எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகப் பணிகளை திறம்படச் செய்த லெப்.கேணல் சிறீ வீரச்சாவு

sri_.jpgதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடக மற்றும் தகவல் ஆவணப்படுத்தல் பணிகளையும் திறம்படச் செய்து வந்த லெப்.கேணல் சிறீ அல்லது குமரச்செல்வன் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்துள்ளார்.  கடந்த 20 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டப் பணியை ஆற்றிவந்த லெப். கேணல் சிறீ, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தகவல் மொழிபெயர்ப்பு ஆவணப்பகுதியில் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தார் என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.  .

இதன் ஊடாக ஊடகப் பணியினை திறம்பட செய்து வந்த இவர், அனைத்துலக உடகவியலாளர்களின் அறிமுகங்களையும் தொடர்புகளையும் ஏற்படுத்தினார். அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் அறிவியல் மேம்பாட்டுக்கான தகவல்களையும் ஆவணங்களையும் சேகரித்து விடுதலைப் புலிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ஆவணப்படுத்தி வந்துள்ளார். யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான இவர், தனது இருபதாண்டு காலத்தில் தாயக விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கான பக்கங்களில் தனது பணியை தனித்தன்மையுடன் சிறப்பாக  செய்து வந்தார். சிவானந்தராஜா சஞ்சீவன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஆவார் என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

தகவல் நுட்பத்தை உரிய முறையில் பயன்படுத்தினால் வீண்செலவை தவிர்த்து, கூடிய பயனைபெற முடியும் – ஜனாதிபதி

upfa-website.jpgதேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவது உறுதி என்றாலும் இதற்காக அதிக பணத்தை செலவு செய்து வீண்விரயம் செய்யமாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தேர்தல் பிரசாரங்களுக்காக பாரிய பதாகைகள் சுவரொட்டிகள் என்பவற்றிற்கான நிதியை செலவு செய்வதைத் தவிர்த்து இணையத்தளம் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத்தை உரிய முறையில் பயன்படுத் துவதன் மூலம் கூட்டங்களை கூட்டி ஏற்படும் பாரிய அனர்த்தங்கள், ஆபத்துக்களி லிருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் www.Sandanaya.lk  என்ற தேர்தல் இணையத்தளம் ஆரம்பித்து வைக்கும் பிரதான வைபவம் நேற்றுக்காலை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அலரி மாளிகையிலிருந்து இணையத்தளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி செய்மதி ஊடாக பி.எம்.ஐ.சி. எச்சில் பிரதான நிகழ்வில் கலந்து கொண்டோர் மத்தியில் உரையாற்றினார்.

ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்:-

இந்த வருடம் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கிலமொழி விருத்திக்கான ஆண்டு என நான் அறிவித்திருந்தேன். அதன் ஒரு கட்டமாகவே இந்த இணையத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உலகிலுள்ள எத்தனையோ நாடுகளும் அதன் தலைவர்களும் தமது சகல தேர்தல் பிரசாரங்களையும் தகவல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தியே முன்னெடுக்கின்றனர். இதன் ஒரு அடிப்படையாகவே எமது கட்சியின் பிரசார நடவடிக்கைகளையும் இணை யத்தளம் ஊடாக முன்னெடுக்க தீர்மானித்தோம்.

வடக்கில் பாதுகாப்புப் படையினர் முன்னெ டுத்துவரும் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ளோம். புலிகளுக்கு எதிராக படையினர் முன்னேறிவரும் அதேசமயம் அப்பாவி தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றனர். புலிகள் அத்துடன் நின்று விடாமல் ஏனைய பகுதிகளிலுள்ள மக்களை இலக்கு வைத்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இவ்வாறான ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளமுடியும். எமது பாதுகாப்பு அமைச்சும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதன் மூலமே தமது நடவடிக்கையில் வெற்றிகளைக் கண்டுள்ளனர்.

இலங்கை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கான உலகத்தின் மிகவும் முன்னணி ஊடகமாக எமது பாதுகாப்பு அமைச்சு இணையத்தளம் விளங்குகிறது. நாளொன்றுக்கு சுமார் ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் மூலம் தகவல்களை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மார்ச் 25இல் விஷேட பாராளுமன்ற அமர்வு

parliament.jpgநிதி தொடர்பான 5 சட்டமூலங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி ஒருநாள் விஷேட பாராளுமன்றக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம்.லொக்குபண்டார தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய நிதியாண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாவதால் அதற்கு முன்னதாக வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிதிச் சட்டமூலங்களைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டி இருப்பதாக இதன்போது அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டி இந்த 5 நிதிச் சட்டமூலங்களையும் ஒரே தினத்தில் விவாதத்திற்கு எடுத்து நிறைவேற்றுவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதேநேரம், அன்றைய தினம் இந்த நிதிச் சட்டங்கள் மீதான விவாதம் பிற்பகல் ஒரு மணியுடன் முடிவடையவுள்ளதுடன், அதன் பின்னர் மாலை 4 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக ஜே.வி.பி.யின் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது

வாக்குச்சாவடியில் வாக்கெண்ணுதல் ரத்து: தேர்தல் ஆணையரின் முடிவுக்கு கட்சித் தலைவர்கள் வரவேற்பு

election_ballots.jpgமேல் மாகாண சபைத் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளை வாக்குச்சாவடிகளிலேயே எண்ணுவதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தைக் கைவிடுவதற்கு தேர்தல் ஆணையாளர் எடுத்திருக்கும் முடிவை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கா நேற்று சந்திப்பொன்றை நடாத்தினார்.

இச்சந்திப்பின்போது மேல் மாகாண சபைத் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளை வாக்குசாவடிகளில் எண்ணுவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பாதுகாப்பு மற்றும் காலநிலையை கருத்திற்கொண்டுதான் இத்தீர்மானத்தை கைவிடுவதற்கு முடிவு செய்ததாக தேர்தல் ஆணையாளர் கூறினார். ஆகவே வழமைபோன்று வாக்குகளை எண்ணும் நிலையங்களிலேயே மேல் மாகாண சபைத் தேர்தலிலும் அளிக்கப்படும் வாக்குகள் எண்ணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து இச்சந்திப்பில் கலந்துகொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இத்திட்டத்தைப் பெரிதும் வரவேற்றனர். இராஜகிரியிலுள்ள தேர்தல் செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சந்திப்பில் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பெப்ரல் மற்றும் சி.எம். ஈ. வி. தேர்தல் கண்காணிப்பு நிலையங்களின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

களனி பல்கலைக்கழக மாணவர்களின் மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு

kelaniya-sri-lanka.jpgகளனி பல்கலைக்கழகத்தின் மாணவன் ஒருவரும் மாணவி ஒருவரும் சில பொலிஸாருக்கு எதிராக தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.  முதலாவது மனுதாரரான இனோகா நடிசனி என்ற மாணவி தன்னை ஆண் பொலிஸ் அதிகாரியொருவர் கழுத்தில் பிடித்து தள்ளி வாகனத்தில் ஏற்றியதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பேலியகொட பொலிஸ் அத்தியட்சர் கே.டீ. சோமபால, கிரிபத்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய, இன்ஸ்பெக்டர் சந்தன கமகே, பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பெப்ரவரி 3 ஆம் திகதி களனி பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலையடுத்து அங்கு வந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்தனர். மாணவர்களின் கல்வீச்சின் போது சில பொலிஸார் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் இதனையடுத்து பொலிஸார் தன்னிச்சையாகச் செயற்பட்டு ஏழு மாணவர்களையும் ஒன்பது மாணவிகளையும் கைது செய்துள்ளனர் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பொலிஸார் இங்கு நடந்து கொண்ட முறையினால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.  நீதியரசர்கள் என்.ஜி. அமரதுங்க, ஜெகத் பாலபட்ட பெந்தி மற்றும் சந்திரா ஏக்க நாயக்க ஆகியோர் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது. ஜூன் 26 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

புல்மோட்டையில் இந்திய மருத்துவர்களின் முகாமுக்கு கூடுதலான நோயாளிகள் வருகை

pullmottaiindiadoctors.jpgபுது மாத்தளன் பகுதியிலிருந்து கப்பல் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் 460 பேர் புல்மோட்டைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதேவேளை புல்மோட்டை கனிம வள தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ முகாமில் இந்திய மருத்துவ குழுவினர் மேற்கொண்டுவரும் மருத்துவ சேவையினை கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம பார்வையிட்டுள்ளார்.

மருத்துவ முகாமில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டோரில் ஒரு தொகுதினர் பதவியா மருத்துவ மனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் 80 பேர் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008, 2009: இரண்டு ஆண்டுகளில் ரூ. 1850 மில்லியன் அரசால் ஒதுக்கீடு

sirisena.jpgஅரசாங் கத்தின் விவசாயக் கருத்திட்டமான பயிர் வளர்ப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ செயற்றிட்டத்துக்கு 2008, 2009 ஆகிய இரண்டு வருடங்களுக்கும் அரசாங்கம் 1850 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதென விவசாய அபிவிருத்தி கமத்தொழில் சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஜே. வி. பி. எம்.பி. திலகரத்ன விதானாச்சி எழுப்பி கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் சிறிசேன, உள்ளூர் விவசாயத் துறையை ஊக்குவிக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

திலகரத்ன விதானாச்சி எம்.பி. தமது கேள்வியின் போது பயிர் வளர்ப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம் விவசாய செயற்றிட்டத்தின் கீழ் காலி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை ஊக்குவிப்புக்காக 2008, 2009ம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு பற்றிய விபரம் கோரினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மைத்திரிபால சிரிசேன, பயிர்வளர்ப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம் செயற்றிட்டத்துக்கு அரசாங்கம் 2008 ஆம் ஆண்டில் 300 மில்லியன் ரூபா ரூபாவையும் இயற்கை உர உற்பத்திக்காக 500 மில்லியன் ரூபாவையும் செலவிட்டது.

2009 ஆம் ஆண்டுக்கென மேற்படி செயற்றிட்டத்துக்கு அரசு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன் இயற்கை உர உற்பத்திக்கென 750 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளது.

இந்நிதி கமநல சேவைகள் திணைக்களம் உட்பட அமைச்சின் கீழ் இயங்கும் பல்வேறு விவசாய நிறுவனங்களுக்கூடாக அந்தந்த பகுதி பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சகல திட்டங்களும் பிரதேச செயலகங்களுக்கூடாக நடைமுறைப் படுத்தப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்

யாழ்ப்பாணத்திற்கு ஏ-9 திறந்ததின் பின்பு பொருட்களை கொண்டு செல்லும் செலவுத் தொகை வெகுவாக குறைவு

parliament.jpgகப்பல் மற்றும் விமானம் மூலம் அத்தியாவசியப் பொருட்களை யாழ். குடா நாட்டுக்கு கொண்டுசெல்லும் போது மெற்றிக் தொன் ஒன்றுக்கு சுமார் 75 அமெரிக்க டொலர்கள் செலவாகியது. ஏ-9 வீதி திறந்ததன் பின்னர் இத் தொகை 23 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது. காங்கேசன்துறை வரை புகையிரத போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதும் இத்தொகை யை மேலும் குறைக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஐ. தே. க. எம். பி. ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-

ரயில்வே துறையை அபிவிருத்தி செய்து ரயில் சேவையை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இத் திட்டத்தின் கீழ் 92 ரயில் என்ஜின்கள் திருத்தப்பட்டு தற்போது சேவைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ரயில் உதிரிப் பாகங்களைப் பெற்றுக்கொள்வதற்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. இதன் மூலம் பழைய என்ஜின்களை சீர்செய்து சேவையில் ஈடுபடுத்துவதே தமது நோக்கமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ரயில்களில் பொருட்களை ஏற்றி இறக்குதலின் மூலம் நான்கு வீத வருமானம் கிடைத்து வருகிறது. இதனை மேலும் மேம்படுத்தவும் வடக்கிற்கான சேவையை மேற்கொள்ளவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க எம்.பி. தமது கேள்வியின் போது:- சிறந்த ரயில் சேவையை நடத்துவதற்கு தேவைப்படுகின்ற ரயில்களின் எண்ணிக்கையையும் இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட ரயில் மற்றும் “பவர் செட்” களின் எண்ணிக்கையையும் கோரினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் 44 பவர் செட்டுகள் உட்பட சில என்ஜின்களை அண்மைக் காலத்தில் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஐ.தே.க.வின் தலைவராக கரு சிரேஷ்ட தலைவராகிறார்?

unp-members.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை தற்போது பிரதித் தலைவராக இருக்கும் கருஜயசூரியவுக்கு வழங்கி, தலைமைப் பதவியிலிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியின் சிரேஷ்ட தலைவர் என்ற பதவியை வழங்குவதற்கான யோசனையொன்று எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது. ஐ.தே.க.வின் தலைமைத்துவம் தொடர்பில் கட்சிக்குள் நெருக்கடிகள் எழுந்திருக்கும் நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் நெருக்கடிகள் குறித்து ஆராய கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. கட்சியினுள் தோன்றியிருக்கும் நெருக்கடிகளை தீர்க்கும் வகையிலான யாப்பு மாற்றம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவே இந்தக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் புதிதாக “சிரேஷ்ட தலைவர்’ என்ற பதவியை உருவாக்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலைமையிலேயே இந்தக்குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை குறித்து ஆராய எதிர்வரும் 23 ஆம் திகதி கூடவிருக்கும் ஐ.தே.க.வின் செயற்குழுக் கூட்டத்தில் இவ்வாறானதொரு யோசனையொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

எனினும், இது குறித்து காமினி ஜயவிக்ரம பெரேரா எம்.பி.யிடம் கேட்ட போது தற்போதைய நிலைமையில் கட்சியின் உள்ளார்ந்த விடயங்கள் பற்றி எதுவும் கூற முடியாதெனத் தெரிவித்ததுடன் கட்சியின் தற்போதைய நடைமுறையில் சில திருத்தங்களுடனான அறிக்கை எதிர்வரும் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுமென்றும் கூறினார்.  இதேநேரம், சிரேஷ்ட தலைவர் என்ற பதவியினது பெயர் சிலவேளைகளில் பிரதான தலைவர் என்றும் பெயர் மாற்றம் செய்யப்படலாமென்றும் அதற்கு போதியளவு அதிகாரம் இருக்குமென்பது சந்தேகமே என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

2169 சிவிலியன்கள் இராணுவத்திடம் தஞ்சம்

lankadisplaced.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 2169 பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

1983 பொதுமக்கள் புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள இராணுவத்தினரிடமும், 131 பொதுமக்கள் முனை பகுதியிலுள்ள கடற்படையி னரிடமும் தஞ்சமடைந்துள் ளனர். புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினரிடம் தஞ்சமடைந்த 1983 பொதுமக்களில் 524 சிறுமிகள், 393 சிறுவர்கள், 534 ஆண்கள் மற்றும் 532 பெண்களும் அடங்குவர். புதுமாத்தளனிலிருந்து படகுகள் மூலம் தப்பி சுண்டிக்குளம் கடற்பரப்பின் ஊடாக முனை பிரதேசத்திற்கு 131 பொதுமக்கள் வருகைதந்துள்ளனர்.

அவர்களில் 66 சிறார்களும், 37 ஆண்களும், 28 பெண்களும் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்