எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பண்டிகைக்கு வீடு சென்றோர் வேலைக்கு திரும்ப நேற்று முதல் விசேட ரயில், பஸ் சேவைகள்

train.jpgபுத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் வேலைக்கு திரும்புவதற்காக நேற்று (15) முதல் விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனையொட்டி 26 மேலதிக ரயில்களும் 400 இ. போ. ச. பஸ்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு கூடுதலான தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

வழமையாக சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்களுக்கு மேலதிகமாக பண்டாரவளை நுவரெலியா, ரம்புக்கன, மாகோ, காலி ஆகிய இடங்களில் இருந்து கொழும்புக்கு மேலதிக ரயில்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.

இதேவேளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் இ. போ. ச. பஸ்கள் குறித்த டிப்போக்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் 19ம் திகதி வரை அவை சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் இ. போ. ச. கூறியது.

இந்திய கிழக்கு மாநிலங்களில் கடும் சூறாவளி: 76 பேர் பலி

இந்தியாவின் கிழக்கு மாநிலங் களில் கடுமையான புயல் வீசிய தால் பெங்கால், பீஹார் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட் டன.

கடந்த புதன்கிழமை இப்புயல் வீசியது. நாற்பது நிமிடங்கள் வரை இப்புயல் வீசியது, இதனால் இவ் விரு மாநிலங்களிலும் சுமார் 116 பேர் உயிரிழந்தனர் எனவும் 76 பேரின் சடலங்களே கண்டெடுக்கப் பட்டன. ஐம்பதாயிரம் வீடுகள் சேத மடைந்தன.

மரங்கள், வீட்டுக் கூரைகள், மின் கம்பங்கள் என்பன வீதியில் இடிந்து விழுந்து கிடந்தன. மின் சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொலை பேசிகளும் செயலிழந்தன. இப்பிர தேசமெங்கும் மக்கள் பதறியடித்துக் கொண்டோடினர். போக்குவரத்து கள் யாவும் தடைப்பட்டதாக அங்கு ள்ளோர் தெரிவித்தனர். கால் நடைகள், பயிர்கள் என்பனவும் இந்தச் சூறாவளியால் நாசமடைந்தன. இடம் பெயர்ந்தோரை வேறு இடங்களில் தங்கவைப்பதற்கான அவசர ஏற்பாடு களை அரச அதிகாரிகள் மேற் கொண்டனர்.

ஹெம்டாபத், இஸ்லாம்பூர், கலிங் காஞ்சி, கராண்டிங்கி, றைகலின் ஆகிய நகரங்கள் இந்தச் சூறாவளியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.

சீனாவில் பாரிய பூகம்பம் 617 பேர் பலி: 10 ஆயிரம் பேர் காயம்

சீனாவில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் 617 பேர் பலி ஆனார்கள். மேலும் 10 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது கின்காய் மாகாணம். மலைப் பகுதிகள் நிறைந்த இந்த மாகாணம் சீனாவில் மிகப் பெரிய மாகாணம் ஆகும்.

இந்த மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7.49 மணிக்கு சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. திபெத்தையும் கின்காய் மாகாணத்தையும் பிரிக்கும் மலைப் பகுதியில் பூமிக்கு அடியில் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இந்த பூகம்பத்தால் கின்காய் மாகாணமும் திபெத்திய பகுதியும் குலுங்கின. பூகம்பம் ஏற்பட்டதும் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்ததால் உள்ளே இருந்தவர்கள் பீதியில் வெளியே ஓடி வந்தனர். ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.

பூகம்பத்தால் கின்காய் மாகாணத்தில் ஜீகு நகரில் உள்ள 85 சதவீத கட்டடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து நாசமாயின. கியேகு நகரிலும் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. யூசு பகுதியும் பூகம்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. யூசு, கியேகு பகுதிகளில் உள்ள பல பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டடங்கள் இடிந்து நாசமாயின. கட்டட இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த பலர் ரத்தம் சொட்டச் சொட்ட வெளியே ஓடிவந்தனர்.

மலைப்பாங்கான பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகள் மண்ணால் கட்டப்பட்டவை என்பதால் அவை நொறுங்கி விழுந்தன.

எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் முதலாவது புதுவருடம் – ஜனாதிபதி வாழ்த்து

president.jpgதாய்நாடு ஐக்கியப்படுத்தப்பட்ட பின்னர் இணக்கமான மற்றும் திருப்தியான நிலையில் கொண்டாடப்படும் முதலாவது புதுவருடம் எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இது போன்ற புதுவருட பண்டிகைகள் எமது மக்களை இதயத்தாலும் மனதாலும் மேலும் ஐக்கியப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பது எனது நம்பிக்கையாகும். சிங்களவர்களாலும் தமிழர்களாலும் ஒரே வகையில் கொண்டாடப்படும் புதுவருட கொண்டாட்டங்கள் எமக்கிடையிலான உறவுகளை அங்கீகரிப்பதற்கு மிகவும் பொருத்தமானவையாகும்.
எமது நாட்டு மக்களிடம் உள்ள பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் பலமான கலாசார பாரம்பரியங்களின் தொடர்ச்சியாகவே இதனைக் காணமுடிகின்றது. மக்களிடம் புதுவருடத்தின் மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் செய்துள்ளது. விவசாய அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை நெறிமுறை கள் மூலம் நாட்டுக்கு சுபீட்சத்தை கொண்டுவர நாம் ஆவன செய்துள்ளோம்.

எதிர்கால பரம்பரையான எமது பிள்ளைகளே புதுவருடத்தின் உண்மையான தார்ப்பரியத்தைப் பெரிதும் உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாவர். ஆயிரக்கணக்கான வருடங்களாகப் பாதுகாக்கப்பட்டுவரும் சிறந்த விழுமியங்கள் மற்றும் பாரம்பரியங்களை அவர்களுக்குப் போதிக்க வேண்டியது ஒருதேசம் என்ற வகையில் எமது பொறுப்பாகும்.

அத்துடன் எமது நாட்டை வளப்படுத்தியுள்ள கலாசார மரபுரிமைகளையும் அவர்களிடம் கையளிக்க வேண்டும். ஒவ்வொரு குடியிருப்பும் புதுவருட பாரம்பரியங்களை எதிர்காலத்தின் சுபமான ஆரம்பத்துக்கான நம்பிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

எமது நாட்டின் ஒற்றுமையையும் பெருமையையும் பிரதிபலிக்கும் இந்த சிங்கள – தமிழ் புதுவருடம் மகிழ்ச்சி, சமாதானம், பகிர்ந்து கொள்ளல் மற்றும் திருப்தியுறுதல் போன்ற உணர்வுடன் அனைவராலும் கொண்டாடப்பட்டு எம்மை எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான புதுவருட வாழ்த்துக்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

ஹிலாரி கிளிண்டன் இலங்கைக்கு புதுவருட வாழ்த்து தெரிவிப்பு

hillaryclinton.jpgவிடு தலைப்புலிகள் அழிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்து ஒரு வருடமாகும் இந்த நிலையில், நாட்டின் அனைத்து மக்களுக்கு ஒரே நாளில் சமாதானமாக பிறக்கும்  புதுவருடத்தை கொண்டாட வேண்டும் என தாம் விரும்புவதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இலங்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
.
தற்போது அபிவிருத்திக்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ள வேளையில், அனைத்து பாகங்களின் மக்களும் சிறப்பான மனநிலையை கொள்ள, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது.

“மீள்குடியேற்றம் பூர்த்தியடைந்தபின் வட மாகாணசபைத் தேர்தல்”

maithripala-sirisena.jpgதேர்தலில் வெற்றியீட்டியுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளதுடன் இதன்மூலம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியுமென்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததன் பின்னரே வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுமென்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. தேர்தல் வெற்றியை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன இங்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பேசுகையில்

எமக்கு வாக்களித்த மக்களுக்கும் இந்தத் தேர்தலை நடத்தி முடிக்க உதவிய தேர்தல்கள் ஆணையாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸார், முப்படையினர், அரச அதிகாரிகள் என அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

பொதுவாக எதிர்க்கட்சி என்று வரும்போது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதை எந்நேரமும் நோக்காகக் கொண்டு செயற்படுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. எனினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை அந்த யுத்தம் நிறைவு பெற்றுவிட்ட இச் சந்தர்ப்பத்தில் உலகின் முன்னேற்றம் கண்ட ஒரு நாடாக அபிவிருத்தி செய்ய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. இன்று இந்த யுகத்துக்குப் பொருத்தமானதொரு ஜனாதிபதி இருக்கிறார். பேதங்களின்றி ஒன்றிணைந்து செயற்பட்டால் முன்னேற்றம் காண முடியும். எனவே, குறுகிய அரசியல் நோக்கங்களின்றி,பேதங்களின்றி நாட்டை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதியின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

இதேநேரம், இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்துடன் பேசத் தயாராகவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ள நிலையில் அக்கட்சியினருடன் பேசுவதற்கு ஆளுந்தரப்பு தயாராகவிருக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மைத்திரிபால சிறிசேன; நாம் ஏற்கனவே கூறியதுபோல் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம் இதன்மூலம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்று கூறினார்.

பாராளுமன்ற புதிய உறுப்பினர்கள் நன்மை கருதி தகவல் கருமபீடம்

parliament.jpgஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கு ஏதுவாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக தகவல் கரும பீடமொன்று 2010 ஏப்பிரல் மாதம் 16ம் திகதி வெள்ளிக்கிழமை, 17ந் திகதி சனிக்கிழமை மற்றும் 18ந் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இயங்கவுள்ளது.
இக்கரும பீடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான முக்கியமான தகவல்களும் ஆவணங்களும் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளமையினால் இதற்கு சமுகமளிக்கும்படி உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் நுழைவதற்கு வசதியாக தமது அடையாள அட்டையை கொண்டு வரும்படியும் பாராளுமன்ற கட்டடத்துக்குள் வரும்போது உறுப்பினர் நுழைவாயிலை பாவிக்கும்படியும் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சானியா-ஷொய்ப் திருமணம்

sania_shoaib.jpgஇந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொய்ப் மாலிக்கை ஹைதராபாத்தில் மணம் முடித்துள்ளார். ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த திருமண வைபவத்தை மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் முன்னின்று நடத்தி வைத்ததாக இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார்.

ஷொய்ப் மாலிக் வேறொரு பெண்ணை கடந்த வாரம் விவாகரத்து செய்திருந்ததன் பின்னர் இப்போது இத்திருமணம் நடந்துள்ளது. இத்திருமணம் நடந்த விடுதிக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

23 வயது சானியாவும் 28 வயது ஷொய்ப் மாலிக்கும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தனர்.வேறொருவருடன் நிச்சயமாகியிருந்த சானியா இவ்வருட ஆரம்பத்தில் அதனை முறித்துக்கொண்டிருந்தார்.

திருமணத்திற்குப் பின்னர் இருவரும் துபாயில் வாழத் திட்டமிட்டுள்ளனர் என்றும், இருவரும் தத்தமது நாட்டையே விளையாட்டில் பிரதிநிதித்துவம் செய்வர் என்றும் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் தலைவராக சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு கோரிக்கை

sarath_fonseka-02.jpgமுன்னாள் அரச தலைவர் வேட்பாளர் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் தலைவர் பதவிக்கு நியமிக்கவேண்டும் என்று பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
பெரும் பலத்துடன் நாடாளுமன்றுக்கு வரவுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுக்கு சவாலான அதேவேளை எதிராக செயற்படும் வலுவுள்ள தலைமை இன்றைய காலகட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மிக மிக அவசியமான ஒன்று. அந்த பதவிக்கு சரியான தெரிவு சரத் பொன்சேகாவாக மட்டுமே இருக்கமுடியும் என்று ஜனநாயக தேசிய முன்னணி எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

பொன்சேகா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி தேர்தலில் ஐந்து ஆசனங்களை மட்டுமே வென்றிருந்தன. அவர்களில் ஜே.வி.பி. சார்பில் விஜித ஜேரத், சுனில் கெந்துனெற்றி, அஜித் குமார ஆகியோரும் பொன்சேகா கொழும்பிலும் களுத்துறையில் அர்ஜுன ரணதுங்கவும் வெற்றி பெற்றிருந்தனர். மீள்வாக்கெடுப்பு நடைபெறவுள்ள கண்டியில் தமக்கு மேலும் ஒரு ஆசனமும் தேசிய பட்டியல் மூலம் ஒரு ஆசனமும் தமக்கு கிடைக்கும் என்று தேசிய ஜனநாயக முன்னணி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற தோ்தலில் முஸ்லிம் காங்கிரஸுக்கு மொத்தம் 8 ஆசனங்கள்?

rauff.jpgநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி பட்டியலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆறு ஆசனங்களைத் தனதாக்கி யிருக்கின்றது. மேலும் தேசியப் பட்டியலின் ஊடாக இரண்டு ஆசனங்கள் கிடைக்கும் என்றும்  அதனுடன் அக்கட்சியின் மொத்த ஆசனங்கள் எட்டாக உயரும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பஷீர் சேகுதாவூத், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட எச். எம்.எம்.ஹரீஸ் மற்றும் பைஸல் காசிம், வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட நூர்தீன் மசூர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவு அறிவிக்கப்படாதபோதிலும், அங்கு சின்ன தௌபீக் வெற்றி பெற்றுள்ளமை ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கண்டி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணி பட்டியலில் 21 வேட்பாளர்களை நாடளாவிய ரீதியில் நிறுத்தியிருந்தது.