தேர்தலில் வெற்றியீட்டியுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளதுடன் இதன்மூலம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியுமென்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன் கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததன் பின்னரே வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுமென்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. தேர்தல் வெற்றியை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன இங்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பேசுகையில்
எமக்கு வாக்களித்த மக்களுக்கும் இந்தத் தேர்தலை நடத்தி முடிக்க உதவிய தேர்தல்கள் ஆணையாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸார், முப்படையினர், அரச அதிகாரிகள் என அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்
பொதுவாக எதிர்க்கட்சி என்று வரும்போது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதை எந்நேரமும் நோக்காகக் கொண்டு செயற்படுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. எனினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை அந்த யுத்தம் நிறைவு பெற்றுவிட்ட இச் சந்தர்ப்பத்தில் உலகின் முன்னேற்றம் கண்ட ஒரு நாடாக அபிவிருத்தி செய்ய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. இன்று இந்த யுகத்துக்குப் பொருத்தமானதொரு ஜனாதிபதி இருக்கிறார். பேதங்களின்றி ஒன்றிணைந்து செயற்பட்டால் முன்னேற்றம் காண முடியும். எனவே, குறுகிய அரசியல் நோக்கங்களின்றி,பேதங்களின்றி நாட்டை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதியின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்றார்.
இதேநேரம், இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்துடன் பேசத் தயாராகவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ள நிலையில் அக்கட்சியினருடன் பேசுவதற்கு ஆளுந்தரப்பு தயாராகவிருக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மைத்திரிபால சிறிசேன; நாம் ஏற்கனவே கூறியதுபோல் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம் இதன்மூலம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்று கூறினார்.