அனைத்து அரசாங்கங்களிலும் அமைச்சராக விருந்து பிரபாகரனுடன் உண்டு குடித்து உறவாடி சமாதானப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்ட ரவூப் ஹக்கீமிற்கு வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற முடியாமற் போனதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
புத்தளம் ஆலங்குடாவில் நேற்று நடைபெற்ற அ. இ.மு.கா. கட்சியின் மாநாட்டில் சிறப்பதிதி யாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்;
புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றிய மு. கா. தலைவருக்கு ஒருபோதும் முஸ்லிம்கள் ஆதரவளிக்க கூடாது. உங்கள் எதிர்காலத்தை சபீட்சமயமாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதிக்கு உங்கள் பூரண ஆதரவினை வழங்குங்கள்.