எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தப்பிச் செல்லும் பொது மக்கள்மீது தாக்குதல் நடத்த சூசை உத்தரவு – கடற்படைப் பேச்சாளர் தகவல்

navy_spokesman_dasanayaka.jpgமுல்லைத் தீவு புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து 31 படகுகளில் தப்பிச் சென்ற  பொது மக்கள்மீது தாக்குதல் நடத்துமாறு கடற்புலிகளின் தலைவர் சூசை கடற்புலிகளுக்கு உத்தரவு பிறப்பித்தமை புலிகளின் தகவல் பரிமாற்றத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு கெப்டன் டீ.கே.பி. தஸநாயக்க  மேலும் கூறியதாவது

புதுமாத்தளன் பிரதேசத்தில் இடம்பெயர்ந்தோருக்காக எம்.வி. பின்தான் என்ற கப்பலில் உணவுப் பொருட்கள் இறக்கப்படடுக்கொண்டிருந்த நேரம் சிறுவர்களைக் கடத்திச் செல்லும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டனர். தமது பிள்ளையைக் கடத்திச் செல்லும் முயற்சியைத் தடுத்த பெற்றோரையும் பிள்ளையையும் புலிகளின் பொலிஸார்  சுட்டுக் கொன்றதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் புலிகளின் பொலிஸ் நிலையத்துக்கு தீ வைத்து பொலிஸாரையும் தாக்கியுள்ளனர்.

இதன் பின்னர் அங்கு வந்த 60 க்கும் அதிகமான புலிகள் பொது மக்களைக் கண்மூடித்தனமாகத்  தாக்கியுள்ளனர். இதனால் பலர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். அங்கிருந்த ஐ.நா. பிரதிநிதியின் முன்னிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது,  எமக்கு உணவு வேண்டாம். எங்களை இங்கிருந்து வெளியேற அனுமதியுங்கள் என பொது மக்கள் அந்த ஐ.நா. பிரதியிடம் மன்றாடிக் கேட்டுள்ளனர்.

அதன்பின்னர் அந்த மக்கள் 31 படகுகளில் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குத் தப்பிச்செல்ல முயன்றபோது படகுகளைப் பின்தொடாந்து நான்கு படகுகளில் வந்த கடற்புலிகளின் தலைவர்களான மாறன், இனியவன், ரங்கன் மற்றும் அழகன் ஆகியோர் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கான உத்தரவை கடற்புலிகளின் தலைவரான சூசையே விடுத்திருந்தார்.

உடனடியாக கடற்படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் அந்த நான்கு படகுகளும் தப்பிச் சென்றன. இப்படகுகளில் வந்த 550 பேர் பருத்தித்துறை முனைப் பிரதேசத்தில் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர் என்றும் கெப்டன தஸநாயக்க தெரிவித்தார்

ஆயுதங்களை களையாவிட்டாலும் பரவாயில்லை பொதுமக்கள் வெளியேற அனுமதியுங்கள் – புலிகளுக்கு அரசு கோரிக்கை

people-_flee.jpgபுலிகள் ஆயுதங்களை களையாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை எமது படையினர் கவனித்துக்கொள்வார்கள்  அவர்கள் பலவந்தமாக தடுத்து வைத்துள்ள மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர இடமளிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

புலிகளிடம் சிக்கியுள்ள மக்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நாளாந்தம் அரசகட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தருகின்றனர். வடக்கில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள் சிறந்த முறையில் இடம்பெறுவது இதன் மூலம் புலனாகிறது.

ஜனவரி முதல் இதுவரை 45 ஆயிரத்து 519 பேர் விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளனர். நேற்றைய தினம் மட்டும் 1567 பேர் வந்துள்ளனர். அவர்கள் கூறும் கருத்துக்களைக் கேட்டால் அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் கஷ்டங்கள் அனைத்தும் அரசாங்கத்தினாலல்ல என்பது நன்கு தெளிவாகின்றது.

மக்கள் பெரும் எண்ணிக்கையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர தொடர்ந்தும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அனைவரையும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் அழைத்து வருவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆயுதங்களை கீழே வைக்குமாறு புலிகளை அரசு கேட்டுக்கொண்டது. அதேபோன்று உலக நாடுகளும் கேட்டுக்கொண்டன. எனினும் புலிகள் அதற்கு செவிமடுக்கவில்லை. இருப்பினும்; ஆயதங்களைக் களைந்தால் தீர்வுத்திட்டம் முன்வைப்பதில் கவனம் செலுத்தும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

அந்தமான் – நிகோபார் தீவுகளில் தடுத்து வைத்துள்ளோரை விடுவிக்க தூதரகம் முயற்சி

கடந்த இரு தினங்களில் மேலும் 15 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் மீன்பிடித் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் லால் தெரிவித்தார். இவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 51 இலங்கை மீனவர்களை விடுதலை செய்வது குறித்து ஆராய சென்னை பிரதி உயர் ஸ்தானிகராலய குழுவொன்று நேற்று அங்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் கூறினார். இது தொடர்பாக வினவியபோது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இதுவரை 121 இலங்கை மீனவர்கள் சென்னை விசாகப்பட்டிணம் மற்றும் அந்த மான், நிகோபார் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாகவும் கூறினார்.

தெவிநுவர பகுதியில் இருந்து இரு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பேருவளையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற ஐவர் நேற்று முன்தினம் இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர ஏற்கனவே கைது செய்யப்பட்ட 31 மீனவர்கள் விசாகப் பட்டிணத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளதோடு சென்னையில் 24 பேர் தடுத்து வைக் கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்ய இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளதோடு மேற்படி இலங்கை மீனவர்கள் விரைவில் இலங்கை திரும்ப உள்ளனர்.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சென்னை பிரதி உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகள் அத்தீவு உயரதிகாரிகளுடன் பேசி இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவசியமற்ற பதவி நியமனங்கள் உடன் நிறுத்தப்படவேணடும் -மகாணசபைகளுக்கு அரசு உத்தரவு

l-yaappa-abayawardana.jpg அவசியமற்ற வகையில் புதிய  நியமனங்கள் வழங்குவதை உடன் நிறுத்த வேண்டுமென அரசாங்கம் மாகாணசபைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் நியமனங்கள்  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அவசியமற்ற நியமனங்களை வழங்கி குறுகிய அரசியல் இலாபம் பெற சில அரசில்வாதிகள் முயல்வதால் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

ஒலிவாங்கியில் கூறப்படாதவற்றை ஊடகங்களில் வெளியிடத் தடை-சபாநாயகர் எச்சரிக்கை

parliament.jpgஉத்தியோக பூர்வமாக ஒலிவாங்கி முடுக்கிவிடப்படாத வேளையில் உறுப்பினர் ஒருவர் பேசிய விடயத்தையோ, பிரசுரிக்க வேண்டாம் என கூறப்பட்ட விடயத்தையோ பிரசுரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் ஊடக நிறுவனத்திற்காக வழங்கப்படும் பாராளுமன்ற அனுமதியும் ரத்துச் செய்யப்படும் என சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கபண்டார நேற்று அறிவித்தார்.

அத்துடன் ஆளும் தரப்பினரோ, எதிர்த்தரப்பினரோ பாராளுமன்றத்தை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபா நாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமை யில் கூடியது. வழமையான சபை நடவடிக்கைகளின் பின்னர் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ண, நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஐ.தே.க. குழுக் கூட்டத்தில் குளறுபடிகள் நடந்ததாக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டிருந்தன என்று கூறியதுடன், வேண்டுமென்றே தவறான தகவல்கள் வழங்கப்பட்ட தாகவும், நடக்காத ஒரு விடயம் நடந்துவிட்டதாக ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சபையில் தெரிவித்து ஊடகங் களூடாக பிரசாரம் செய்யப்பட்டது என்று குற்றம் சுமத்தினார்.

எதிர்த்தரப்பு பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பியதுடன் பாராளுமன்ற கட்டட தொகுதியில் ஐ.தே.க குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சில காரசாரமான விவாதங்களும் இடம்பெற்றன. எனினும் அவற்றை திரிவுபடுத்தி சபையில் நடந்த விடயத்தை எடிப் செய்யப்படாத இறுவெட்டுக்களை அனுப்பி ரூபவாஹினியூடாக ஒலிபரப்பினார்கள் என குற்றம் சாட்டினார்.

அமைச்சர் ஜகத் புஷ்ப குமார எம்.பியே பாராளுமன்றத்தில் தவறான செய்தியை பரப்பிவிட்டார் என லக்ஷ்மன் செனவிரட்ண எம்.பி குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜகத் புஷ்பகுமார நான் ஒருபோதும் எதிர்க் கட்சித் தலைவருக்கு அடித்து விட்டார்கள் என கூறவில்லை. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஐ.தே.க. எம்.பி ஒருவர் அவரது தொலைபேசியினூடாக எனக்கு தகவலைத் தந்தார்.

“எதிர்க் கட்சித் தலைவர் எந்நேரத்திலும் தாக்கப்படலாம். இங்கு நிலமை மோசமடைந்து கொண்டு வருகிறது” என்றார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்குரிய கடமையாக கருதி இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை சபாநாயகருக்கு அறிய த்தந்தேன் அவ்வளவுதான் என்றார்.

கட்சிக்குள் உட்பூசல்கள் இருக்கின்றன. அதனை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. ஏன் எமது கட்சிக்குள் இப்படி உட்பூசல்கள் இருப்பதாக ஊடகங்கள் வெளி யிடவில்லையா? ஏன் அரச ஊடகம் மட்டும்தானா இந்த விடயத்தை வெளிப்படுத்தின. ரணில் விக்கிரமசிங்கவின் மாமாவின் பத்திரிகை கூடத்தானே இதற்கு முக்கிய த்துவம் கொடுத்திருக்கிறது. என சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.“நடக்காத விடயம் ஒன்றை பாராளுமன்றத்தினுள் நடந்ததாகக் கூறி அதற்கு பிரசாரம் பெற்றுக்கொடுப்பது தான் தவறு என்கிறேன்” என எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

இவ்வாறு இரண்டு தரப்பினருமே செய்திருக்கிறார்கள்” என சபாநாயகர் தெரிவித்தார். ‘இல்லை’ ‘இல்லை’ என ஜோசப் மைக்கில் கூறியபோது “நானும் எதிர்க் கட்சி பிரதம கொரடாவாக இருந்திருக்கிறேன்” என சபாநாயகர் தெரிவித்ததுடன் ஐ.தே.க. எம்.பி தயாசிறி ஜயசேகர எழுந்து நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக பேசினார். அவருக்கு ஒலி வாங்கி வழங்கப்படவில்லை. அமைச்சர் ஜகத் புஷ்பகுமார ஒழுங்குப் பிரச்சினை எழுப்பியதால் அவருக்கே ஒலிவாங்கி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜகத் புஷ்ப குமாரவுக்கும், தயாசிறி ஜயசேக்கரவுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்றன. ஒலிவாங்கிகள் வழங்கப் பட்டிருக்கவில்லை.

சபாநாயகர் லொக்குபண்டார சான்றுப்படுத்தப்பட்ட இலங்கை முகாமைத்துவ கணக்காளர் நிறுவக சட்ட மூலத்தை சமர்ப்பித்து பேசுமாறு அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அழைப்பு விடுத்தார். ஒலிவாங்கி அமைச்சர் பந்துலவுக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும் அவருக்கு பேசமுடியாதவாறு சபையில் வாக்குவாதங்கள் நடைபெற்றன.

இந்த சந்தர்ப்பத்திலேயே சபாநாயகர் மேற்படி அறிவித்தலை விடுத்தார். இதனைத் தொடர்ந்து சட்டமூலம் தொடர்பான விவாதம் ஆரம்பமானது.

மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலாளருடனும் படைத் தளபதிகளுடனும் சந்திப்பு!

gotabhaya_fonseka_met.png இலங்கை வந்துள்ள மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சர் அமீன் பைசல் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா,  மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் எட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோரை  சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளருடனான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சிலும், இராணுவத் தளபதியுடனான சந்திப்பு இராணுவத் தலைமையகத்திலும் கடற்படைத் தளபதியுடனான சந்திப்பு கடற்படைத் தலைமையகத்திலும் நடைபெற்றது.
 
இலங்கை – மாலைதீவின் உறவு தொடர்பாக பாதுகாப்புச் செயலாளருடனான சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டது. வன்னியில் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வரும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் நாளுக்கு நாள் படிப்படியாக அடைந்து வரும் வெற்றிகள் தொடர்பாக இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா மாலைதீவு பாதுகாப்பு அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களின் நிலைமைகள், அவர்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் என்பன தொடர்பாகவும் இராணுவத் தளபதி மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவினரிடம் விளக்கமளித்துள்ளார். இதேவேளை, மாலைதீவு இராணுவ வீரர்களுக்கு இலங்கை இராணுவத்துடன் இணைந்ததாக சிறப்பாக பயிற்சிகள் வழங்கப்படுவதற்கும், அதற்கான சந்தர்ப்பத்தை இராணுவத் தளபதி வழங்கி வருவதற்காகவும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் அமீன் பைசல் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதியிடமிருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதவியா வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் நோயாளர் குறைகளை கேட்டறிந்தார்

padaviya-hospital.jpgவன்னிப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கும் காயமடைந்த பொதுமக்களை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விஷேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று பதவியா மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்று நேரில் பார்வையிட்டார்.

மோதல்கள் காரணமாக வன்னிப் பகுதியிலிருந்து மேற்படி காயமடைந்த பொதுமக்கள் கடல் மார்க்கமாக புல் மோட்டைப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பதவியா நகருக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாக சுமார் 70 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வவுனியா சைவப்பிரகாசர் மகா வித்தியாலயத்திலுள்ள நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடிய வட மாகாண விசேட செயலணியின் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்மக்களது குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் அம்மக்க ளின் கோரிக்கைகளை ஆராயும் முகமாக தனது பிரதி நிதிகளை அங்கு நியமித்துவிட்டு உடினடியாக பதவியா நகருக்குச் சென்றார்.

பதவியாவில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களின் உறவினர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையத்திற்கு முதலில் விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களது பல்வேறு பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன் அம்மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு அவர்கள் மத்தியில் இருந்த கிறிஸ்தவ மத குருமார்களுடன் தற்போதைய வன்னி நிலைமை தொடர்பாக ஆராய்ந்ததுடன் இம்மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதாகவும் உறுதியளித்தார்.

இதன் பின்னர் பதவியா மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களைத் தனித்தனியாகச் சந்தித்து ஆறுதல் கூறினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திடீர் வருகையால் பெரிதும் ஆறுதலடைந்த நோயாளர்கள் தங்களது குறைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.

மன்னாரில் இன்று நடமாடும் சேவை

mannar.jpgமன்னார் பொலிஸ் நிலையத்தில் இயங்கும் பொலிஸ் பொதுமக்கள் தொடர்பு பிரிவும் மன்னார் சர்வோதயம் ஆகியன இணைந்து இன்று வியாழக்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் நடமாடும் சேவையினை மேற்கொள்ளவுள்ளன..

இந்நடமாடும் சேவையின் போது தேசிய அடையாள அட்டைகளை பெற்று கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இன்று காலை 9 மணிமுதல் மாலை 05 மணிவரை இடம் பெறவுள்ளது இந்த நடமாடும் சேவையில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுனில் ஜெயமஹா பொலிஸ் அத்தியட்சர்கள் வசந்த விக்ரமசிங்க,உதவி பொலிஸ் அத்தியட்சகர் T.D.L.R ஹசன் பொலிஸ் பொதுமக்கள் தொடர்பதிகாரி கருணா திலக்க மற்றும் திணைக்கள்கங்களின் உயரதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். 

கிழக்கில் முதற்தடவையாக எட்டு இலட்சம் மெட்ரிக் தொன் நெல் விளைச்சல் -கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்

bandula_gunawardenasss.jpgகிழக்கு மாகாணத்தில் மேலதிகமாக ஒரு இலட்சத்து 32 ஆயிரம் ஹெக்டரில் இம்முறை நெல் பயிரிடப்பட்டதன் பயனாக 8 இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்படடுள்ளதாக வர்த்தக நுகர்வோர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற இலங்கை நுகர்வோர் கூட்டுறவு முறை தொடர்பான சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் அதிகளவு நெல் அறுவடை செய்யப்பட்டள்ளது. கடந்த வருடத்தை விட 2 மடங்கு கூடுதலாக இம்முறை கிழக்கில் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

ஐ.தே.க. தலைமைத்துவம் தொடர்பாக இழுபறி ரணிலுடன் சிரேஷ்ட உறுப்பினர்கள் சந்திப்பு

ranil-wickramasinghe.jpgகட்சித் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானமெடுக்கும் பொருட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இரண்டாவது தடவையாகவும் கூடுவதாக இருந்த ஐக்கியதேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இறுதிநேரத்தில் இரத்தானதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

எனினும் நேற்று முன்தினம் மாலை ஐ.தே.க.தலைமையகமான சிறிகொத்தாவில் ஐ.தே.க.தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலின்றி கூட்டமொன்று நடைபெற்றுள்ளதுடன், அதன் பின்னர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவை தனிப்பட்ட இடமொன்றில் சந்தித்து பேசியுமிருக்கின்றனர்.

முன்னதாக பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று முன்தினம்  காலை 9 மணிதொடக்கம் சுமார் 2 மணித்தியாலங்களாக ஐ.தே.க.வின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றிருந்தது. கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சித்தலைமைத்துவத்திற்கு எதிராக ஒரு தரப்பால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்ததுடன், கட்சித் தலைமைத்துவ மாற்றம் தொடர்பாக காரசாரமான வாத பிரதிவாதங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்தநிலையிலேயே அந்தக் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பாராளுமன்றக் குழுக் கூட்டத்தை கூட்ட முடிவாகியிருந்தது.

நேற்று  முன்தினம் காலை நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் அவ்வாறானதொரு யோசனை செய்யப்பட்ட போதிலும், பின்னர் அந்தக் கூட்டத்தை நடத்துவதில்லையென தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டதாக ஐ.தே.க. வின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

இருப்பினும் நேற்று முன்தினம்  காலை கூட்டமொன்று நடைபெற்றதை உறுதிப்படுத்திய திஸ்ஸ அத்தநாயக்க, அதில் மேல்மாகாண சபைத் தேர்தல் குறித்தே பேசப்பட்டதுடன், நேற்று முன்தினம்  காலை பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பேசப்பட்ட எந்தவொரு விடயம் பற்றியும் பேசவில்லையென்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் ஐ.தே.க. தலைவரான ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவில்லை. கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா, உப தலைவர் ருக்மன் சேனாநாயக்க,பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்

அத்துடன், இந்தக் கூட்டத்தில் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லையென்றும் கூறப்பட்டது.

இதேநேரம், இந்தக் கூட்டத்தின் நிறைவில், காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோன் அமரதுங்க, திஸ்ஸ அத்தநாயக்க போன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரத்தியேகமான இடமொன்றில் சந்தித்து பேசியிருக்கின்றனர்.

இதை எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பில் கலந்து கொண்ட சிரேஷ்ட உறுப்பினரில் ஒருவர் உறுதிப்படுத்தியதுடன், சிறிகொத்தாவில் நடைபெற்ற கூட்டம் பற்றி கட்சித் தலைவருக்கு விளக்கமளிக்கும் முகமாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

எனினும், சிறிகொத்தவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.தே.க. உப தலைவர் ருக்மன் சேனாநாயக்க, அதன் பின்னரான கட்சித்தலைவருடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லையென்றும் அந்த சிரேஷ்ட உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம், ஐ.தே.க.வின் செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை 4 மணிக்கு கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெறவிருக்கும் நிலையில், அதில் கட்சித் தலைமைத்துவம் குறித்து மீண்டும் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் ஏற்படக்கூடுமென்பது மட்டுமன்றி, ஏதேனும் தீர்மானங்களும் எட்டப்படக்கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.