எதிர்க் கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி ஆகியவற்றின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்கின்றார். 2005 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் அவரது யாழ். விஜயம் இதுவே முதற்தடவையாகும். யாழ்.மாநகர சபைத் தேர்தலின் போது அங்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் அதனைத் தவிர்த்துக் கொண்டார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டகையோடு விரைவில் யாழ். விஜயத்தை மேற்கொள்ளப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதன் பிரகாரம் இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் செல்கிறார். இன்று காலை பலாலி விமான நிலையத்தை சென்றடையும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு காலை 10 மணிக்கு நல்லூர் கந்தசாமி கோவிலுக்குச் சென்று விசேட பூசை வழிபாடுகளில் கலந்து கொள்வார்.
அதையடுத்து நல்லை ஆதினம் உட்பட இந்து சமயத் தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது. இச் சந்திப்பையடுத்து யாழ். வர்த்தக சங்கக் குழுவினருடனான சந்திப்பு இடம்பெற விருக்கின்றது. இச் சந்திப்பில் தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் பங்கேற்க விருக்கின்றனர். இக் கலந்துரையாடலின் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்துக்குச் செல்வார். பல்கலைக்கழகத்தில் சந்திப்பை முடித்துக் கொண்டதன் பின்னர் யாழ். ஆயர் இல்லத்துக்குச் சென்று ஆயர் தோமஸ் சௌந்திர நாயகத்தை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே யாழ். நாகவிகாரைக்குச் செல்லும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு அங்கு இடம்பெறும் பௌத்த சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளும்.
இன்றும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் ரணில் விக்கிரம சிங்க உத்தியோகபூர்வமாக நிகழ்ச்சி நிரலுக்கப்பால் வேறுசில நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார் எனவும் யாழ்ப்பாணத்தில் வெளிவரும் தமிழ் பத்திரிகை அலுவலகங்களுக்கு அவர் செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரின் யாழ். விஜயம் தொடர்பான நிகழ்ச்சிநிரல் மற்றும் ஏற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளரான சட்டத்தரணி டி.எம்.சுவாமிநாதன் மேற்கொள்கிறார்.