எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மொரவெவவுக்குள் ஊடுருவ முயன்ற புலிகள் மீது விமானப்படை தாக்குதல்

மொரவெவ, வேப்பங்குளம் பிரதேசத்தில் ஊடுருவ முயன்ற புலிகளின் குழுவொன்றுக்கும் விமானப் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்று அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது விமானப் படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களில் படுகாயமடைந்த புலிகள் காட்டுப்பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் விமானப் படைவீரர் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். திருமலை, மொரவெவ பிரதேசத்திலுள்ள விமானப் படையின் இணை முகாமிற்குள் ஊடுருவும் நோக்குடனேயே புலிகள் வந்துள்னர்.

அந்தப் பிரதேசத்தில் வீதி ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த விமானப் படையினர், குழுவொன்று வருவதை அவதானித்துள்ளனர். பொது மக்கள் போன்று வந்த அவர்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானப் படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து விமானப் படையினர் நடத்திய பதில் தாக்குதல்களின் பின்னர் அங்கிருந்து காட்டு வழியாக தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து பொலிஸாரும், விமானப் படையினரும் இணைந்து காட்டுப் பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது இரத்தக் கறைகளையும் முதலுதவி செய்தமைக்கான தடயங்களையும் கண்டுள்ளனர்.

காயமடைந்த நிலையில் புலிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று விமானப் படைப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சீனாவின் பக்கம் இலங்கையின் பார்வை

sri-lanka-air-lanka.jpgஉள்நாட்டு யுத்தத்தாலும் உலக பொருளாதார நெருக்கடியாலும் மோசமாக பின்னடைவு கண்டிருக்கும் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்த சீனாவின் பக்கம் எதிர்பார்ப்புடன் பார்வையை செலுத்தியுள்ளது இலங்கை. 

சீன தேசிய சுற்றுலா நிர்வாகத்துறைப் பணிப்பாளர் சாவோ கிவெய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உல்லாசப் பயணத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட சீனாவுக்கு சென்றுள்ளார்.

இலங்கைக்கு உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் பிரதான சந்தையாக சீனா விளங்கும் என்பது கொழும்பின் எதிர்பார்ப்பாகும்.

“எமது உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா முக்கியமானதாகும். குறிப்பாக நிதி நெருக்கடியால் ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது என்று சீனத் தினசரிக்கு அமைச்சர் மொரகொட கூறியுள்ளார்.

இலங்கையின் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள உலக சுற்றுப்பயணத்தின் முதலாவது இடமாக சீனாவுக்கு அமைச்சர் சென்றுள்ளார். சீனாவின் நாணயம் வலுவான பெறுமதியுடன் இருப்பதாகவும் வெளிநாட்டு சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்குரிய பாரிய சந்தை வாய்ப்பை அது கொண்டிருப்பதாகவும் மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.

பாதுகாப்பு பிரச்சினையால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது வீழ்ச்சியடைந்துள்ளது.

2006 ஐ விட 2008 இல் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கையில் வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பை எப்போதுமே நாம் உறுதிப்படுத்தி வருகிறோம். இப்போது நிலைமை முன்னேற்றம் கண்டுள்ளது. வடக்கு, கிழக்கிலும் நிலைமை அதிகளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று அமைச்சர் மொரகொட கூறியுள்ளார்.

பெய்ஜிங்கிலிருந்து கொழும்புக்கு மூன்று நேரடி விமான சேவைகள் இடம்பெறுகின்றன. சீனாவின் ஏனைய நகரங்களிலிருந்து அதிகளவு விமான சேவைகளை நடத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் மொரகொட கூறியுள்ளார்.

30 ஆயிரம் சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிக்க திட்டம்

இவ்வருட முடிவுக்குள் நாடளாவிய ரீதியில் 30,000 சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிக்க தொழிலமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் பிரிவுகளை இலக்காகக் கொண்டு இச் செயற் திட்டத்தை நடைமுறை ப்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கிராமியப் பிரதேசங்களில் நிலவும் தொழில் வாய்ப்பின்மையை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; மேற்படி சுய தொழில் முயற்சிகளில் குழுக்களாக இணைந்து செயற்பட விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புடனான அமைச்சு ஏற்படுத்தித் தருமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சுயதொழில் முயற்சிகளுக்குக் கடன் வழங்கும் திட்டமொன்றை தொழிலமைச்சும் மக்கள் வங்கியும் இணைந்து செயற்படுத்தி வருகின்றன. இதன் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணாஜீவ, அமைச்சின் செயலாளர் மஹிந்த மடிஹஹேவா உட்பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

காத்தான்குடி முகைதின் பள்ளிவாயல் பிரதேசம் புனித பூமி.

kattankudy.jpgமுதன் முறையாக கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளிவாயல் பிரதேசத்தைப் புனித பூமியாக, நகர அபிவிருத்தி அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.

நகர அபிவிருத்தி அமைச்சு இதற்கென பலகோடி ரூபாவை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புனித பிரதேச திட்டத்தின் ஒருகட்டமாக முகைதீன் மெத்தை பெரிய ஜும்மா பள்ளிவாயலின் நீர்த்தடாகம் நவீன வசதிகளைக்கொண்ட மலசலகூடத்தொகுதி என்பனவற்றை கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா திறந்து வைத்தார். இத்திட்டத்திற்கென 45 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளர் மர்சூக் அகமட் லெப்பை தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அமைச்சு 25 லட்சம் ரூபாவையும் பள்ளிவாயல் நிர்வாகம் 20 லட்சம் ரூபாவையும் இதற்கென ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தினால் சுமார் 2000 குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன.

“மூவின மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவை புரிபவர் திருமலைப் பிரதேசசெயலாளர் சசிதேவி ஜலதீபன் ‘

மூன்று இனங்களும் வாழும் திருகோணமலையில் அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய விதத்தில் சேவையாற்றுவது அரச அலுவலகங்களைப் பொறுத்தவரையில் மிகவும் கஷ்டமான பணியாகும். திருகோணமலைப்பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராகப் பணிபுரிந்துவரும் திருமதி சசிதேவி ஜலதீபன் , இப்பொறுப்பை அர்ப்பணிப்புடன், இதய சுத்தியுடன் நிறைவேற்றி அனைத்து மக்களின் இதயங்களையும் வென்றுள்ளார்.

இவ்வாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் ஆர். டி. சில்வா கடந்த சனிக்கிழமை காலை திருகோணமலைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்வில் பங்குபற்றிப் பேசும்போது தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பதினொரு பிரதேச செயலகங்களுக்கு இடையே நடத்தப்பட்ட நிர்வாகத்திறன் போட்டியில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் மாவட்டத்திலேயே முதலாவது இடத்தை சுவீகரித்தது. அதனை ஒட்டியே இப் பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலர் பிரிவினுள் 42 கிராம சேவையாளர்கள் பணியாற்றுகின்றனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம், 2006 ஆம் ஆண்டில் உள்நாட்டு அமைச்சு நடத்திய மாவட்ட மட்டப் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்றது. 2007 ஆம் ஆண்டுக்கான போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

திருமலை பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபனுக்குத் திருகோணமலை அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் ஆர்.டி.சில்வா, முதலில் பதக்கம் அணிவித்துக் கௌரவித்தார்.

அதனையடுத்து, திருகோணமலைப் பிரதேச செயலக அலுவலர்கள், வெளிக்களப் பணியாளர்கள் அனைவரும் அதிதிகளால் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபனின் சிறப்பான நிர்வாகத்திறன், பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றல் இவை காரணமாகவே , திருகோணமலைப் பிரதேச செயலகம், மாவட்டத்திலேயே முதலாம் இடத்தைப் பெற முடிந்தது. அவரின் பணி தொடரவேண்டும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபன் பேசும்போது, திருமலைப் பிரதேச செயலகம் முதலிடம் பெற்றது. செயலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பே காரணமாகும் என்று கூறினார்.

வன்னியிலிருந்து அடுத்த சில தினங்களில் மேலும் பலர் வவுனியாவுக்கு வருவர் -அமைச்சர் ரிசாட் கூறுகிறார்

_mullai_1.jpg
வன்னியிலிருந்து அடுத்த சில தினங்களில் மேலும் பெருமளவு பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருவார்களென எதிர்பார்ப்பதாகவும் இடைத்தங்கல் முகாம்களில் வசதிகள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

கடந்த இரு நாட்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளார்கள். இவர்களை சனிக்கிழமை சந்தித்தபோது அவர்கள் நீண்டதூரம் நடந்து வந்து இராணுவத்திடம் சரணடைந்துள்ளார்கள். பலர் தாடியுடன் நீண்ட நாட்கள் குளிக்காதவர்கள் போல் காணப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

இடைத்தங்கல் முகாம்களின் தற்போதைய நிலை குறித்து ஆராயும் இந்தக் கூட்டத்தில் குடிநீர், சுகாதாரம், உணவு விநியோகம், மின்சாரம் தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட உயர் அதிகாரிகள், கிராமசேவையாளர்கள், முகாம் பொறுப்பதிகாரிகள் , மாவட்ட அரச அதிபர் , படையினர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள சில பிரச்சினைகள் குறித்து இங்கு முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் காணப்பட்டது. குறிப்பாக நீர் வழங்கல், நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் சேவைகள் திருப்திகரமானதாக இருக்கவில்லையென முகாம் பொறுப்பதிகாரிகள் அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். வவுனியாவிற்குள் சுமார் 40 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் வந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு தயாசிறி எம்.பி.யிடம் விசாரணை

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று திங்கட்கிழமை கொழும்பு குற்றப்பிரிவினால் சுமார் ஒருமணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

அண்மையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளரான தம்மிக கங்கனாத் திசாநாயக்க கடத்தப்பட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவதினத்தின்போது பிற்பகல் 4 மணியளவில் பொதுத் தொலைபேசிக் கூண்டிலிருந்து கடத்தல்குழு தம்மிக திசாநாயக்காவுடன் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும் அதனையடுத்து 10நிமிடங்கள் கழித்து அதே இலக்கத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறிஜயசேகரவுக்கும் ஒரு அழைப்பு கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தே அவரிடம் குற்றத் தடுப்புப்பிரிவினர் விசாரணை நடத்தி வாக்கு மூலமொன்றைப் பெற்றுக் கொண்டனர்.

வடக்கின் நண்பன் நிதியத்துக்கு 10 நிமிடங்களில் 1.4 மில்லியன் ரூபா வசூல் பேதங்களை மறந்து அனைவரும் உதவுமாறு அமைச்சர் டளஸ் கோரிக்கை

dalas_alahapperuma.jpg
யாழ்தேவி ரயில் சேவையை மீண்டும் நடத்துவதற்காக வடக்கின் நண்பன்  எனும் நிதியத்தை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து 10 நிமிடங்களுக்குள் இந்நிதியத்துக்கு ஒரு கோடி 14 இலட்சம் ரூபா கிடைக்கப்பெற்றதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மேல் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று முற்பகல் மகாவலி கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையிலான யாழ். தேவி ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைத் திட்டத்தை ஜனாதிபதி நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதற்காக வடக்கின் நண்பன் எனும் பெயரில் நிதியம் ஒன்றும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி தனது ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்கி இந்த நிதியத்தை ஆரம்பித்து வைத்தார். அவ்வாறே ஜனாதிபதி செயலக ஊழியர்களும் தமது ஒரு நாள் சம்பளத்தை இந்நிதியத்துக்கு வழங்கினர். இது ஒரு பாரிய வேலைத் திட்டமாகும். கடந்த 30 வருடங்களாக பயங்கரவாத அமைப்புடன் போராடிய எம்மைப்போன்ற ஒரு நாட்டுக்கு இது சமாளிக்க முடியாத ஒரு பொருளாதாரச் சுமையாகும்.

இது எமது நாடு,  இது எமது கடமை என்பதை உணர்ந்து இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு இன, மத, கட்சி பேதங்களின்றி அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிக்கொள்கிறேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், இந்த வேலைத் திட்டத்துக்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதியத்துக்கு தமது கட்சியின் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரின் மே மாதத்துக்கான சம்பளத்தை வழங்குவதென நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். 

கொழும்பை அண்மித்ததான பாரிய தமிழ் ஈழ இராச்சியத்தை உருவாக்கும் நோக்கில் புலிகள் – பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய

sec-def.jpgகொழும்பை அண்மித்ததாக இலங்கையின் தென்பகுதியையும் உள்ளடக்கிய பாரிய தமிழ் ஈழ இராச்சியத்தை உருவாக்கும் நோக்கத்தை விடுதலைப்புலிகள் கொண்டிருந்ததாக பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பாரியளவில் நிர்மாணிக்கப்பட்ட கடற்படை, விமானப்படை, தற்கொலைப்படையினரை உள்ளடக்கிய தரைப்படை என்பன புலிகளின் இந்த நோக்கத்தை வெளிப்படுத்துவதாக கோதாபய கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் இராணுவ தளபாடங்கள், பயிற்சிக்களம் என்பனவற்றை நாம் பார்த்தபோது பாரிய ஈழ இராச்சியத்தை உருவாக்க அவர்கள் நோக்கம் கொண்டிருந்தது தெளிவாகத் தென்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அந்த இடங்களிலிருந்து பெற்றுக்கொண்ட வரைபடங்கள் இந்த விடயத்தை உறுதிப்படுத்துகின்றன. அவர்கள் நீர்கொழும்பு முதல் யால வரை அநுராதபுரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளை உள்ளடக்கி ஈழத்தை ஸ்தாபிக்க எதிர்பார்த்திருந்ததாகவும் கோதாபய கூறியுள்ளார்.  கொழும்புக்கு வடக்கே 40 கி.மீ. தொலைவில் நீர்கொழும்பு உள்ளது. யால தென்னிலங்கையில் அமைந்துள்ளது.

இந்த மனிதாபிமான நடவடிக்கையை நாம் ஆரம்பித்திராவிடின் என்ன பதில் நடவடிக்கையை நாம் கொண்டிருப்போம், என்பது தெளிவானது என்றும் அவர் குறிப்பிட்டதாக பி.ரி. ஐ. செய்திச்சேவை தெரிவித்தது.

இலங்கை விவகாரம் குறித்து நவநீதம் பிள்ளையிடம் முறைப்பாடு

nawaneetappilli.jpg இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐ. நா சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களை இந்தியாவின் மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான பியுசிஎல் அமைப்பினர் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பில் பேசியிருக்கிறார்கள்.

இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் மோதல்கள் நடக்கும் பகுதியில், அரசால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் தொடரும் உயிர்ப்பலிகள் தொடர்பிலும், புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உருவாகிவரும் மனித அவலம் குறித்தும் பேசப்பட்டதாக, பியுசிஎல் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளுக்கான தலைவர் வழக்கறிஞர் வி. சுரேஷ் தெரிவித்தார்.

மேலும் அங்கு இலங்கை அரசின் படை நடவடிக்கையால் பலர் பலியாவதாக கூறிய அவர், இதற்காக இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர்கள் மீது சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நடவடிக்கைகளை ஐ. நா மன்றம் துவங்க வேண்டும் என்றும் தாங்கள் கோரியதாகவும் கூறினார்.