மதஸ்தலங்கள் மீதான புலிகளின் தாக்குதல்களில் இதுவரை 412 பேர் பலி – அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தகவல்

anura_priyadarshana_yapa.jpg நாட்டிலுள்ள மதஸ்தலங்கள் மீது கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2009 மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக இதுவரை 412 பேர் பலியாகியுள்ளதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

மதஸ்தலங்கள் மீதான புலிகளின் முதலாவது தாக்குதல் 1985ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி இடம்பெற்றது. ஜயஸ்ரீ மஹாபோதி விகாரையில் இடம்பெற்ற இத்தாக்குதலில் 149 பேர் பலியானார்கள்.

இதனையடுத்து சோமாவதி புனிதஸ்தலம் மீது 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 6 பேரும், அதே ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி மடு தேவாலயம் மீதான தாக்குதலில் 6 பேரும்,  அரந்தலாவையில் 1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் 2ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 33 பௌத்த மத குருமார்களும் பலியானார்கள்.

பொலன்நறுவை, மெதிரிகிரியவிலுள்ள கொடபொத்த விகாரையைச் சூழவுள்ள 175 கிராமவாசிகளைச் சுற்றி வளைத்து மேற்கொண்ட தாக்குதலில் 9 பேர் பலியாகினர். அவ்வாறே 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் 147 பேர் பலியானார்கள்.

சம்மாந்துறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களில் 1989ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24ஆம் 29ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 14 பேர் பலியானதோடு, கண்டி, தலதா மாளிகை மீது 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் 7 பேர் பலியாகினர். கரும்புலிகள் 4 பேர் மேற்கொண்ட இத்தாக்குதல் காரணமாக 25 பேர் காயமடைந்தனர்.

2000ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியான வெசக் தினத்தன்று மட்டக்களப்பில் மேற்கொண்ட தாக்குதலில் 25 பேர் பலியாகினர். கடந்த 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மட்டக்களப்பு சாந்த வேலியர் பிள்ளையார் கோயிலின் பிரதம குருக்களான பரமேஸ்வரன் குருக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பு, கொட்டாஞ்சேனை சிவன் கோயிலில் மேற்கொண்ட தாக்குதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொல்லப்பட்டார்.

இறுதியாக கடந்த 10ஆம் திகதி அக்குரஸ்ஸ, கொடபிட்டிய ஜும்ஆப் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நபிகள் நாயகத்தின் பிறந்த தின வைபவத்தில் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு மதஸ்தலங்கள் மீது தொடர்ந்தேச்சையாக புலிகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் அவர்களின் கொடூரத்தன்மை, பாசிச வெறி மற்றும் மிலேச்சத்தனம் என்பவற்றை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. மதஸ்தலங்கள் மீது அவை எந்த சமயத்தைச் சார்ந்ததாக இருந்தபோதும் புலிகள் மேற்கொண்டு வரும் இத்தகைய அநாகரிகமான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிடடார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *