மாத்தறை, அகுரஸ்ஸவில் நடந்த மீலாத் விழாவுக்கான பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்புத்தரப்பு பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி பயங்கரவாத அச்சுறுத்தல் நாடு முழுவதும் காணப்படுகின்ற சூழ்நிலையில், அரசு நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அசிரத்தைப் போக்குடன் செயற்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாத்தறை அக்குரஸ்ஸ பள்ளிவாசல் முன்பாக இடம் பெற்ற தாக்குதலைக் கண்டித்து ஐக்கிய தேசியக்கட்சி விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;
நபிகள் நாயகத்தின் பிறந்ததினத்தை யொட்டி கொடப்பிட்டிய ஜும் ஆப் பள்ளிவாசலில் தேசிய விழா இடம்பெற்ற வேளையில் ஊர்வலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலை ஐக்கிய தேசியக்கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.
மனிதப் படுகொலைகளால், வன்முறைகளால், பயங்கரவாதத்தால் பிரச்சினைகளுக்குத்தீர்வு காணவே முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக்கட்சி கொண்டுள்ளது.
அதேசமயம், பயங்கரவாதம் மேலோங்கிக் காணப்படும் பின்னணியில் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தும் கடப்பாட்டை அரசு கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
அரசின் சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்ட இந்த விழா தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கை குறித்து முரண்பாடுகள் காணப்படுவதாக அவதானிக்க முடிகிறது.
எதிர்காலத்தில் அமைச்சர்களுக்குப்போன்றே பொதுமக்களதும் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறிவைக்கின்றோம்.
இந்த துக்ககரமான நிகழ்வில் மரணமானவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.