எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தை அப்புறப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

maussakele-maskeleya.jpgகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினை தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தக் கோரி தலவாக்கலை ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 400 பேர் கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் பணி நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அதே தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வெட்டிக் கொலை செய்ததைத் தொடர்ந்து தலவாக்கலைப் பொலிஸார் 4 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இந்த நிலையில், கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினை குறிப்பிட்ட தோட்டத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தி வேறொரு தோட்டத்தில் குடியமர்த்தக் கோரிய ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத் தொழிலாளர்கள் பணி நிறுத்தப் போராட்டம் மேற்கொள்கின்றனர். இப்போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

986 கோடி 64 இலட்ச ரூபா குறைநிரப்பு பிரேரணைக்கு சபை அங்கீகாரம்

வரவு செலவுத் திட்ட செலவின ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக இரு அமைச்சுகளுக்கென 986 கோடியே 64 இலட்சம் ரூபாவை குறைநிரப்பு தொகையாக வழங்குவதற்கு சபை நேற்று புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் அமைச்சு ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சு ஆகிய இரண்டினதும் கீழான செலவினங்களுக்காகவே இந்த குறைநிரப்புத் தொகை வழங்கப்படுகிறது.

பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியம் பலாப்பிட்டிய நேற்று இதற்கான பிரேரணைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன் பிரகாரம் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சுக்கான குறைநிரப்புத் தொகையாக 801 கோடியே 64 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிதி, திட்டமிடல் அமைச்சுக்கான குறைநிரப்புத் தொகையானது 35 கோடி ரூபா மற்றும் 150 கோடி ரூபா என இரண்டு கட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதேநேரம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசேட வர்த்தமானி அறிவித்தல்களின் மூலம் வெளியிடப்பட்ட கட்டளை அங்கீகரிப்பதற்கான பிரேரணைகளையும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இவற்றுடன் சமர்ப்பித்தார்.

அத்துடன், ஏற்கனவே அமுலில் இருக்கும் விடயங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் பெறவே இந்த பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இதனால் எந்தப் பொருட்களினதும் விலையும் அதிகரிக்காதென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இவை மீதான விவாதத்தின் இறுதியில் குறைநிரப்புப் பிரேரணைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கழிவகற்றும் 10 பவுஸர்கள் யூனிசெப் நிறுவனத்தால் அன்பளிப்பு

00001111.jpgவவுனியா நலன்புரிக் கிராமங்களில் உள்ள மக்களின் அடிப்படை சுகாதார நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில்; தற்காலிக மலசல கூடங்களிலிருந்து கழிவுகளை அகற்றும் 10 பவுஸர்களை யுனிசெப் நிறுவனம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் இந்த பவுஸர்களை யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் டுவமெல்லே இன்று காலை  கையளித்தார். இதற்கான வைபவம் யுனிசெப் நிறுவனத்தின் கொழும்பு பணியகத்தில் நடைபெற்றது. ஒவ்வொன்றும் ஐயாயிரம் லீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த பவுஸர்களின் பெறுமதி 50 மில்லியன் ரூபாவாகும்.

நலன்புரிக் கிராமங்களில் உள்ள மக்களின் நன்மை கருதி மேலும் பல உதவிகளை யுனிசெப் நிறுவனம் எதிர்காலத்தில் வழங்கவுள்ளதாக வைபவத்தில் உரையாற்றிய யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் டுவமெல்லே தெரிவித்தார்.

சந்திரகாந்தன் எம்.பி.க்கு 3 மாதகாலம் விடுமுறை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவுக்கு மூன்று மாத காலத்துக்கு விடுமுறை வழங்க சபை அனுமதி வழங்கியுள்ளது. சந்திரகாந்தன் சந்திரநேருவுக்கான 3 மாத கால விடுமுறைப் பிரேரணையை நேற்று புதன்கிழமை சபையில் சமர்ப்பித்த துரைரட்ணசிங்கம் எம்.பி. சந்திரகாந்தனுக்கு இன்றிலிருந்து (நேற்று) 3 மாத விடுமுறை வழங்குமாறு முன்மொழிந்தார். பத்மினி சிதம்பரநாதன் எம்.பி. வழிமொழிந்தார்.

இதையடுத்து அவருக்கு விடுமுறை வழங்க சபை இணக்கம் தெரிவித்தது. கடந்த சில வாரங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு விடுமுறை வழங்க கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த அரச தரப்பினர் நேற்று எதுவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

வெளிநாட்டு ஒதுக்கம் இரு மாதங்களில் 27 சதவீதம் வளர்ச்சி – பாராளுமன்றத்தில் அமைச்சர் சியம்பலாபிட்டிய

26parliament.jpgஇலங் கையின் வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 27 சத வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உற்பத்தித் தீர்வை சட்டம் மற்றும் நிதிச் சட்டம் ஆகியவை சார்ந்த 7 கட்டளைகளும் 3 குறைநிரப்புப் பிரேரணைகளும் நேற்று  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைகளைச் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த மே மாதம் காணப்பட்ட வெளிநாட்டு ஒதுக்கத்தின் பெறுமதி 1.2 பில்லியன் அமெரிக்க டொலராகும். இது ஜுன் மாதமாகும்போது 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரித்தது.

நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கம் இத்தகைய குறுகிய காலப் பகுதியில் இந்தளவு வளர்ச்சியடைந்தமை இதுவே முதற்தடவையாகும்.தீர்வை அதிகரிக்கப்பட்டதால் சிகரட் பாவனை குறைவடைந்துள்ளது. வரியை உயர்த்துவதன் மூலம் வருமானத்தை அதிகரிப்பது மாத்திரமன்றி சிகரட் பாவனையைக் குறைப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாகும். பொருளாதார வளர்ச்சிப் பதிவின் மூலம் ஆடை உற்பத்தித்துறைக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத்துறையில் சிறப்பாக செயற்பட்ட 125 நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காகவும் அரசாங்கம் பல சலுகைகளை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இரண்டரை வயதுக் குழந்தைக்கு நஞ்சூட்டிய தந்தை நேற்று கைது கந்தளாய் பேராறு பகுதியில் சம்பவம்

இரண்டரை வயது பெண் குழந்தையை நஞ்சூட்டி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குழந்தையின் தந்தையை கைது செய்துள்ள சம்பவமொன்று கந்தளாயில் இடம் பெற்றுள்ளது. கந்தளாய் பேராறு பகுதி யுனிப் ஒன்றைச் சேர்ந்த நெளபிதா என்ற 2 1/2 வயது சிறுமியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

குழந்தைக்கு நஞ்சூட்டியதாக சந்தேகிக்கப்படும் குழந்தையின் தந்தையான நவாஸ் என்பர் கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி குழந்தையின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிவதற்காக சென்றுள்ளார். தாயாரின் சகோதரியின் பாதுகாப்பிலேயே குழந்தை வளர்ந்து வந்துள்ளது. குழந்தையின் தந்தை வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் என்றும் தெரி விக்கப்படுகிறது.

சம்பவதினத்தன்று குழந்தையின் தந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காலை 8 மணி யளவில் அழைத்துக் சென்றுள்ளார். 8.30 மணியளவில் மீண்டும் குழந்தையை கொண்டு வந்து வீட்டு வாசலில் விட்டு விட்டுச் சென்றுள்ளார்.
வீட்டிற்குள் வந்த குழந்தை சில மணி நேரத்தில் வாந்தியெடுத்ததுடன் மயக்க மடைந்துள்ளது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்துவிட்டதாகவும் குழந்தைக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. தந்தையான நவாஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.கந்தளாய் ஆஸ்பத்திரியிலிருந்து அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு இறந்த குழந்தையின் சடலம் நேற்று அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.குழந்தை நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதா என்பது பற்றி பிரேத பரிசோதனையின் போதே தெரிய வரும் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

நான் உங்கள் நண்பன்! நீங்கள் என்னை நம்பலாம் – ஜனாதிபதி : முஸ்லிம் மக்களை பிழையாக ஜனாதிபதி வழிநடத்துகின்றார் – கபீர் ஹசீம்

mahinda-rajapa.jpgkabir_hashim.jpg இனிமேல் இந்த நாட்டில் இன, மத, குல, பேதம் எதுவும் இருக்க முடியாது. இனங்கள் மத்தியில் நிலவிய உறவை இல்லாமல் செய்ய பயங்கரவாதிகள் எண்ணினார்கள். ஆனால் எமது உறவு அன்றுபோல் என்றும் உறுதியாக இருக்கும். இதை யாரும் மறுக்க முடியாது. இதுதான் யதார்த்தம் இந்த அழகிய தேசத்தைக் கட்டியெழுப்ப முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பும் அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று (07) முஸ்லிம் சமயப் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றின்போதே ஜனாதிபதி தமிழ் மொழியில் இவ்வாறு தெரிவித்தார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முக்கியஸ்தர்கள் உட்பட மேலும் பல இஸ்லாமியப் பிரமுகர்கள் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இதன்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர்  ரிஸ்வி முப்தி ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றையும் கையளித்தார்.

இவ்வைபவத்தில்  தமிழில் ஆற்றிய ஜனாதிபதி மேலும் கூறுகையில், அலரி மாளிகைக்கு வந்த உங்கள் எல்லோரையும் நான் அன்போடு வரவேற்கிறேன். இது எமது தாய் நாடு. இந்த நாட்டில் வாழும் நாமெல்லோரும் ஒரு தாய் மக்களே! இந்த அழகான நாட்டின் அபிவிருத்தி வேலைகள் இப்போது மிகவும் வேகமாக இடம்பெறுகின்றன. மக்களை மீளக் குடியமர்த்தும் வேலைகளும் வேகமாக இடம்பெறுகின்றன. முஸ்லிம் சமயப் பிரமுகர்களான நீங்களும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும்.

சாந்தி, சமாதானம், சகோதரத்துவம்,சகவாழ்வு இவை இஸ்லாம் மார்க்கத்தின் அத்திவாரம். உணர்வுகளுக்கு அடிமையாகாமல், எப்போதும் புத்தியைப் பயன்படுத்துவோம். அதுதான் மிகமிக முக்கியம். அது எமக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை தரும். முதலாவதும்,  இரண்டாவதும், மூன்றாவதும்,  எமது தாய்நாடுதான் எமக்கு முக்கியம். இங்கே வாழும் எல்லா மக்களும் பயம், சந்தேகம் இல்லாமல் பாதுகாப்பாக,  சமஉரிமையோடு வாழ வேண்டும். அது எனது பொறுப்பு!

நான் உங்கள் நண்பன்! நீங்கள் என்னை நம்பலாம். நாமெல்லோரும் ஒன்றுபட்டு இந்த அழகிய தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.

பலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி ஜனாதிபதி முஸ்லிம் மக்களை பிழையாக வழிநடத்துகின்றார் – கபீர் ஹசீம் குற்றச்சாட்டு

இஸ்ரேலுக்கு எதிரான பலஸ்தீன போராட்த்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி ஜனாதிபதி முஸ்லிம் மக்களை பிழையாக வழிநடத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக அமெரிக்க தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதுவரையில் எந்தவித கருத்துக்களையும் வெளியிடாமை பெரும் ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மிகவும் நெருக்கடியான பல சந்தர்ப்பங்களில் அரேபிய மற்றும் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு பெரும் தொகை உதவிகளை வழங்கியுள்ளமை எவராலும் மறுக்க முடியாததொன்றென அவர் குறிப்பிட்டுள்ளார். பலஸ்தீன நட்புறவு சங்கத்தின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்து வரும் மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலஸ்தீனத்திற்கு உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ள இலங்கை, இஸ்ரேலுக்கு பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அனுப்பி உறவுகளைப் வலுப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இந்த இரட்டை நிலைப்பாடு பெரும் கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்களின் போது முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கப்படும் என ஆளும் கட்சி குறிப்பிட்ட போதிலும்,  நடைமுறையில் ஆளும் கட்சியின் முஸ்லிம் ஆதரவு நடவடிக்கைகள் பூஜ்ஜிய நிலையிலேயே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு முஸ்லிம்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்வதனை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதென கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். 

‘வணங்கா மண்’ நிவாரண பொருட்கள் இன்று நள்ளிரவில் கொழும்பு வந்தடையும்

_vanankaman-captionali.jpgஐரோப் பாவில் வாழும் இலங்கைத் தமிழர்களால் இலங்கையின் வடபகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த ‘கெப்டன் அலி’ என்ற கப்பலில் இருந்த பொருட்கள் ‘கேப் கொலராடோ’ கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

திங்கட்கிழமை நள்ளிரவு ‘கொலராடோ’ கப்பலில் ஏற்றப்பட்ட பொருட்கள் செவ்வாய்கிழமையன்று சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கை நோக்கிப் பயணமானது. பெரும்பாலும் இந்நிவாரணப் பொருட்கள் இன்று நள்ளிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. 884 தொன் நிவாரணப் பொருட்களுடன் ‘கொலராடோ’ கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டு வருகிறது.

நிவாரண பொருட்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததும் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏ9 வீதியூடாக இன்னும் சில தினங்களில் பேரூந்து சேவை – அமைச்சர் டக்ளஸ்

21deva.jpgயாழ் குடாநாட்டுக்கு ஏ9 வீதியூடான பேரூந்து சேவைகள் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார் என்றும் அந்த அமைச்சின் ஊடகத்துறை விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டு மக்கள் தரைவழிப் போக்குவரத்தின்றி எதிர்நோக்கியுள்ள பிரயாண கஸ்டங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக ஒன்றுவிட்ட ஒரு தினம் ஐந்து சொகுசு பஸ் வண்டிகள் கொழும்பிலிருந்தும், வவுனியாவில் இருந்தும் ஒரே நேரத்தில் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது யாழ் குடாநாட்டுக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்து விமானம் மூலமாகவும் கப்பல் மூலமாகவுமே நடைபெறுகின்றன என்பதும், இதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களையும் பெருந்தொகைப் பணச் செலவினையும் மக்கள் எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

மீட்கப்பட்ட வன்னிப் பகுதியில் பெளத்த புராதன இடங்களை இனங்கண்டு பாதுகாப்பதும் அவசியமாகும்.- எல்லாவல மேதானந்த தேரர்

parliament.jpgபயங் கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டைக் கட்டியெழுப்ப சகலரும் முன்வரவேண்டிய அதேவேளை, மீட்கப்பட்ட வன்னிப் பகுதியில் பெளத்த புராதன இடங்களை இனங்கண்டு பாதுகாப்பதும் அவசியமாகும்.

இன, மத பேதங்களுக்கப்பால் நாட்டைக் கட்டியெழுப்புவதில் சகல கட்சிகளும் இணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாகிறது. மனிதப் படுகொலைகளை மேற்கொண்டு நாட்டைச் சீரழித்த பிரபாகரன் அழிக்கப்பட்டுவிட்டார். அவர் செய்த படுகொலைகளே இறக்கும்போது சயனைட்குப்பி கூட இல்லாத நிலையை அவருக்குத் தோற்றுவித்தது. அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எல்லாவல மேதானந்த தேரர்: (ஹெல உறுமய கட்சி எம்.பி) மேற்கண்டவாறு கூறினார்.