வவுனியா அகதி முகாம்களிலிருந்து மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் உண்மையில் புதிய முகாம்களுக்கு நகர்த்தப்படுகின்றனர் என்பது தொடர்பாக ஆதாரம் இல்லை என்று ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரத்திற்கு பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார். ஐ.நா.வில் நிருபர்கள் மத்தியில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில்; தான் அறிந்த வரை மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் முதலில் இடைத்தங்கல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் பின்னர் அங்கிருந்து துரிதமாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாகவும் ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார்.
மெனிக்பாம் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் ஏனைய முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அத்துடன் காணாமல் போதல் தொடர்பாகவும் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஹோம்ஸ், அவர்களை காணாமல் போனவர்கள் என்று குறிப்பிட முடியாது என்றும் முன்னர் புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் தற்போதும் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர்கள் புனர்வாழ்வு நிலையங்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவர்களின் தொகை 10 ஆயிரம் அல்லது 11 ஆயிரமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.