எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இன்புளுவன்சா (ஏ) எச்1 என்1 ஐ பன்றிக் காய்ச்சல் என்று அழைக்க வேண்டாம் – உலக சுகாதார அமையம் அறிவுறுத்தல்

19swine-flu.jpgபன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் இன்புளுவன்சா (ஏ) எச்1 என்1 (Influenza (A) H1N1) வைரஸானது பன்றிகளிலிருந்து பரவுவதில்லையென்றும் அது மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோயென்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகம் தெரிவித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, பன்றிக் காய்ச்சல் என இந்த வைரஸை அடையாளம் காட்டுவதை விடுத்து நவல் இன்புளுவன்சா (ஏ) எச்1 என்1 (Novol Influenza (A) H1N1) என பெயர் குறிப்பிடுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதியான டாக்டர் வசிர்தோஷி ரேஸ்டமி தெரிவித்திருப்பதாக சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, கடந்த 5 மாதங்களில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த 2,906 நோயாளர்களிடம் வைத்திய ஆராய்ச்சி மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அதில் 1,667 பேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த தலைவர் அஷ்ரப்பின் நினைவுகள் மக்கள் மத்தியில் நிலைக்கவே நான் அரசியலில் நுழைந்தேன் – அமைச்சர் பேரியல் அஷ்ரப்

மறைந்த தலைவர் அஷ்ரப்பின் நினைவுகள் எதிர்கால சந்ததியினர் மத்தியில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே தான் அரசியலில் பிரவேசித்ததாக வீடமைப்பு அமைச்சரும் “நூஆ’ தலைவியுமான பேரியல் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கவிஞர் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; தலைவர் அஷ்ரப்பின் திடீர் மறைவின் பின்னர் அவரது நாமம் மக்கள் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலில் நுழைந்தேன். எனது நோக்கம் முழு அளவில் நிறைவேறி வருவதுடன் மக்கள் மனதில் தொடர்ந்தும் தலைவர் அஷ்ரப் வாழ்ந்து வருகின்றார் என்பதைக் காணும்போது எனது உள்ளம் பூரிப்பு அடைந்து வருகின்றது.

அன்று தலைவர் திடீர் விபத்தில் மரணித்தவுடன் அவர் பற்றிய நினைவு நாட்கள் செல்லச்செல்ல எதிர்கால சந்ததியின் மத்தியில் இருந்து மறைந்து விடுமோ என்ற நினைப்பிலேதான் எனது மகன் என்னிடம் தலைவரின் பெயர் தொடர்ந்து மக்கள் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் நீங்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க வேண்டும் என வற்புறுத்தினார். அவ்வாறு அவர் கூறியதில் ஒரு அர்த்தம் இருப்பதை உணர்ந்துதான் அன்று நான் பாராளுமன்றம் சென்றேன். அது மட்டுமல்லாமல் அதன் யதார்த்தத்தை இன்று நான் கண்கூடாக காண்கிறேன்.

பல வைபவங்களின் போதும் மேடையில் என்னை கண்டவுடன் தலைவரையும் அவர் மக்களுக்காகச்செய்த பணிகளும் ஞாபகம் வருவதாக கூறுவதுடன், அவரைப் பற்றிய நினைவுகளையும் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் ஞாபகப்படுத்துகின்றனர். இன்று கூட வேறு மதங்களைச் சேர்ந்த பல கவிஞர்கள் என்னைக் கண்டவுடன் மறைந்த தலைவரின் ஞாபகம் வருவதாகக் கூறியதுடன், அவரைப் பற்றியும் அவர் இலக்கியத் துறையில் காட்டிய ஈடுபாடு பற்றியும் ஞாபகப்படுத்தினர்.

மறைந்த அஷ்ரப் இலக்கியத்துறையில் பெரும் ஈடுபாடு காட்டியதுடன், கலையுலகத்தினருடனும் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தார். மேலும் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் விதமாகப் பல்வேறு கவிதைகளைப் புனைபவராகவும் இருந்தார். அவரது இலக்கிய ஆர்வத்திற்கும் கவிதை எழுதும் திறமைக்கும் எழுதி வெளியிட்ட “நான் எனும் நீ’ நல்லதோர் சான்றாகும் எனவும் தெரிவித்தார்.

உலக முன்னோடிகளின் பொன்மொழிகளை லண்டன் சுரங்க ரயிலில் அறிவிக்க முடிவு

tube-train_pa.jpgஐன்ஸ்டின், காந்தி, ஷான் போல் சார்த்ர் போன்ற உலகின் முன்னோடி சிந்தனையாளர்களின் பொன்மொழிகளை லண்டன் சுரங்க ரயிலின் ஒரு மார்க்கத்தில், போக்குவரத்து நிலவரம் குறித்த அறிவிப்புகளுடன் அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

லண்டன் சுரங்க ரயில் வலையமைப்பில், ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் பாதையை உள்ளடக்கிய, பிக்கடில்லி மார்க்கத்தில் பணியாற்றும் ரயில் ஓட்டுநர்களுக்கு, பயணிகளுக்கு அறிவிப்புகளைத் தரும் போது, இந்த பொன்மொழிகளை எடுத்துக்கூற உதவ, பொன்மொழிப் புத்தகம் ஒன்று தரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு உந்துதலாக இருந்த பிரிட்டிஷ் கலைஞர், ஜெரிமி டெல்லர், இந்த முயற்சி பயணிகளுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.

சாவகச்சேரி மகளிர் கல்லூரி புதன்கிழமை முதல் இயங்கும்

இரண்டு மாதகாலமாக சாவகச்சேரி டிறிபேக்கல்லூரியிலும் தனியார் கல்விநிலையத்திலும் இயங்கிவந்த சாவகச்சேரி மகளிர்கல்லூரி புதன்கிழமை முதல் சொந்தக் கட்டிடத்தில் இயங்கவுள்ளது.  இப் பாடசாலையில் வன்னியில் இருந்துவந்த 354 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டிருந்தமையால் இப்பாடசாலை தனியார் கட்டிடங்களில் இயங்கிவந்தன. சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் கொடிகாமம் இராமாவில் புனர்வாழ்வுக்கிராமத்துக்கு மாற்றப்பட்டமையால் பாடசாலை முழுமையான தொற்றுநீக்கிக்கு உட்படுத்தப்பட்டபின்னர் பாடசாலை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஊவா, யாழ், வவுனியா தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப திகதி நீடிப்பு

images-elc.jpgஊவா மாகாண சபை, யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள் ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க எதிர்வரும் 30 ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வழங்கியிருந்த திகதிக்கமைய நேற்றைய தினத்துடன் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நிறைவடைகின்றது. எனினும் எதிர்வரும் 30ம் திகதி வரை இதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதுடன் அதற்குப் பின்னர் நேரடியாகவோ, தபால் மூலமோ தாமதமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், வவுனியா பகுதிகளில் தபால் மூல விண்ணப்பம் மற்றும் இடம்பெயர்ந்தோரின் விண்ணப்பமும் ஜூன் 30 ம் திகதி வரையே ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. அதற்குப் பின்னரான தாமதமாகும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுமெனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

2011இல் வட மாகாணத்திற்கு முழுமையான மின்சார விநியோகம்

வன்னி உட்பட வடமாகாணத்திற்கு 2011 இல் முழுமையாக மின்சார விநியோகம் வழங்கப்படும் என்றும் 32.6 மில்லியன் டொலர் நிதியில் இத்திட்டம் பூரணப்படுத்தப்படுமெனவும் இலங்கை மின்சார சபை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வீடுகளுக்குத் தற்போது 1 சதவீதமும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 சதவீதமுமே மின்சார வசதி தற்போது உள்ளது. அதேசமயம், மன்னார் மாவட்டம் 37 சதவீத மின்சார விநியோகத்தைப் பெற்றுவருவதுடன் யாழ்ப்பாண மாவட்டம் 52 சதவீத மின் விநியோகத்தையும் வவுனியா மாவட்டம் 67 சதவீத மின் விநியோகத்தையும் பெற்றுள்ளன. தற்போது வவுனியா சுன்னாகம் இடையே கேபிள்கள் பொருத்தப்படும் பணிகள் இடம்பெறுகின்றன.

வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்கும் இடையே 132 கிலோவாட்ஸ் மின் பரிவர்த்தனையை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 39 பில்லியன் டொலர் செலவிலான இத்திட்டத்திற்கு ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவரமைப்பு உதவி வழங்குகின்றது.

கிளிநொச்சிக்கும் சுன்னாகத்துக்கும் இடையில் மற்றொரு மின் பரிவர்த்தனையை மேற்கொள்ள 19.5 மில்லியன் டொலர் தேவையாகும். இதற்கும் மேலதிகமாக 45 மில்லியன் டொலர் செலவில் நடுத்தரதாழ்ந்த மட்ட வோல்டேஜ் விஸ்தரிப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. மின் விநியோகக் கட்டமைப்பை அமுல்படுத்த இந்தத் தொகை தேவைப்படுகிறது.

இதேவேளை, வழமையான நடவடிக்கையில் ஈடுபடாமல் சூரியசக்தி, தொலைபேசி வசதிகள் வடக்கில் ஏற்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் அகதி முகாம்களில் நாணயக் குற்றிகளைப் பயன்படுத்தும் சூரிய சக்தி தொலைபேசி வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன

புத்தளம் நுரைச்சோலை அணல்மின் உற்பத்தி!

he_president.jpgபுத்தளம் நுரைச்சோலை அணல்மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மானப்பணிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஊடாக கடனுதவி பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

புலிகளின் செய்மதி, தொ.பேசிகள் சிம்கார்ட்டுகள் கண்டுபிடிப்பு பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தேடுதல்களை மேற்கொண்டு வரும் படையினர் புலிகளினால் முன்னர் பயன்படுத்தப் பட்ட செய்மதி தொலைபேசிகள், புதிய சிம் கார்ட்டுகள் உள்ளிட்ட பெருந்தொகையான வெடிப் பொருட்களை கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

முல்லைத்தீவு மாவட்டம் கல்வியங்காடு பகுதியில் இராணுவத்தின் 59வது படையணியினர் நடத்திய தேடுதலின்போது 12 செய்மதி தொலைபேசிகளும், 13 புதிய சிம் கார்ட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, அப்பகுதியிலிருந்தே 04 திசை காட்டிகள் 06 தொலைகாட்டிகள், 39 – ஜி.பி. எஸ்கள், 14 – போர் துப்பாக்கி காட்ரிஜ்கள் என்பனவும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தின் 57 ஆம் படையணியினர் கிளிநொச்சியிலிருந்து ஒன்பது ரி-56 துப்பாக்கிகளையும் விஸ்வமடு பகுதியிலிருந்து இரண்டு துப்பாக்கிகளையும் ஒரு ஆர்.பி.ஜி. ஆயுதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதே படையணியினர் புவன்னிக்குளத்திலிருந்து 58 டெட்டேனேட்டர்கள், 5 கிலோகிராம் நிறை கொண்ட சி 4 வெடி மருந்துகள் உள்ளிட்ட பெருந்தொகையான வெடிப் பொருட்களை மீட்டிருப்பதாகவும் பாதுகாப்பு நிலையம் கூறியது.

அக்கராயன்குளத்திலிருந்து 10 கண்ணி வெடிகள், 122 மில்லிமீற்றர் குண்டு ஒன்று ஆர். பி.ஜி. குண்டு ஒன்று என்பனவற்றுடன் ஆலங்குளத்திலிருந்து 87 கண்ணிவெடிகளையும் மூன்றாம் படையணி கண்டுபிடித்துள்ளதாக நிலையம் கூறியது.

புலிகள் அழித்தொழிக்கப்பட்டாலும் அதன் ஆவிகள் ஆடுகின்றன – சபையில் விமல் வீரவன்ச

25vimal.jpgபுலிகள் அழித்தொழிக்கப்பட்டாலும், அதன் ஆவிகள் இன்னும் ஆடுகின்றன என்பதனால் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை நிர்மாணிக்க வேண்டாம் என்று கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்டமைப்பிற்கு எவ்விதமான அருகதையும் இல்லை என்று தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டுப்படைகளின் தளபதி சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது: மீண்டும் பயங்கரவாதம் தோன்றிவிடாமல் இருப்பதற்கு சகல பிரிவுகளையும் பலப்படுத்த வேண்டும். அரசியல், நிர்வாக ரீதியில் மட்டுமல்லாது பாதுகாப்பு ரீதியிலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலமாகவே பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்காது. முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் பதவி, பதவியாக மட்டுமே இருந்தது. ஆனால், இவரே நிர்வாக ரீதியில் இணைந்து ஒருங்கிணைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தார்.

எதிர்கால பாதுகாப்புச் செயலாளர்கள் நிர்வாக ரீதியில் மட்டுப்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. புலனாய்வுத் துறைகளை மத்தியஸ்தப்படுத்துவதற்கான நடவடிக்கை இருக்கவில்லை. அதிகாரம் தவறான ஒருவரின் கைக்குச் செல்வதனால் பிழைகள் இடம்பெறலாம். முகத்துடன் கோபித்துக் கொண்டு மூக்கை வெட்டிக்கொள்ள முடியாது. பொது ஒழுங்குப் பத்திரம் இன்றி தனித்தனி தாளத்திற்கு ஆட முயற்சித்தால் உருவாகபோவதைத் தடுக்க முடியாது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும் புலியின் ஆவிகள் பேயாக ஆடுகின்றன. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை நிர்மாணிக்க வேண்டாம் என்று இந்தியாவிடம் கோருகின்றது

யாழ்.குடாநாட்டில் ஊரடங்கு தளர்வு

21deva.jpgயாழ்ப் பாணக் குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து இயல்பு நிலை ஏற்பட்டு வருதால் அதற்கு ஏதுவாக இரவு 11 மணிக்கு அமுல் செய்யப்படும் ஊரடங்குச் சட்டம் அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என பலாலி பாதுகாப்பு தலைமையகம் அறிவித்துள்ளது. இதுவரை யாழ்.மாவட்டத்தில் இரவு 9 மணிக்கு அமுல் செய்யப்பட்ட ஊரடங்குச் சட்டம் அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்பட்டு வந்தது.

யாழ்ப்பாணம் வந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து படைத்தரப்பினர் அதற்கு இணங்கி ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியுள்ளனர். இதேநேரம், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைக்கப்பட்டிருந்த சகல பாதுகாப்பு தடைகளும் நீக்கப்பட்டுள்ளதுடன் இந்த வீதியூடாக சகல வாகனங்களும் சென்று வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது