மன்னார் கடலில் எண்ணெய் வளத்தை ஆராய்கிறது இந்திய நிறுவனம்

மன்னார் கடற்படுக்கையில் மசகு எண்ணெய் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்யும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. கெய்ன் இந்தியாவிற்குச் சொந்தமான கெய்ன் லங்கா நிறுவனமானது 100 மில்லியன் டொலர் செலவிலான மதிப்பீட்டுப்பணியை ஆரம்பித்துள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.மார்ச் மாதமளவில் முப்பரிமாண விபரத்திரட்டல் பணியை பூர்த்தி செய்வது தொடர்பாக எதிர்பார்த்திருப்பதாக பிரிட்டனின் கெய்ன் எனேர்ஜி பி.எல்.சி.யின் பிரிவான கெய்ன் இந்தியா தெரிவித்திருக்கிறது.

அதேசமயம் 2011 இன் முதலாவது காலாண்டு பகுதியில் முதலாவது அகழ்வுப் பணியை ஆரம்பிக்கப் போவதாகவும் அந்த அமைப்புக் கூறியுள்ளது. மன்னார் கடற்படுக்கையில் 100 கோடி பரல்களுக்கு மேற்பட்ட எண்ணெய் வளம் இருப்பதை முன்னைய நிலநடுக்க ஆய்வு விபரம் மூலம் கண்டறியப்பட்டதாக இலங்கை கூறியுள்ளது. ஆயினும், எண்ணெய் வளம் தொடர்பாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. “மன்னார் கடற்படுக்கையில் ஆய்வின் போது வெற்றி கிட்டும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை. ஆயினும், பணிகள் இடம்பெறுகின்றன. ஆய்வறிக்கைகளில் நாம் உற்சாகமடைந்துள்ளோம்%27 என்று கெய்ன் லங்காவின் பணிப்பாளர் இந்திரஜித் பானர்ஜி கூறியுள்ளார்.

தலா 3 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட 8 துண்டுகளில் ஒன்றை இலங்கை கெய்னுக்கு வழங்கியுள்ளது. 2007 இல் இந்தியாவுக்கு ஒரு துண்டும் சீனாவுக்கு ஒரு துண்டும் வழங்கப்பட்டன. ஆயினும் இந்த இரு நாடுகளுமே இதுவரை சாதகமான முறையில் பதில் அளிக்கவில்லை. எண்ணெய் இருப்பதை முதலில் கெய்ன் கண்டறிவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்று பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி நிருபர்களுக்கு கூறியுள்ளார்.எதிர்காலத்தில் இரண்டு அல்லது மூன்று துண்டுகளுக்கான கேள்விமனுக் கோரல் தொடர்பாக நாம் பரிசீலித்து வருகிறோம் என்றும் அமைச்சர் பௌசி கூறியுள்ளார். எண்ணெய் வளம் இருப்பது நிரூபிக்கப்பட்டால் இலங்கைக்கு அது மிகவும் நன்மையான விடயமாகும். 2008 இல் 3.4 பில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருளை இலங்கை இறக்குமதி செய்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *