இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொய்ப் மாலிக்கை ஹைதராபாத்தில் மணம் முடித்துள்ளார். ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த திருமண வைபவத்தை மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் முன்னின்று நடத்தி வைத்ததாக இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார்.
ஷொய்ப் மாலிக் வேறொரு பெண்ணை கடந்த வாரம் விவாகரத்து செய்திருந்ததன் பின்னர் இப்போது இத்திருமணம் நடந்துள்ளது. இத்திருமணம் நடந்த விடுதிக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
23 வயது சானியாவும் 28 வயது ஷொய்ப் மாலிக்கும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தனர்.வேறொருவருடன் நிச்சயமாகியிருந்த சானியா இவ்வருட ஆரம்பத்தில் அதனை முறித்துக்கொண்டிருந்தார்.
திருமணத்திற்குப் பின்னர் இருவரும் துபாயில் வாழத் திட்டமிட்டுள்ளனர் என்றும், இருவரும் தத்தமது நாட்டையே விளையாட்டில் பிரதிநிதித்துவம் செய்வர் என்றும் கூறப்படுகிறது.