நாட்டில் கடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்துவரும் அடைமழை காரணமாக உடைப்பெடுக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பாரிய குளங்களின் வான் கதவுகள் நேற்று திறந்து விடப்பட்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் பொறியியலாளர் ஜானகி மீகஸ்தென்ன நேற்று தெரிவித்தார்.
இதேநேரம் பல குளங்கள் நிரம்பி வழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வட கீழ் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காரணமாக கடந்த சில தினங்களாக தொடராக மழை பெய்து வருகின்றது. இதனால் பொலன்னறுவை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பாரிய குளங்கள் உடைப்பெடுக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. அதனால் அக்குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப் படுகின்றன.
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் ஆறு வான் கதவுகள் நேற்று மீண்டும் திறந்துவிடப்பட்டன. ஏற்கனவே இதன் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்ட போதிலும் இவ்வான் கதவுகள் யாவும் நேற்று முன்தினம் மூடப்பட்டன. என்றாலும் மீண்டும் கடும் மழை பெய்வதால் இச் சமுத்திரத்தின் ஆறு வான் கதவுகள் நேற்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன.
மின்னேரிய குளத்தின் நான்கு வான் கதவுகளும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உறுகாமம் குளத்தின் இரு வான் கதவுகளும் நவகிரி குளத்தின் இரு வான் கதவுகளும், உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகளும், புனாணை குளத்தின் பத்து வான் கதவுகளும், ஹம்பாந்தோட்டை, மெளஆர குளத்தின் இரு வான் கதவுகளும், அனுராதபுரம் ராஜாங்கணை குளத்தின் நான்கு வான் கதவுகளும், குருநாகல, இம்புல்வானை குளத்தின் மூன்று வான் கதவுகளும் என்றபடி வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகின்றது. இதனால் பிரதேசவாசிகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் அவர்களுக்கு முன் கூட்டியே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை கிரித்தல குளம், திருமலை மாவட்டத்திலுள்ள வான் அல குளம், மகா திபுல்வெவ குளம், சோரமடு குளம், அம்பாறை மாவட்டத்தின் நாமல் ஓயா குளம் என்பன நிரம்பி வழிகின்றன.மன்னார், கட்டுக்கரைக்குளம், பதுளை மாவட்டத்தின் சொரபொர குளம், சந்தி எல குளம் போன்றனவும் நிரம்பி வழியும் நிலையில் உள்ளன என்றார்.