எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஊடகங்களின் ஊகங்கள் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? : பி எம் புன்னியாமீன்

Commissioner of Elections Dayananda Dissanayakeஇலங்கையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான 6ஆவது ஜனாதிபதித் தேர்தல் 2010 ஜனவரி 26ஆந் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இருந்தபோதிலும்கூட,  பிரதான வேட்பாளர்கள் இருவரே மக்கள் முன் சோபிக்கின்றனர். ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரும்,  தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ அடுத்தவர் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா. இவர்கள் இருவரும் தவிர ஏனைய 20 வேட்பாளர்களும் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் 5%  வாக்குகளையாவது பெறுவார்களா என்பது சந்தேகத்திக்கிடமானதே.

இலங்கையில் காணப்படக்கூடிய அனைத்து அச்சு ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் மேற்குறிப்பிட்ட இரண்டு வேட்பாளர்களை பிரதானப்படுத்தியே தமது செய்திகளுக்கும், கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. எந்தவொரு ஊடகமாவது ஏனைய 20 வேட்பாளர்களுள் ஒருவருக்காவது முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவ்வாறு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் அது பிரதான வேட்பாளர்களை மையப்படுத்திய முக்கியத்துவமாகவே அமைந்திருக்கும். மறுபுறமாக இத்தேர்தலில் போட்டியிடும் ஏனைய 20 வேட்பாளர்களுள் சிலர் பிரதான வேட்பாளர்களுக்கு சார்பாளர்களாக போட்டியிடுவதும் இங்கு அவதானிக்கத்தக்க விடயமாகும். எனவேதான் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று தேர்தல் ஆணையாளரின் உரையில் “ஒவ்வொரு வேட்பாளர்களும் தமக்காகவே பிரசாரம் செய்ய வேண்டு”மென்பதை வலியுறுத்தியிருந்தார். இருப்பினும்,  இந்த வேட்பாளர்கள் சிலர் மறைமுகமாக பிரதான வேட்பாளர்களுக்கு சார்பான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதை அறியமுடிகின்றது.

இன்று இலங்கையில் அச்சு ஊடகங்களை எடுத்து நோக்கும்போது 100க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் நாளிதழ்களாகவும்,  வார இதழ்களாகவும் மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமடைந்துள்ளன. தமிழ்மொழியுடன் ஒப்பிட்டு நோக்கும்போது சிங்கள மொழியில் இதன் தாக்கம் மிகமிக அதிகம். குறிப்பாக 1994ஆம் ஆண்டு தேர்தல் முடிவில் சிங்கள ஊடகங்களின் பங்களிப்பு விசாலமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை பல ஆய்வுகள் தெளிவுபடுத்தியிருந்தன. இலங்கையில் சிங்கள மொழி மூலமாக லங்காதீப, திவயின,  லக்பிம,  தினமின போன்ற பிரதான தேசிய தினசரிப் பத்திரிகைகளும் ராவய,  இருதின,  சிலுமின, சத்தின,  மவ்பிம,  ரிவிர, லங்கா போன்ற வாரப் பத்திரிகைகளும் தமிழ்மொழி மூலமாக தினகரன்,  தினக்குரல், சுடரொளி, வீரகேசரி போன்ற தேசிய நாளிதழ்களும்,  நவமணி போன்ற வாரப் பத்திரிகைகளும் ஆங்கில மொழி மூலம் டெய்லி நிவுஸ்,  த. ஐலன்ட், டெயிலி மிரர் போன்ற பிரதான தேசிய தினசரிப் பத்திரிகைகளும் சன்டே ஒப்ஸேவர், சன்டே டைம்ஸ், சன்டே லீடர்  போன்ற வாரப் பத்திரிகைகளும் காணப்படுகின்றன. இந்த பத்திரிகைகளில் அனேகமானவை தாம் நடுநிலைமைப் போக்குடன் ஜனாதிபதி தேர்தலில் செயல்படுகின்றோம் என்று கூறிக் கொண்டாலும்கூட,  உண்மையான நடுநிலைமைப் போக்கினை அவதானிக்க முடிகின்றதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. குறிப்பாக மேற்குறிப்பிட்ட பத்திரிகைகளில் சில பத்திரிகைகள் அரசாங்கப் பத்திரிகைகளாகும். பெரும்பாலான பத்திரிகைகள் தனியாருக்கு சொந்தமானவையாகும்.   ஏதோவொரு வகையில் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்~வுக்கு அல்லது சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு சேர்க்கும் பத்திரிகைகளாகவே இவைகள் காணப்படுகின்றன. அதேபோல வானொலியை எடுத்துக் கொண்டாலும் இன்று 70க்கு மேற்பட்ட வானொலி சேவைகள் மும்மொழியிலும் உள்ளன. இவைகள் செய்திகளை ஒலிபரப்புபவை. 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேவைகள் இருக்கின்றன. 100க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் இருக்கின்றன. இவைகளிலும் சில அரசாங்க வானொலி, தொலைக்காட்சிகளாகவும் அதிகமானவை தனியாருக்கு சொந்தமான வானொலி, தொலைக்காட்சிகளாகவும் இருக்கின்றன.

இவ்விடத்தில் தனியார் ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து அவை தத்தமது உரிமையாளர்களின் கொள்கைகளுக்கிணங்க நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இங்கு சில ஊடகங்கள் ஐக்கிய தேசியக்கட்சியினால் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் அல்லது மக்கள் விடுதலை முன்னணியினால் நேரடியாக நடத்தப்பட்டு வருபவை. அல்லது பிரதான கட்சியான முக்கியஸ்தர்களினால் மறைமுகமாக வழிநடத்தப்படுபவை. எனவே எவ்வளவு தான் நடுநிலைமைப் போக்கு எனக் காட்டினாலும்கூட அவற்றின் சார்பு நிலை ஏதோவொரு பக்கம் சரிந்திருப்பதை பொதுப்படையாகக் காணமுடிகின்றது. எனவே அரசாங்க ஊடகங்களில் மாத்திரமல்லாமல் தனியார் ஊடகங்களிலும் பக்க சார்பு நிலையிருப்பதை எடுத்துக் கொள்ளலாம். இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்களை ஒப்புநோக்குமிடத்து அரசாங்க ஊடகங்களைவிட தனியார் ஊடகங்களில் மக்கள் மயமாக்கல் மிகைத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஊடகங்கள் மக்கள் ஈர்க்கத்தக்க வகையில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை உள்வாங்கியிருப்பதினால் இத்தகைய பிரபல்யம் தவிர்க்க முடியாது ஆகிவிடுகின்றது. மேலும் தனியார் ஊடகங்கள் சர்வதேச ஊடகப் பின்னலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்திருப்பதினால் சர்வதேச சக்திகளுக்கும் உட்பட்டேவிடுகின்றன.

இத்தகைய பின்னணியை வைத்துக் கொண்டே இலங்கை ஊடகங்களை நோக்க வேண்டியுள்ளது.

1956ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ஆழமாக ஆராயுமிடத்தும்,  பல ஆய்வு அறிக்கைகளிலிருந்தும் பின்வரும் முடிவு வெளிப்படுகின்றது. அதாவது,  இலங்கையிலுள்ள வாக்காளர்களுள் சுமார் 30 தொடக்கம் 32 சதவீதத்தினர் யார் போட்டியிட்டாலும் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள். அதேபோல 20 தொடக்கம் 23 சதவீதத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள். நிச்சயமாக இந்த வீதத்தினரின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமே செல்லக்கூடியவை. இதனைக் கிராமிய மட்டத்தில் பின்வருமாறு எளிமையாகச் சொல்வார்கள் “என் உடலில் ஓடுவது பச்சை இரத்தம்,  என் உடலில் ஓடுவது நீல இரத்தம்.” என்று. இந்த அளவிற்கு அந்த நிலை வலுவடைந்துள்ளது.

இவ்வாறே கட்சியுடன் ஐக்கியமானவர்களின் வாக்கு எத்தகைய நிலையிலும் அக்கட்சியையே சார்ந்திருக்கும். இதில் எத்தகைய மாற்றங்களும் ஏற்பட இடமில்லை. ஆனால் அரசாங்கத்தை கவிழ்ப்பதோ அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தீர்மானிப்பதோ சுமார் 40 தொடக்கம் 50 வரையிலான இடைப்பட்ட வாக்காளர்களே. பொதுவாக இவை மிதக்கும் வாக்குகள் எனக் கொள்ளப்படுகின்றன. ஒரு பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வரக்கூடிய அரசாங்கத்தின் கொள்கைகளிலோ அன்றேல் ஒரு ஜனாதிபதித் தேர்தலில் தெரிவு செய்யப்படக் கூடிய ஜனாதிபதியின் கொள்கைகளையோ விளங்கி வாக்களிக்கக்கூடிய இந்த மிதக்கும் வாக்காளர்கள் உள்ளனர். எனவே,  போட்டியிடும் பிரதானக் கட்சிகள் போட்டியின் பிரதான வேட்பாளர்களின் கொள்கையாக்கங்களை விளக்க வேண்டியர்களாக இத்தகைய மிதக்கும் வாக்கினரே உள்ளனர். எனவே இவர்கள் தான் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தி.

தேர்தல் காலத்தில் ஊடகங்களின் பணியென்றுக் கூறும்போது இந்த மிதக்கும் வாக்காளர்களின் மனோநிலையைத் தீர்மானிக்கக்கூடியதாக அமைதல் வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று ‘வாக்காளரின் மூளையை மழுங்கடிக்கும் விதத்தில் ஊடகங்கள் செயற்படக்கூடாது” என  தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வேண்டுகோள் விடுத்ததை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.

அந்நிகழ்வில் தேர்தல் ஆணையாளர் “சட்டத்தின் பிரகாரம் அரச ஊடகங்களை மட்டும் கட்டுப்படுத்தும் அதிகாரங்களே தனக்கிருப்பதாகவும் இன்று பெருமளவில் தனியார் ஊடகங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் சில ஊடகங்கள் வாக்காளர்களின் அறிவுத் திறனை மழுங்கடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் கவலை தெரிவித்தார். அரச ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஏனைய ஊடக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவும் தான் சட்டத்தின் பிரகாரம் கட்டுப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட பெயர் குறிப்பிடாமல் பொதுப்படையான நிலையில் இலங்கையில் அச்சு,  இலத்திரனியல் ஊடகங்களை ஒப்புநோக்கும்போது தற்போதைய நிலையை பிரதான வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் கரிபூசிக்கொள்ளும் நிகழ்வுகளை மிகைப்படுத்தி பிரசுரிப்பதையும்,  ஒலி / ஒளிபரப்புவதையுமே காணமுடிகின்றது. ஆனால், ஒருவருக்கொருவர் குறைகூறும் செய்திகளை மக்கள் கவரும் வகையில் வெளியிட்டு வாசகர்களை கவர விளையும் அதேநேரத்தில் பிரதான வேட்பாளர்களை கொள்கையாக்கங்கள் குறித்து இவைகள் முக்கியத்துவப்படுத்த மறந்துவிடுகின்றன.

பிரதான வேட்பாளர்களில் ஒருவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ தான் பதவிக்கு வரும் பட்சத்தில் தனது கொள்கையாக மஹிந்த சிந்தனை 02 அமைந்திருக்கும் என்றும் மஹிந்த சிந்தனை 02 தற்போதைய செயற்பாட்டின் தொடர்ச்சியாக அமையும் என்றும் குறிப்பிடுகின்றார். ஆனால்,  இதுவரை தாம் பதவிக்கு வரும் ஆறாண்டுகளைக் கொண்ட காலத்தில் தனது பொருளாதாரத் திட்டம் என்ன? தற்போதைய இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகள் மேற்கொள்ளப்படப் போகின்றன? என்ற விளக்கங்கள் சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட்டதாக தோன்றவில்லை.

அதேபோல பிரதான எதிர்க்கட்சிப் பொது வேட்பாளராக சரத்பொன்சேக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக எத்தகைய உறுதிப்பாடுகளையும் வெளிப்படுத்தியதாகக் காணமுடியவில்லை. இது தொடர்பாக அவரிடம் நிலையான கொள்கைகள் இருப்பதாக தோன்றவுமில்லை. தான் பதவிக்கு வருமிடத்து நடைமுறைப்படுத்தவுள்ளதாக 10 அம்சங்கள் கொண்ட திட்டமொன்றினை 2009 டிசம்பர் 18ஆம் திகதி கண்டியில் வைத்து அவர் வெளியிட்டார். ஆனால்,  ஐக்கியத் தேசியக் கட்சியோ அன்றேல் சரத்பொன்சேக்காவை வேட்பாளராக அமர்த்தியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியோ சரத்பொன்சேக்காவின் ஆறாண்டு பதவிக்காலத்துக்கான நிலையான திட்டமொன்றை வெளிப்படுத்த தவறி வருகின்றது. தான் பதவிக்கு வருமிடத்து ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி இல்லாமலாக்கப்படும் என்றும் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புச் சொல்லும் மந்திரிசபை ஆட்சிமுறை மீண்டும் அமைக்கப்படும் என்றும் இதில் பிரதம மந்திரி நிறைவேற்று அதிகாரமிக்கவராக காணப்படுவார் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

1994ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாம் கேட்கும் முக்கியமான வாக்குறுதி தான் பதவிக்கு வந்ததும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துவிடுவோம் என்பதாகும். ஆனால், அது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதிகாரத்தில் வரக்கூடிய எவரும் தனது அதிகாரத்தை இலகுவாக விட்டுக் கொடுத்ததற்கான வரலாறு உலகளாவிய ரீதியிலே உதாரணப்படுத்துவது கடினம். இத்தகைய நிலையில் ஒரு இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத்பொன்சேகா தனக்கு அதிகாரம் கிடைக்குமிடத்து அவ்வதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் கோருவதைப் போல இலகுவில் விட்டுக் கொடுத்துவிடுவாரா எனும் கேள்வியும் எழுகின்றது. தற்போதைய அரசியல் நிலைகளின் பிரகாரம் ஒரு பிரதான கட்சியற்ற பொன்சேகாவால் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தை எவ்வாறு பெற முடியும் என்பது மிதக்கும் வாக்காளர்களிடையே சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றன.

எனவே,  இலங்கையில் காணப்படக்கூடிய அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியான மிதக்கும் வாக்காளர்களின் மனத்தெளிவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஊடகங்களின் செயற்பாடுகள் அமைந்தால் மாத்திரமே ஊடக தர்மம் நிலைப்படுத்தப்பட்டதாக இருக்கும். மேலே ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல ஐக்கியத் தேசியக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரின் நிலையான வாக்காளர்களை வைத்து ஊடகங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமிடத்து அதனால் பலன் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால்ää இரண்டு பிரதான வேட்பாளர்களையும் மையப்படுத்தி நடைபெறும் பொதுக்கூட்டங்கள் கட்சியின் நிலையான ஆதரவாளர்களைக் கொண்டே நிரம்புகின்றன.

மிதக்கும் வாக்காளரின் நிலை தேர்தல் நடைபெறும் வரை வெளிப்பட மாட்டாது. மிதக்கும் வாக்காளர்கள் பெரும்பாலானோர் படிப்பறிவுள்ளோர். எனவே, படிப்பறிவோருக்கும் விளக்கமளிக்கக்கூடிய விதத்தில் இத்தகைய ஊடகங்களின் பங்களிப்பு இடம்பெறுதல் அவசியமானதாகும். இலங்கைத் தேர்தல்களில் ஊடகங்களின் பங்களிப்பு என்று கூறும்போது நிலையான கட்சி ஆதரவாளர்களின் காட்சிப்படுத்தலைவிட மிதக்கும் வாக்காளர்களின் மனோநிலையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பே தீர்மான சக்தியாக அமையும். இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள இத்தருணத்தில் பிரதம வேட்பாளர்கள் தமது நிலையான திட்டத்தை தெளிவுபடுத்த வேண்டிய நிலையிலும்ää யதார்த்தத்தைத் தெளிவுபடுத்த வேண்டிய நிலையிலும் உள்ளனர். இந்த தன்மையை 2010 ஜனவரி 26ஆந் திகதி தேர்தல் முடிவினை தீர்மானிக்கும் சக்தியாக அமையும். 

 ஊடகங்கள் பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:

ஊடகம் என்பது ஜனநாயகத்தின் உயிர் நாடியாகக் கொள்ளலாம். கருத்துக்களைத் தெரிவிக்கும் அதேநேரம்,  கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. இந்த அடிப்படையில் கருத்துக்களைத் தெரிவிக்கவும் கருத்துக்களைத் தெரிந்து கொள்ளவும் ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் விசாலமானது. எனவே ஊடகமானது சுதந்திரமாகவும் நடு நிலைமையுடனும் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஊடகச் சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரத்தைக் குறிக்கும். சட்டமன்றம்,  நிர்வாகம்,  நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்படுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திர ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. அதே நேரம் நடு நிலைமை எனும் போது பக்க சார்பற்ற பொது நிலையை பொருள் படுத்துகின்றது.

ஒரு சம்பவம் அல்லது செய்தியை சம்பவ இடத்திற்குச் சென்று உண்மைகளை ஆய்ந்து அல்லது சம்பவம் அல்லது செய்தியை சான்றுகளுடன் உறுதிப்படுத்திக்கொண்டு அதை ஆதாரப்பூர்வமாக வெளியிடுவதே ஊடகத் தர்மமாகும். உலகில் வாழும் மக்கள் அனைவரும் அன்றாட நிகழ்வுகள் அனைத்துத் தகவல்களையும் செய்தித்தாள்,  வானொலி,  தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் வாயிலாகவே அறிந்துக்கொள்கின்றனர். எனவே மக்களுக்கு உண்மைகளை ஆதாரப்பூர்வமாக அறியத் தரவேண்டிய தார்மீகப் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. அதன் பொறுப்பை சரிவரச் செய்வதே ஊடகத் தர்மமாகும். அவ்வாறான நிலை காணப்படின் மாத்திரமே ஜனநாயக பண்பினை வெளிப்படுத்துவதாக அமையும்.

19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் அச்சு ஊடகங்கள் வளர்ச்சியடையலாயிற்று. இக்காலகட்டங்களில் அச்சு ஊடகங்களில் கருத்துக்களைத் தெரிவிப்போரும்,  அச்சு ஊடகங்களினூடாக கருத்துக்களை அறிந்து கொள்ளவிளைவோரும் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்பட்டனர். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் நிலவிய வாசிப்பறிவின்மை காரணமாக அச்சு ஊடகங்களினூடாக கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் நிலை மிகமிக குறுகிய வட்டத்துக்குள் மாத்திரமே முடக்கப்பட்டிருந்தது.

20ஆம் நூற்றாண்டில் ஊடகத்துறையின் வளர்ச்சியானது ஓர் உயரிய நிலையை அடைகின்றது. அச்சு ஊடகத்துடன் வானொலியின் அறிமுகமும், அதைத் தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மேற்குலக நாடுகளில் தொலைக்காட்சியின் அறிமுகமும் கருத்துப் பரிமாற்றத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. இக்கட்டத்தில் மேற்குலக நாடுகளில் மாத்திரமல்லாமல் தற்போதைய மூன்றாம் உலக நாடுகளிலும் வானொலிப் பாவனை அதிகரித்தது. இங்கெல்லாம் ஆரம்பத்தில் அரசாங்கத்தினாலேயே வானொலி ஒலிபரப்புகள் ஏற்படுத்தப்பட்டதுடன், கட்டுப்படுத்தவும்பட்டன. இலங்கையைப் பொறுத்தவரை “இலங்கை வானொலி” வானொலித் துறையில் முன்னோடியாக திகழ்கின்றது.

வானொலியின் பரவலான அறிமுகத்துடன் தகவல்களை “ஒலி” வடிவில் மக்களால் கேட்டுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவானதினால் வானொலியைக் கேட்பதற்கு வாசிப்பறிவற்றநிலை தடையாக அமையவில்லை. தகவல்களையும், செய்திகளையும் வழங்குவதுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாது பொழுதுபோக்கு அம்சமாக இசையினையும் இது தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டதினால் படிப்படியாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தன. இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்ததன் பின்பு “இலங்கையில் வானொலி” பிரதான ஊடகமாக மாறியதுடன், பாமர மக்களிடையேயும் பாவனைப்படுத்தப்படும் நிலை உருவெடுத்தது.

1926ஆம் ஆண்டில் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டது. தொலைக்காட்சி என்பது ஒரு கம்பியில்லா தொலைத்தொடர்பு சாதனம் ஆகும். ஒளி,  ஒலியை ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிறது. பின்னர் இதைத் தொலைக்காட்சி சாதனம் ஊடாக நாம் பார்க்கவும்,  கேட்கவும் கூடிய விதத்தில் தொகுத்துத் தருகின்றன. இது கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது. ஆனால்,  தொலைக்காட்சிப் பாவனை 20ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை பரவலாக்கம் அடையவில்லை. இதன் தாக்கம் வானொலியை விட பயன்மிக்கதாக இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மேற்குலக நாடுகளில் தொலைக்காட்சியின் பாவனை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் அதிகரிக்கலாயிற்று.

மூன்றாம் உலக நாடுகளில் தொலைக்காட்சியின் அறிமுகம் 20ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டங்களிலே ஏற்படுத்தப்பட்டன. அநேகமான மூன்றாம் உலக நாடுகளில் தொலைக் காட்சியின் அறிமுகத்தை அந்நாடுகளின் அரசாங்கங்களே ஏற்படுத்தின. இலங்கையில் 1978ஆம் ஆண்டு சுயாதீனத் தொலைக்காட்சிச் சேவை முதல் தொலைக்காட்சிச் சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூபவாஹினி தேசிய ரீதியில் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்தது. தற்போது இலங்கையில் 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேவைகள் காணப்படுகின்றன. இவைகளுள் அநேகமானவை தனியாருக்குச் சொந்தமானவை. தொலைக்காட்சியிலும் தகவல்கள், செய்திகளை அறிவதுடன், பொழுதுபோக்கு அம்சங்களும் மிகைத்திருப்பதினால் வானொலிப் பாவனையைவிட 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொலைக்காட்சிப் பாவனை கூடிய செல்வாக்கினை செலுத்த ஆரம்பித்தது.

20ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டங்களில் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுடன் இன்னும் பலவிதமான தொடர்பாடல் ஊடகங்கள் மக்கள் முன் அறிமுகமாகின. குறிப்பாக மேற்குறிப்பிடப்பட்ட சேவைகள் பல வடிவங்களில் நவீனத்துவப்படுத்தப்பட்டதுடன்,  இணையத்தின் அறிமுகத்துடன் இணையத்தளங்களும் ஒரு முக்கியமான கருத்துப் பரிமாற்ற ஊடகமாக மாறலாயிற்று. இந்த இணைய ஊடகங்கள் 21ஆம் நூற்றாண்டின் முதலாம் தசாப்தம் நிறைவடையும் இக்காலகட்டத்தில் மேற்குலக நாடுகளில் வளர்ச்சி கண்ட அளவிற்கு மூன்றாம் உலக நாடுகளில் வளர்ச்சி காணாவிடினும்கூட தற்போதைய நிலையில் அவைகளும் வேகமாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து கொண்டே வருகின்றன.

எனவே, ஆரம்ப காலகட்டங்களை விட மிலேனியத்தில் வாழும் எமக்கு ஊடகங்களின் தாக்கம் பல வழிகளிலும் மிகைத்ததாகவே உள்ளன. இன்றைய நிலையில் மேற்கத்திய நாடுகளில் மாத்திமல்லாமல் வளர்முக நாடுகளிலும்கூட ஊடகங்கள் பாரிய தாக்கங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது மறுப்பதற்கு இயலாது. எனவேதான் ஜனநாயக விழுமியங்களை மக்கள் முன் வைப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு பிரதான இடத்தைப் பெறுகின்றன எனலாம்.

இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை,  வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து ஒன்றில் அவை அரசாங்க ஊடகமாக இருப்பின் அதிகார வர்க்கத்தின் தாக்கங்கள் காணப்படலாம். அன்றேல் தனியார் ஊடகமாக இருப்பின் அந்த ஊடகத்துக்குச் சொந்தமான உரிமையாளர் அல்லது அந்த ஊடகத்துக்கு நிதியுதவியை வழங்கும் தனிப்பட்டவர் அல்லது குழுவினரின் செல்வாக்குக்கு உட்பட்டதாக இருக்கலாம். மறுபுறமாக தனியார் ஊடகங்கள் வர்த்தக நோக்கத்துடன் செயற்படுவதனால் செய்திகளையோ,  தகவல்களையோ தான் முந்தி ஒலி / ஒளிபரப்ப வேண்டும் என்ற நோக்கில் அவசரத்தன்மையுடன் ஒலி / ஒளிபரப்புவதுடன் சிலநேரங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களும் முக்கியத்துவப்படுத்தப்பட்டு விடுகின்றன. இத்தகைய நிலைகளினால் ஊடக தர்மம் செயலிழந்து வருவதை பல சந்தர்ப்பங்களிலும் அவதானிக்க முடிகிறது.

உதாரணமாக மேற்குல நாடுகளின் ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து அந்த ஊடகங்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளின் கருத்துக்களை திணிப்பதில் கூடிய அக்கறை காட்டி வருகின்றன. அதுமாத்திரமல்ல மூன்றாம் உலக நாடுகளிலும் முதலாளித்துவம் சார்ந்த தனது மேலைத்தேய பண்புகளை நியாயப்படுத்தி அவற்றை ஏதோ ஒரு வகையில் திணிக்க உடந்தையாக இருந்து கொண்டிருக்கின்றன. இதனை மேலும் தெளிவுபடுத்துவதாயின் அமெரிக்கவாதத்தின் ஏகாதிபத்தியத்தை உலகில் நிலைநிறுத்தி உலகில் உயர்ந்த நிர்வாகமும், சட்டவாக்கமும்,  நீதித்துறையும் அமெரிக்காவிடமே உள்ளது என்பதை எடுத்துக் காட்டவே சர்வதேச ஊடகங்கள் முனைகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகத்தை உள்ளங் கைக்குள் சுருக்கிவிட்ட இந்த சக்திகளால் இவற்றை இலகுவாக கையாள முடிகின்றன.

இதே பின்னணியில் தான் 3ஆம் உலக ஊடகங்களும் இன்று மாறிவிட்டன. குறிப்பாக 3ஆம் உலக நாடுகளின் ஊடகங்களும் அதிகார வர்க்கத்தின் முகவர்களாக அன்றேல் அதிகாரத்துக்காகப் போராடுபவர்களின் முகவர்களாக மாறிவிட்டன. இதனால் ஜனநாயகம் எனும் போது அதிகார வர்த்தக்திற்குரிய ஒரு முகப்பூச்சாகவே உள்ளதே அன்றி உண்மை நிலையினை பிரதிபலிப்பதாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இருப்பதில்லை.

தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் அமில தேரர் நேற்று கைது: வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரிடம் பண மோசடி

amila.jpgதேசப் பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் வண. தம்மபர அமில தேரர் நேற்றுக் காலை சி.ஐ.டி. யினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார். தலங்கமவில் வைத்து நேற்றுக் காலை 10 மணியளவில் இவரைக் கைது செய்த சி.ஐ.டி.யினர் விசாரணைகளுக்காக அழைத்துச் சென்றிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அமில தேரருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சி.ஐ.டி.யினருக்கு கிடைக்கப் பெற்றதையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்மை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி தேரர் பண மோசடி செய்ததாக ஹொரணை, குளியாப்பிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சி.ஐ.டி. யினருக்கு வழங்கிய முறைப் பாடுகளை அடிப்படையாக வைத்தே நேற்று அமில தேரரை கைதுசெய்திருப்பதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஐ. எம். கருணாரட்ன கூறினார்.

பண மோசடி தவிர்ந்த பல்வேறு குற்றச்சாட்டுக்களும் அமில தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருப்பதனால், சி.ஐ.டி.யினர் இது குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வருவதாக குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளர் ஆரம்ப விசாரணைகள் இடம்பெறுகின்றன.

பொதுமக்களின் பார்வைக்கு புலிகள் இயக்கத்தின் கப்பல் – காலி துறைமுகத்தில் 28 முதல் 31 வரை

ltte-ship.jpgகடற் படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளுக்குச் சொந்தமான பிரின்ஸஸ் கிரிஸான்டா என்ற கப்பல் பொதுமக்களின் பார்வைக்காக இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை காலி துறைமுகத்தில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

புலிகளின் கப்பலுடன் கடற்படைக்குச் சொந்தமான ‘சயுர’ என்ற கரையோர ரோந்து கப்பலும் பொதுமக்களின் பார்வைக்காக காலி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.

காலியில் நடைபெறும் சீசன் – 2009 கண்காட்சியிலேயே இந்தக் கப்பல் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அத்துடன் கொழும்பிலுள்ள பொதுமக்கள் இந்தக் கப்பலை காண்பதற்காக கொழும்பு காலி முகத்திடலில் கப்பல் நேற்றுக் காலை தொடக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பாரிய குளங்களின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு

நாட்டில் கடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்துவரும் அடைமழை காரணமாக உடைப்பெடுக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பாரிய குளங்களின் வான் கதவுகள் நேற்று திறந்து விடப்பட்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் பொறியியலாளர் ஜானகி மீகஸ்தென்ன நேற்று தெரிவித்தார்.

இதேநேரம் பல குளங்கள் நிரம்பி வழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வட கீழ் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காரணமாக கடந்த சில தினங்களாக தொடராக மழை பெய்து வருகின்றது. இதனால் பொலன்னறுவை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பாரிய குளங்கள் உடைப்பெடுக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. அதனால் அக்குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப் படுகின்றன.

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் ஆறு வான் கதவுகள் நேற்று மீண்டும் திறந்துவிடப்பட்டன. ஏற்கனவே இதன் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்ட போதிலும் இவ்வான் கதவுகள் யாவும் நேற்று முன்தினம் மூடப்பட்டன. என்றாலும் மீண்டும் கடும் மழை பெய்வதால் இச் சமுத்திரத்தின் ஆறு வான் கதவுகள் நேற்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன.

மின்னேரிய குளத்தின் நான்கு வான் கதவுகளும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உறுகாமம் குளத்தின் இரு வான் கதவுகளும் நவகிரி குளத்தின் இரு வான் கதவுகளும், உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகளும், புனாணை குளத்தின் பத்து வான் கதவுகளும், ஹம்பாந்தோட்டை, மெளஆர குளத்தின் இரு வான் கதவுகளும், அனுராதபுரம் ராஜாங்கணை குளத்தின் நான்கு வான் கதவுகளும், குருநாகல, இம்புல்வானை குளத்தின் மூன்று வான் கதவுகளும் என்றபடி வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகின்றது. இதனால் பிரதேசவாசிகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் அவர்களுக்கு முன் கூட்டியே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை கிரித்தல குளம், திருமலை மாவட்டத்திலுள்ள வான் அல குளம், மகா திபுல்வெவ குளம், சோரமடு குளம், அம்பாறை மாவட்டத்தின் நாமல் ஓயா குளம் என்பன நிரம்பி வழிகின்றன.மன்னார், கட்டுக்கரைக்குளம், பதுளை மாவட்டத்தின் சொரபொர குளம், சந்தி எல குளம் போன்றனவும் நிரம்பி வழியும் நிலையில் உள்ளன என்றார்.

ஆடுகளத்தின் எகிறும் தன்மை மோசமடைந்ததன் காரணமாக இந்தியா இலங்கை இடையிலான கிரிக்கெட் ஆட்டம் கைவிடப்பட்டது

catak.jpgஇந்தியா இலங்கை அணிகளுக்கிடையிலான ஒரு நாள் ஆட்டத் தொடரின் இறுதியாட்டம் பாதியில் கைவிடப்பட்டுள்ளது. தில்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தின் ஆடுகளம் விளையாட்டைத் தொடருவதற்குரிய நிலையில் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டதை அடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.

dilshan.bmpகளத்தின் மோசமான எகிறும் தன்மையால் விளையாட்டு வீரர்களுக்கு அடிபடலாம் என்பதன் காரணமாக இந்த ஆட்டத்தை அத்தோடு நிறுத்திக்கொள்வதாக இந்த ஆட்டத்திற்கான ஐ.சி.சி. பிரதிநிதியான ஆஸ்திரேலியாவின் அலன் ஹர்ஸ்ட் அறிவித்துள்ளார்.

ஆட்டம் கைவிடப்படவேண்டி வந்தது குறித்து தில்லி கிரிக்கெட் சங்கத்தினர் பார்வையாளர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர். கட்டணம் செலுத்தி ஆட்டத்தைக் காணவந்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும் என்றும் அவர்கள் வாக்குறுதி வழங்கினர்.

தில்லி மைதானத்தின் விக்கெட் கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்தது என்றாலும் கடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின்போதும், ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரின்போதும் இந்தக் களத்தில் பந்து போதிய அளவு எகிறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருந்தன. அதன் எதிரொலியாக பனிக்காலத்து புற்கள் இந்த ஆட்டத்திற்காக ஆடுகளத்தில் பதியப்பட்டிருந்தன. ஆனால் அது களத்தின் எகிறும் தன்மையை மேலும் மோசமாக்கிவிட்டுள்ளது.

Sri Lanka in India ODI Series – 5th ODI
India v Sri Lanka
No result

ODI no. 2936 | 2009/10 season
Played at Feroz Shah Kotla, Delhi
27 December 2009 (50-over match)
       
 Sri Lanka innings (50 overs maximum) 
 WU Tharanga  b Khan  0
TM Dilshan  c †Dhoni b Khan  20 
 ST Jayasuriya  lbw b Harbhajan Singh  31 
 KC Sangakkara*†  c Raina b Tyagi  1 
 TT Samaraweera  run out (Raina)  2 
 SHT Kandamby  not out  12  
 M Pushpakumara  not out  7  
 Extras (lb 1, w 8, nb 1) 10     
      
 Total (5 wickets; 23.3 overs; 125 mins) 83 (3.53 runs per over)
Did not bat NLTC Perera, S Randiv, RAS Lakmal, UWMBCA Welegedara 
Fall of wickets1-0 (Tharanga, 0.1 ov), 2-39 (Dilshan, 10.5 ov), 3-58 (Sangakkara, 15.1 ov), 4-60 (Jayasuriya, 16.4 ov), 5-63 (Samaraweera, 17.6 ov) 
        
 Bowling
 Z Khan 8 1 31 2
A Nehra 5 0 24 0 
 S Tyagi 6.3 1 15 1
 Harbhajan Singh 4 0 12 1
 
India team    
V Sehwag, G Gambhir, KD Karthik, V Kohli, MS Dhoni*†, SK Raina, RA Jadeja, Harbhajan Singh, Z Khan, A Nehra, S Tyagi 
Match details
Toss India, who chose to field
Series India won the 5-match series 3-1

புலிகளுடன் உடன்படிக்கை செய்து முஸ்லிம்களை ஏமாற்றியவர் ஹக்கீம். முஸ்லிம்கள் அவரை ஆதரிக்கக் கூடாது – பசில்

basil.jpgஅனைத்து அரசாங்கங்களிலும் அமைச்சராக விருந்து பிரபாகரனுடன் உண்டு குடித்து உறவாடி சமாதானப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்ட ரவூப் ஹக்கீமிற்கு வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற முடியாமற் போனதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

புத்தளம் ஆலங்குடாவில் நேற்று நடைபெற்ற அ. இ.மு.கா. கட்சியின் மாநாட்டில் சிறப்பதிதி யாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்;

புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றிய மு. கா. தலைவருக்கு ஒருபோதும் முஸ்லிம்கள் ஆதரவளிக்க கூடாது. உங்கள் எதிர்காலத்தை சபீட்சமயமாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதிக்கு உங்கள் பூரண ஆதரவினை வழங்குங்கள்.

அமெரிக்க பிரஜா உரிமை பெற்றுள்ள பொன்சேகா எவ்வாறு இலங்கை ஜனாதிபதியாக வர முடியும்? ‘சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ – சரத்கோங்கஹகே

அமெரிக்க பிரஜா உரிமை பெற்றுள்ள சரத் பொன்சேகா எவ்வாறு இலங்கை ஜனாதிபதியாக வர முடியும் என்று ஐக்கிய தேசிய மாற்று முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் கோங்கஹகே நேற்று கேள்வி எழுப்பினார்.

நான் இரட்டை பிரஜா உரிமை கொண்டவரல்ல என்று சரத் பொன்சேகா இதுவரை மறுக்கவில்லை. எனவே இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆலோசனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளரான சரத் கோங்கஹகே ஏற்பாடு செய்திருந்த முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:-

கடந்த 30 வருட காலமாக மிகவும் பரபரப்புடனும், சூடுபிடித்தும் காணப்பட்ட எமது நாட்டில் தற்பொழுது தான் அமைதியான சூழல் காணப்படுகின்றது.  மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்தச் சூழலை மீண்டும் குழப்புவதற்கு பலர் முயற்சிக்கின்றனர்.

சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கி இந்த நாட்டில் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்த பலர் முயற்சிக்கின்றனர். இதனை அனுமதிக்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டிற்காக பாரிய சேவையாற்றியவர். நான் வெற்றி பெற முடியாது. எனினும் முன்றாவது இடத்திற்கு வர முடியும்.

ஐக்கிய தேசிய கட்சியோ அதன் சின்னமோ இம்முறை வாக்குச் சீட்டில் இல்லை. ஐ. தே. க. மக்கள் மனதிலிருந்து விடுபட்டுள்ளது. குரல் கொடுக்க இல் லாதவர்களுக்கு குரல் கொடுப்பதற்காகவே இன்று நான் களத்தில் குதித்துள்ளேன். இந்த மக்களை எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தற்பொழுது படை வீரர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தவும், சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவும் பலர் முயற்சிக்கின்றனர். சரத் பொன்சேகா சன்டே லீடர் பத்திரிகையில் ஒரு விடயத்தை கூறிவிட்டு அதற்கு அடுத்த வார பத்திரிகைகளில் வேறு விடயத்தை கூறுகிறார்.

வெளிநாடுகளின் பின்னணியிலேயே இவர் செயற்படுகின்றார். தனது தனிப்பட்ட குரோதத்தை வெளிக்காண்பிப்பதற்காக பல்வேறு பொய்யான தகவல்களை சரத் பொன்சேகா வெளியிட்டு வருகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

தற்பொழுது வைராக்கியமான அரசியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதனை நடுநிலைப்படுத்துவதற்காக சகல மதத் தலைவர்களும் முன்வர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆயுதங்கள் கொள்வனவு செய்யவில்லை என்று இடத்திலும், அவ்வாறு வந்த ஆயுதத்தை நானே திருப்பி அனுப்பினேன் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தலையிட்டு அதனை திருப்பி அனுப்பினார் என்றும் இன்னுமொரு இடத்திலும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

ஆனால் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிதியாக இருந்தவாறே அவரே கையொப்பமிட்ட கடிதம் எம்மிடம் உள்ளது. எனவே சரத் பொன்சேகா முன்னுக்கு பின் முரணாக கூறுவது தெளிவாக விளங்குகின்றது என்றார்.

சரத் பொன்சேகா தோல்வி பெறுவது உறுதி. எனவே தான் அமெரிக்க பிரஜா உரிமையை இதுவரை ரத்துச் செய்யாமல் வைத்துள்ளார். ஏனெனில் தோல்விய டைந்தவுடன் மீண்டும் அமெரிக்கா செய் வதே அவரது நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.

சிவாஜிலிங்கம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

Sivajilingam_M_Kஇலங்கை யின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருமான சிவாஜிலிங்கம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமையன்று லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவரிடம், இந்திய மத்திய அரசின் ஆணையை அடுத்து அவருக்கு இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக, சென்னை விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக சிவாஜிலிங்கம் அவர்கள் BBC தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை விமான நிலைய குடியேற்றப் பிரிவு வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.

தஞ்சாவூரில் இடம்பெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுக்காகவும், தனது மருத்து சிகிச்சைக்காகவும் அவர் இந்தியா வந்ததாகக் கூறியுள்ளார். சென்னையிலிருந்து துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்ட சிவாஜிலிங்கம், அங்கிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தனக்கு மனிதாபிமான உதவிகள் கூட வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திங்கட்கிழமை இந்த விடயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடம் தன்னுடைய கடுமையான ஆட்சேபணையை எழுத்துபூர்வமாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சகத்துக்கு தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து அநீதி குறித்தும் தெரியப்படுத்தவுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளருமான சிவாஜிலிங்கம் BBC தமிழோசையிடம் கூறியுள்ளார்.

‘சதி முயற்சியில் ஈடுபடுவோரின் தகவல் கோரல்’

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சதி நடவடிக்கையில் ஈடுபட எவரேனும் முனைவார்களாயின் உடனடியாக அவர்கள் குறித்த தகவல்களை பெற்றுத் தருமாறு தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன கேட்டுக் கொண்டுள்ளார்.

பொது மக்கள் போதுமானளவு ஒத்துழைப்பை இதுவரை பெற்றுத் தந்திருப்பதால் தேர்தல் நடவடிக்கைகள் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் குளறுபடிகளை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் விசேட வீதிச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

புலி ஆதரவாளர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கனடாவில் பொதுக் கூட்டம் : த ஜெயபாலன்

Nadarajah_Muralitharan‘நடைபெற இருக்கும் சிறிலங்காவின் ஜனாதிபதிக்கான தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் மகிந்த ராஜபக்சவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றது’ என்று ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்கு தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் நாட்டின் பொறுப்பாளராக அறியப்பட்ட நடராஜா முரளீதரன் நீண்டகாலமாக கனடாவில் வாழந்து வருகின்றார். கலை இலக்கியச் சந்திப்புக்களை ஏற்பாடு செய்து வரும் இவர் தற்போது வெளிப்படையான அரசியல் நடவடிக்கையிலும் தன்னை வெளிப்படுத்தி வருகின்றார்.மகிந்த ராஜபக்சவை நிராகரிக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் மறைமுகமாக எதிர்க் கட்சி கூட்டின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றோம் எனத் தெரிவித்தா நடராஜா முரளீதரன் இதுவொரு தந்திரோபாய அரசியல் நகர்வே அல்லாமல் சரத்பொன்சோகாவின் கொள்கைகளுடன் உடன்படுவதல்ல எனத் தெரிவித்தார்.

ஜனவரி மூன்றில் இப்பொதுக்கூட்டம் ரொறன்ரோவில் நடாத்த ஏற்பாடாகி உள்ளது.

பின்வரும் நான்கு காரணங்களுக்காக மகிந்த ராஜபக்சவை நிராகரிக்கின்ற முடிவைத் தாங்கள் எடுத்துள்ளதாக நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
1. மகிந்த ராஜபக்சவின் இனவாதத் தலைமையைப் பலவீனப்படுத்துவது. பொன் சேகாவிற்று வாக்களிப்பதன் மூலம் சிங்கள இனவாதத் தலைமைகளைப் பிரித்தாள முடியும்.
2. சர்வதேச அமைப்புகளால் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பது அக்குற்றச்சாட்டுக்களை பலவீனப்படுத்தும்.
3. நடந்து முடிந்த யுத்தத்தை நடாத்தியது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசியல் தலைமையே. இராணுவம் ஒரு கருவி மட்டுமே. அதனால் சரத் பொன்சேகா முதல் குற்றவாளியல்ல.
4. தமிழ் பிழைப்புவாதக் குழுக்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் போது அதே அரசியல் தலைமையை ஆதரிக்க முடியாது.

போன்ற காரணங்களுக்காக இந்த அரசியல் சதுரங்கத்தில் தந்திரோபாய அடிப்படையில் தாங்கள் சரத் பொன்சேகாவுக்கு மறைமுகமான ஆதரவை வழங்குவதாக நடராஜா முரளீதரன் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட நான்கு காரணங்களுடன் கடந்த காலத்தில் தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலோடு இணங்கிச் செயற்பட்ட, அவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட, தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையைக் கோரிநிற்கின்ற வேட்பாளர்கள் எம் கெ சிவாஜிலிங்கம், விக்கிரமபாகு கருணாரட்ண போன்றவர்களை ஏன் ஆதரிக்கவில்லை எனக் கேட்ட போது, அவர்களைத் தங்களது ‘நட்பு சக்திகள்’ எனக் குறிப்பிட்ட நடராஜா முரளீதரன் இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச அல்லது சரத்பொன்சேகாவே ஜனதிபதியாக வரப் போகின்றார் என்றும் இதில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக வந்துவிட அனுமதிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.

2005 தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த முடிவை தான் அப்போதே விமர்சித்து எழுதியதாகக் குறிப்பிட்ட நடராஜா முரளீதரன் அந்தத் தவறை மீண்டும் செய்யக் கூடாது எனத் தெரிவித்தார்.

நடராஜா முரளீதரன் இக்கருத்தை வெளியிடுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன் ‘இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும் இன்றைய அழிவுகளுக்கும் காரணம்” எனக் குற்றம்சாட்டி இருந்தார்.

தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று காலத்திற்குக் காலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைகளை வழங்கியவர்கள் அரசியல் ராஜதந்திரம் தந்திரோபாயம் என்ற பதங்களுக்குள் ஒழிந்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பின் அணிவகுத்து நின்றதே வரலாறு. தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பியவர்களைப் பலப்படுத்தவோ அணிசேரவோ தமிழ் அரசியல் தலைமைகள் அன்றும் முன்வரவில்லை. இன்றும் முன்வரவில்லை. எறிந்தவரை நோக்கியே திரும்பி வருகின்ற பூமராங் போலவே தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் முடிவுகள் கடந்த 60 வருடங்களாக உள்ளது. இப்பொழுது இந்த பூமராங் விளையாட்டில் இரா சம்பந்தனும் நடராஜா முரளீதரனும் களம் இறங்கி உள்ளனர்.