சீனாவில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் 617 பேர் பலி ஆனார்கள். மேலும் 10 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது கின்காய் மாகாணம். மலைப் பகுதிகள் நிறைந்த இந்த மாகாணம் சீனாவில் மிகப் பெரிய மாகாணம் ஆகும்.
இந்த மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7.49 மணிக்கு சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. திபெத்தையும் கின்காய் மாகாணத்தையும் பிரிக்கும் மலைப் பகுதியில் பூமிக்கு அடியில் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இந்த பூகம்பத்தால் கின்காய் மாகாணமும் திபெத்திய பகுதியும் குலுங்கின. பூகம்பம் ஏற்பட்டதும் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்ததால் உள்ளே இருந்தவர்கள் பீதியில் வெளியே ஓடி வந்தனர். ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.
பூகம்பத்தால் கின்காய் மாகாணத்தில் ஜீகு நகரில் உள்ள 85 சதவீத கட்டடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து நாசமாயின. கியேகு நகரிலும் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. யூசு பகுதியும் பூகம்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. யூசு, கியேகு பகுதிகளில் உள்ள பல பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டடங்கள் இடிந்து நாசமாயின. கட்டட இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த பலர் ரத்தம் சொட்டச் சொட்ட வெளியே ஓடிவந்தனர்.
மலைப்பாங்கான பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகள் மண்ணால் கட்டப்பட்டவை என்பதால் அவை நொறுங்கி விழுந்தன.