அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக நேற்றுவரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் 52218 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒருவர் உயிர் இழந்துள்ளதாக முகாமைத்துவ நிலைய பொறுப்பதிகாரி ஏ. எஸ். எம். சியாத் தெரிவித்தார்.
அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1220 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் 200 குடும்பங்களைச் சேர்ந்தோர் மாத்திரம் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவுகளை வழங்குவதில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிரதேச செயலக பிரிவு ரீதியாக கல்முனையில் 7565 குடும்பங்களும் காரைதீவில் 2595 குடும்பங்களும் சாய்ந்தமருதுவில் 6566 குடும்பங்களும் நிந்தவூரில் 7000 குடும்பங்களும் அட்டாளைச்சேனையில் 5842 குடும்பங்களும் ஆலையடிவேம்பில் 5009 குடும்பங்களும் திருக்கோவில் 8426 சம்மாந்துறையில் 9,895 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை பதில் அரச அதிபர் தெரிவித்தார். பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 6200 குடும்பங்களும், நாவிதன்வெளியில் 1800 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இம்மாவட்டத்தில் மழையின் வேகம் சற்றுத் தணிந்துள்ளது. ஆயினும் வானம், மப்பும், மந்தாரமுமாகவே இருந்தது.
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கல்முனை- கிட்டங்கி வீதி, காரைதீவு – அம்பாறை வீதி என்பனவும் சம்மாந்துறை – சவளக்கடை வீதி என்பனவும் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் உள்ளன. கல்முனை – கிட்டங்கி வீதியில் கிட்டங்கி தாம்போதியில் நான்கு அடி வெள்ளமும், காரைதீவு – அம்பாறை வீதியில் மாவடிப்பள்ளி பாலத்திற்கு மேலால் மூன்றடி வெள்ளமும் சம்மாந்துறை – சவளக் கடை வீதியில் வழுக்காமடு எனுமிடத்தில் இரண்டடி வெள்ளமும் பாய்கின்றது.
இவ்வெள்ள நிலைமை காரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் க. பொ. த. சாதாரணதர பரீட்சைக் கடமைக்கு செல்வோரும் பரீட்சை எழுத செல்வோரும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச் சென்றதை அவதானிக்க முடிந்தது. இன்னும் சிலர் பரீட்சை எழுத முடியாமல் திரும்பிச் சென்றனர்.
சவளக்கடை கமநல சேவை கேந்திர நிலையத்தின் கீழுள்ள 6500 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல்களிலிருந்த வரம்புகள் உடைப்பெடுத்து வெள்ளக்காடாக காட்சி தருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இங்குள்ள நீர்ப்பாசனக் குளங்களில் நீர் நிரம்பி வழிகின்றது. இவை உடைப்பெடுப்பதை தடுப்பதற்காக அவற்றின் அவசர கதவுகள் திறக்கப்பட்டு நீர்வெளியே திறந்து விடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ். மோகனராஜா தெரிவித்தார்.
உன்னிச்சை குளத்தின் இரு கதவுகள் திறக்கப்பட்டு 4 1/2 அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. உறுகாமம் குளத்தின் இரண்டு கதவுகள் திறக்கப்பட்டு 6 அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. அதே போன்று 31 அடி உயர நவகிரி குளமும் நிரம்பி வழிவதால் அதன் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. வாகனேரி குளமும் தும்பங்கேணி குளமும் நீர் நிரம்பியுள்ளது. இந்த தகவல்களையும் அவர் கூறினார்.