செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இந்திய அமைச்சரவை இன்று விஸ்தரிக்கப்படுகிறது: 59 புதிய அமைச்சர்கள் நியமனம்

pm-manmogan.jpgபிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் திமுகவைச் சேர்ந்த ஏழு அமைச்சர்கள் உள்பட, 59 புதிய அமைச்சர்கள் இன்று வியாழக்கிழமை பதவியேற்க உள்ளனர். திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா, தயாநிதி மாறன், அழகிரி ஆகிய மூவரும் காபினட் அமைச்சர்களாகவும், எஸ்.எஸ். பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், நெப்போலியன், காந்தி செல்வன் ஆகிய நால்வரும் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்க உள்ளனர்.

அதேபோல், தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில், ப. சிதம்பரம் ஏற்கெனவே உள்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், ஜி.கே. வாசன் புதிய காபினட் அமைச்சராக நாளை பதவியேற்க உள்ளார். மன்மோகன் சிங்கின் கடந்த அமைச்சரவையில், வாசன், இணை அமைச்சர் தனிப்பொறுப்பு வகித்து வந்தார்.

மன்மோகன் சிங்கின் கடந்த அமைச்சரவையில், தமிழகத்தின் சார்பில் அதிகபட்சமாக 13 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். திமுகவின் சார்பில் மீண்டும் ஏழு பேர் அமைச்சர்களாக இடம் பெறும் நிலையில், காங்கிரஸின் சார்பில் இரண்டு பேருக்கு மட்டுமே வாய்ப்புக் கிடைத்துள்ளது. மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் இந்த முறை தேர்தலில் தோல்வியடைந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வியாழக்கிழமை பதவியேற்கும் அமைச்சர்களுடன் சேர்த்து, மன்மோகன் சிங் அமைச்சரவையின் பலம் 79 ஆக இருக்கும். அதில், 9 பேர் பெண்கள். ஆனால், தமிழகத்திலிருந்து பெண்கள் யாரும் இல்லை.  புதுவையைச் சேர்ந்த வி. நாராயணசாமி, மீண்டும் இணை அமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

2008ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி யாழ்ப்பாணம், வவுனியா தேர்தல்

north_.jpgயாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல்கள் 2008 ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படி நடத்தப்பட உள்ளதாக யாழ்., வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் நேற்று தெரிவித்தனர்.

இதன்படி யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்க ஓர் இலட்சத்து 417 பேர் தகுதி பெற்றுள்ளதோடு, வவுனியா நகர சபைத் தேர்தலில் போட்டியிட 24 ஆயிரத்து 626 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

யாழ். மாநகர சபைக்கு 11 வருடங்களின் பின்னர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தல் மூலம் 23 உறுப்பனிர்கள் யாழ். மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட உள்ளதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார். யாழ். மாவட்ட 2008க்கான வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்பட்டுள்ளதோடு மே 30 ஆம் திகதி இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர்களின் பெயர்ப் பட்டியல் அடுத்த மாத முதல் வாரத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபைத் தேர்தலையொட்டி 67 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதேவேளை, புத்தளம், வவுனியா, அனுராதபுரம் மற்றும் கொழும்பு மாவட்டங்களிலுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் கோரினால் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். மாநகர சபைக்கு 1998 ஆம் ஆண்டு இறுதியாகத் தேர்தல் நடைபெற்றது. யாழ். மாநகர சபை மேயராக எஸ். கந்தையா பணிபுரிந்தார்.

வவுனியா நகர சபை

இதேவேளை வவுனியா நகர சபைத் தேர்தல் 2008ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படியே நடத்தப்படும் எனவும் வாக்களிக்க 24 ஆயிரத்து 626 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி கூறினார். இத்தேர்தல் மூலம் இம்மாநகர சபைக்கு 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

வவுனியா மாநகர சபைக்கு 2000ஆம் ஆண்டு இறுதியாகத் தேர்தல் நடைபெற்றது. தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், நகர சபை மேயராக பணிபுரிந்தார்.

இதேவேளை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஜூன் 17 முதல் 24 வரை ஏற்கப்பட உள்ளதோடு தேர்தல் ஆணையாளர் இது தொடர்பான அறிவித்தலை ஜூன் 4ஆம் திகதி அறிவிக்க உள்ளார். இந்த நிலையில் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் உட்பட பல பிரதான கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றன. அவை வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட உள்ளன.

மஸ்கெலியா டவுன்சைட் தோட்ட பகுதியில் மண் சரிவு அபாயம்; எச்சரிக்கை

மஸ்கெலியா, மோகினி நீர் வீழ்ச்சி பகுதியிலும், ஹப்புகஸ்தலாவ – நாவலப்பிட்டி வீதியிலுள்ள டவுன்சைட் தோட்டப் பிரதேசத்திலும் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான முன்னறிகுறிகள் தோற்றம் பெற்றிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன நேற்று தெரிவித்தார்.

இதே நேரம் காலநிலையில் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றம் காரணமாக அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய கூடும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பி. டி. ஆனந்த பெரேரா கூறினார். நுவரெலியா மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் மண் சரிவு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாகவும் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நல்ல தண்ணீர் மோகினி நீர் வீழ்ச்சி பிரதேசத்திலுள்ள வீதியில் திடீரென மண் மேடுகள் நேற்று முன்தினம் விழுந்துள்ளன. இது பெரிய மண் சரிவுக்கான முன்னறி குறியாகக் கூட இருக்கலாம். அதனால் இப்பகுதி ஊடாக வாகனங்கள் பயணிக்கும் போது வேகமாகச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் அறிவிப்பை இப்பிரதேசத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஹட்டன் பொலிஸாருக்கும், அம்பகமுவ பிரதேச செயலாளருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஹப்புகஸ்தலாவ – நாவலப்பிட்டி வீதியிலுள்ள டவுன்சைட் தோட்டத்தின் நிலப்பகுதியிலும் வெடிப்பு ஏற்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை ஆரம்பித்திருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் நீண்டநேரம் பேச்சு

krishna.jpgஇனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்படுமென்றும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பற்றுறுதியுடன் இலங்கை அரசு செயற்படுமென்றும் இந்தியாவிற்கு நேற்று மீள வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவும் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர். இதன் போது அமைச்சர் போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சருக்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்த அமைச்சர் போகொல்லாகம, இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியா தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்காக நன்றி தெரிவித்தார்.

கர்நாடக முதலமைச்சராகவிருந்த எஸ். எம். கிருஷ்ணா வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து அமைச்சர் போகொல்லாகம கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதன் பின்னரே இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் அண்மைய இலங்கை விஜயம் குறித்தும் இந்திய அமைச்சருக்கு இதன் போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கிருஷ்ணாவின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் போகொல்லாகம, சகல சமூகங்களும் திருப்தியடையக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படும் என்பதையும் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள செயலீடுபாட்டையும் வலியுறுத்திக் கூறினார். மேலும், வட பகுதியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கியுள்ளார்.

அதே நேரம், இடைத்தங்கல் நிலையங்களிலுள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக வகுக்கப்பட்டுள்ள 180 நாள் திட்டம் குறித்தும் இந்திய அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான பொது நலனை முன்னிட்டு இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் அமைச்சர்கள் இணங்கியுள்ளனர்.

இலங்கை இந்திய கூட்டு ஆணைக்குழுவைக் கூட்டுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் சார்க் அமைப்பின் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சார்க்கின் நோக்கங்களை அடைவதற்காக இணைந்து செயற்படுவதெனவும் இருநாடுகளினதும் பிரச்சினைகளை நேரடியாகக் கலந்துரையாடுவதற்கும் இரு அமைச்சர்களும் இணங்கியுள்ளனர்.

நிவாரணக் கிராமங்களில் ஒசுசல மருந்தகங்கள்

வன்னியிலிருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான ஆரோக்கிய சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், ஐந்து அரசாங்க ஒசுசல மருந்தகங்கள் உடனடியாக நலன்புரி நிலையங்களில் அமைக்கப்படவிருக்கின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் சுகாதார பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த ஐந்து ஒசுசல மருந்தகங்களையும் ஆரம் பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த ஐந்து ஒசுசல மருந்தகங்களையும் நலன்புரி நிலையங்கள் அமையப் பெற்றிருக்கும் ஐந்து வலயங்களில் அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் ஸ்தாபிக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்க மருந்தாக்கட் கூட்டுத்தாபனத் தலைவருக்கு நேற்று பணிப்புரை வழங்கினார்.

அதேநேரம் அரசாங்க மருந்தாக்கட் கூட்டுத்தாபனத்தின் ஐந்து, ஒசுசல மருந்தகங்களை அமைப்பதற்குப் பொருத்த மான இடங்களைப் பெற்றுக் கொள்ளுவது தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கான தகுதி வாய்ந்த அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறிவுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை செட்டிக்குளம் பிரதேசத்தில் மருந்துப் பொருள் களஞ்சியசாலையொன்றை அமைப்பதற்கும் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென அரசாங்க மருந்தாக்கட் கூட்டுத்தாபனத் தலைவர் ரன்ஜித் மலிகஸ்பே ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை அமைச்சரிடம் நேற்று கையளித்தார்.

நாட்டில் டெங்குக் காய்ச்சல் தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை

mosquito_preventionss.jpgநாட்டின் பல பாகங்களிலும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதனால் பொது மக்கள் விழிப்புடன் இருந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்தழைப்பு வழங்கவேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெங்குக் காய்ச்சல் காரணமாக இதுவரையில் இலங்கையில் 75 போர் மரணமாகியுள்ளதாகவும் 52000 பேருக்கு இந்தக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் கண்டி, கம்பளை, கேகாலை, குருநாகல், களுத்துறை, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதுள்ள காலநிலை நுளம்புகள் பெருகுவதற்கு சாதகமாக உள்ளதால் பொது மக்கள் தமது சூழலை தூய்மையாக வைத்து நுளம்புப் பெருக்கத்தை தடுக்க உதவ வேண்டும் எனவும் கேரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திருமுறிகண்டி ஆலயம், ரயில் நிலையத்தை மீள் நிர்மாணிக்க விரிவான ஏற்பாடு

யுத்தத்தினால் சிதைவடைந்துள்ள யாழ். திருமுறிகண்டி ஆலயம் மற்றும் ரயில் நிலையத்தை மீள நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளில் இளைஞர் விவகார அமைச்சு ஈடுபட்டு வருகிறது.

இளைஞர் சேவைகள் மன்ற உறுப்பினர்களின் பங்களிப்போடு இதற்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இதனையொட்டி நான்கு பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் இப் பேரணிகள் ஊர்வலமாகச் சென்று நிதி சேகரிப்பில் ஈடுபடவுள்ளன.

மகரகம நகரிலிருந்து இரத்தினபுரி சமன் தேவாலயம் வரை ஒரு பேரணி ஊர்வலத்தை மேற்கொள்ளும். காலி, முன்னேஸ்வரம், குருநாகல் பகுதிகளிலும் இப் பேரணிகள் இடம்பெறுவதுடன் முறிகண்டி ஆலயம் மற்றும் ரயில் நிலைய மறுசீரமைப்புக்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. இதன் மூலம் ஐம்பது இலட்சம் ரூபா நிதியினைத் திரட்ட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் கொடி தினத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியும் இந் நடவடிக்கைக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

முதலாம் தரத்துக்கு பிள்ளைகளைச் சேர்க்க ஜுன் 30 வரை விண்ணப்பிக்கலாம் – கல்வி அமைச்சு தகவல்

students1.jpgஅரசாங்கப் பாடசாலைகளில் அடுத்த வருடம் முதலாம் தரத்துக்கு பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான விண்ணப்பப்படிவங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெரிவித்த கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் ஜயவீர தெல்பகொட மேலும் குறிப்பிடுகையில், பாடசாலைகளில் முதலாம் தரத்துக்குப் பிள்ளைகளைச் சேர்ப்பது தொடர்பான புதிய சுற்று நிருபம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் சிபாரிசுகளுக்கமைய திருத்தியமைக்கப்பட்டுள்ள இச்சுற்று நிருபத்தின்படி 6 வகையான தரங்களை அடிப்படையாகக் கொண்டு புள்ளிகள் வழங்கப்பட்டு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும் ஏனையோர் தாம் தெரிவு செய்த பாடசாலை அதிபர்களிடமும் உரிய திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு பாடசாலையிலும் நேர்முகப் பரீட்சை மூலம் 33 பிள்ளைகளும் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பொலிஸாரின் 7 பிள்ளைகளும் நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படாத 2 பிள்ளைகளுமாக மொத்தம் 42 பேர் முதலாம் தரத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

சரணடைந்த புலிகளுக்கு சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைவாக புனர்வாழ்வு அளிக்கப்படும் – அரசு அறிவிப்பு

sri-lanka.jpgபாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் பிரகாரம் கவனிப்பதற்கும், ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு அமைய புனர்வாழ்வளிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய எஞ்சியுள்ள சந்தேக நபர்கள் பொலிஸாரிடமோ அல்லது இராணுவத்தினரிடமோ சரணடைவதற்கான காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது இராணுவ முகாம்களிலோ சென்று சரணடையுமாறு அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இராமநாதன் நிவாரணக் கிராமத்தில் இலங்கை வங்கிக் கிளை

rizad_baduradeen1.jpg வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோரின் நலன் கருதி வவுனியாவிலுள்ள இராமநாதன் நிவாரணக் கிராமத்தில் இலங்கை வங்கிக் கிளையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுனியாவிலுள்ள இலங்கை வங்கியின் பிரதான காரியாலயத்துடன் இணைந்ததாக இயங்கவுள்ள இவ்வங்கியை மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்றுத் திறந்து வைத்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஏனைய நலன்புரி நிலையங்களில் 7 நடமாடும் வங்கிக் கிளைகளை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வைபத்தில் அமைச்சர்களான விநாயமூர்த்தி முரளிதரன் மற்றும் அமீர் அலி ஆகியோரும் கலந்துகொண்டதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.