செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்

president_mahinda-returned.jpgஉத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு மியன்மார் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 14ஆம் திகதி மியன்மாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அந்நாட்டின் தலைவர், பிரதமர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான சமய, கலாசார,வர்த்தக மற்றும் உல்லாசப் பயணத்துறை என்பவற்றை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இலங்கையிலிருந்து பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அடையாள அட்டை விநியோக நடமாடும் சேவை

uwa_provinces_and_districts.pngஎதிர் வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் அடையாள அட்டைகள் காணாமல் போனவர்களுக்கும் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நடமாடும் சேவை ஒன்றை நடத்த ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக மொனறாகலை மாவட்டத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அடுத்த கட்டமாக பதுளை மாவட்டத்தில் நடமாடும் சேவையை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி அந்த மாவட்டத்தில் நாளை முதல் எதிவரும் 21 ஆம் திகதி வரை இந்தச் சேவை இடம்பெறவுள்ளது. ஹல்துமுல்லை மற்றும் ஹாலிஎல பிரதேச செயளக காரியாலயங்களிலும் உப காரியாலயத்திலும் நாளை நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

ஹப்புத்தலை மற்று வெலிமட பிரதேச செயலக காரியாலயங்களிலும் ஹப்புத்தலை நகர சபையிலும் பொரலந்த விவசாய மத்திய நிலையத்திலும் இச்சேவை நாளை மறுதினமான 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி பண்டாரவளை மற்றும் ஊவாபரணகம  பிரதேச செயலக அலுவலகங்களிலும் அம்பகஸ்தென்ன விவசாய மத்திய நிலையத்திலும் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

பஸ்ஸர பதுளை லுணுகல தோட்டங்களுக்காக பஸ்ஸர கரவனல்ல வித்தியாலயம் மற்றும் லுணுகல பிரதேச செயலக அலுவலகம் ஆகியவற்றில 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.  அன்றைய தினம் சோரணாதொட்ட பிரதேச செயலக அலுவலகம் மற்றும் கந்தேகெதர விகாரையிலும் இச்சேவை இடம்பெறவுள்ளது.

பதுளை மற்றும் கந்தேஹெட்டிய பகுதிகளுக்கான விநியோகம் எதிர்வரும் 21 ஆம் திகதி பதுளை பாரதி வித்தியாலயம்,  பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் கலஉட நூராணியா முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் இடம்பெறவுள்ளது.(

கொரிய குடியரசின் இரு கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக கொழும்பு வருகை

ships000.jpgகொரிய குடியரசைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சு மேலும் குறிப்பிடுகையில், சோய் யொங் மற்றும் டே ச்சியொங் எனும் பெயர்களைக் கொண்ட கொரிய கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பல்களை இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் சொய் கீ சுல்லுடன் கொழும்பில் உள்ள 200க்கும் மேற்பட்ட தென்கொரிய மக்கள் நேற்று கொழும்பு துறைமுகத்துக்குச் சென்று வரவேற்றனர்.

கொழும்பு துறைமுகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கப்பல்களை வரவேற்கும் வைபவத்தின்போது இலங்கைக் கடற்படையினர் 21 துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து மரியாதை செலுத்தி இந்தக் கப்பல்களை வரவேற்றனர்.
 
இக்கப்பல்களில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களுக்கு விநியோகிப்பதற்காக நிவாரணப் பொருட்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. தென்கொரியாவினால் நட்புறவு அடிப்படையில் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இப்பொருட்களை கப்பல்களிலிருந்து இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மூன்று நாட்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள இவ்விரு கப்பல்கள்களும் எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கையிலிருந்து  புறப்படவுள்ளன. இக்கப்பல்கலில் வந்துள்ள தென்கொரிய கடற்படையினருக்கும் இலங்கைக் கடற்படையினருக்கும் இடையில் கப்பல் தரித்து நிற்கும் 3 நாட்களும் நட்புறவு ரீதியான விளையாட்டுப் போட்டி ஒன்று இடம்பெறவுள்ளது என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

“சுப்பர் 8′ ஆட்டத்தில் தீர்க்கமான போட்டி இன்று: நியூஸிலாந்து இலங்கை மோதல்

muralitharan-sri-lankas.jpgஇருபது- 20 உலகக் கிண்ண போட்டியின் தீர்க்கமான “சுப்பர் 8′ ஆட்டத்தில் நியூஸிலாந்து இலங்கை அணிகள் இன்று மோதவுள்ளன.

நொட்டின் ஹாமில்  “எப்’ பிரிவுக்காக இன்று இலங்கை நேரப்படி ஆறு மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் இலங்கையணி வென்றால் நேரடியாக அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும்.

நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றால் ரண்டேட் முறையில் நியூஸிலாந்தா அல்லது இலங்கையா “எப்’ பிரிவில் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாக்கப்படும்.

அதே நேரம் “எப்’ பிரிவுக்காக  பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளது.

நிவாரணக் கிராமங்களில் 350 அநாதைச் சிறுவர்கள்- சிறுவர் பாதுகாப்பு பிரிவு நீதிமன்ற அனுமதியுடன் பொறுப்பேற்க முடிவு

kathir-camp.gifவவுனியா நிவாரணக் கிராமங்களில் தாய் தந்தை இருவரையும் இழந்த சுமார் 350 சிறுவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நீதிமன்ற உத்தரவுடன் பொறுப்பேற்க உள்ளதாக சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்புத் திணைக்கள ஆணையாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களிடையே அண்மையில் கணிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்படி அங்கு 52 ஆயிரம் சிறுவர்கள் உள்ளதாகவும் அதில் 1034 பேர் அநாதைகள் எனவும் தெரியவந்துள்ளது. இவர்களிடையே சுமார் 350 சிறுவர்கள் தாய் தந்தை இருவரையும் இழந்தவர்களெனவும் ஆணையாளர் கூறினார்.

இவர்களில் சிலர் தமது உறவினர்களுடன் இருப்பதாகவும் அவர்களை சட்டபூர்வமாக பாதுகாவலர்களிடம் கையளிக்க உள்ளதாகவும் கூறினார். ஏனைய சிறுவர்களை நீதிமன்ற உத்தரவுடன் பொறுப்பேற்று சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் கீழுள்ள சிறுவர் நிலையங்களினூடாக பராமரிக்க உள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார். இவர்களுக்கு கல்வி வசதி, மனநல அபிவிருத்தி என்பன வழங்கப்பட உள்ளன. 18 வயதுவரை இவர்கள் சிறுவர் நிலையங்களினூடாக பராமரிக்கப்பட்ட பின் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படுவர்.

விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும்: திருமாவளவன்

07thirumavalavan.jpgஇலங் கையில் விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று உலகத் தமிழர் பேரவை நடத்திய மாநில சுயாட்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், திரிகோணமலையில் சீனா ராணுவ தளம் அமைக்க அனுமதி வாங்கி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும். தற்போது இந்தியாவை இலங்கை அரசு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்கள் உணவு, மருத்துவம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். 4 வது ஈழப் போர் முடிந்துள்ளது. விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்றார்.

தேக்கம் காட்டில் இளைஞர் பயிற்சி நிலையம் அங்குரார்ப்பணம்

basil.jpgவடக்கில் வசந்தம் இளமைக்கு உதயம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கனடிய உலக பல்கலைக்கழக நிதி உதவியுடன் சுமார் 30 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இளைஞர் பயிற்சி நிலையத்தினை திறந்து வைக்க ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ இன்று செவ்வாய் மாலை 3 மணிக்கு வவுனியா வரவுள்ளார்.

தேக்கம்காடு இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சி நிலைய வளவினுள் நிர்மாணிக்கப்பட்ட இந்த பயிற்சி நிலைய திறப்பு விழாவில் இளைஞர் விவகார அமைச்சர் பிவித்திரா வன்னியாராச்சி, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் உட்பட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொள்வார்கள்.

தொழில் வாய்ப்பினை முன்னேற்றும் நோக்குடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பல பயிற்சி நெறிகளை நடத்தி வருகின்றது. இதேபோன்றதொரு பயிற்சி நிலையம் மன்னாரில் 20ம் திகதி திறந்துவைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது

யாழ்.மாவட்ட பொலிஸ் நிலையங்களில் தமிழ் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை

images-poli.jpgயாழ்.  மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ்ப் பொலிஸார் நியமிக்கப்படுவார்கள். இதற்கான பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும். இதன்மூலம் மக்களுக்குப் பொலிஸாரின் சேவைகளை முழுமையாக வழங்கக் கூடியதாக இருக்குமென்று மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற கிராம சேவையாளர்கள் மற்றும் பொது மக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் வடபகுதியில் இதுவரை யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காரணத்தால் பொலிஸார் வெளியே வந்து செயற்பட்டு மக்களுக்கான சேவைகளை வழங்க முடியாமலிருந்தது. ஆனால், தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளதால் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

ஆரம்பத்தில் நான் பொலிஸ் சேவையில் இணைந்த போது பொலிஸிலிருந்த தமிழ் அதிகாரிகளே எனக்குப் பொலிஸ் நடைமுறைகளைக் கற்றுத்தந்தார்கள். அன்றைய காலத்தில் யாழ்ப்பாண மக்கள் தொடர்பாக நான் வித்தியாசமான கருத்துகளையே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், தற்போது யாழ்ப்பாணத்திற்கு வந்து பணியாற்றுகின்ற போது அந்த மக்கள் மிகவும் நல்லவர்கள் என்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது.

பொலிஸாரின் சேவைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ். குடாநாட்டு மக்களிடையே தெளிவான விளக்கங்கள் ஏற்படவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் மத்தியிலான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறிப்பாக பிரதேச மட்டங்களிலான கசிப்பு ஒழித்தல், கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தல், போக்குவரத்து விதிமுறைகளை ஒழுங்குபடுத்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்குப் பொதுமக்கள் பொலிஸாருடன் ஒத்துழைக்க வேண்டும்.

மாணவர்கள் மத்தியில் போக்குவரத்து விதிமுறைகளை அறிவுறுத்துவதற்காக பொலிஸார் பாடசாலை அதிபர்களுடன் இணைந்து செயற்படவுள்ளனர். இந்தச் செயற்திட்டங்களை இலகுவாக மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையங்கள் தோறும் பொலிஸாருக்குத் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.

பிரதேச மட்டங்களில் படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது தமிழ்மொழி தெரிந்த ஆண்,பெண் பொலிஸாரும் அதில் இடம்பெற ஆவன செய்யவேண்டுமென்று பொதுமக்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்குப் பதிலளித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இனிவரும் காலங்களில் குடாநாட்டில் சுற்றிவளைப்புத் தேடுதல்களை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாதென்று தெரிவித்தார். இக் கலந்துரையாடலுக்கு பொன்னாலை, சுழிபுரம், வட்டுக்கோட்டை மற்றும் வட்டு. தென் மேற்கு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த கிராம சேவையாளர்களும் பொதுமக்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

“ஜனாதிபதியை சந்திக்க எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார்’

parliament-of-sri-lanka.jpgஜனாதி பதியை சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராகவே இருப்பதாக தெரிவித்த அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான ரி. கனகசபை, அமெரிக்காவை பார்த்தாவது இலங்கை பக்குவப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ் கூட்டமைப்பின் மறைந்த எம்.பி.யான கே. சிவநேசனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையில் பேசும்போதே கனகசபை இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; சிவநேசன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படு முன்னரே நான் அவரை அறிந்திருந்தேன். அவர் எனது சிறந்த நண்பர். அரசியல் மற்றும் தென்னை, பனை வளங்களை பெருக்குவது என்பவையே அவரது பிரதான இலக்குகளாக இருந்தன. அதற்கேற்றாற் போல் அவர் தென்னை, பனை வள அபிவிருத்தியிலும் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.

அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டதாக கூறுகின்றது. எனவே, இப்போது பந்து அரசாங்கத்தின் பக்கமே இருக்கிறது. அரச தரப்பினரே தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலான தீர்வை கொண்டுவர வேண்டும். இதேநேரம், நாம் எப்போதும் ஜனாதிபதியை சந்திக்க தயாராகவே இருக்கிறோம். உரிய நேரம் வரும்போது, நாம் அதை செய்வோம்.

அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை கறுப்பு இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நிலவிவந்தன. ஆனால், இன்று அமெரிக்காவின் சிறுபான்மையினமான கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அந்நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார். அமெரிக்கர்களின் பெருந்தன்மையை இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். இந்த பக்குவம், பெருந்தன்மை இங்கு பெரும்பான்மையின மக்களுக்கும் வர வேண்டுமென்பதே எமது அங்கலாய்ப்பாக இருக்கிறது என்றார்.

அதிபர் தேர்தல் முடிவு குறித்து விசாரணை நடத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

president-ahamadinejad.jpgஇரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மோசடிகள் இடம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடைபெற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.  இந்தத் தேர்தல் நடைபெற்ற விதம் குறித்து பல்வேறு எதிர்கட்சி வேட்பாளர்கள் வெளியிட்டுள்ள கவலைகளை இரான் அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

அங்கு நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று வர்ணித்துள்ள பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர்கள், அரசின் இந்த நடவடிக்கையினை விமர்சித்தும் உள்ளனர்.