கொரிய குடியரசைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சு மேலும் குறிப்பிடுகையில், சோய் யொங் மற்றும் டே ச்சியொங் எனும் பெயர்களைக் கொண்ட கொரிய கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பல்களை இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் சொய் கீ சுல்லுடன் கொழும்பில் உள்ள 200க்கும் மேற்பட்ட தென்கொரிய மக்கள் நேற்று கொழும்பு துறைமுகத்துக்குச் சென்று வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கப்பல்களை வரவேற்கும் வைபவத்தின்போது இலங்கைக் கடற்படையினர் 21 துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து மரியாதை செலுத்தி இந்தக் கப்பல்களை வரவேற்றனர்.
இக்கப்பல்களில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களுக்கு விநியோகிப்பதற்காக நிவாரணப் பொருட்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. தென்கொரியாவினால் நட்புறவு அடிப்படையில் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இப்பொருட்களை கப்பல்களிலிருந்து இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மூன்று நாட்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள இவ்விரு கப்பல்கள்களும் எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளன. இக்கப்பல்கலில் வந்துள்ள தென்கொரிய கடற்படையினருக்கும் இலங்கைக் கடற்படையினருக்கும் இடையில் கப்பல் தரித்து நிற்கும் 3 நாட்களும் நட்புறவு ரீதியான விளையாட்டுப் போட்டி ஒன்று இடம்பெறவுள்ளது என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.