இலங்கை யின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருமான சிவாஜிலிங்கம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமையன்று லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவரிடம், இந்திய மத்திய அரசின் ஆணையை அடுத்து அவருக்கு இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக, சென்னை விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக சிவாஜிலிங்கம் அவர்கள் BBC தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை விமான நிலைய குடியேற்றப் பிரிவு வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.
தஞ்சாவூரில் இடம்பெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுக்காகவும், தனது மருத்து சிகிச்சைக்காகவும் அவர் இந்தியா வந்ததாகக் கூறியுள்ளார். சென்னையிலிருந்து துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்ட சிவாஜிலிங்கம், அங்கிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தனக்கு மனிதாபிமான உதவிகள் கூட வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திங்கட்கிழமை இந்த விடயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடம் தன்னுடைய கடுமையான ஆட்சேபணையை எழுத்துபூர்வமாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சகத்துக்கு தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து அநீதி குறித்தும் தெரியப்படுத்தவுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளருமான சிவாஜிலிங்கம் BBC தமிழோசையிடம் கூறியுள்ளார்.
பல்லி
ஒரே வார்த்தை சிவாஜி அண்ணா உங்களை யாரும் அவமதிப்பதில்லை, ஆனால் உங்கள் வாய்தான் பலரை வம்புக்கு இழுத்து வசமாய் மாட்டிகொள்கிறது; தயவுசெய்து இந்த தேர்தல் முடியும் வரையாவது அடக்க ஒடுக்கமாய் இருக்கபடாதா??
பார்த்திபன்
இந்த நடவடிக்கையை இந்திய மத்திய அரசு எப்போதோ செய்திருக்க வேண்டும். இப்போது செய்தது மிகத் தாமதமான நடவடிக்கை. சிவாஜிலிங்கத்திற்கு பிரைச்சினையே அவரது வாய்தான். ஆனால் அதை வைத்துத் தானே அவர் பிழைப்பு நடத்துகின்றார், சில புலன் பெயர்ந்த புண்ணாக்குகளை ஏமாற்றி.
thurai
இனியாவது உங்கள் பொக்குள் கொடி உறவு பற்ரி புலம்பாமலிருங்கள். அதுசரி யாராவது உமக்காக தீக்குளிக்கவில்லையா? நெடுமாறனெங்கே? சீமானெங்கே? திருமாவளவன் எங்கே? உலத்தையும் தமிழரையும் ஏமாற்ரி புகழ் தேடியலையும் அரசியலே இது.
துரை
sasi
நீங்கள் எடுத் முயற்சி சரிதான் ஆனால் ஏன் நீங்கள் இந்த நெடுமாறனின் கூட்டத்தை இன்னும் சரியாக விளங்காமல் இருக்கிறீர்கள்
Sampanthan
“அதிபர் போட்டியிலிருந்து விலகத் தயார்!” – சிவாஜிலிங்கம்
சிறீலங்கா அரச அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலக தயார் என்று எம்பி சிவாஜிலிங்கம் தமிழகத்திலுள்ள விகடன் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இலங்கையின் இப்போதைய பரபரப்பு நாயகன் சிவாஜிலிங்கம் தான்! தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ கட்சியைச் சேர்ந்த எம்.பி-யான சிவாஜிலிங்கம், இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் சுயேச்சையாகக் குதித்திருக்கிறார். முன்னாள் ராணுவத் தளபதி ஃபொன்சேகாவுக்கு செல்லக் கூடிய தமிழர் வாக்குகளைப் பிரித்து, ராஜபக்ஷேவை மீண்டும் அதிபராக்கும் திட்டத் துடன்தான் சிவாஜிலிங்கம் களமிறங்கியிருக்கிறார் என பரபரப்பு கிளம்பியிருக்கும் நிலையில்… லண்டனில் இருந்த சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொண்டோம்.
“இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவெடுத்தது ஏன்?”
“தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கையை சேர்ந்த பிரதான வேட்பாளர்களான ராஜபக்ஷே மற்றும் ஃபொன்சேகா இருவரையுமே தமிழ் மக்கள் ஆதரிக்க முடியாது. இதுதான் மூன்றாவது வேட்பாளராக நான் போட்டியிடுவதற்கான முதல் காரணம். நடந்து முடிந்த போரில் 50 ஆயிரம் தமிழ் மக்கள் இறப்பதற்குக் காரணமாக இருந்த இவர்கள் இருவருக்கும் எதிராக போர்க் குற்றவாளிகளாக விசாரணை கோரும்
நிலையில், தமிழர்கள் அவர்களுக்கு வாக்களிக்க முடியாது… கூடாது!
அதனால்தான் தமிழ் தேசியக் கூட்டணியின் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தியே ஆகவேண்டும் என நான் வலியுறுத்தினேன். நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நான் உட்பட ஏழு எம்.பி-க்கள், கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினோம். இதில், ஐந்து எம்.பி-க்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தினர். சிவசக்தி ஆனந்தன் எம்.பி. மட்டும் ஃபொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கலாம் என்றார். இந்த சமயத்தில் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தத்திடம், ‘கூட்டமைப்பு சார்பில் நீங்களே வேட்பாளராகக் களமிறங்க வேண்டும்; இல்லையெனில் ஒட்டுமொத்தமாகத் தேர்தலை புறக்கணிக்கலாம்’ என வலியுறுத்தினோம். தொடர்ந்து தமிழர்களுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரான சிங்கள இனத்தைச் சேர்ந்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவை வேட்பாளராக்கி ஆதரிக்கலாம் என்றும் சம்பந்தரிடம் வலியுறுத்தினோம். ஆனால், இது எதற்கும் சம்பந்தர் சம்மதிக்காத நிலையில், எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது. இதன் பிறகுதான் நான் தேர்தலில் களமிறங்கினேன்.”
“ஃபொன்சேகாவுக்கு செல்லும் தமிழர் வாக்குகளை பிரிக்கத்தான் நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதாக ஒரு குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறதே?”
“சிங்கள போர் வெற்றியாளர் யார் என்பதுதான் ராஜ பக்ஷேவுக்கும் ஃபொன்சேகாவுக்குமிடையே நடக்கும் தேர்தல் பிரசாரம்… போட்டி எல்லாமே! இதில் யார் வெற்றியாளர் என்பதை அடிபட்டு, நசுக்கப்பட்ட தமிழ் மக்களே வாக்களித்து தீர்ப்பாகச் சொல்ல வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?
இவர்கள் இருவரில் யாருக்கு தமிழ் மக்கள் வாக்களித்தாலும், அவர்களை மன்னிக்கத் தயாராகி விட்டார்கள் என்றுதான் சர்வதேச அரங்கம் அர்த்தம் கொள்ளும். அதையே தங்களுக்கு சாதகமாக்கி, போர்க் குற்றங்களிலிருந்தும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் இருவருமே மீண்டு விடுவார்கள். அப்படியரு சூழல் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அந்த இருவருக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, ஒரு மாற்றாக நான் போட்டியிடுகிறேன்.
இப்போதும் சொல்கிறேன்… போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு சம்மதித்து, ராஜபக்ஷே சகோதரர்களின் அட்டூழியங்களை உலகுக்கு எடுத்துச் சொல்ல தயார் என ஃபொன்சேகா அறிவிக்கட்டும். நான் இப்போதே போட்டியிலிருந்து விலகி விடுகிறேன்.”
“அதிபர் ராஜபக்ஷே தரப்பிடம் சில ஆதாயங்களைப் பெற்றுக் கொண்டுதான், ஓட்டுகளைப் பிரிப்பதற்காக நீங்கள் களம் இறங்கியுள்ளதாக எம்.பி-யான சிவசக்தி ஆனந்தன் கூறியிருக்கிறாரே?”
“அரசாங்கம் செய்த படுகொலைகளை இன்றைக்கும்கூட இலங்கையில் இருந்துகொண்டு உரக்க எடுத்துச் சொல்ல ஆள் இல்லை. முள்வேலியில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், பாலியல் பலாத்காரங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளை த.தே.கூட்டணியும்கூட வலியுறுத்தவில்லை. இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இந்தியாவிலும், பிரித்தானியாவிலும் பயணித்து, இலங்கை அரசின் போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் உரத்துச் சொன்ன என்னுடைய வேலைப்பாடுகள் எம்மக்களுக்குத் தெரியும்.
இதற்காக அரசாங்கம் நேரிடையாக என் மீது போட்டுள்ள வழக்குகளையும், மறைமுகமாக எனக்கு விடுக்கும் மிரட்டல்களையும்கூட தன்னந்தனியாக தைரியமாக சந்தித்து வருபவன் நான். அதனால் சிவசக்தி ஆனந்தனின் குற்றச்சாட்டை யாரும் நம்பப் போவதில்லை. இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறேன்.”
“உங்களின் முடிவால் த.தே.கூட்டமைப்புக்குள்ளேயே குழப்பம் ஏற்பட்டுள்ளதே?”
“கூட்டமைப்பில் சில குழப்பங்கள் உண்டாகியிருப்பது உண்மைதான். இது காலப்போக்கில் தீர்ந்துவிடும். நான் மீண்டும் தெளிவாகச் சொல்கிறேன்… எனது இந்த முடிவுக்கும் கூட்டமைப்புக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.”
“தமிழ் மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய தமிழ்த் தலைவர்கள், இப்படிப் பிரிந்து கிடப்பது நல்லதா?”
“தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் இங்கு தோற்கடிக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும் அரசியல் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. இரண்டு தேசங்கள் சேர்ந்து ஒரு நாடாக இருக்கும் கூட்டாட்சி முறையை வலியுறுத்தியும், புலிகளின் அரசியல் பிரிவிலிருந்து சரணடைந்த 12 கைதிகளின் விடுதலை கோரியும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சிறையிலிருக்கும் ஏனைய 3,000 அரசியல் கைதிகளின் விடுதலையை நோக்கியும், வடக்கு கிழக்கு பகுதி ராணுவ மயமாக்கலை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், மூன்று லட்சம் மக்களின் மீள் குடியேற்றத்தை ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விஷயங்களையும் தமிழ் தலைமைகள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
அதேசமயம், கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் அகிம்சைப் போராட்டமாக இருந்தாலும், ஆயுதப் போராட்டமாக இருந்தாலும், எமது தலைமைகளிடம் ஒற்றுமை இல்லை என்பது வேதனைப்படத் தக்க விடயந் தான். மக்களை சரியான முறையில் வழிநடத்தி அழைக்க தகுந்த நேரத்தில் இந்தத் தலைமைகள் ஒன்று கூடுவது அவசியம்தான்.”
“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணா ரட்ணவுடன் இணைந்து பிரசாரம் மேற்கொள்வது எதனால்?”
“எங்கள் இருவரின் நோக்கமும் ஒன்றுதான். நாங்கள் இருவரும் தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என்ற எதிர்பார்ப்புடன் போட்டியிடவில்லை.
படுகொலைக் குற்றவாளிகள் இருவருக்கும் மாற்றாக வாக்களிக்க ஆள் உண்டு என்று காட்டத்தான் களம் புகுந்திருக்கிறோம். சிங்கள வரலாற்றின் கரும்புள்ளிகளாக இருக்கும் அந்த இருவரும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதை விக்கிரமபாகுவும் வலியுறுத்துகிறார். அதனால்தான் இருவரும் இணைந்து பிரசாரம் செய்கிறோம்.”
“மகிந்தா ராஜபக்ஷே, ஃபொன்சேகா இருவரில் வெற்றி பெறப்போவது யார்?”
“தற்போதைய நிலையில் ஃபொன்சேகாவுக்கு நிறைய ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது. வடக்கு, கிழக்கில் நிறைய வாக்குகள் தனக்கே வரும் என அவர் நினைக்கிறார். ஆனால், வடக்கில் டக்ளஸ் தேவானந்தா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஸ்ரீதரன், ஆனந்தசங்கரி போன்ற தமிழ் தலைவர்களின் கட்சி ராஜபக்ஷேவை ஆதரிக்கிறது. கிழக்கில் கருணா, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் பிள்ளையான் போன்ற தமிழ் தலைவர்களின் ஆதரவோடு தனது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சில முஸ்லிம் அமைச்சர்களின் மூலம் அந்த இன வாக்குகளையும் ராஜபக்ஷேவே நிரம்பப் பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. முடிவு வரட்டும்..!”
-மு.தாமரைக்கண்ணன்