எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஆளும் கட்சி அமைச்சர் எம்.எம். முஸ்தபா ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடத் தீர்மானம்?

ballot-muthaffa.jpgஆளும் கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர் கல்வி பிரதி அமைச்சர் எம்.எம். முஸ்தபா சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
எதிர்வரும் திங்கட்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த மாதம் 17ம் திகதி வரையிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் விரைவில் அவர் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
உயர்கல்வி பிரதி அமைச்சராக தாம் நியமிக்கப்பட்ட போதிலும் எவ்விதமாக சேவையும் தம்மால் மக்களுக்கு ஆற்ற முடியவில்லை என அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கவே ஐக்கிய தேசிய கட்சி – ஜே.வி.பி கூட்டு

dew.jpgஇலங்கை யின் ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டிப் புதைக்கவே ஐ.தே.க. – ஜே.வி.பி கூட்டு சரத் பொன்சேகாவைத் தேர்ந்தெடுத்துள்ளது என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டியூ குணசேகர நேற்றுத் தெரிவித்தார். எந்த விதத்திலும் ஒத்துச் செல்ல முடியாத ஐ.தே.கவும், ஜே. வி. பியும் கூட்டுச் சேர்ந்திருப்பது ஜனநாயகத்தைப் பெற்றுத் தரவோ, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவோ அல்ல.

மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முயற்சி செய்யும் வெளிநாட்டு சூழ்ச்சியாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஐ. ம. சு. முன்னணியின் தேர்தல் பிரசார செய்தியாளர் மாநாடு மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டியூ குணசேகர தொடர்ந்தும் உரையாற் றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கான யுத்தம் முடிவுறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் தொடக்கம் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது வெளிநாடுகள் யுத்தத்தை நிறுத்தும்படி கடுமையாக அழுத்தம் கொடுத்தன. இருப்பினும் இந்த அழுத்தங்களுக்கு தலை சாய்க்காது எமது ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டினார். இந்த சமயத்தில் மூன்றாம் மண்டல நாடுகள் தான் எமக்கு பக்கபலமாக இருந்தன. மேற்குலக நாடுகள் எமக்கு உதவிகள் நல்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வந்திருப்பதால் வோஷிங்டனின் இணக்கப்பாட்டுடன் சரத் பொன்சேகாவை எதிரணி அபேட்சகராக கொண்டு வந்துள்ளனர்.

இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் எதிர்கொள்ளுகின்ற மிக மோசமான அரசியல் சூழ்ச்சியே இது. வெளிநாட்டு சதியாளர்களின் தேவையை நிறைவேற்றவே ஐ. தே. க., ஜே. வி. பி. கூட்டு இந்த சூழ்ச்சியில் பங்காளியாகியுள்ளது. எதிரணி அபேட்சகர் இராணுவத்தில் 40 வருட காலம் சேவையாற்றியவர். அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. அதனால் அவரது அரசியல் பிரவேசம் இந்நாட்டு ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாகும்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்ஸில் கூட்டத்தில் சரத் பொன்சேகா இராணுவத்திற்கு ஒரு இலட்சம் பேரைத் திரட்ட வேண்டும். முப்படைகளுக்கும் கட்டளை இடக்கூடிய அதிகாரம் தமக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இது அவரது உள்நோக்கத்தை நன்கு புலப்படுத்துகின்றது. இதனால் இந்நாட்டின் ஜனநாயக அரசியல் இராணுவ மயமாகக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஆசியாவின் கேந்திர நிலையமாக இலங்கை மாற கல்வித்துறையில் விரிவான மாற்றங்கள் வேண்டும் – ஜனாதிபதி

mahinda0.jpgஆசியாவின் அறிவின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற வேண்டுமானால் நமது கல்வித் துறையில் விரிவான மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையானது கடல், வான் மற்றும் வர்த்தகத் துறை கேந்திர நிலையமாக மாறிவருகின்ற போதும் அறிவின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவதே தமது எதிர்பார்ப்பாகு மெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது எதிர்கால சந்ததியினரை விஞ்ஞான உலகிலும், தொழில்நுட்ப உலகிலும் வெற்றிபெறக் கூடிய வகையில் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு கல்வித் துறையில் சகல அதிகாரிகளுக்குமுரியதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கல்வித்துறை நிர்வாகச் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிப தியைச் சந்தித்த நிகழ்வொன்று நேற்று முன்தினமிரவு அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, அறுபது ஆண்டுகளுக்கு மேல் நாம் ஜனநாயக ரீதியில் ஆட்சி செய்யும் நாடு இது. அந்த ஜனநாயகத்தை நாம் தொடர்ந் தும் பாதுகாப்பது அவசியம். ஜனநாயகத்தை உதாசீனப்படுத்திய காலகட்டமொன்றை நாம் கடந்து வந்துள்ளோம்.

சமாதான உடன்படிக்கையொன்றை மேற்கொண்டு நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்த முயற்சித்த யுகமொன்று இருந்தது. இது போன்ற செயல்கள் ஜனநாயக நாடொன்றில் இடம்பெறக் கூடாது. பட்டலந்தை வதை முகாம் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்று. எனினும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாம் ஆரம்பித்த போராட்டத்தின் பலனை இன்று நாடு அனுபவித்து வருகின்றது.

இந்நாட்டின் சகல மக்களினதும் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவது முக்கியம் என்பதாலேயே வடக்கு மக்களும் தமக்கு விருப்பமான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் தீர்மானித்தோம். இதன் மூலம் நாட்டின் சகல மக்களும் சமமாக ஜனநாயக உரிமையை அனுபவிப்பார்கள் என நம்புகிறேன்.

வடக்கு மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. எனினும் அவர்கள் விரும்பிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பத்தை நாம் வழங்க வேண்டும். ஜனநாயக நாட்டின் தலைவன் என்ற வகையில் அதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளோம். நான் ஒரு பகுதியினருக்கு தலைவனாக இருப்பதில் பயனில்லை.

அதனால் தான் இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தேன். எனது பதவிக் காலம் இன்னும் இரண்டு வருடங்களாக உள்ள போதும் அவர்களுக்கு நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இத்தேர்தலைக் கொண்டு வந்தோம்.

அம்மக்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டுள்ளோம். மீள்குடியேற்றம் இடம்பெற்று வருகிறது. தற்போது நிவாரணக் கிராமங்களில் 94,000 பேரே உள்ளனர். தினமும் மீள்குடியேற்றம் நடைபெறுகிறது. தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தவறு என சிலர் விமர்சிக்கின்றனர். எனினும் இதனை நான் தவறென்று கருதவில்லை. மக்களுக்கு அதற்கான உரிமை உள்ளது என்று நாம் நம்புகிறோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் பெரு வெள்ளம்; 52,000 குடும்பங்கள் இடம்பெயர்வு; இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பிதம்; ஒருவர் பலி

front.jpgஅம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக நேற்றுவரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் 52218 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒருவர் உயிர் இழந்துள்ளதாக முகாமைத்துவ நிலைய பொறுப்பதிகாரி ஏ. எஸ். எம். சியாத் தெரிவித்தார்.

அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1220 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் 200 குடும்பங்களைச் சேர்ந்தோர் மாத்திரம் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவுகளை வழங்குவதில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பிரதேச செயலக பிரிவு ரீதியாக கல்முனையில் 7565 குடும்பங்களும் காரைதீவில் 2595 குடும்பங்களும் சாய்ந்தமருதுவில் 6566 குடும்பங்களும் நிந்தவூரில் 7000 குடும்பங்களும் அட்டாளைச்சேனையில் 5842 குடும்பங்களும் ஆலையடிவேம்பில் 5009 குடும்பங்களும் திருக்கோவில் 8426 சம்மாந்துறையில் 9,895 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை பதில் அரச அதிபர் தெரிவித்தார். பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 6200 குடும்பங்களும், நாவிதன்வெளியில் 1800 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இம்மாவட்டத்தில் மழையின் வேகம் சற்றுத் தணிந்துள்ளது. ஆயினும் வானம், மப்பும், மந்தாரமுமாகவே இருந்தது.

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கல்முனை- கிட்டங்கி வீதி, காரைதீவு – அம்பாறை வீதி என்பனவும் சம்மாந்துறை – சவளக்கடை வீதி என்பனவும் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் உள்ளன. கல்முனை – கிட்டங்கி வீதியில் கிட்டங்கி தாம்போதியில் நான்கு அடி வெள்ளமும், காரைதீவு – அம்பாறை வீதியில் மாவடிப்பள்ளி பாலத்திற்கு மேலால் மூன்றடி வெள்ளமும் சம்மாந்துறை – சவளக் கடை வீதியில் வழுக்காமடு எனுமிடத்தில் இரண்டடி வெள்ளமும் பாய்கின்றது.

இவ்வெள்ள நிலைமை காரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் க. பொ. த. சாதாரணதர பரீட்சைக் கடமைக்கு செல்வோரும் பரீட்சை எழுத செல்வோரும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச் சென்றதை அவதானிக்க முடிந்தது. இன்னும் சிலர் பரீட்சை எழுத முடியாமல் திரும்பிச் சென்றனர்.

சவளக்கடை கமநல சேவை கேந்திர நிலையத்தின் கீழுள்ள 6500 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல்களிலிருந்த வரம்புகள் உடைப்பெடுத்து வெள்ளக்காடாக காட்சி தருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இங்குள்ள நீர்ப்பாசனக் குளங்களில் நீர் நிரம்பி வழிகின்றது. இவை உடைப்பெடுப்பதை தடுப்பதற்காக அவற்றின் அவசர கதவுகள் திறக்கப்பட்டு நீர்வெளியே திறந்து விடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ். மோகனராஜா தெரிவித்தார்.

உன்னிச்சை குளத்தின் இரு கதவுகள் திறக்கப்பட்டு 4 1/2 அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. உறுகாமம் குளத்தின் இரண்டு கதவுகள் திறக்கப்பட்டு 6 அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. அதே போன்று 31 அடி உயர நவகிரி குளமும் நிரம்பி வழிவதால் அதன் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. வாகனேரி குளமும் தும்பங்கேணி குளமும் நீர் நிரம்பியுள்ளது. இந்த தகவல்களையும் அவர் கூறினார்.

front.jpg

முகாம்களிலிருந்து விடுதலையாவோர் புதிய நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு ஆதாரம் இல்லை ஐ.நா.வின் ஹோம்ஸ் கூறுகிறார்.

lankaidsleavingcamp.jpgவவுனியா அகதி முகாம்களிலிருந்து மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் உண்மையில் புதிய முகாம்களுக்கு நகர்த்தப்படுகின்றனர் என்பது தொடர்பாக ஆதாரம் இல்லை என்று ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரத்திற்கு பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார். ஐ.நா.வில் நிருபர்கள் மத்தியில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில்; தான் அறிந்த வரை மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் முதலில் இடைத்தங்கல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் பின்னர் அங்கிருந்து துரிதமாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாகவும் ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

மெனிக்பாம் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் ஏனைய முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அத்துடன் காணாமல் போதல் தொடர்பாகவும் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஹோம்ஸ், அவர்களை காணாமல் போனவர்கள் என்று குறிப்பிட முடியாது என்றும் முன்னர் புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் தற்போதும் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர்கள் புனர்வாழ்வு நிலையங்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவர்களின் தொகை 10 ஆயிரம் அல்லது 11 ஆயிரமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இராணுவ ஆட்சியில் ஆர்வம் இருந்தால் எப்போதோ அதனைச் செய்திருப்பேன். “நான் ஒழுக்கமுள்ள ஜெனரல் – சரத்

pr-can.jpgயுத்த வெற்றியை கவசமாக வைத்துக்கொண்டு எவராவது தனது குடும்ப செல்வாக்கை அதிகரிக்க முயற்சித்தாலோ அல்லது சர்வாதிகாரத்தனத்தில் ஒட்டிக்கொண்டு நின்றாலோ சமாதானம் ஏற்படும் என்று கூறமுடியாது என்று எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

அசோசியேற்றட் பிரஸுக்கு வியாழக்கிழமை வழங்கிய பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ள பொன்சேகா, ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்பட்டால் ஜனாதிபதிக்குள்ள அதிகளவான அதிகாரங்களை குறைத்து பிரதமர் தலைமையிலான பாராளுமன்றத்திற்கு வலுவூட்டுவாரென கூறியுள்ளார். ஆனால், பொன்சேகா அதிகளவு அதிகாரங்களை கையிலெடுத்துக் கொண்டு நாட்டை சர்வாதிகார ஆட்சியின் கீழ் இட்டுச் செல்லக்கூடும் என்று ஜனாதிபதி

ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் பலர் கூறுகின்றனர். ஆனால், இக்குற்றச்சாட்டுக்களை பொன்சேகா நிராகரித்திருக்கிறார். இராணுவ ஆட்சியில் ஆர்வமாக இருந்திருந்தால் நீண்டகாலத்துக்கு முன்பே அதனை செய்திருப்பேன். யுத்தத்தில் வெற்றியடைவதற்கு முன்பே அதனை செய்திருப்பேன். ஒழுக்கமுடைய இராணுவத்துக்கு தலைமை தாங்கிய நான் ஒரு ஒழுக்கமுள்ள ஜெனரல் என்று அவர் கூறியுள்ளார். அதேவேளை, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு அரசாங்கத்தின் தலைவர்களுக்காக இயங்கும் குழுக்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கூறும் ஜெனரல் போர் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறார்.

இராணுவத்தைப் பொறுத்தவரை எந்தவொரு போர் குற்றங்களும் இழைக்கப்பட்டதாக எனக்குத் தெரியாது. படையினரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நான் கண்காணித்தேன். பொது மக்களின் பாதுகாப்பை நாம் புறக்கணித்திருந்தால் காப்பாற்றப்பட்ட 3 இலட்சம் பேரில் அரைவாசிப்பேர் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று பொன்சேகா கூறியுள்ளார். தனது முன்னைய பதவியில் தமிழர்களுக்கு நிதி வழங்கியிருந்ததாக கூறுகிறார். நான் பயங்கரவாதத்தை அழித்தேன், பாதிக்கப்பட்ட மக்களை விடுவித்தேன் என்று கூறும் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டிலுள்ள சகல சமூகங்களுக்கும் சம உரிமை சமநீதியை உறுதிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

ஆனால், தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான அதிகாரப்பகிர்வு தொடர்பாக உறுதிப்படுத்த முடியாத தன்மையையே அவர் வெளிப்படுத்துகிறார். இந்த விவகாரத்தை எதிர்கால பாராளுமன்றமே தீர்மானிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர் சம்பள நிலுவையை உடன் வழங்க அமைச்சு நடவடிக்கை – ரூ. 400 மில்லியன் மாகாணங்களுக்கு அனுப்பி வைப்பு

sri-lanka-teacher.jpgஆசிரி யர்களுக்கான நிலுவைச் சம்பளத்தைத் தாமதமின்றி வழங்கு வதற்குக்கல்வயமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்கென 400 மில்லியன் ரூபாவை சம்பந்தப்பட்ட மாகாணங்களுக்கு வழங்கியுள்ளதாகக் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

அந்தந்த மாகாணங்களுக்குரிய நிலுவைச் சம்பளம் உரிய மாகாணக் கல்வியமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அம்மாகாணங்களிலிருந்து கோரப்பட்டிருந்த தொகை முழுமையாக அனுப்பப்பட்டுள்ள தெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரணில் இன்று யாழ். விஜயம்

ranil.jpgஎதிர்க் கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி ஆகியவற்றின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்கின்றார். 2005 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் அவரது யாழ். விஜயம் இதுவே முதற்தடவையாகும். யாழ்.மாநகர சபைத் தேர்தலின் போது அங்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் அதனைத் தவிர்த்துக் கொண்டார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டகையோடு விரைவில் யாழ். விஜயத்தை மேற்கொள்ளப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதன் பிரகாரம் இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் செல்கிறார். இன்று காலை பலாலி விமான நிலையத்தை சென்றடையும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு காலை 10 மணிக்கு நல்லூர் கந்தசாமி கோவிலுக்குச் சென்று விசேட பூசை வழிபாடுகளில் கலந்து கொள்வார்.

அதையடுத்து நல்லை ஆதினம் உட்பட இந்து சமயத் தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது. இச் சந்திப்பையடுத்து யாழ். வர்த்தக சங்கக் குழுவினருடனான சந்திப்பு இடம்பெற விருக்கின்றது. இச் சந்திப்பில் தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் பங்கேற்க விருக்கின்றனர். இக் கலந்துரையாடலின் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்துக்குச் செல்வார். பல்கலைக்கழகத்தில் சந்திப்பை முடித்துக் கொண்டதன் பின்னர் யாழ். ஆயர் இல்லத்துக்குச் சென்று ஆயர் தோமஸ் சௌந்திர நாயகத்தை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே யாழ். நாகவிகாரைக்குச் செல்லும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு அங்கு இடம்பெறும் பௌத்த சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளும்.

இன்றும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் ரணில் விக்கிரம சிங்க உத்தியோகபூர்வமாக நிகழ்ச்சி நிரலுக்கப்பால் வேறுசில நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார் எனவும் யாழ்ப்பாணத்தில் வெளிவரும் தமிழ் பத்திரிகை அலுவலகங்களுக்கு அவர் செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரின் யாழ். விஜயம் தொடர்பான நிகழ்ச்சிநிரல் மற்றும் ஏற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளரான சட்டத்தரணி டி.எம்.சுவாமிநாதன் மேற்கொள்கிறார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க இலங்கை கலைஞர்கள் சங்கம் தீர்மானம்

arti.jpgஜனாதி பதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தமது முழுமையான ஆதரவினை பெற்றுக் கொடுக்கவிருப்பதாக இலங்கை கலைஞர்கள் சங்கம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

தகவல் ஊடக அமைச்சில் நேற்றுக் காலை ஒலி ஒளி நிபுணத்துவ கலந்துரையாடல் எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கப் போவதாக கலைஞர்கள் பகிரங்கமாக அறிவித்தனர்.

திரைப்படத் தயாரிப்பாளர்களான சுமித்ரா பீரிஸ், டக்ளஸ் சிறிவர்தன, ரோஹன வீரசிங்க, சோமரத்ன திசாநாயக்க நடிகர்களான மாலினி பொன்சேகா, ரவீந்திர ரன்தெனிய, ஜெக்சன் அந்தனி, பாடகி நீலா விக்கிரமசிங்க அறிவிப்பாளர் ரேனுக்கா பாலசூரிய ஆகியோர் ஏனைய கலைஞர்கள் சார்பில் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நாட்டிலுள்ள கலைஞர்கள் நாட்டை மிகவும் நேசிப்பவர்கள். பொதுமக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். தேசத்தின் எதிர்காலத்தை ஒப்படைப்பதற்கு சிறந்த தலைவர் ஒருவரை தெரிவு செய்ய பொதுமக்களை வழிகாட்ட வேண்டியது எமது கடமையாகுமென நடிகர் ரவீந்திர ரன்தெனிய தெரிவித்தார். மேலும், திரையுலகில் எனக்கு 40 வருட அனுபவம் உண்டு.

அரசியலிலும் சிறிது உண்டு. கடந்த 30 வருட காலமாக இருந்து வந்த மரண பயம் இப்போது இல்லையென்றால் அதற்குக் காரணம் எமது ஜனாதிபதி தான். ஏன் அவரே தொடர்ந்து நாட்டை ஆட்ச செய்யக் கூடாது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

சோமரத்ன திசாநாயக்க கூறுகையில், சிலர் நாம் ஜனாதிபதியை பந்தம் பிடிப்பதாக கூறுகின்றனர். நாம் போதைப் பொருளை நாட்டுக்குள் கடத்துவதற்காகவோ குற்றச் செயல்களை புரிவதற்காகவோ பந்தம் பிடிக்கவில்லை.

எமது பரம்பரைக்கு நாட்டு மக்களுக்கு அவர்களது எதிர்காலத்தை சரியானதாக தெரிவு செய்து கொள்வதற்காகவே நமது இந்தச் செயற்பாடுகள் அமைந்துள்ளதால் அதையிட்டு நாம் பெருமையடைகிறோம் என்றார்.

யுத்தம் முடிவடைந்து ஆறு மாதங்களே ஆகின்றது. இன்னும் சற்று பொறுமையாக விருப்போம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை தொடர்ந்து நல்வழியில் இட்டுச் செல்வாரென்ற நம்பிக்கையுண்டு. அவருக்கு ஆட்சி செய்வதற்காக மேலும் ஒரு அவகாசத்தை வழங்கிப் பார்ப்போமென மாலினி பொன்சேகா தெரிவித்தார்.

மன்னார் கடலில் எண்ணெய் வளத்தை ஆராய்கிறது இந்திய நிறுவனம்

மன்னார் கடற்படுக்கையில் மசகு எண்ணெய் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்யும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. கெய்ன் இந்தியாவிற்குச் சொந்தமான கெய்ன் லங்கா நிறுவனமானது 100 மில்லியன் டொலர் செலவிலான மதிப்பீட்டுப்பணியை ஆரம்பித்துள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.மார்ச் மாதமளவில் முப்பரிமாண விபரத்திரட்டல் பணியை பூர்த்தி செய்வது தொடர்பாக எதிர்பார்த்திருப்பதாக பிரிட்டனின் கெய்ன் எனேர்ஜி பி.எல்.சி.யின் பிரிவான கெய்ன் இந்தியா தெரிவித்திருக்கிறது.

அதேசமயம் 2011 இன் முதலாவது காலாண்டு பகுதியில் முதலாவது அகழ்வுப் பணியை ஆரம்பிக்கப் போவதாகவும் அந்த அமைப்புக் கூறியுள்ளது. மன்னார் கடற்படுக்கையில் 100 கோடி பரல்களுக்கு மேற்பட்ட எண்ணெய் வளம் இருப்பதை முன்னைய நிலநடுக்க ஆய்வு விபரம் மூலம் கண்டறியப்பட்டதாக இலங்கை கூறியுள்ளது. ஆயினும், எண்ணெய் வளம் தொடர்பாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. “மன்னார் கடற்படுக்கையில் ஆய்வின் போது வெற்றி கிட்டும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை. ஆயினும், பணிகள் இடம்பெறுகின்றன. ஆய்வறிக்கைகளில் நாம் உற்சாகமடைந்துள்ளோம்%27 என்று கெய்ன் லங்காவின் பணிப்பாளர் இந்திரஜித் பானர்ஜி கூறியுள்ளார்.

தலா 3 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட 8 துண்டுகளில் ஒன்றை இலங்கை கெய்னுக்கு வழங்கியுள்ளது. 2007 இல் இந்தியாவுக்கு ஒரு துண்டும் சீனாவுக்கு ஒரு துண்டும் வழங்கப்பட்டன. ஆயினும் இந்த இரு நாடுகளுமே இதுவரை சாதகமான முறையில் பதில் அளிக்கவில்லை. எண்ணெய் இருப்பதை முதலில் கெய்ன் கண்டறிவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்று பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி நிருபர்களுக்கு கூறியுள்ளார்.எதிர்காலத்தில் இரண்டு அல்லது மூன்று துண்டுகளுக்கான கேள்விமனுக் கோரல் தொடர்பாக நாம் பரிசீலித்து வருகிறோம் என்றும் அமைச்சர் பௌசி கூறியுள்ளார். எண்ணெய் வளம் இருப்பது நிரூபிக்கப்பட்டால் இலங்கைக்கு அது மிகவும் நன்மையான விடயமாகும். 2008 இல் 3.4 பில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருளை இலங்கை இறக்குமதி செய்துள்ளது.