பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு விசா வழங்கும் நடை முறையில் இன்று முதல் மாற்றம் கொண்டு வரப்படுகின்றது என்று கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது. குறிப்பாக பிரிட்டனுக்குக் கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் வங்கிக் கணக்கில் காட்டவேண்டிய பணத்தொகை சம்பந்தமான விடயங்களில் இம் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது இம்மாணவர்கள் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தது 28 நாள்களுக்கு முன்பாக தமது வங்கிக் கணக்கில் அல்லது பெற்றோர் / பாதுகாவலர் வங்கிக் கணக்கில் குறித்த பணத் தொகையைக் கட்டாயம் வைப்பிலிட்டிருக்க வேண்டும் என இம்மாற்றத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளுக்கு அமைவாக வங்கியில் பணம் வைப்புச் செய்திருக்கும் விண்ணப்பதாரி மாணவர்கள் வங்கி அறிக்கைகள் மூலமாகவோ அல்லது வேறு ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவணங்கள் மூலமாகவோ அதனை நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.