யுத்த வெற்றியை கவசமாக வைத்துக்கொண்டு எவராவது தனது குடும்ப செல்வாக்கை அதிகரிக்க முயற்சித்தாலோ அல்லது சர்வாதிகாரத்தனத்தில் ஒட்டிக்கொண்டு நின்றாலோ சமாதானம் ஏற்படும் என்று கூறமுடியாது என்று எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
அசோசியேற்றட் பிரஸுக்கு வியாழக்கிழமை வழங்கிய பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ள பொன்சேகா, ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்பட்டால் ஜனாதிபதிக்குள்ள அதிகளவான அதிகாரங்களை குறைத்து பிரதமர் தலைமையிலான பாராளுமன்றத்திற்கு வலுவூட்டுவாரென கூறியுள்ளார். ஆனால், பொன்சேகா அதிகளவு அதிகாரங்களை கையிலெடுத்துக் கொண்டு நாட்டை சர்வாதிகார ஆட்சியின் கீழ் இட்டுச் செல்லக்கூடும் என்று ஜனாதிபதி
ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் பலர் கூறுகின்றனர். ஆனால், இக்குற்றச்சாட்டுக்களை பொன்சேகா நிராகரித்திருக்கிறார். இராணுவ ஆட்சியில் ஆர்வமாக இருந்திருந்தால் நீண்டகாலத்துக்கு முன்பே அதனை செய்திருப்பேன். யுத்தத்தில் வெற்றியடைவதற்கு முன்பே அதனை செய்திருப்பேன். ஒழுக்கமுடைய இராணுவத்துக்கு தலைமை தாங்கிய நான் ஒரு ஒழுக்கமுள்ள ஜெனரல் என்று அவர் கூறியுள்ளார். அதேவேளை, பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு அரசாங்கத்தின் தலைவர்களுக்காக இயங்கும் குழுக்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கூறும் ஜெனரல் போர் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறார்.
இராணுவத்தைப் பொறுத்தவரை எந்தவொரு போர் குற்றங்களும் இழைக்கப்பட்டதாக எனக்குத் தெரியாது. படையினரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நான் கண்காணித்தேன். பொது மக்களின் பாதுகாப்பை நாம் புறக்கணித்திருந்தால் காப்பாற்றப்பட்ட 3 இலட்சம் பேரில் அரைவாசிப்பேர் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று பொன்சேகா கூறியுள்ளார். தனது முன்னைய பதவியில் தமிழர்களுக்கு நிதி வழங்கியிருந்ததாக கூறுகிறார். நான் பயங்கரவாதத்தை அழித்தேன், பாதிக்கப்பட்ட மக்களை விடுவித்தேன் என்று கூறும் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டிலுள்ள சகல சமூகங்களுக்கும் சம உரிமை சமநீதியை உறுதிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.
ஆனால், தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான அதிகாரப்பகிர்வு தொடர்பாக உறுதிப்படுத்த முடியாத தன்மையையே அவர் வெளிப்படுத்துகிறார். இந்த விவகாரத்தை எதிர்கால பாராளுமன்றமே தீர்மானிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.