைப் பரீட்சித்தமை ஐ.நா வின் தீர்மானத்தை மீறும் செயல் எனக் கண்டித்துள்ள அமெரிக்கா, ஜப்பான், தென்கொரிய ஆகிய நாடுகள் ஐ.நாவில் அங்கம் பெறும் 15 நாடுகளும் இதைக் கண்டிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவசரமாகக் கூடிய ஐ.நா. வட கொரியாவின் ரொக்கட் ஏவுகணை விடயமாக சில தீர்மானங்களைக் கொண்டுவர ஆலோசனை நடாத்தியது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரியபோதும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இது சம்பந்தமாக மெதுவான போக்கை கடைப்பிடிக்கு மாறுகோரின. ஆறு நாடுகள் கொண்ட விசேட குழு வட கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடாத்துகையில் இவ்வாறான ஆத்திரமூட்டும் செயல்களில் பியாங் யொங் நடந்துகொண்டமை கண்டிக்கப்பட வேண்டியது என்றும் ஐ.நா. அவசர கூட்டத்தில் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் தெரிவித்தன.
ஐ.நா.வுக் கான அமெரிக்கத் தூதுவர் சுசானரைஸ் அமெரிக்காவின் ஆழ்ந்த கண்டனத்தை வட கொரியாவுக்குத் தெரிவித்தார். ஜப்பானுடன் இணைந்து வட கொரியாவைக் கண்டிக்க வேண்டிய பொருத்தமான வழிகளை விரைவில் நடைமுறைப் படுத்தவுள்ளதாகவும் சுகானா ரைஸ் சொன்னார்.
ஏவப்பட்ட ரொக்கட் வெற்றிகரமாக விண்வெளியில் சங்கமித்து செய்மதியுடன் செயற்படுவதாக வடகொரியா கூறினாலும், ரொக்கட் விண்வெளியைச் சென்றடைய வில்லை இடையில் தவறி விட்டதாக அமெரிக்காவும் தென் கொரியாவும் கூறின.
பிரான்ஸ் இந்த விடயத்தில் 15 நாடுகளும் ஒன்று பட வேண்டுமெனக் கோரியதுடன் ரஷ்யா, சீனா என்பன விரைந்து செயற்படல் அவசியம். வடகொரியாவை காப்பாற்ற ஐ.நா. வில் அங்கம் வகிக்கும் நாடுகள் செயற்படக்கூடாது எனத் தெரிவித்தது. வட கொரியாவின் செயல் ஐ.நா. வின் தீர்மானங்களை மீறும் செயல் எனத் தாங்கள் நம்பவில்லையென சீனா, ரஷ்யா என்பன கூறின. வட கொரியாவுக்கெதிராக பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்படும்போது சீனா, ரஷ்யா என்பன எதிர்த்து வாக்களிக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. முடிவுகள் எதுவுமின்றி சபை கலைந்தது.