தலைநகர் கொழும்பில் தமிழ் மக்களின் உண்மைக்குரலாக, உரிமைகளை பெறுவதற்கு உரிய விதத்தில் ஓங்கி ஒலிக்கும் குரல் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலைவர் மனோ கணேசன் என்பதை உலகமே அறியும் என்று கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் மேல்மாகாணசபைக்கான வேட்பாருமான ஏணி.எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது தமிழ் சமூகத்தின் உரிமைகருதி, உயர்வு கருதி தனது சிந்தனையையும் , செயலையும் விரிவுபடுத்துவதோடு, உரிமைக்குரலை நேர்மையாக முன்வைக்கும் நிகரற்ற தலைவர் மனோகணேசன். கடந்த காலங்களில் நடந்தநிகழ்வுகளில் கடத்தல், காணாமல்போனோருக்காக கரிசனையுடன் கடமையாற்றிய அவரின் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகள் கொழும்பில் இப்படியும் ஓர் அரசியல்வாதியா! என்று வியந்து பார்க்கும் அளவுக்கு பெருமைக்குரியது.
நமக்காக, நமது சமூகத்துக்காக நற்சிந்தனையுடன் காரியமாற்றும் மனோகணேசனின் கரங்களை நாம் அனைவரும் பலப்படுத்தும் ஓர் அரிய சந்தர்ப்பம் மேல் மாகாணசபைத் தேர்தலாகும். கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் எமது ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் மூவர் போட்டியிடுகின்றோம். மூவருக்கும் தமிழ் மக்களின் விருப்பு வாக்குகள் மூன்றையும் அளித்து அமோக வெற்றிபெறச் செய்வது நமது தலைவர் மனோகணசேனின் கரங்களை பலப்படுத்தும் ஓர் அரிய கடமையாகும்.
கொழும்பு மாவட்டத் தமிழ் மக்கள் தங்களது விருப்பு வாக்குகள் மூன்றினையும் ஜனநாயக மக்கள் முன்னணிவேட்பாளர்களுக்கே அளித்து, அமோக ஆதரவை தெரிவிக்கவேண்டும். அதன் மூலம் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதிநிதித்துவம் மேலும் இரண்டில் மூன்றாக அதிகரிக்கப்படும் அதேநேரம் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் மேல் மாகாணசபையில் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
மேல் மாகாணசபையில் மூன்று பிரதிநிதித்துவத்தை பெறுவதன் மூலம் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரின் பலம் அதிகரிக்கப்படுகின்றது என்பதை நாம் நன்குணர்ந்து, ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்கு வாக்களிக்கும் அதேசமயம் மூன்று விருப்பு வாக்குகளையும் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்களுக்கே அளிக்க வேண்டியது தமிழ் மக்களின் தன்மானக்கடமையாகும்.
கொழும்பு மாவட்டத் தமிழ் மக்கள் வெல்லமுடியாத வேட்பாளர்களுக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்காது. வெற்றிபெறும் மூன்று வேட்பாளர்களையும் அமோக வெற்றி பெறச் செய்வதே ஆரோக்கியமான வாக்களிப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.