எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மலையகத்தில் கடும் மழை : கொட்டகலையில் மினி சூறாவளி

0000rain.jpgமலைய கத்தில் தொடர்ந்து பெய்ந்து வருகின்ற அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

மலையகத்தில் நுவரெலியா, கண்டி உட்பட பல மாவட்டங்களில் கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகின்றது.  காற்றுடன் கூடிய அடைமழையினால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. அடிக்கடி மின்சாரத் தடையும் ஏற்படுகின்றது.

கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் ஹரிங்டன் தோட்டப்பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்ததில் சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஒன்று சேதத்துக்குள்ளாகியது. தெய்வாதீனமாக சிறுவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

அமைச்சர் ஜோன் செனவிரத்தன தலைமையிலான குழு தன்சானியா பயணம்!

பொதுநலவாய நாடுகளின் 55 ஆவது பாராளமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்தன தலைமையிலான அமைச்சர்கள் குழு தன்சானியாவுக்கு பயணமானது.

‘எதிர்கால உலக சவால்கள்’ என்ற தொனிப் பொருளில்  நடைபெறவுள்ள   இந்த மாநாட்டில் இலங்கை சார்பாக பிரதி சபாநாயகர் பிரியங்க ஜெயரத்ன,  வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரப்,  பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் கருணாரத்ன, சமன்சிறி ஹேரத், எட்வட் குணசேகர அடங்கலான குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மாநாட்டில் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்தன விசேட உரையாற்றவுள்ளார். 

கட்சிகளின் செயலர்களுடன் தேர்தல்கள் ஆணையர் சந்திப்பு

srilanka-voting.jpgதென் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நாளை (2) தேர்தலில் போட்டியிடும் கட்சிக ளின் செயலாளர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

தென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெற உள்ளதோடு தேர்தல் ஏற்பாடுகள், தேர்தல் வன்முறைகளை தடுத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள், அடையாள அட்டை தொடர்பில் முகம் கொடுக்கும் பிரச்சினை என்பன குறித்து இங்கு ஆராயப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இலங்கை பட்டினி ஒழிப்புத் திட்டம் மறுசீரமைப்பு

sirisena.jpgஇலங்கை பட்டினி ஒழிப்புத் திட்டத்தை மறுசீரமைக்கும் வகையில் அதனை தேசிய உணவு அபிவிருத்திச் சபை என மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

பிரித்தானியா செல்லும் மாணவர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம்

பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு விசா வழங்கும் நடை முறையில் இன்று முதல் மாற்றம் கொண்டு வரப்படுகின்றது என்று கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது.  குறிப்பாக பிரிட்டனுக்குக் கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் வங்கிக் கணக்கில் காட்டவேண்டிய பணத்தொகை சம்பந்தமான விடயங்களில் இம் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இம்மாணவர்கள் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தது 28 நாள்களுக்கு முன்பாக தமது வங்கிக் கணக்கில் அல்லது பெற்றோர் / பாதுகாவலர் வங்கிக் கணக்கில் குறித்த பணத் தொகையைக் கட்டாயம் வைப்பிலிட்டிருக்க வேண்டும் என இம்மாற்றத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளுக்கு அமைவாக வங்கியில் பணம் வைப்புச் செய்திருக்கும் விண்ணப்பதாரி மாணவர்கள் வங்கி அறிக்கைகள் மூலமாகவோ அல்லது வேறு ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவணங்கள் மூலமாகவோ அதனை நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரம்

011009army_exhibition1.jpgஇலங்கை இராணுவத்தின் பவள விழாவை முன்னிட்டு கொழும்பு,  பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ள இராணுவக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. கண்காட்சி ஏற்பாடுகளை பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகா நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இக்கண்காட்சியில் புலிகளுடனான யுத்தத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் புலிகளுக்கெதிராக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்றவற்றின் வீடியோக் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன.

இராணுவத்தின் வளர்ச்சி,  முன்னேற்றம் பற்றிய தகவல்கள், புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் உட்பட போர்த் தளபாடங்கள் மற்றும் இராணுவத்திடமுள்ள யுத்த உபகரணங்கள் போன்றனவும் இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

இக்கண்காட்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி 07ஆம் திகதி முடிவடையவுள்ளது.  இக்கண்காட்சிக்கு 50 ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளதோடு கண்காட்சி நடைபெறும் தினங்களில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் இதனைப் பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காமினி பொன்சேகாவின் உருவச்சிலை திரை நீக்கம்

0110009gamini.jpgகாலஞ் சென்று பிரபல சிங்கள திரைப்பட நடிகர் காமினி பொன்சோகாவின் ஐந்தாவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலையொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கின் முன்பாக திரை நீக்கம் செய்து வைத்தார் அமைச்சர்களான மேவின் சில்வா,  ஜீவன் குமாரதுங்க,  மற்றும் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மௌலானா உட்பட பல அரசியல் வாதிகள் இதில் கலந்து கொண்டனர்.

ரவீந்திர ரன்தெனிய,  மாலனி பொன்சேகா,  உட்பட பிரபல சினிமாக் கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்

காமினி பொன்சேகா மன்றம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா,  கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சமன் அபே குணவர்தன, மற்றும் சிங்கள சினிமா கலைஞர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
 

கல்வி நிருவாகச் சேவை நியமனங்கள்!

இலங்கை கல்வி நிருவாகச் சேவையில் நிலவும் மூன்றாம் வகுப்பு தரத்திலான அதிகாரிகளின் வெற்றிடங்களுக்காக கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட நிமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  சமர்ப்பித்திருந்தார்.

இவ்வாறு 225 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்குத் தகுதியானவர்கள் வரையறுக்கப்பட்ட மற்றும் பகிரங்கப் போட்டிப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 9 மாதகாலப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

நிவாரணக்கிராமங்கள் – உறவினர்களை பொறுப்பேற்க புதிய விண்ணப்பபடிவம்

Wanni IDPsநிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பேற்பதற்கு ஏதுவாக வவுனியா மாவட்டத்திற்கென புதிய விண்ணப்பப் படிவமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் மாதிரி விண்ணப்பப்படிவம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யுமாறு வவுனியா அரச அதிபர் திருமதி பீ.எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

விண்ணப்பப்படிவங்களை பொறுப் பேற்பதற்கென வவுனியா அரச அதிபர் அலுவலகத்தின் திட்டப் பணிப்பாளரின் அலுவலகத்துக்கு முன்னால் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் வழிகாட்டலு டன் அரச அதிபர் அலுவலகம் இப் புதிய விண்ணப்பப்படிவத்தை அறிமுகம் செய்துள்ளது.

வெளி மாவட்டங்களிலுள்ளவர்கள் முன்பு போன்றே விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுவர்களின் உரிமைகளை ஒழித்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி – சிறுவர்தின செய்தியில் ஜனாதிபதி

290909mahinda.jpgசிறுவர்களை ஆயுதமேந்தவைத்து அவர்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழித்த யுகத்துக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மூன்று தசாப்த கால பயங்கரவாதத்தை தாய்நாட்டிலிருந்து முற்றாக ஒழித்த இலங்கையர்கள் என்ற பெருமையுடன் இம்முறை உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடுவது மகிழ்ச்சி தருகிறது.

மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த பயங்கரவாதத்தினால் எமது நாட்டில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்களும் பெண்களுமே. எமது பிள்ளைகளின் வாழ்விடங்களும் இல்லாதொழிந்தன.

படைவீரர்கள் தமது உயிரைப் பலியாக்கி வெற்றிகொண்ட தேசத்தினை நமது பிள்ளைகளுக்காகக் கட்டியெழுப்பு வது நமது பொறுப்பாகும். சகல சிறுவர்களுக்கும் அன்பு, பாதுகாப்பு, அரவணைப்புடன் சிறந்த எதிர்கால மொன்றை உருவாக்கிக் கொடுப்பதற்கும் பெரியவர்களான நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

‘வெற்றிபெற்ற தேசத்தை சிறார்களுக்காக கட்டியெழுப்புவோம்’ என்ற தொனியில் இம்முறை உலக சிறுவர் தினம் அனுஷ் டிக்கப்படுகிறது. இதற்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் மற்றும் வறுமை என்பன சிறுவர் முன்னேற்றத்தில் பெரும் தடையாகவுள்ளன. பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது போல் இந்த சவாலையும் வெற்றிகொள்ள ஒன்றிணைவோம் எனவும் ஜனாதிபதி தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.