எழுத்தாளர்கள்
எழுத்தாளர்கள்
யாழ் – முல்லைத்தீவு பஸ் சேவையை மீண்டும் திங்கள் முதல் ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி இருபது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் முல்லைத்தீவுக்குமான புதிய நேரடி பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் வட மாகாண பிராந்திய முகாமையாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முல்லைத்தீவில் 1990 காலப்பகுதியில் இருந்த பஸ் டிப்போ யுத்த சுழ்நிலை காரணமாக சேதமாக்கப்பட்டது. எனினும் தற்போது புதிய பஸ் நிலைய தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை பருத்தித்துறைக்கும் – கொழும்புக்குமான நேரடி பஸ் சேவையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது.
பருத்தித்துறைக்கும் – கொழும்பு பஸ் சேவை அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமே அதிகமாகப் பயன்படுகின்றது. இச்சேவை பகல் வேளையில் இடம்பெறுவதால் போக்குவரத்து செய்யும் மக்களது எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே சேவையில் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.
பலாலி தெல்லிப்பளை போன்ற பிரதேசங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி பஸ் சேவையினை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மே 6 2010 பிரித்தானிய பாராளுமன்றம் எதிர்வுகூறப்பட்டது போன்று தொங்கு பாராளுமன்றமாகவே அமையவுள்ளது. பிரித்தானிய மக்கள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையை வழங்கவில்லை. வழமைக்கு மாறாக இறுதிவரை யார் ஆட்சியை அமைப்பது என்பது முடிவு செய்யப்படவில்லை. கொன்சவேடிவ் கட்சி தனக்கு அடுத்துள்ள தொழிற்கட்சியிலும் பார்க்க கூடுதல் ஆசனங்களைப் பெற்ற போதும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டிருக்கவில்லை. அதனால் குறைந்த ஆசனங்களைப் பெற்ற கட்சி அல்லது கட்சிகளுடன் இணைந்து கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.
கட்சிகள் பெற்றுள்ள ஆசனங்கள்:
306 : கொன்சவேடிவ் கட்சி
258 : தொழிற்கட்சி
57 : லிபிரல் டெமொகிரட் கட்சி
28 : மற்றைய கட்சிகள்
01 : இன்னும் வெளியாக வேண்டிய ஆசனங்கள் ( வேட்பாளர் ஒருவர் விபத்தில் மரணமடைந்ததை அடுத்து அத்தொகுதிக்கான தேர்தல் மே 27ல் நடைபெறவுள்ளது. )
650 : மொத்த ஆசனங்கள்
326 : பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு வேண்டிய ஆசனங்கள்
அதே சமயம் பிரித்தானிய அரசியலமைப்பின்படி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளாத கட்சியும் குறைந்த ஆசனங்களைப் பெற்ற கட்சியுடன் இணைந்து பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைப்பதற்கான கோரிக்கையை வைக்கலாம் எனத் தெரிவிக்கின்றது. அந்த வகையில் தற்போது ஆட்சியில் உள்ள தொழிற்கட்சி தனது தலைமையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு முற்பட்டுள்ளது.
ஆட்சியை அமைக்க முற்பட்டுள்ள இரு பிரதான கட்சிகளுக்கும் இதுவரை 50க்கும் சற்று அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ள லிபிரல் டெமொகிரட்டிக் கட்சியின் ஆதரவு அவசியமாகி உள்ளது. இக்கட்சி தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் தொலைக்காட்சி விவாதத்தின் மூலம் முன்னிலைக்கு வந்தபோதும் அது வாக்காளர்களின் தெரிவாக மாற்றப்படவில்லை. தேர்தலுக்கு முன் இடம்பெற்ற கருத்துக் கணிப்புகளில் லிபிரல் டெமொகிரட் கட்சி தொழிற்கட்சியைக் காட்டிலும் அதிக ஆசனங்களைப் பெற்று இரண்டாம் நிலைக்கு வரும் என்றும் கணிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் அவை அனைத்தும் தற்போது பொய்யாகி உள்ளது. லிபிரல் டெமொகிரட் கட்சி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற ஆசனங்களிலும் குறைந்த ஆசனங்களையே இம்முறை பெற்றுக் கொண்டுள்ளது.
மூன்றாவது பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள லிபிரல் டெமொகிரட் கட்சி தொழிற்கட்சியுடனேயே கொள்கையளவில் பெரும்பாலும் உடன்படக் கூடிய கட்சி. ஆனாலும் கொன்சவேடிவ் கட்சியே கூடுதல் ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சி என்ற வகையில் லிபிரல் டெமொகிரட் கட்சி முதலில் கொன்சவேடிவ் கட்சியுடன் எவ்வாறான கொள்கைகளில் இணைந்து ஆட்சி அமைக்க முடியும் என்பது பற்றி ஆராயும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்களுடன் கொள்கை உடன்பாட்டுக்கு வர முடியாத நிலையில் தொழிற்கட்சியுடனும் ஏனைய சிறு கட்சிகளுடனும் இணைந்து ஆட்சி அமைக்கலாம்.
1974ற்குப் பின் முதற்தடவையாக தொங்கு பாராளுமன்றம் ஒன்று பிரித்தானியாவில் அமைய உள்ளது. மிகவும் இறுக்கமாக இத்தேர்தல் போட்டி அமைந்ததால் இத்தேர்தலில் வழமைக்கு மாறாக வாக்களிப்பு வீதம் அதிகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. சகல வாக்களிப்பு நிலையங்களில் இரவு 10 மணிக்கு மேலாக மக்கள் வாக்களிக்க வரிசையில் நின்ற போதும் வாக்களிப்பு நிலையங்கள் தங்கள் விதிமுறைகளின்படி இரவு 10 மணிக்கு வாக்களிப்பை முடிவுக்கு கொண்டு வந்தனர். அதனால் நூற்றுக் கணக்காணவர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. இதனால் சிறிய எண்ணிக்கையில் தோற்றவர்கள் சில தேர்தல் தொகுதிகளின் வாக்களிப்பு செல்லுபடியற்றதெனக் கோரி சட்ட நடவடிக்கைகளில் இறங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த இறுக்கமான தேர்தலில் வேட்பாளர்களும் கட்சித் தலைவர்களும் தொடர்ச்சியாக கணிவிழித்திருந்து தேர்தல் முடிவுகளை அவதானித்து இருந்ததால் ஒரு குறுகிய ஓய்வுக்குப் பின்னரே யாருடன் எக்கொள்கைகளின் அடிப்படையில் இணைந்து ஆட்சியை அமைப்பது என்ற முடிவினை எடுக்க வேண்டும் என அவதானிகள் கருத்து வெளியிட்டு உள்ளனர். இதுவரை முன்னிணில் உள்ள இரு கட்சியும் தாங்கள் வெற்றி பெற்றதாகவோ அல்லது தோல்வி அடைந்ததாகவோ தெரிவிக்கவில்லை.
பிரித்தானிய மக்கள் அடுத்த ஆட்சியை யார் அமைக்கப் போகின்றார்கள் என்பதை ஆர்வமுடன் அவதானித்துக் கொண்டுள்ளனர்.
புலிகளின் சகோதரப் படுகொலைகளாலே நடாத்தப்பட்ட தமிழர் போராட்டத்தின் சிதைவு என்பது புலிகளின் அழிவின் பின்னரும் நியாயம் கேட்டுநிற்கிறது.
இன்றும் புலிகளின் இயக்கப்பெயரை, இயக்கத்தின் கொடியை, சின்னங்களை பாவிப்பவர்களிடமும், பிரபாகரன் தமது தலைவர் என்று கூறுபவர்களும், புலிகளின் தொடர்ச்சியாக போராட்டம் என்ற கண்துடைப்பை செய்பவர்களிடமும், இந்த ரெலோ அழிப்பிற்கான நியாயத்தை பாதிக்கப்பட்டவர்கள் கேட்கின்றனர். ரெலோ அழிப்பின்போது கொல்லப்பட்ட இளைஞர்களின் உறவினர்களும் முன்னாள் ரெலோ தோழர்களும், இன்றும் புலிகளின் தொடர்ச்சி என்று தமது போராட்டங்களை செய்பவர்களிடம் ரெலோ மீதான புலிகளின் கோரப் படுகொலைக்கான நியாயம் கேட்டு நிற்கிறார்கள்.
இன்று புலிகளின் தொடர்ச்சி என்ற போராட்ட சுத்துமாத்துக்களை கொண்டு திரிபவர்களில் பலர் ரெலோ அழிப்பின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகளேயாகும். இவர்கள் ரெலோ மட்டுமல்ல இதர சகோதரப் படுகொலைகளுக்கும் தொடர்புடையவர்களாகவே இருந்துள்ளனர். இன்று 24 வருடங்கள் கழிந்துவிட்டன என்ற காரணத்தை கூறிவிட்டு எவரும் ஒதுங்கிடவிட முடியாது என்பதே பல ரெலோ தோழர்களின் கருத்தாக உள்ளது.
புலிகள் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை என்பது திட்டவட்டமாக ரெலோ அழிப்பின்போது வெளிப்படுத்தப்பட்டு விட்டதொன்று. புலிகள் போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாதத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து தமிழ் மக்களின் அடையாள இருப்பையே கேள்விக்குள்ளாக்கினர். பெருந்தொகையான மக்களை அரசும் இராணுவமும் கொன்று குவிக்க ஆதரவு கொடுத்தது மட்டுமல்லாமல் தனது இறுதிக்கால அழிவின்போது தமிழ் மக்களை கொலை செய்யவும் புலிகள் தயங்கவில்லை.
சகோதர இயக்கத்துடன் ஏற்படும் முரண்பாடுகளை பேசித் தீர்ப்பதற்குப் பதிலாக எதிரி முகாம்களை சுற்றி வளைத்து தாக்குவதுபோல் தாக்கி சகோதரர்களைக் கொலை செய்தனர். இது சரி என்று வாதிடும் புலிகள், இன்றும் தமிழர் சமூகத்தில் தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புலிகள் இயக்கத்தை இன்று தமது சுயநலத்திற்காக பாவிக்கின்றனர். அதற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த தமிழீழம் இப்படி பலவகையான பெயர்களில் இந்த கைங்கரியத்தை நிறைவேற்றி வருகின்றனர்.
தமிழர்களை கொன்றுதான் சர்வதேச சமூகத்தின் கவனத்தை திருப்ப முடியும் என்ற கருத்தை கொண்டிருந்த புலிகளின் செயற்பாடுகள் புலிகள் மக்களில் அல்ல, தமது சொந்த நலனில் மட்டும் அக்கறையுள்ளவர்கள் என்பதைக் காட்டியது. இன்று இதன் தொடர்ச்சியினை செயற்படுத்துபவர்களும் மக்களின் நலனிலிருந்து விலகி தமது நலன்களையே பிரதிபலிக்கின்றனர். இவர்கள் போராட்டத்தின், மக்களின், சமூகமாற்றத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்கள் என்பதைவிட தமது சொந்த நலனில் இருந்தே மக்கள் நலனை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் சுயநலக் கும்பல்களாகும்.
எதிரியிடமிருந்து தப்பித்துக்கொள்ள இயக்க இரகசியங்களை காப்பாற்ற சயனைட் கொடுத்து கொலை செய்த புலிகள் தாம் மட்டும் உயிர்தப்பவே சரணடைந்தனர். இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் துரோகிகள் என்றால் தாமும் தமது துரோகத்தை பதிவுசெய்துவிட்டனரேயாகும்.
தமது போராட்ட யுக்திகளுக்காக பயன்படுத்திய செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு, பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு ஒரு வருடமாகியும் இன்றுவரையில் புலம்பெயர் புலிகள் அமைப்பினர் கைகொடுக்க முன்வரவில்லை. அவர்களுடைய கவனம் முமுவதும் தங்கள் வசம் உள்ள சொத்துக்களையும் வருமானங்களையும் பாதுகாப்பது பெருக்குவது என்பதிலேயே உள்ளது. மே 18 வரை செல்வந்த இயக்கமாக இருந்த புலிகள் மே 18ல் தங்கள் தலைவர் அழிக்கப்பட்டதும் செயர் மார்கற் வீழ்ந்ததால் நிறுவனங்களின் சொத்துக்கள் காணாமல் போவது போல் புலிகளது சொத்துக்களும் மே 18 உடன் காணாமல் போனது.
முள்ளிவாய்க்காலில் அழிவு ஏற்பட்டு ஒரு வருடமாகியும் தமது இயக்கத்தின் தலைமைகள் யார்? என்பது இன்று வரையில் வெளியிடவில்லை என்றால் மக்களுக்கான ஒரு தலைமை இருந்தது என்று சொல்வதில் அர்த்தமில்லை. இவர்கள் அடிப்படையில் மக்கள் நலனுக்காக போராடவில்லை. பிரபாகரனின் தனிப்பட்ட தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்காக இத்தனை மக்களையும் இத்தனை மக்களின் சொத்துக்களையும் மானத்தையும் மரியாதையையும் அழித்து தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் உயிர் மூச்சையும் அழித்துவிட்டனர் புலிகள். இந்த இயக்கத்தினால் இவற்றைவிட வேறு ஏதும் செய்யத் தெரியாது. தமிழர் உரிமைப் போராட்டத்தை பிரபாகரன் மாற்றுவார் என்பது 1980 களிலிருந்து தமிழர் போராட்ட ஆரம்பகால உறுப்பினர்களால் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இப்படியாக பேசப்பட்ட பல கூட்டங்களில் கலந்து கொண்டோர் பலர் இன்றும் புலம்பெயர்ந்த நாட்டிலும் இக்கருத்துக்களுடன் வாழ்கின்றனர். உதாரணமாக யாழ் ஸ்ரான்லி வீதியிலுள்ள கம்யூனிஸ்கட்சி எழுதுவினைஞர் சங்கத்தின் கட்டிடத்தில், மணியம் கட்டிடத்தில் நடைபெற்ற 14 இயக்கங்களின் ஒன்று கூடலின்போதும் இவை மனம் திறந்து பேசப்பட்டது.
புலிகளினால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட இன்றுள்ள ரெலோ இயக்கத்தின் செயற்பாடுகளும் அன்னிறிலிருந்து இன்று வரையில் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்தோ அல்லது சமூகத்தின் தேவைகளிலிருந்தோ பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்றும் ரெலோ தனது பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்வதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக உள்ளது. அதிலும் கடந்த காலத்தில் 4 பாராளுமன்ற ஆசனங்களையும் இன்று ரிஎன்ஏ கூட்டாக 2 ஆசனங்களையும் ரெலோ பெற்றிருந்த போதும் மக்களின் தேவைகள், மக்கள் உரிமைப் போராட்டதின் பங்காளிகளாக ரெலோவினரின் செயற்பாடுகள் என்ன? என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. வெறுமனே பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவது மட்டும் போராட்டமா? இன்றுள்ள ரெலோவினர் ‘உங்கள் கடந்தகால மக்கள் சேவைகள் என்ன?’ என்ற கேள்விக்கு என்ன பதில்களைக் கொண்டிருக்கிறார்கள்? எப்போதும் போல் புலிகளையே காரணம் காட்டும் ரெலோவினர் இன்று புலிகளின் அழிவின் பின்னர் ஒரு வருடமாகியும் ‘ரெலோவின் நிலைப்பாடு என்ன?’ என்ற எந்த அறிக்கைகளும் வெளிவரவில்லை?
புலிகள் தமது பயங்கரவாத செயற்பாடுகளின் காலத்தில் ரெலோவின் அடையாள அட்டைகளை பயன்படுத்தியே கொழும்பிலும் இலங்கையின் இதர பகுதிகளில் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்தனர் என்றும் பல ஆயுத தளபாடங்களை கொழும்பிற்குள் புலிகள் கடத்தினர் என்றும் விசேடமாக புலிகளின் பிஸ்டல் பிரிவினர் ரெலோவின் அடையாள அட்டையுடன் கொழும்பில் நடமாடினர்.
இன்றுவரையில் ரெலோ தனது கட்சியினை மறுசீரமைப்பு செய்யவில்லை. ரெலோ உறுப்பினர்களின் அந்தஸ்துக்கள் என்ன? ரெலோவின் அடுத்த செயற்பாடுகள் என்ன? என்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் வெறுமனே பாராளுமன்றத்திற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாகவே பல பொதுமக்களும், பல முன்னாள் ரெலோ போராளிகளும், புலிகளுடன் நேரடியாக மோதலில் ஈடுபட்டு இன்று ரெலோவிலிருந்து விலகி வாழ்பவர்களின் கருத்தாகவும் உள்ளது.
மேற்குறிப்பிட்ட விடயங்களின் தாக்கம் காரணமாகவும் ரெலோவிருந்து வெளியேறிய சிறீ ரெலோவினரும் அதன் பின்னர் சிறீரெலோவிலிருந்து பிரிந்து சுதந்திரக்கட்சியுடன் இணைந்த ஒரு பிரிவினரும்கூட, இன்றைய ரெலோவினரின் கட்சி அமைப்பு செயற்பாடுகள் மற்றும் ரெலோவின் இன்றைய நிலைப்பாடுகளையே தெளிவுபடுத்துகின்றது.
நாட்டின் பாதுகாப்பு, நாணயமாற்று மற்றும் வீடமைப்பு உட்பட பல அம்சங்களை உள்ளடக்கிய முக்கிய உடன்படிக்கையொன்றில் அரசாங்கம் நேற்று கைச்சாத்திட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நேற்று மேற்கொள்ளப்பட்ட இவ்வொப்பந்தக் கைச்சாத்தில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் பங்கேற்றதாக அமைச்சர் தெரிவித்தார். சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இலங்கை பங்காளி அந்தஸ்தைப் பெற்றுள்ளதையடுத்தே இது சாத்தியமாகியுள்ளதென அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில் :- சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா பிரதான உறுப்பு நாடாகவுள்ளது. சுகாதார சீர்கேடுகளைத் தடுத்தல், கலாசார சீர்கேடுகளைத் தடுத்தல், அரச ஊழியர் வீடமைப்பு, மீனவர்கள் முன்னேற்றம், மின்சக்தித் துறை தொடர்பான அம்சங்களும் இவ்வுடன்படிக்கையில் அடங்குகின்றன.
அடுத்த வாரத்தில் நமது நாட்டுக்குச் சில பொருளாதார நன்மைகள் கிடைக்கவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெஹ்ரானில் ஜீ-15 மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதுடன் ஈரான் உட்பட முக்கிய அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
சமையல் எரிவாயுக்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதன்படி ஷெல் காஸின் விலை 219 ரூபாவாலும், லாஃப் காஸின் விலை 323 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு முதல் இவைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்றுத் தெரிவித்தார்.
இதற்கமைய ஷெல் சமையல் எரிவாயு வொன்றின் புதிய விலை 1769 ரூபாவாகவும், லாஃப் சமையல் எரிவாயு வின் புதிய விலை 1744 ரூபாவாகவும் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளது. சமையல் எரிவாயு விலையதிகரிப்புத் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்புக் காரணமாகவே ஷெல் மற்றும் லாஃப் சமையல் எரிவாயுக்களின் விலையில் மாற்றங்களை செய்ய வேண்டி ஏற்பட்டிருப்ப தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
யுத்த இறுதிக் கட்டங்களின் போது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்படவிருக்கும் ஆணைக்குழு விசாரணை மேற்கொள்ளும். அத்துடன் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடிய சூழ்நிலைகள் தொடர்பாகவும் இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நபர்கள் அல்லது குழுக்களை அடையாளம் கண்டுகொள்வது குறித்தும் இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தும்.
இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி விரைவில் நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது. அத்துடன் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளால் அண்மைய வருடங்களில் தோற்றுவிக்கப்பட்ட மோதல் நிலைவரம் தொடர்பாக இலங்கைக்கு ஏற்பட்ட குழப்பமான தருணங்கள், நெருக்கடிகள் பற்றியும் இந்த ஆணைக்குழு ஆராயும். இன்றைய சூழ்நிலையானது வாய்ப்பான தருணத்தை வழங்கியிருக்கின்றதென்ற கருத்தை ஜனாதிபதி கொண்டுள்ளார்.
அண்மைய மோதல் கட்டம் மற்றும் நாட்டின் துன்பங்கள் கடந்து சென்றுவிட்ட நிலைமையை வெளிப்படுத்துவதாகத் தற்போதைய தருணம் அமைந்துள்ளது. மற்றும் மக்களின் பொதுவான அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டும் சமாதானம், சௌஜன்யம், சுபிட்சம் என்பவற்றுக்கான சகாப்தத்தைக் கொண்டிருப்பதற்கான உறுதியளிக்கப்பட்ட அவர்களின் தீர்மானத்தை வெளிப்படுத்துவதாகத் தற்போதைய தருணம் அமைந்துள்ளது என்ற அபிப்பிராயத்தை ஜனாதிபதி கொண்டிருக்கிறார்.
மோதலான சூழ்நிலைகளின் போது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் ஏதாவது மீறப்பட்டுள்ளனவா என்பது பற்றி ஆராயப்படும். அண்மைய மோதல் கட்டத்தின் போது கற்றுக்கொண்ட பாடங்களைக் கணிப்பீடு செய்யும் போது இந்த விடயம் ஆராயப்படும். அத்துடன், இத்தகைய நிலைமைகளுக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நபர்கள் அல்லது குழுக்களை அடையாளம் கண்டுகொள்ளுதல் தொடர்பாகவும் மதிப்பீடு செய்யப்படும்.
மேலும் மோதல் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களில் தங்கியிருப்போருக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டிய தன்மை குறித்தம் இந்த ஆணைக்குழு பரிந்துரை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோதலுக்குப் பின்னரான சூழ்நிலையில் நிறுவன ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் மற்றும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைகளை இந்த ஆணைக்குழு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் செயற்பாட்டுத்திரனுடன் எடுக்கப்படவேண்டிய மீள்கட்டுமானம், புனர்வாழ்வு, நல்லிணக்கம் தொடர்பாகவும் இந்த ஆணைக்குழு சிபார்சுகளை முன்வைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த மாதிரியான நிலைமைகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் தேசிய ஐக்கியத்தை மேம்படுத்தவும் சகல சமூகங்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் சட்ட நிர்வாக ரீதியான ஏற்பாடுகள் அவசியமானவையாக அமையும். இவையும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள ஆணையின் ஓரங்கமாக அமையும்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில் 7 மாண்புமிக்க இலங்கையர்கள் இடம்பெறுவர். இலங்கையிலும் மற்றும் வெளிநாடுகளிலுமுள்ள இலங்கையர்கள் இதில் அங்கம் வகிப்பார்கள். இந்த ஆணைக்குழுவின் விதிமுறைகள், பதவிக்காலம் என்பன தொடர்பாக அடுத்த சில நாட்களில் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறிய அனைத்து இடங்களிலும் தபால் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதென வடபிராந்திய பிரதி அஞ்சல்மா அதிபதி வீ. குமரகுரு தெரிவித்தார்.
இதுவரையில், 18 இடங்களில் தபாலகங்கள் திறக்கப்பட்டுள்ளதெனக் குறிப்பிட்ட அவர், கடைசியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளையில் திறக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தபாலகங்கள் திறக்கப்படுவதினால் மீள்குடியேறியுள்ள அனைத்து மக்களுக்கும் எமது சேவை திருப்திகரமான முறையில் வழங்கப்படுகின்றதெனவும் பிரதி அஞ்சல் மா அதிபதி தெரிவித்தார்.
பாராளு மன்றத்தில் இராணுவச் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும்”சயனைட்’ கொடுத்து அழித்தது போல் பாராளுமன்றத்துக்கும் “சயனைட்” ஊட்ட வேண்டாமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி,இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;ஒரு விடயம்தொடர்பில் தீர்மானம் எடுக்கும்போது சட்டமா அதிபருடன் மட்டும் கலந்துரையாடாது சம்பந்தப்பட்ட இருதரப்பினருடனும் அது தொடர்பில் பேசப்பட வேண்டும். கருத்துகள் கேட்கப்பட வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களம் இன்று நீதி அமைச்சின் கீழ் இல்லை. ஜனாதிபதியின் கீழேயே சட்டமா அதிபர் உள்ளார். பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதியின் கீழேயே உள்ளது. வழக்குகளை விசாரிப்பவர்களை நீதிச்சேவை ஆணைக்குழுவே நியமிக்க வேண்டும்.
ஜி.எஸ்.பி.+ பெற வேண்டுமானால் முதலில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். ஊடகங்கள், ஊடகவியலாளர்களுக்கு “சயனைட்” கொடுத்து அழித்துவிட்டீர்கள். பாராளுமன்றத்துக்கும் “சயனைட்” ஊட்ட முயற்சிக்கின்றீர்கள். தற்போது பாராளுமன்றத்தில் இராணுவச் சட்டங்களே பயன்படுத்தப்படுகின்றன. நகர அபிவிருத்தி தற்போது பொருளாதார அபிவிருத்தியாக மாறிவிட்டது. நகர அபிவிருத்தி ஒரு சகோதரரிடம் பொருளாதார அபிவிருத்தி இன்னொரு சகோதரரிடம். ஏற்றுமதி,இறக்குமதி தொடர்பான 3 புதிய விதிகள் வர்த்தமானி மூலம் கடந்த நவம்பரிலேயே சமர்ப்பிக்கப்பட்டன. அது பழைய பாராளுமன்றம். தற்போது கூடியுள்ளது புதிய பாராளுமன்றம். எனவே, வர்த்தமானி மீண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினரான தன்னை இராணுவ நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு வரவிடாமல் தடுத்ததன் மூலம் தனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகத் தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகத் தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா, அதற்கெதிராகச் சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானித்திருப்பதாக அறிவித்தார்.
சபாநாயகரின் உத்தரவைக்கூட இராணுவ நீதிமன்றம் உதாசீனம் செய்ததன் மூலம் அரசாங்கம் ஜனநாயகத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் சவால் விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்றக் கட்டிடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் பாராளுமன்றக் குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் பொன்சேகா இதுதொடர்பாக மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
நேற்று முன்தினம் புதன்கிழமை நான் பாராளுமன்றத்துக்கு வருவதற்குத் தயாரானபோது இராணுவ அதிகாரிகள் பாராளுமன்றத்துக்கு அழைத்துச் செல்ல முடியாதெனவும் அதற்கான அனுமதி தமக்குக் கிடைக்கவில்லையெனவும் தெரிவித்ததோடு, இன்றைய தினம் புதன்கிழமை இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியுள்ளதாகக் கூறி பாராளுமன்றம் செல்வதைத் தடுத்தனர். என்னை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்குமாறு சபாநாயகர் இராணுவ நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்த நிலையிலும் கூட அந்த உத்தரவைப் புறக்கணித்ததன் மூலம் எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணாக இராணுவம் செயற்பட்டுள்ளது. இந்தத் தவறான முன்னுதாரணம் பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு எதிர்காலத்தில் பாதகமான நிலைமைகளைத் தோற்றுவிக்கலாம்.
எதிர்க்கட்சிகளின் கட்சித் தலைவர்கள் கூட்டம் புதன்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் கூடி இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்துள்ளது. இதனடிப்படையில் இந்த சிறப்புரிமை மீறல் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டைச் சமர்ப்பிக்கவிருக்கின்றோம்.
இந்த பாராளுமன்றச் சிறப்புரிமை மீறல் தொடர்பாக புதன்கிழமை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகரைச் சந்தித்து தமது கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர். இராணுவம் சட்டவிரோதமானதொரு நடைமுறையைக் கையாண்டுள்ளது. சிறப்புரிமை மீறல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் புதன்கிழமை பாராளுமன்றத்தில் கிளப்பியபோது சபாநாயகர் ஆசனத்திலிருந்தவர் அதனைச் செவிமடுக்கத் தவறியுள்ளார்.
அரசாங்கம் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது. சட்ட மா அதிபர் கூட பாராளுமன்றத்துக்கே கட்டுப்படவேண்டும். அவ்வாறான நிலையில் பாராளுமன்றம் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெறுவது சட்டவிரோதமானதாகும். பாராளுமன்றம் தொடர்பான அரசியலமைப்பு விதிகளுக்கமையவே இந்த சிறப்புரிமை மீறல் தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்தரப்பு இந்த முடிவைத் தெரியாமல் மேற்கொள்ளவில்லை. நன்கு தெரிந்த நிலையிலேயே என்னை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. தெரியாதது போல் இப்போது நடந்துகொள்ள முயற்சிக்கின்றது எனவும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.