ஐ.தே.க. தலைமைத்துவம் தொடர்பாக இழுபறி ரணிலுடன் சிரேஷ்ட உறுப்பினர்கள் சந்திப்பு

ranil-wickramasinghe.jpgகட்சித் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானமெடுக்கும் பொருட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இரண்டாவது தடவையாகவும் கூடுவதாக இருந்த ஐக்கியதேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இறுதிநேரத்தில் இரத்தானதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

எனினும் நேற்று முன்தினம் மாலை ஐ.தே.க.தலைமையகமான சிறிகொத்தாவில் ஐ.தே.க.தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலின்றி கூட்டமொன்று நடைபெற்றுள்ளதுடன், அதன் பின்னர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவை தனிப்பட்ட இடமொன்றில் சந்தித்து பேசியுமிருக்கின்றனர்.

முன்னதாக பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று முன்தினம்  காலை 9 மணிதொடக்கம் சுமார் 2 மணித்தியாலங்களாக ஐ.தே.க.வின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றிருந்தது. கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சித்தலைமைத்துவத்திற்கு எதிராக ஒரு தரப்பால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்ததுடன், கட்சித் தலைமைத்துவ மாற்றம் தொடர்பாக காரசாரமான வாத பிரதிவாதங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்தநிலையிலேயே அந்தக் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பாராளுமன்றக் குழுக் கூட்டத்தை கூட்ட முடிவாகியிருந்தது.

நேற்று  முன்தினம் காலை நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் அவ்வாறானதொரு யோசனை செய்யப்பட்ட போதிலும், பின்னர் அந்தக் கூட்டத்தை நடத்துவதில்லையென தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டதாக ஐ.தே.க. வின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

இருப்பினும் நேற்று முன்தினம்  காலை கூட்டமொன்று நடைபெற்றதை உறுதிப்படுத்திய திஸ்ஸ அத்தநாயக்க, அதில் மேல்மாகாண சபைத் தேர்தல் குறித்தே பேசப்பட்டதுடன், நேற்று முன்தினம்  காலை பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பேசப்பட்ட எந்தவொரு விடயம் பற்றியும் பேசவில்லையென்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் ஐ.தே.க. தலைவரான ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவில்லை. கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா, உப தலைவர் ருக்மன் சேனாநாயக்க,பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்

அத்துடன், இந்தக் கூட்டத்தில் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லையென்றும் கூறப்பட்டது.

இதேநேரம், இந்தக் கூட்டத்தின் நிறைவில், காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோன் அமரதுங்க, திஸ்ஸ அத்தநாயக்க போன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரத்தியேகமான இடமொன்றில் சந்தித்து பேசியிருக்கின்றனர்.

இதை எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பில் கலந்து கொண்ட சிரேஷ்ட உறுப்பினரில் ஒருவர் உறுதிப்படுத்தியதுடன், சிறிகொத்தாவில் நடைபெற்ற கூட்டம் பற்றி கட்சித் தலைவருக்கு விளக்கமளிக்கும் முகமாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

எனினும், சிறிகொத்தவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.தே.க. உப தலைவர் ருக்மன் சேனாநாயக்க, அதன் பின்னரான கட்சித்தலைவருடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லையென்றும் அந்த சிரேஷ்ட உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம், ஐ.தே.க.வின் செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை 4 மணிக்கு கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெறவிருக்கும் நிலையில், அதில் கட்சித் தலைமைத்துவம் குறித்து மீண்டும் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் ஏற்படக்கூடுமென்பது மட்டுமன்றி, ஏதேனும் தீர்மானங்களும் எட்டப்படக்கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *