எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மீலாத் விழா பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக அரசை குற்றம்சாட்டுகிறது ஐ.தே.க.

unp_logo_1.jpgமாத்தறை, அகுரஸ்ஸவில் நடந்த மீலாத் விழாவுக்கான பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்புத்தரப்பு பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி பயங்கரவாத அச்சுறுத்தல் நாடு முழுவதும் காணப்படுகின்ற சூழ்நிலையில், அரசு நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அசிரத்தைப் போக்குடன் செயற்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மாத்தறை அக்குரஸ்ஸ பள்ளிவாசல் முன்பாக இடம் பெற்ற தாக்குதலைக் கண்டித்து ஐக்கிய தேசியக்கட்சி விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

நபிகள் நாயகத்தின் பிறந்ததினத்தை யொட்டி கொடப்பிட்டிய ஜும் ஆப் பள்ளிவாசலில் தேசிய விழா இடம்பெற்ற வேளையில் ஊர்வலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலை ஐக்கிய தேசியக்கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

மனிதப் படுகொலைகளால், வன்முறைகளால், பயங்கரவாதத்தால் பிரச்சினைகளுக்குத்தீர்வு காணவே முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக்கட்சி கொண்டுள்ளது.

அதேசமயம், பயங்கரவாதம் மேலோங்கிக் காணப்படும் பின்னணியில் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தும் கடப்பாட்டை அரசு கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

அரசின் சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்ட இந்த விழா தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கை குறித்து முரண்பாடுகள் காணப்படுவதாக அவதானிக்க முடிகிறது.

எதிர்காலத்தில் அமைச்சர்களுக்குப்போன்றே பொதுமக்களதும் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறிவைக்கின்றோம்.

இந்த துக்ககரமான நிகழ்வில் மரணமானவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

university-of-peradeniya.jpgபேரா தனை பல்கலைக்கழக மாணவர்கள் பேராதனை கலஹா சந்தியில் நேற்று புதன்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இணைந்த சுகாதார கற்கை பீடத்தினை திறக்கக் கோரியும், இப்பீட மாணவர்களும் செய்முறை பயிற்சிக்காக கண்டி, பேராதனை மற்றும் கம்பளை ஆஸ்பத்திரிகளில் அனுமதி பெற்றுத்தரக் கோரியுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு 3 மணி நேரம் கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இணைந்த சுகாதார கற்கை பீட மாணவர்களுக்கு போதனா வைத்தியசாலைகள் செயல்முறை பயிற்சிக்கான அனுமதியை மறுத்ததனால் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்தே பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டது.

படையினர் மீது இரசாயனத் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்! 17 முகமூடிகள் 16 ஆடைகள் படையினரால் மீட்பு

chemical_.png
முன்னேறிவரும் படையினர் மீது  இரசாயனத் தாக்குதல் ஒன்றை நடத்த புலிகள் திட்டமிட்டமிட்டிருந்தனர் என இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. உடையார் கட்டுக்குளம் வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தின் 57 ஆவது படையணியினர் கடந்த 05 ஆம் திகதி நடத்திய தேடுதலில் இரசாயயனத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் 17 முகமூடிகள் மற்றும் 16 ஆடைகள் என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
 
கடந்த இரண்டு வருட காலங்களாக புலிகள் இராசயன வாயுவை படையினருக்கு எதிராக பாவித்துள்ளபோதிலும் படையினர் அந்தச் சவாலுக்கு முகம் கொடுக்கும் முன்னேற்பாடுகளுடன் செயற்பட்டுள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறவித்துள்ளது.

விமான உதிரிப் பாகங்களைக் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிப்பு.

flight-spare-parts.jpgமுல்லைத் தீவுக்கு வடக்காக அம்பலவான் பொக்கணைப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 58வது படைப்பிரிவின் படையணியான 18வது கஜபா படையினர் நேற்று (மார்:11) எல்ரிரிஈயினரின் விமான உதிரிப் பாகங்களைக் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான உதிரிப்பாகங்கள் எண்ணெய் தாங்கிகளுக்குள் பாதுகாப்பாக வைத்து நிலத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக படையினர் தெரிவித்தனர். விமான டயர்கள்,  பெற்றிகள்,  இன்ஜின்களின் உதிரிப்பாகங்கள், திசைகாட்டும் லைற்கள் மற்றும் பல பொருகளும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களுக்குள் அடங்கும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு விமானத்தின் உதிரிப்பாகங்களை வளங்கி இவற்றை அமைக்க பின்புறத்தில் இருந்து செயல்படும் மூளை சாலிகள் யார் என்பதைக் கன்டுபிடிக்க உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விசாரணைகள் நடத்துவது  அவசியம் என பாதுகாப்பு அவதானிகள் தெரிவித்தனர் “எது எவ்வாறாயினும்  பயங்கரவாதிகளுக்கு பொருள் வழங்குனர்கள் மற்றும் இதன் முகவர்கள் யார் என்பதைக் கன்டுபிடிக்க பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் அனைத்து அமைப்புக்களுடன் உலகப் பொலிஸ் (இன்ரபோல்) அமைப்பும் இனைந்து செயல்பட்டால்  உலகத்திலுள்ள பயங்கரவாத பயங்கரவாத வலையமைப்பைக் கண்டுபிடிக்க முடியும். எனத்தெரிவித்த அவதானிகள் தற்பொழுது இலங்கைக்கு இதைக்கண்டுபிடிக்க அவசர உதவி தேவையாகும்” என மேலும் தெரிவித்தனர்.

30 வருடங்குக்கு மேல் எல்ரிரிஈயினர் உலகிலுள்ள மற்ற பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்துள்ளதுடன் அவர்களின் யுத்த உபாயங்கள் மற்றும் தகவல்களையும் பரிமாற்றிக் கொள்கின்றனர்.பேராபத்தை விளைவிக்கும் செயல்களான தற்கொலைத் தாக்குதலை எல்ரிரிஈயினரே அறிமுகம் செய்தனர். இதன் விளைவுதான் 9ஃ11 பயங்கரவாதத் தாக்குதலாகும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அம்பலவான்பொகணைப் பகுதியில் நேற்று (மார்:11)  கன்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு.

Air craft tire -07
Air craft spark plug boxes -06
Air craft oil filter -12
Eye goggles -03
Silk agnation harness -02
Runway end light -08
Runway light (white) -08
Taxi way light -15
Runway light panel -01
Fire extinguisher -01
Oxygen breathing equipment Cylinders -02
Oxygen Masks -06
Air field lamp halogen 10 boxes -03
Nose landing gear -02
Aero shell Greece 3 kg tin -03
Codrable engine indicator -01
BTYs -03
Air Filter -01
Portable Uriner -03
Runway light installation manual -06

மதஸ்தலங்கள் மீதான புலிகளின் தாக்குதல்களில் இதுவரை 412 பேர் பலி – அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தகவல்

anura_priyadarshana_yapa.jpg நாட்டிலுள்ள மதஸ்தலங்கள் மீது கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2009 மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக இதுவரை 412 பேர் பலியாகியுள்ளதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

மதஸ்தலங்கள் மீதான புலிகளின் முதலாவது தாக்குதல் 1985ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி இடம்பெற்றது. ஜயஸ்ரீ மஹாபோதி விகாரையில் இடம்பெற்ற இத்தாக்குதலில் 149 பேர் பலியானார்கள்.

இதனையடுத்து சோமாவதி புனிதஸ்தலம் மீது 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 6 பேரும், அதே ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி மடு தேவாலயம் மீதான தாக்குதலில் 6 பேரும்,  அரந்தலாவையில் 1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் 2ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 33 பௌத்த மத குருமார்களும் பலியானார்கள்.

பொலன்நறுவை, மெதிரிகிரியவிலுள்ள கொடபொத்த விகாரையைச் சூழவுள்ள 175 கிராமவாசிகளைச் சுற்றி வளைத்து மேற்கொண்ட தாக்குதலில் 9 பேர் பலியாகினர். அவ்வாறே 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் 147 பேர் பலியானார்கள்.

சம்மாந்துறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களில் 1989ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24ஆம் 29ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 14 பேர் பலியானதோடு, கண்டி, தலதா மாளிகை மீது 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் 7 பேர் பலியாகினர். கரும்புலிகள் 4 பேர் மேற்கொண்ட இத்தாக்குதல் காரணமாக 25 பேர் காயமடைந்தனர்.

2000ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியான வெசக் தினத்தன்று மட்டக்களப்பில் மேற்கொண்ட தாக்குதலில் 25 பேர் பலியாகினர். கடந்த 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மட்டக்களப்பு சாந்த வேலியர் பிள்ளையார் கோயிலின் பிரதம குருக்களான பரமேஸ்வரன் குருக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பு, கொட்டாஞ்சேனை சிவன் கோயிலில் மேற்கொண்ட தாக்குதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொல்லப்பட்டார்.

இறுதியாக கடந்த 10ஆம் திகதி அக்குரஸ்ஸ, கொடபிட்டிய ஜும்ஆப் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நபிகள் நாயகத்தின் பிறந்த தின வைபவத்தில் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு மதஸ்தலங்கள் மீது தொடர்ந்தேச்சையாக புலிகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் அவர்களின் கொடூரத்தன்மை, பாசிச வெறி மற்றும் மிலேச்சத்தனம் என்பவற்றை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. மதஸ்தலங்கள் மீது அவை எந்த சமயத்தைச் சார்ந்ததாக இருந்தபோதும் புலிகள் மேற்கொண்டு வரும் இத்தகைய அநாகரிகமான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிடடார்.

புதுக்குடியிருப்பு மோதலில் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி பலி- உதய நாணயக்கார

thamilendi.jpgபுதுக்குடி யிருப்பில் நேற்று இடம்பெற்ற மோதல்களின் போது படையினரின் பீரங்கித் தாக்குதலில் புலிகளின் நிதிப் பொறுப்பாளரான தமிழேந்தி என அழைக்கப்படும் சபாரட்ணம் செல்லதுரை கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பில் நேற்றுக் காலை படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதுடன் பெரும் எண்ணிக்கையான புலி உறுப்பினர்கள் உயிரிழந்திருப்பதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

மோதல்களில் தமிழேந்தி உயிரிழந்திருப்பதனை இராணுவத்தின் புலனாய்வுத் துறையினர் ஊர்ஜிதம் செய்திருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

பலத்த மழைக்கு மத்தியிலும் படையினர் சற்றும் தளராது தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் படையினரின் தாக்குதல்களுக்கு தொடர்ந்து முகம் கொடுக்க முடியாத புலிகள் காயமடைந்தவர்களையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. 

கலைக்கேந்திர நிலையம் யாழ்ப்பாணத்தில்…

jaffna.jpgஇலங் கை திரைப்பட கூட்டுத்தாபனம் யாழ்ப்பாணத்தில் கலைக்கேந்திர நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளுக்கு இடையிலான நட்புறவை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.

குறித்த பகுதிகளிலுள்ள கலைஞர்களின் கலை ஆற்றலை வளர்ப்பதற்காக அரசு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் கங்கநாத் திஸாநாயக்க வீடு திரும்பியுள்ளார்

rupavahini.jpgவெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்ட ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் தம்மிக்க கங்கநாத் திஸாநாயக்க வீடு திரும்பியுள்ளார். தனது முன்னாள் கட்சி ஆதரவாளர்களே தன்னைக் கடத்தினார்கள் என அவர் கூறியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஊடகத்துறை பேராசிரியரும் முன்னாள் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவருமான பேராசிரியர் தம்மிக்க கங்கநாத் திஸாநாயக்க நேற்று புதன்கிழமை இரவு வெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மகரகம கொட்டாவ மத்தேகொடவிலுள்ள தனது வீட்டில் இவர் இருந்தபோதே நேற்று இரவு 9.45 மணியளவில் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இவரது வீட்டினுள் நுழைந்த ஐவர் இவரைக் கடத்திச் சென்றதாக உறவினர்கள் அவசரப் பொலிஸ் சேவையான “119′ க்கு உடனடியாக அறிவித்ததாகவும் பின்னர் அவர்கள் தங்களுக்கும் முறைப்பாடு செய்ததாகவும் ககாத்துடுவ பொலிஸார் தெரிவித்தனர். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது பேராசிரியர் திஸாநாயக்க அவரது ஊடக ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

‘நியாயம் சொல்கிறார்கள். நியாயம்!’ சேரனின் எதிர்வினைக்கு பதில் : நட்சத்திரன் செவ்விந்தியன்

Cheran._._._._._.
க.மகாதேவன் என்கிற புனைபெயரில் தேனீ இணையத்தளத்தில் நட்சத்திரன் செவ்விந்தியன் எழுதிய முதல் கட்டுரை (சாத்தானுக்கு இரண்டு நாக்கு (சிக்மன்) பிராயிட்டுக்கு ஆயிரம் நாக்கு சேரனுக்கு பல்லாயிரம் நாக்கு) சேரன் மீதான விமர்சனமாக அமைகிறது. இரண்டாவது கட்டுரை முதல் கட்டுரைக்கு சேரன் எழுதிய பதில். ( Cheran’s_reply_for_Nadchathiran_Sevindian ) மேற்கூறிய இரண்டு கட்டுரைகளும் 2006 ம் ஆண்டு தேனீ இணையத்தில் பிரசுரமானவை. இக்கட்டுரை சேரனின் பதிலுக்கு நட்சத்திரன் செவ்விந்தியன் எழுதிய எதிர்வினை. இது இப்போது தேசம்நெற்றில் பிரசுரிக்கப்படுகிறது.
._._._._._.          

Successful seductions rarely begin with an obvious maneuver or strategic device. That is certain to arouse suspicion. Successful seductions begin with your character, your ability to radiate some quality that attracts people and stirs their emotions in a way that is beyond their control. Hypnotized by your seductive character, your victims will not notice your subsequent manipulations. It will then be child’s play to mislead and seduce them.

From ‘The Art of seduction’ by Robert Greene.

வசியப்படுத்த வைக்கிற சூழ்ச்சிகரமான மாயத்திறமைகளைப் பயன்படுத்தியும் சூழ்ச்சிகளைக் கொண்டும் எழுதப்பட்டதே சேரன் எனது கட்டுரைக்கு எழுதிய பதிலாகும். சேரன் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு மனிதனை வசியப்படுத்த வேண்டும் என்பதற்கு பயன்படுத்துகிற வசிய மொழியும் (Language of Seduction) உண்மையைக் கண்டடைய வேண்டும் என்பதற்காக நடாத்தப்படுகிற ஒரு அரசியல் பெருங்கதையாடலுக்கான மொழியும் (Language of Political Discourse) ஒன்று அல்ல என்பதைத்தான். முன்னையதில் பொய்களும் திரிக்கப்பட்ட உண்மையும் குதர்க்கங்களும் சூழ்ச்சியும் இருக்கும். பின்னையதில் உண்மையும் தர்க்கமும் இருக்கும்.

சேரனைப் பற்றி நான் எழுதிய கட்டுரை உறுதியான ஆதாரங்களுடன் எழுதப்பட்ட உண்மைகளின் தொகுப்பு. அதற்கு சேரன் எழுதிய பதிலில் இருக்கிற பொய்களையும் திரிக்கப்பட்ட உண்மைகளையும் குதர்க்கங்களையும் சூழ்ச்சிகளையும் பின்வரும் பகுதிகளில் தெளிவுற விளக்குகிறேன்.

1. வின்சர் பல்கலைக்கழகத்தில் சேரனின் உண்மையான பதவி tenure நிரந்தரத் தகுதி இல்லாத ஆரம்ப விரிவுரையாளர் என்பதே. ஆரம்ப விரிவுரையாளர்களை வட அமெரிக்கப்பல்கலைக் கழகங்களில் Assistant Professor என்று குறிப்பிடுவதே வழக்கம். என்னுடைய கட்டுரையில் மிகத் தெளிவாகவும் விரிவாகவும்  இப்பதவிகள் சம்பந்தமான சொற்களையும் அவற்றின் வேறுபாடுகளையும் விளங்கப்படுத்தியுள்ளேன். இவ்வளவு செய்த பின்னரும் சேரன் தான் நிரந்தரமான ஒரு பேராசிரியராக வின்சர் இல் இருப்பதாகவும் கூகிளில் தன் பெயரைப்போட்டுத் தேடினால் தன்னைப் பற்றிய எல்லா விவரமும் வருகிறது என்று மொட்டையாகவும் தந்திரமாகவும் படுபொய் சொல்லிவிட்டு நழுவுகிறார். இன்றைக்கு யாருமே பிழையான தகவல்களைக் கொண்டு ஒரு இணைவலையை ஆரம்பிக்கலாம். இதற்கு நல்ல ஒரு உதாரணம் புலிகளின் நிதர்சனம் டொட் கொம். முதலில் நாங்கள் ஒரு தகவல் உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த அது நம்பகரமான அதிகாரபூர்வமான மூலத்தூடாக வருகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வட அமெரிக்கப்பல்கலைக் கழகங்களில் Professor  என்ற பதம் பல்கலைக்கழகங்களில் படிப்பிக்கின்ற அனைவரையும் கௌரவமாக விளிப்பதற்கும் (அதாவது இலங்கைப் பல்கலைக் கழகங்களில் படிப்பிக்கின்ற அனைவரையும் பல்கலைக்கழக மாணவர்கள் “சேர்” என்று விளிப்பதைப் போல) பயன்படுத்தப்படுகிறது. விளிப்பதற்கு மட்டுமே அவ்வாறு பயன்படுத்தப்படுவதே தவிர அவ்வாறு விளிக்கப்படுகிற எல்லோருமே பேராசிரியர் அல்ல. இது பற்றிய விரிவான விளக்கத்துக்கு பார்க்க : http://en.wikipedia.org/wiki/Professor

ஆனால் வட அமெரிக்காவில் இருக்கிற எந்தவொரு நேர்மையான விரிவுரையாளரும் இந்த மயக்கத்தைப் பயன்படுத்தி தன்னை ஒரு பேராசிரியர் என்று வேணுமென்றே அறிமுகப்படுத்தி புழுகி மோசடி செய்யமாட்டார்கள். அல்லது எந்த ஒரு அமெரிக்கப் பதிப்பகமும் ஒரு விரிவுரையாளரால் எழுதப்பட்ட புத்தகத்தில் அவரைப் பற்றி அறிமுகப்படுத்துகிறபோது அவரை பேராசிரியர் என்று தவறாக அறிமுகப்படுத்த  மாட்டாது. இந்த சொல் மயக்கத்தினால் வெகுஜன ஊடகங்களில் சில தடவைகள் பேராசிரியர் பதவிக்கும் கதிரைக்கும் சொந்தமில்லாத பலர் பேராசிரியர் என்று தவறுதாலாக எழுதப்படுவது உண்டு. கூகிள் இணையத்தளத்தில் சேரனின் பேரைப்போட்டுத் தேடினால் முதலில் வருவது மேலே கூறியமாதிரியான தவறான அர்த்தத்தில் சேரன் பேராசிரியர் என்று எழுதப்பட்ட பக்கங்களே. சேரனே தன்னை பேராசிரியர் என்று எழுதி பல   இணைய பக்கங்களை ஆரம்பிக்கலாம். உண்மையிலேயே சேரன் முதலியவர்களால் அண்மையில் கனடாவில் நடாத்தப்பட்ட மாநாட்டுக்காக சேரன் முதலியவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்ட பின்வரும் இணையத்தளத்தில் சேரன் தன்னைத்தானே பேராசிரியர் என்றே புழுகி எழுதியுள்ளார். பார்க்க http://www.chass.utoronto.ca/~tamils/tsc2006/about/committee.html

ஆகவே நாங்கள் சேரனின் உண்மையான தகுதியை அறிய அவர் பணியாற்றுகிற வின்சர் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வமான பின்வரும் இணையத்தளத்துக்கே சென்று பார்க்க வேண்டும். www.uwindsor.ca/units/socanth/sociology.nsf/831fc2c71873e46285256d6e006c367a/b09aaaab44a4671885256c750064ec58!OpenDocument

இதில் சேரன் Assistant Professor (விரிவுரையாளர்) என்றே மிகத்தெளிவாக உள்ளது. இதைவிட Assistant Professor இல் இருக்கிற  Professor என்ற சொல்லைக்கொண்டு ஒருவர் தான் Professor என்பாராயின் அது ஒரு இராணுவ மேஜர் ஜெனரல் தன்னை ஒரு ஜெனரல் என்று சொல்வதற்கு ஒப்பானது. கூகிளின் தேடும் இயந்திரத்தை பயன்படுத்தி சேரன் எப்படி சுத்துகிறார் என்பது இப்போது யாவருக்கும் புரிந்திருக்கும். மேலும் சேரனின் (விரிவுரையாளர்) Assistant professor பதவி நிரந்தரமான Tenure தகுதி இல்லாதது. காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தமிழினி 2000 மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பிலும் ‘மீண்டும் கடலுக்கு’ நூலிலும் சேரன் ஒரு சமூகவியல் மானுடவியல் பேராசிரியர் என்று அறிமுகம் தரப்படுவதும் சேரன் தன்னை ஒரு பேராசிரியர் என்று திசைகள் பேட்டியில் கூறுவதும் சந்தேகத்துக்கிடமின்றி  அறிவுத்துறை சார்ந்த மோசடிகள்.

2. Tigers of Lanka என்ற நூலின் மூன்றாவது பதிப்பில் (1995) 28 ஆவது பக்கத்தில் வருபவை இவைதான்.

“He was a restless character” added Rudramoorthy Cheran, a former Jaffna university student who had moved closely with Sivakumaran in 1973 – 1974. “He would discuss all night, emphasising the need for an armed struggle”

அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பு வருமாறு.

“அவர் ஒரு அமைதியற்ற பிறவி ” என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் மாணவரும் 1973 – 1974 காலப்பகுதிகளில் சிவகுமாரனுடன் நெருங்கிப் பழகியவருமான உருத்திரமூர்த்தி சேரன் கூறினார். “அவர் (சிவகுமாரன்) ஒரு இரவு முழுவதுமே ஆயுதப் போராட்டம் ஒன்றின் தேவையை வலியுறுத்தி விவாதித்துக் கொண்டிருப்பார்” என்று மேலும் தொடர்ந்து சொன்னார் சேரன்.

இங்கே மிகத்தெளிவாகவே சேரனின் மோசடி வெளிப்படுகிறது. அதாவது சேரன் ஆசிரியர் நாராயணசாமியிடம் 1973 -1974 காலப்பகுதியில் சிவகுமாரனுடன் நெருங்கிப் பழகியதாகப் பொய் சொல்லியிருக்கிறார். இங்கு சேரனின் மோசடிகள் இரண்டு.

(1) 1973 -1974 காலப்பகுதியில் அதாவது 2 வருடங்கள் சிவகுமாரனுடன் தான் நெருங்கிப் பழகியதாக பொய் சொன்னது
 
(2) மேற்கூறிய பொய்யின் அடிப்படையில் சிவகுமாரனைப் பற்றி சான்றிதழ் பத்திரம் (character certificate) வழங்கக்கூடிய அதிகாரம் தனக்கு இருப்பதாக காட்டிக் கொண்டமையும் அப்போலி அதிகாரத்தை மோசடியாக பிரயோகித்தமையும்.

உண்மை மேற்கூறியவாறு இருக்க சேரன் தனது பதிலில்

சிவகுமாரனோடு நடந்த ஒரு சந்திப்பை அடிப்படையாகக்கொண்டே சிவகுமாரனைப் பற்றி தான் நாராயண்சுவாமியின் புத்தகத்தில் கருத்துச் சொன்னதாக கயிறு திரிக்கிறார்.  சேரன் ஆதவனோடு நெருங்கிப் பழகியவர் என்பதில் எமக்கு எதிர்க்கருத்து இல்லை. அதுதான் ஆதவனின் குணம் சேரனிலும் வந்திருக்கிறதே.

சேரன் தனது இரண்டாந்தரக் கல்வியை தமிழ் மொழிமூலமே கற்றவர். அவர் Saturday Review பத்திரிகையில் வேலை செய்தகாகக் கூறுகிற 1984 – 1987 காலப்பகுதியில் ஆங்கிலத்தில் எழுதக்கூடிய அளவுக்கு அவருக்கு ஆங்கிலப் புலமை இருக்கவில்லை. 1987 ம் ஆண்டுக்குப் பின்னர் ஆங்கில மொழிமூலம் அரசியல் விஞ்ஞானம் கற்றபின்னரே தனக்கு ஆங்கிலத்தில் எழுதும் புலமை வந்ததாக அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். எம்முடைய வாதம் என்னவென்றால் தனக்கு இல்லாத தகுதியான Deputy editor of Saturday Review என்பதை டொரண்டோ எங்கும் வெகு சகஜமாகச்  சொல்லி வருவதுதான் தவறு என்கிறோம். சேரனே தன்னைப் பற்றி எழுதிய பின்வரும் http://www.cheran.net/english.html

சேரனின் இணையத்திலும்   கனேடிய யோர்க் பல்கலைக்கழக இணையமான பின்வரும் http://www.yorku.ca/hdrnet/images/uploaded/cheran_tsunamimemorial.pdf

இணையத்திலும் சேரன் தானே Saturday review பத்திரிகையின் Deputy Editor ஆக இருந்ததாக முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிற மகா பொய் சொல்லியுள்ளார். Deputy Editor என்றால் அதன் அர்த்தம் பத்திரிகையின் ஆசிரியர் தற்காலிகமாக இல்லாதபோது தற்காலிகமாக ஆசிரியர் பொறுப்பை எடுப்பவர். ஆங்கிலத்தில் எழுதக்கூடிய அளவுக்கு புலமை இல்லாத ஒருவரை ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் Deputy Editor ஆக்குவதானது துவிச்சக்கர வண்டியே ஓட்டத் தெரியாதவனை Harley Davidson motor bike ஓட்டும்படி கேட்பதற்கு சமனானது. எனது கட்டுரையின் பின்னரே சேரன் 1984 இல் தான் Saturday Review இல் வேலைக்குச்சேர்ந்தபோது தனக்கு ஆசிரியர் பகுதி உதவியாள் (இன்னொரு வகையில் சொன்னால் ஆசிரியர் பகுதி எடுபிடி)  என்ற பொறுப்பு இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். சேரனே மேலும் 1987 ஜூலையில்தான் தனது பொறுப்பு இணை ஆசிரியர் (இணை ஆசிரியருக்கான ஆங்கிலம் Associate Editor என்பதே.) ஆனது என்கிறார்.அவர் சொல்வது சரி என்று கொண்டாலும் அவர் ஆக ஒரே ஒரு மாதம் மட்டுமே இணை ஆசிரியராக இருந்துள்ளார். ஆங்கிலத்தில் எழுதுகிற அளவுக்கு ஆங்கிலத்தில் முழுப்புலமை இலலாத ஒருவர் இணை ஆசிரியர் ஆகக் கூட வருவது என்பது நகைப்புக்குரிய விடயமே.
     
1958 இல் பிறந்த சேரன் தான் 1960 இல் பிறந்ததாக பிற்பாடு கூறிவரும் மோசடியை ஆதாரங்களுடன் முன்வைத்திருந்தோம். இதற்கு சேரன் கொங்கு தேர் வாழ்க்கை 2 ம் தொகுதியில் தனது பிறந்த ஆண்டு 1954 என்று தரப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார். இதன் மூலம் சேரன் விவாதத்தை  பொறுக்கித்தனமாக  திசை திருப்புகிறார். அதாவது பொறுப்பற்ற கவலையீனமான அச்சுப்பிழைகளே தனது வயது மோசடிகளுக்கான காரணம் என்ற மறைக்கப்பட்ட செய்தியினை செருகுகிறார். சேரன் ஒரு ஒழுங்கான மனிதன் என்றால் தான் பிறந்த ஆண்டு எது என்பதை தெரிவித்திருக்க வேண்டும். அவ்விதம் சேரனால் செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம் அவர் தனது வயது மோசடியில் கையும் களவுமாக வசமாக மாட்டுப்பட்டமையே. காலச்சுவடு வெளியீடாக 2000 ஆம் ஆண்டுக்குப்பிறகு வந்த சேரனின் புத்தகங்களில் எல்லாம் சேரன் பிறந்தது 1960 என்றே சேரனால் கண்ணனிடம் சொல்லப்பட்டே அறிமுகத்தில் எழுதப்படுகிறது. மேலும் சேரன் எம்மிடம் தனது கடவுச்சீட்டையும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தையும் பார்வைக்கு தர வேண்டும் என்று கேட்பதுதான் மிக வேடிக்கையானது. இதற்கூடாக ஒரு திசைதிருப்புகிற  வாதத்தை  வைக்கிறார். சேரன் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மேற்கூறிய ஆவணங்கள் எவற்றையுமே பிழையான வயதுகளுடன் பெயர்களுடன் மோசடியாக (Identity fraud) எவருமே தயாரிக்க முடியும். ஆவணங்களை வைத்து யாருமே உண்மைகளை நிறுவ முடியாது. சேரனின் மூத்த சகோதரத்தினதும் இளைய சகோதரத்தினதும் வயதை சேரனின் வயதுடன் ஒப்பீட்டுச் சரிபார்ப்பதன் மூலமும் சேரன் படித்த வகுப்பை சேர்ந்த சக மாணவர்களின் வயதுகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதன் மூலமுமே உண்மையை நிறுவ முடியும். கல்லூரியில்  சேரனோடு சேர்ந்து படித்த மாணவர்கள் எல்லோருக்குமே சேரன் பிறந்தது 1958 என்பது மிகத் தெளிவாகவே தெரியுமே. இவர்களிடம் ஒரு கள்ள சேட்டிபிக்கட்டைக் காட்டி சேரன் தான் பிறந்தது 1960 தான் என்றால் அவர்கள் நம்புவார்களா? அல்லாவிடில் சேரன் தனது தம்பியான சோழனிடம் ஒரு கள்ள சேட்டிபிக்கட்டைக் காட்டி  “இதன்படி நான் உன்னைவிட இரண்டு ஆண்டுகள் கழித்தே பிறந்தேன். ஆகவே இனிமேல் நான் உனக்கு தம்பி, நீ எனக்கு அண்ணன்” என்று சொல்லி உறவு முறைகளைகளையும் உண்மையையும் மாற்ற முடியுமா? கொங்குதேர் வாழ்க்கை 2 இல் தனது பிறந்த ஆண்டு 1954 (பிரபாகரனும் பிறந்த ஆண்டு 1954) என்று தரப்பட்டிருக்கிறது என்று சேரன் சொல்வதற்குப் பின்னால் இன்னொரு கிரிமினல் ஐடியாவும் இருக்கிறது. இனி அடுத்து சேரன் வழங்கப்போகும்  பேட்டியில் தேசியத்தலைவரும் தானும் ஒரே வயதினர் என்றும் பாலசிங்கத்துக்கு முதலே தான் தேசியத் தலைவருக்கு ஆலோசகராக இருந்தேன் என்றும் தனது ஆலோசனைப்படியே துரையப்பாவை பிரபாகரன் சுட்டுக்கொன்றார் என்றும் சேரன் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தான் முன்னர் சொன்ன எழுதிய விடயங்களை தான் சொல்லவில்லை என்றும் நாங்கள் அவற்றைத் திரிக்கிறோம் என்றும் பச்சை பச்சையாக அழாப்புகிற மகா மோசடிக்காரன் சேரன். சேரன் ஒரு Demagogue. அதாவது உணர்ச்சிகரமானதும் நியாயமற்றதுமான வாதங்கள் மூலம் மக்களின் ஆதரவைப்பெறுகிற ஒரு மூன்றாந்தரமான அரசியல்வாதி. தீராநதி குமுதத்தினால் வெளியிடப்பட்டு கணிசமான பிரதிகள் விலைப்படுகின்ற இலக்கிய இதழாகும். அதில் சேரன் கூறியவைகள் எதனையும் நாங்கள் திரிக்கவில்லை என்பதையும் சேரனின் பொய் புரட்டல்களையும் நீங்கள் அதில் ஐயம் திரிபுறக்காணலாம். தமிழ் கூறும் நல்லுலகம் எங்குமே எவருமே மேற்சொன்ன பழைய தீராநதி இதழை எடுத்து சரிபார்க்கலாம்.  சேரன் சொல்கிறார் தீராநதி கிடைக்கிற இணையத்தளத்தை நாங்கள் தந்திருக்க வேண்டுமாம். சேரனைப் பொறுத்தவரையில் இணையத்தளத்தில் வந்தால் தான் அது உண்மையாம். மேற்கூறிய சேரனின் பேட்டி இப்போது இணையத்தளத்தில் இல்லை என்பதுபோக நாங்கள்தான் அச்சில் வந்த தீராநதியை ஆதாரமாகக் காட்டியிருந்தோமே. மேலும் இதே தீராநதிப்பேட்டி 2006 ம் ஆண்டு காலச்சுவடு வெளியிட்ட சேரன் நேர்காணல்கள் என்ற நூலிலும் இணைக்கப்பட்டுள்ளது. சேரன் தன்னுடைய சூழ்ச்சிகரமான வாதத்துக்கு ஆதாரமாக பின்னர் திசைகளில் வெளிவந்த தன்னுடைய பேட்டியைக் காட்டுகிறார். திசைகள் பேட்டியில் சேரன் தான் நடுநிலமையாளர் என்று சொல்கிறாரே தவிர அவர் நடுநிலமையாளர் அல்ல புலிகளுக்கு உண்மையான நடுநிலமையாளர்கள் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள். உண்மையான நடுநிலமையாளர்கள் புலிகளால் கொல்லப்பட்டும் கொல்லப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். நடுநிலமையாளரான ராஜினி திராணகம புலிகளால் கொல்லப்பட்டது போக நடுநிலமையாளர்களான ராஜன் கூலும் சிறீதரனும் புலிகளால் ஆபத்தை எதிர்நோக்கியிருக்க, வன்னிக்குள் கால்வைக்க முடியாமல் இருக்க சேரன்  மட்டும் வன்னிக்குள் போய் உயிரோடு திரும்பி வரமுடிந்தது எப்படி? (மேலும் கசிகின்ற நம்பகரமான வட்டாரங்களின் செய்திப்படி விடுதலைப் புலிகளின் ஆயுட்கால நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தியின் “தரிசனத்தில்” வன்னியில் கட்டப்பட்டு வந்த தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் தனக்கு ஏதாவது. போட்டுத்தருமாறு கேட்டு வழிந்திருக்கிறார் சேரன்.) உண்மையில் சேரன் நடுநிலமையாளர் அல்ல. அவர் ஒரு நழுவுநிலமையாளர். பொய்யை பலமுறை சொல்வதன் மூலம் அதனை உண்மை ஆக்கலாம் என்பதே சேரனின் கணிப்பு.

தீராநதிப் பேட்டி பற்றி நாங்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்குமே பதிலளிக்காமல் அவ்வாறான ஒரு பேட்டியே இருக்கவில்லை என்று மறைக்க முயல்கிறார் சேரன். உண்மையில் சேரனால் அவற்றுக்குப் பதிலளிக்க முடியாது என்பதுபோக நாங்கள் மேலும் செய்த கடுமையான ஆராய்ச்சி, விசாரணைகளின் பின்னர் சேரன் குடும்பத்தினரின் ஊழல்கள் வெளியேவரத் தொடங்கியுள்ளன. இலங்கை அரசு தமிழர்களின் கல்வி வாய்ப்பைப் பாதிக்கிற வகையில் “தரப்படுத்தல்” சட்டத்தைக் கொண்டு வந்ததாகவும் தன்னுடைய தமையன் கூடுதலான புள்ளிகள் எடுத்தும் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முடியாமல் வெளிநாடு போனார் என்றும் தன்னுடைய தம்பி தங்கையும் மேலும் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் வெளிநாட்டுக்குப் போனார்கள் என்றும் சேரன் தீராநதிப் பேட்டியில சொல்கிறார். சேரன் இதில் சொல்லாமல் விட்டது என்னவென்றால் சேரனின் சகோதரர்கள் எவ்வாறு வெளிநாடு போனார்கள் என்பதைத்தான். சேரன் சொல்வது போல சேரனின் வெளிநாடு போன சகோதரர்கள் கூடுதலான புள்ளிகள் எடுக்கவில்லை. அவர்கள் mediocre ஆன மாணவர்களாகவே உயர்கல்வி படிக்கும்போது இருந்தார்கள். அவ்வாறு இருக்க 2 சகோதரனும் ஒரு சகோதரியும் புலமைப்பரிசில் பெற்று முன்னைய சோவியத் ஒன்றியத்துக்கு படிக்கச்சென்றது எவ்வாறு? இலங்கையில்  வெளிநாட்டுப் புலமைப்பரிசில்களை வழங்கத் தீர்மனிக்கிற முறையில் நீதியும் Transparency ம் இருப்பதில்லை. ஊழல், இலஞ்சம், செல்வாக்கு என்பனவே புகுந்து விளையாடும். 1971 இல் அரச உயர் அதிகாரியாகவிருந்த சேரனின் தந்தையார் மகாகவி இறந்தார். இக்காலத்தில் சுதந்திரக்கட்சி, இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியில் இருந்தது. மகாகவியின் நண்பர்களாக இருந்த சில அரச அதிகாரிகளினதும் சில இடதுசாரி மற்றும் TULF அரசியவாதிகளின் செல்வாக்கினாலுமே நியாயப்படி சேரனின் சகோதரர்களுக்கு வழங்கப்பட முடியாத புலமைப்பரிசில் (அதுவும் ஒரே குடும்பத்தில் மூவருக்கு) வழங்கப்பட்ட்டது. சேரன் குடும்பம் ஒரு மத்தியதரவர்க்கக் குடும்பம். இவர்களை விட எவ்வளவோ திறமையான மிகவும் வறிய சில தலித் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சமதர்ம நாட்டுப் புலமைப் பரிசில் சேரன் குடும்பத்துக்கு மொத்த வியாபாரமாக வழங்கப்பட்டது மிகப்பெரிய அநீதி.

சேரன் சொல்வதுபோல நாங்கள் எதனையும் திரிக்கவில்லை. சேரன் மிகத்தெளிவாகவே “மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் (யாழ்) [UTHR(J)] சொல்வதுபோல புலிகளை பாசிஸ்டுகள் (fascists) என்று முத்திரை குத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பது மட்டுமல்ல, இத்தகைய முத்திரையிடல்களுக்கு பின்னால் பலமான அரசியல் காரணங்களும் உள்ளன” என்று கூறியுள்ளார். அதாவது சேரன் புலிகள் பாசிஸ்டுகள் இல்லை என்கிறார். அதுகாலவரையும் புலிகளை மிகச்சரியாகவே கடுமையாக விமர்சித்து வந்த சேரன் இக்கட்டுரையில் புலிகளின் பக்கம் சாய்வதற்கான ஆரம்ப வேலைகளைச் செய்கிறார். புலிகளை கடுமையாக விமர்சிக்கிறவர் திடீரென்று புலி ஆதரவாளராக மாறமுடியாதல்லவா. அவ்விதம் திடீரென்று அவர் மாறுவாராயின் அவரைத் தெரிந்தவர்களுக்கு அவரின் சித்த சுவாதீனம் மீது சந்தேகம் ஏற்படும். படிப்படியாகத்தான் மாறமுடியும். 1999 ம் ஆண்டு  ஜூன் ஆகஸ்டு மூன்றாவது மனிதன் இதழில் “85 இன் பிற்பாடு தமது சிறப்பான ‘இயக்க விதி’ யின் பயனாக எல்லா இயக்கங்களையும் புலிகள் பலாத்காரமாக ஒழித்து மேலாதிக்கத்துக்கு வந்தபின் தேசியவிடுதலைப் போராட்டம் என்ற கருத்து பின்னுக்கு போய் தேச விடுதலை, இன விடுதலை என்று வருகிறது. அதில் வெறும் இனத்துவமும் தமிழர் அடையாளமும் மட்டும் தான் சம்பந்தப்பட்டிருக்கிறது. அப்படிப்பார்க்கிற போது ஒரு உன்னதமான, நியாயமான இலட்சியங்களில் இருந்து இப்போது ஒரு வகையான பின்னடைவு இன்னும் உரத்துச் சொல்வதானால் சீரழிவே நடந்திருக்கிறது.  தமிழ் தேசியவாதம் ஒரு காலத்தில் முஸ்லிம் சிங்கள மலையக மக்களைப் பற்றிப் பேசியிருக்கிறது. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு வெறும் தமிழன் என்ற உணர்ச்சியைத்தான் இப்போது மேலாட்சி பெற்றிருக்கிற தேசியவாதம் பேசுகிறது. அந்தத் தேசியவாதம் தான் யார் தமிழன்( ஆண்பால்) என்பதைத் தீர்மானிக்கிறது. வெளியில் இருந்து யார் வந்தாலும் தள்ளிவிடும். இது தேசியவாதம் இல்லை. நான் முன்பே சொல்லியதுபோல் இது ஒருவகையான பேரினவாதமும் ஆபத்தானதுக் கூட. இது ஆரோக்கியமானதல்ல. இவ்வகையான தேசியவாத்திற்கும் எனக்குமிடையே ஒரு வகையான உறவும் கிடையாது.”

என்று கூறிய சேரன் 2002, பெப்பிரவரி 17 நிகரி இதழில்

“சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகள் மீது ‘பயங்கரவாத’ முத்திரை குத்தப்படுவதற்கு சர்வதேச அரசியலில் தாரளமாகவே விரவியிருக்கும் நாடுகளின் சுயநலம், பூகோள அரசியல் போன்றவை மட்டுமே காரணம் அல்ல. Amnesty International, Human Rights Watch ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமை மீறல்களைப் பற்றி தொடர்ந்து வெளியிட்டு வந்த அறிக்கைகளும் காரணம் தான். இந்தக் காரணத்தை விடுதலைப் புலிகள் அசட்டை செய்வதோ அல்லது ஒதுக்கி விடுவதோ எமது அரசியல் நலன்களுக்கு உதவாது.” என்கிறார்.

கவனித்துப் பாருங்கள். முன்னையதில் தனக்கு எவ்வகையான உறவும் கிடையாது என்ற சேரன் பின்னையதில் “எமது” என்று கூறுவதன் மூலம் புலிகளின் தேசியவாதத்தின் பங்காளியாகிறார். மேலும் இதே நிகரி கட்டுரையில் UTHR(J) இன் தலையில் ஒரு குட்டுவைப்பதன் மூலம் தனது பகுதியளவிலான புலிச்சார்பை அறிவிக்கிறார்.

இவ்வாறாக படிப்படியாக தனது வண்ணங்களை சூழலுக்கேற்ப மாற்றி வந்த பச்சோந்தியான சேரன் தீராநதிப் (2002 செப்) பேட்டியில்

“விடுதலைப் புலிகளின் ஆட்சிக்குள் இருக்கிற மக்களின் அனுபவங்களைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல இயலாது. நான் அந்தப் பகுதிகளுக்குப் போய் வரவில்லை. சமூகவியலாளர்கள் இது குறித்து என்ன சொல்கிறார்கள் என்றால் “தேர்தல்நடைபெறாமல் ஒரு இயக்கம் நீண்ட காலமாக ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமென்றால் பயங்கரத்தைப் பாவித்து இருக்க முடியாது” என்று சொல்கிறார்கள். அடக்குமுறை ஏதாவது ஒரு விதத்தில் பிரயோகிக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த மக்களின் ஆதரவில்லாமல் நீண்ட காலத்துக்கு ஒரு நிலப்பரப்பைத் தங்களது ஆட்சிக்குக்கீழ் வைத்து வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பது சாத்தியப்படாது. வியட்னாம் உட்பட பல நாடுகளில் இத்தகைய நிலமையைப் பர்த்திருக்கிறோம். அந்த வகையில் வடக்கு கிழக்கில் புலிகளுக்குட்பட்ட பிரதேசங்களில் ஏராளமான மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றுதான் நம்புகிறேன். அதே சமயத்தில் புலிகள் சில மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்று சொல்லமுடியாது. அம்மாதிரி தவறுகள் நடப்பதாக அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு தூரம் அடிப்படையான ஜனநாயக, மனித உரிமைகள் சார்ந்து அரசாங்கம் அமைக்கப்படப்போகிறது என்பதில்தானிருக்கிறது எதிர்காலம். ”

என்று கூறியதன் மூலம் தான் 100% புலி வண்ணங்களைப் பெற்றதை அறிவிக்கிறார். 2006 ல் கனடா ஈழநாடு இதழில்

“தெளிவும் செறிவும் சாரமும் காரமும் பொருந்தியதாக அமைந்திருந்தது பிரபாகரன் அவர்களின் உரை. தளராத படைத்திறன், போர்வலு என்பவற்றின் மீது உறுதியாகக் கட்டப்பட்ட நம்பிக்கையும் பெருமிதமும் அவருடைய பேச்சினூடக வெளிப்பட்டன. அவருடைய கருத்துக்கள், நெறிமுறைகளோடு உடன்படாத பல சிங்கள ஆங்கில ஊடகவியலாளர்கள் மற்றும் கருத்தியலாளர்கள் கூட அவருடைய உரையின் தர்க்கத்தையும் பொருத்தப்பாட்டையும் சுட்டிக் காட்டி எழுதிய குறிப்புக்களும் கட்டுரைகளும் ஆங்காங்கே வெளியாயின”

என்று தலைவருக்கு சொக்குப்பொடி போட்டுப் புகழ்ந்த சேரன் தானும் தலைவருக்கு கழுவ “ரெடி” என்று அறிவித்தார். இதன் மூலம் சேரன் தான் 200% புலியாக மாறி விட்டதை அறிவித்தார். (கிட்லரின் உரையொன்றை தலைசிறந்த சிந்தனையாளரும் யூதருமான நோம் சோம்ஸ்கி அதிசிறந்ததாக இருந்ததாகப் புகழ்ந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்கிறது சேரன் பிரபாகரனின் உரையை புகழ்வது)

ஆனந்த சங்கரியின் கடந்தகால கூட்டணி அரசியலில் எங்களுக்கு விமர்சனங்கள் இருந்தாலும் இன்று ஆனந்தசங்கரி முழு இலங்கையினதும் மனச்சாட்சியின் கைதியாக  இருக்கிறார். ஆனால் சேரனோ வெட்கமின்றி “ஆனந்த சங்கரி அவர்களின் கண்மூடித்தனமான எதிர் அரசியலைப் பற்றி எனக்குத் தீவிரமான விமர்சனம் இருக்கிறது” என்று மேற்குறிப்பிட்ட அதே கட்டுரையில் சங்கரிக்கு தலையில் குட்டு வைத்து எழுதுகிறார். வன்னிப் புலிகளுக்கு தனது புதிய புலிவிசுவாசத்தில் சிறிது கூட சந்தேகம்  வரக்கூடாது என்பதற்காக புலிகளுக்குப் புரிகிற மொழியிலேயே சேரன் எழுதியதுதான் அது.

இதே சேரன் தான் காலச்சுவடு பேட்டியில் (1999) கனடாவில் இருந்து வருகிற விடுதலைப் புலிகளின் பத்திரிகையான “உலகத் தமிழரையும்” இன்னொரு புலி ஆதரவுப் பத்திரிகையான “முழக்கத்தையும்” அவற்றினுடைய குறுகிய தேசியவாத மற்றும் stereo type ஆன கட்டுரைகளுக்காக அவற்றை கடுமையாக விமர்சித்திருந்தார். இன்று அதே பத்திரிகைகளில் சேரனே (சொந்தப் பெயரிலும் புனைபெயரிலும்) தலைவரை பப்பாசி மரத்தில் ஏற்றுகிறமாதிரி புகழ்ந்தும் புலிப்பாசிசத்தை ஆதரித்தும் கட்டுரைகள் எழுதுகிறார்.

ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை என்றானாம். அதே போலத்தான் சேரன் தனது புலமை மோசடிகளை மறைக்க UTHR(J) மீது ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டுகளை சகட்டு மேனிக்கு வைக்கிறார். UTHR(J) இன் உறுப்பினர்களாக ராஜன் கூலும் சிறீதரனுமே இருந்தார்கள்.  மனோரஞ்சனும் ராம் மாணிக்கலிங்கமும் UTHR(J) ன் உறுப்பினர்களாக இருக்கவில்லை. மனோரஞ்சனும் மாணிக்கலிங்கமும் கூல் முதலியவர்களின் நண்பர்களாக இருந்தார்கள் என்பது உண்மைதான். மேற்கூறிய இருவரையும் UTHR(J) உடன் தொடுப்பதன் மூலம் அதற்கு சேறு பூசலாம் என்பது சேரனின் பரிதாபத்துக்குரிய முயற்சி. மனோரஞ்சன் மாணிக்கலிங்கம் இருவருமே நல்ல நோக்கம், நல்விசுவாசம் (Good intentions and Good faith) என்பவற்றின் அடிப்படையிலேயே சந்திரிகா அரசில்  நம்பிக்கை வைத்திருந்தார்கள். உண்மையிலேயே சந்திரிகா நம்பிக்கை ஊட்டுபவராகவே இருந்தார். சேரனே தன்னுடைய காலச்சுவடு பேட்டியில் சந்திரிகாவைப் பற்றி நன்றாகவே சொல்லியுள்ளார். பக்கச்சார்பற்ற எவருமே சந்திரிக்கா ஆட்சிக்கு வந்திருந்தபோது கூடவே கொணர்ந்த நல்ல நோக்கங்களை (Good intentions)  சந்தேகிக்க மாட்டார்கள். கொலைகாரர்களான கிட்டு, சந்தோசம் முதலியவர்களோடு ஒப்பிடுகிறபோது மனோரஞ்சனும் மாணிக்கலிங்கமும் ஒரு கொலையுமே செய்யாதவர்கள். கொலைகாரர்களான கிட்டுவோடும் சந்தோசத்தோடும் நட்பு பேணியதாகக் கூறுபவர் சேரன். கூலும் சிறீதரனும் ரஞ்சனுடனும் மாணிக்கலிங்கத்துடனும் நட்பு பேணியதில் என்ன தப்பு.

புலிகளின் குரலில், புலிகளின் வேலைத் திட்டங்களின் (Agenda) அடிப்படையில் சந்திரிகா மீது சேரன்  குற்றஞ்சாட்டுவது சரியான மதிப்பீடு அல்ல. சந்திரிகா ஊழல் நிறைந்த அரசியல் வாதியாக இருந்தும் குமார் பொன்னம்பலம் பத்திரிகையாளர் றோகண குமார போன்றவர்களின் கொலைக்கு பொறுப்பானவர்களின் மேலாளராக இருந்தது உண்மை என்றாலும் ஜெயவர்த்தனா, பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் மீது Crimes against humanity என்ற குற்றச்சாட்டை சுமத்துவதுபோல சந்திரிகாமீது மீது Crimes against humanity என்ற குற்றச்சாட்டை யாருமே சுமத்த முடியாது என்பதோடு ஒப்பீட்டு அடிப்படையில் முன்னையவர்களைவிட ஜனநாயகத்தில் சந்திரிகா அதிகம் நம்பிக்கை உடையவராக இருந்தார். ஜெயவர்த்தனா, பிரேமதாச, விக்கிரமசிங்க முதலியோர் திட்டமிட்டு தமிழ் மக்களை அழித்தவர்கள் (1983 ஜூலை படுகொலைகள்) என்பது போக ஜெயவர்த்தனாவும் பிரேமதாசவும் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் என்பதை அவர்களது அரசியல் வாழ்வு சொல்லும். சந்திரிகா அரசாங்கத்தின் மீது 1995 ஏப்பிரிலில் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து புலிகளால்தான் போர் தொடுக்கப்பட்டது. அதே காலப்பகுதியில்தான் சந்திரிகா அரசாங்கத்தின் பணிப்பின் பேரில் நீலன் திருச்செல்வமும் பீரிசும் இணைந்து இந்திய மாநில சுயாட்சியை ஒத்த அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சித்திட்டமொன்று தயாரிக்கப்பட்டது. கொடுமையான போர் ஒன்று இலங்கை அரசின் மீது தொடுக்கப்பட்டு விட்டதால் சந்திரிக்கா அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழிகளைப் பற்றி சிந்திப்பதற்கே சந்தர்ப்பம் சந்திரிக்காவிற்குக் கிடைக்கவில்லை. இவ்வளவு நெருக்கடி இருந்தும் கிருசாந்தி படுகொலை, செம்மணிப்படுகொலைகள் முதலியன மீது குறைந்தபட்சமேனும் ஒரு சுயாதீனமான நீதிவிசாரணைகள் சந்திரிகா ஆட்சியின்போது நடத்தப்பட்டது. (நீதி முழுமையாக வழங்கப்படாவிட்டாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டாலும்) ஜயவர்த்தன மற்றும் பிரேமதாச ஆட்சிகளின் போது இந்தளவுக்கு எந்தவொரு சுதந்திரமான நீதி விசாரணையுமே நடத்தப்பட்டதில்லை. மேலும் 2004 ஏப்பிரலில் கருணா புலிகளைவிட்டுப் பிரிந்தபோது சந்திரிகா நடந்து கொண்டமுறையும் (போர் நிறுத்தத்தைக் கருத்தில் கொண்டு கருணா அணியினருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இதனை சாதகமாகப் பயன்படுத்தி வன்னிப்புலிகள் பெரியவெள்ளி தினத்தன்று கருணா அணிமீது தாக்குதல் தொடுத்தார்கள்) தன்னுடைய ஆட்சியின் இறுதிக்காலத்தில் பலருடைய எதிர்ப்புக்கு மத்தியில் வட கிழக்கின் சுனாமி மீள்கட்டுமானப் பணியை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்க முன்வந்தமையும் அவரது ஜனநாயக நடத்தைகளுக்கான உதாரணங்கள்.

UTHR(J) சந்திரிகா ஆட்சிக்கு வந்தபோது சந்திரிகா அரசாங்க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது என்றும் 1995 இல் யுத்தம் ஆரம்பித்த போது அதனை வழிமொழிந்து ஒரு அறிக்கையை UTHR(J) வெளியிட்டது என்றும் UTHR(J) நடுநிலமை தவறிய அமைப்பு என்றும் சேரன் சொல்வது சேரனின் திரிப்புக்கள். சேரன் புலிப்பினாமிகளின் பாணியில் UTHR(J) மீது தாக்குகிறார். UTHR(J) ஒருபோதுமே சந்திரிகா அரசாங்க ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. UTHR(J) ஒரு மனித உரிமை அமைப்பே தவிர அரசாங்கங்களின் மீது ஆதரவு நிலைப்பாடு எடுக்கிற அரசியல் கட்சியல்ல. எப்பொதுமே சுயாதீனத்தைப்பேணுகிற அமைப்பு அது. மேலும் ஒருபோதுமே 1995 இல் ஆரம்பித்த யுத்தத்தை UTHR(J) வழிமொழியவில்லை என்பதை UTHR(J)இன் இணையத்தளத்துக்கு செல்வதன்மூலம் யாரும் கண்டுகொள்ளலாம். மறுதலையாக குறித்த யுத்தத்தில் இராணுவத்தால் மீறப்பட்ட மனித உரிமைகளை எல்லாம் விலாவாரியாக ஆவணப்படுத்தியது UTHR(J) அறிக்கைகளே.

சேரன் கிழக்கு மாகாணத்தில் நடந்த கட்டாய (குழந்தைகள்) இராணுவ ஆட்சேர்ப்பு, முஸ்லீம் மக்கள் மீதான ஒடுக்குமுறை படுகொலைகள் என்பவற்றுக்கு கேணல் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார். இதன் மூலம்  புலிகளில் இருந்து கருணா வெளியேறிய பின்னர் முழுத்தவறுகளையும் கருணாவின்மீது புலிகள் சுமத்தியதைப்போல தானும் சுமத்துகிறார்.

யூதர் எதிர்ப்பு இனவாதம் (Anti-Semitism) என்பது ஒரு மத்திய கிழக்கு கருத்துருவாக்கம் அல்ல. அது ஒரு ஐரோப்பிய கருத்துருவாக்கமாகும். அதே போலவே இலங்கையிலும் முஸ்லீம் எதிர்ப்பு இனவாதம் என்பது ஒரு யாழ்ப்பாணியக் கருத்துருவாக்கமே தவிர அது ஒரு கிழக்கு மாகாண கருத்துருவாக்கமல்ல. மூவின மக்களும் வாழ்கிற கிழக்கு மாகாணத்தில் இன சகிப்புத்தன்மை நீண்ட காலமாகவே இருந்து வந்தது. கிழக்கில் தமிழ், முஸ்லிம் கிராமங்கள் குழல் புட்டும் தேங்காய்ப்பூவும் போலப் பின்னிப் பிணைந்திருந்தன. முஸ்லிம் எதிர்ப்பு இனவாதத்தை தமது பாசிச அரசியலுக்காகக் கிழக்கு தமிழர்களிடையே பரப்பியது புலிகளின் யாழ்ப்பாணத் தலைமையே. இங்கு நாங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் டெலோ மீது தாக்குதல் தொடுத்து அதன் உறுப்பினர்களைக் கொன்றபோது புலிகளின் இதே கொள்கையை கிழக்கு மாகாணத்திலும் அமுல்படுத்த கிழக்கு மாகாண புலித்தலைவரான “கடவுள்” ஒத்துழைக்கவில்லை. இதன் பின்னர் பிரபாகரன் குமரப்பாவையும் பொட்டரையும் அனுப்பியே டெலோ உறுப்பினர்களின் மீதான படுகொலைகளை ஒப்பேற்றினார். பிரபாகரன் 1987 ம் ஆண்டுவரையும் வடமாகாணத்தவர்களையே புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகளாக நியமித்து கிழக்கு மாகாண புலி உறுப்பினர்களிடமும் புலிப்பாசிச மற்றும் முஸ்லீம் எதிர்ப்பு இனவாத அரசியல் ஊட்டப்பட்டது. கருணா பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலராக இருந்தவர். பொன்னம்மான், ராதா ஆகிய இருவரின் தலைமையின் கீழ் இராணுவப்பயிற்சி பெற்றவர். இதனைவிட கருணா மட்டக்களப்பு தளபதியாக வருவதற்கு முதல் பசீர் காக்கா, அருணா, குமரப்பா, பொட்டம்மான் ஆகிய யாழ்ப்பாண புலித்தலைவர்களின் கீழ் மட்டக்களப்பில் இயங்கியவர். இவைகள் அனைத்தும் போதுமே  17 வயதில் கிழக்கு மாகாணத்தில் இருந்து புலிகளோடு இணைந்த உலகம் அறியாத அப்பாவி வாலிபனான கருணாவிடம் புலிப் பாஸிச வெறியைப் புகுத்துவதற்கு. இந்தப் பின்னணியிலேயே நாங்கள் கருணாவைப் புரிந்து கொள்கிறோம்.   சேரன் சொல்வது போல நாங்கள் அப்பழுக்கற்ற தூயவிடுதலைப் போராளி என்ற விம்பத்தை கருணா மீது கட்டவில்லை.

UTHR(J) க்கு தேனீ உத்தியோகபூர்வமாகவே இணைப்புக்கொடுத்துள்ளது. சேரன் குறிப்பிட்ட UTHR(J) இன் கிழக்கு மாகாண அறிக்கையை மறைக்க வேண்டிய எந்த தேவையும் தேனீக்கு இருந்ததில்லை.

சேரன் 2003 இல் யாழ்ப்பாணத்துக்குப் போய் யாழ் பல்கலைக்கழகத்தின்  விரிவுரையாளர் பதவிக்கு கண் வைத்து யாழ் திருநெல்வேலிப்பகுதியைச் சுற்றிச் சுற்றி நாய் பேயாய் அலைந்தது. இதற்கு ஆதரவு தேடி யாழ் பல்கலைக்கழக வட்டாரங்களில் Manoeuvring செய்தது எல்லாம் உண்மை. யாழ் பல்கலைக்கழக வட்டாரங்களில் எல்லோருக்கும் இது தெரியுமே. சேரன் யாழ்ப்பாணத்தில் நின்ற இதே காலப்பகுதியில்தான்  EPRLF வரதரணி சுபத்திரன் உட்பட எண்ணற்ற மாற்று இயக்க காரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டார்கள். 1999 காலச்சுவடு பேட்டியில் சேரன் விடுதலைப் புலிகளுக்கும் தனக்கும் இடையே இருந்த கருத்து முரண்பாடுகளின் விளைவாகவே தான் 1990 இல் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டி வந்தது என்றும் யாழ்ப்பாணத்திலேயே தங்கி நின்ற தன்னுடைய நண்பர்களில் பலர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றும் கூறினார். நிலமை இவ்வாறு இருக்க சேரன் மட்டும் எவ்வாறு (வன்னிப் புலிகளுக்கும் சேரனுக்கும் இடையில் கள்ள ஒப்பந்தம் இலாமல்) கொல்லப்படாமல் திரும்பிவர முடிகிறது?

சேரனுக்கு கலாநிதிப் பட்டத்துக்கான புலமைப் பரிசிலைப் பெற்றுக்கொடுக்க காரணமாக (Instrumental) இருந்தவர் நீலன் திருச்செல்வம்தான். நீலன் திருச்செல்வத்தின் “அணைவோடு” தான் ஏ.ஜே. வில்சனினதும் குமாரி ஜெயவர்த்தனாவினதும் சிபார்சுக் கடிதங்களை சேரன் பெற்றார். பல வகைகளில் சேரனைவிடத் தகுதியான பலர் புலமைப்பரிசில் பெற இருந்தார்கள்.
 
1. சேரனின் முதல் B.Sc பட்டம் Honours ம் class ம் இல்லாத mediocre தரத்திலேயே இருந்தது.
2. சேரனின் இரண்டாவது M.Sc ம் Class எதுமில்லாத Mediocre பட்டம்தான்.

இந்த நிலையில் “செல்வாக்கு” இல்லாமல் நீதியான முறையில் யோர்க் பல்கலைக்கழகத்தில் சேரனால் புலமைப்பரிசில் பெற்றுக் கொண்டிருக்கவே முடியாது. நீலன் திருச்செல்வமும் ICESம் இலாவிடில் சேரன் ஒரு nobody. இதனைப் பல பல்கலைக்கழக அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சேரன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வைத்திருந்த நேர்மையான விமர்சகர் என்ற விம்பமும் இப்போது வெளுத்து விட்டது.

1986 இல் டெலோ உறுப்பினர்களை புலிகள் வேட்டையாடிக் கொன்று கொண்டிருந்த போது நுPசுடுகு தங்கள் உயிரையே துச்சமாக மதித்து பெருமளவான டெலோ உறுப்பினர்களைக் காப்பாற்றினர். இது நடந்து சிறிது காலத்தின் பின்னர் தமிழ்நாட்டில் வரதராஜப் பெருமாளை சேரன் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பின்போது சேரன் பெருமாளிடம் கொள்ளை முதலியயவற்றைச் செய்த ரெலோ இயக்கத்துக்காக EPRLF ஏன் வக்காலத்து வாங்கி டெலோ உறுப்பினர்களைக் காப்பாற்றி தஞ்சமளித்தது என்று கேட்டாராம். இவற்றை வரதராஜப் பெருமாள் கண்ணோட்டம் இதழில் எழுதும் கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார். இதே சேரன் தான்  ‘மனித உரிமைப் போராளி’ என்ற முகமூடியை அணிந்துகொண்டு பின்னர் படம் காட்டியவர்.

1986 ம் ஆண்டு வெளிவந்து 106 நாட்கள் ஓடிய பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ ஈழத்தமிழரின் பிரச்சினையை சிறிது வெளிப்படுத்தியது. ஈழப் போராளிகளின் தமிழ்நாட்டு இருப்பிடம் ஒன்றை காட்டுகிற கட்டத்திலே சில மனிதர்கள் சித்திரவதை செய்யப்படுவது காட்டப்படுகிறது. இதனைப் பார்த்து “டென்சன்” ஆன சேரன் இக்காட்சி ஈழப் போராளிகளைக் கொச்சைப்படுத்துகிறது என்று ஈரோஸ் இயக்கத்தினால் வெளியிடப்பட்ட பாலம் இதழில் எழுதியிருந்தார். உண்மை என்னவென்றால் இதே காலப் பகுதியில்தான் புளட் இயக்கத்தினால் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட உட்கட்சி சித்திரவதை, கொலைகள் அம்பலமாகியிருந்தன. இதனைத்தான் பாலச்சந்தர் புன்னகை மன்னனில் வெளிப்படுத்தியிருந்தார். ஒரு வியாபார திரைக்கலைஞரே உண்மையை வெளிப்படுத்துகிறபோது சேரன் அதனை தணிக்கை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். புன்னகை மன்னன் படத்திலும் வில்லன் கமலஹாசனை “நான் ஆறடி இரண்டங்குலம், கோபுரம்” என்று மிரட்டுகிறான். சேரனும் தனது பதிலில் “மாடுமுட்டி கோபுரங்கள் சாய்வதில்லை” என்று நம்மை மிரட்டுகிறான். சேரன் மாடா, கோபுரமா என்பதை சமகாலமும் வரலாறும் முடிவு செய்யும்.

சேரன் இந்தப் பதிலிலும் கூசாமல் பொய்சொல்லி தன்னைப் பற்றிய பிரமைகளைக் கட்டமைக்கிறார். அதிலும் சேரனின் அண்டப்புழுகு என்னவென்றால்  தனக்கும் புலித் தளபதி கிட்டுவுக்கும் நட்பு இருந்தது என்று குறிப்பிடுவதுதான்.
கிட்டுவையும் சேரனையும் தெரிந்தவர்களுக்கு இருவரும் நண்பர்களாக இருக்கவில்லை என்பது தெரியும். நட்பு இருக்கவில்லை. ஆனால் சேரனுக்கு கிட்டுவில் எரிச்சல் இருந்தது. கிட்டுவைப்போல காதலோடு வீரத்தையும் அனுபவித்த பாக்கியசாலியாக தான் இல்லையே (பக்.188, உயிர் கொல்லும் வார்த்தைகள்) என்பதால் சேரனுக்கு எரிச்சல் இருந்தது.

NLFT இன் கூட்டங்களில் பெரும்பாலானவை அளவெட்டியில் சேரனின் வீடான “நிழல்” இல் தான் கூட்டப்பட்டன. NLFT தலைவரான விசுவானந்ததேவன், உருத்திரமூர்த்தி குடும்பத்தில் ஒரு குடும்ப நண்பராகவே கருதப்பட்டவர். சேரனின் தங்கையான அவ்வை NLFT இன் மகளிர் அணியில் இருந்தவர். NLFT தலைவர்களில் ஒருவரான எஸ்.கே விக்கினேஸ்வரனையே இக்காலப்பகுதியில் அவ்வை காதலித்து பின்னர் மணந்து கொண்டார். 1990 இலிருந்து வடக்கு கிழக்கில் தங்கியிருந்த NLFT இயக்க உறுப்பினர்கள் 100 க்கு மேற்பட்டவர்கள் புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட தப்பியோட முடிந்தவர்கள் தென்னிலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றார்கள். சேரனும் எஸ்.கே விக்கினேஸ்வரனும் 1990 முற்பகுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினார்கள். விக்கினேஸ்வரனின் மூத்த தம்பி NLFT உறுப்பினர் என்று யாழ்ப்பாணத்தில் புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சேரன், எஸ்.கே.விக்கினேஸ்வரன் (இந்த விக்கினேஸ்வரன் தான் காலச்சுவட்டில், ஈழத்தின் இன்றைய உண்மை நிலவரங்களைத் திரிபுபடுத்தி புலிகளின் வேலைத் திட்டங்களுக்கிசைவாக கட்டுரைகள் எழுதி வருபவர்) ஆகியோர் 1990 க்குப்பின்னர் யாழ்ப்பாணத்தில் நின்றிருந்தால் புலிகளால் கொல்லப்பட்டிருப்பார்கள். இவ்விருவரும் 1990 இல் புலிகள் மாற்று இயக்க காரரை வேட்டையாடிய போது கொழும்புக்கு ஓடிவந்தவர்கள். இன்று இவர்கள் மனச்சாட்சியின்றி புலிகளால் கொல்லப்பட்ட தங்கள் நண்பர்களின் சடலங்களில் காலால் மிதித்து முன்னேறி தனிப்பட்ட நலன்களுக்காக புலிகளுக்காக வெட்கமின்றி விபச்சாரம் செய்கிறார்கள்.

சேரனும் சேரனைப் போலச் சார்ந்ததன் வண்ணமாக இயங்கும் பச்சோந்திகளுக்கும் சேரனே எழுதிய பின்வரும் கவிதை அச்சொட்டாய் பொருந்துகிறது.

                மனிதத்தை
                துப்பாக்கி முனையில்
                நடத்திச்சென்று
                புதைகுழி விளிம்பில்
                வைத்துச் சுட்டுப்
                புறங்காலால் மண்ணைத் தள்ளி
                மூடிவிட்டு வந்து
                தெருவோரச் சுவரில்
                குருதியறைந்து
                நியாயம் சொல்கிறார்கள்
                நியாயம்!

                யார் கேட்டார் உம்மிடத்தில்
                நியாயத்தை?

குண்டுத் தாக்குதலில் காயமடைந்தோரை பசில், ரிஷாத், டலஸ் நேரில் சென்று பார்வை! முதற்கட்ட நஷ்ட ஈடும் கையளிப்பு

basil_akuressa_casualties.jpgஅக்குரஸ்ஸ,  கொடபிட்டிய குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான நஷ்டஈடுகளை வழங்கவும் காயமடைந்தவர்களை பார்வையிடவுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் டலஸ் அழகபெரும அமைச்சர் சந்திரசிறி கஜதீர ஆகியோர் நேற்று சென்றிருந்தனர்.

குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பிரதேச சபைத் தலைவர் உப தலைவர் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அங்கிருந்து அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், டலஸ் அழகபெரும, சந்திரசிறி கஜதீர ஆகியோர் மாத்தறை வைத்தியசாலைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கான முதற்கட்ட நஷ்டஈட்டுத் தொகையையும் வழங்கினர்.

குண்டு வெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஏனையோரையும் அமைச்சர்கள் பார்வையிட்டதுடன் அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளர்களுடனும் கலந்துரையாடினர்.

இதேவேளை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த  அக்குரஸ்ஸ பிரதேச சபையின் உபதலைவர் உபாலி சரத்சந்திர, கம்புறுபிட்டிய பிரதேச சபையின் உபதலைவர் திலக் தம்மிக விஜயசேகர,, தெவிநுவர பிரதேச சபையின் தலைவர் லின்டன் அபேவீர ஆகியோரது இல்லங்களுக்கு போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் சென்று தமது அநுதாபங்களைத் தெரிவித்தனர்.

இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் காயப் பட்டோருக்கு 10,000 ரூபாவும் மரணித்த குடும்பம் ஒன்றுக்கு தலா 50,000 ரூபாவையும் வழங்குவதற்காக இடர் முகாமைத்துவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் குழுவொன்று செயலாற்றுவதாகவும் தெரிய வருகிறது.