யுத்த இறுதிக் கட்டங்களின் போது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்படவிருக்கும் ஆணைக்குழு விசாரணை மேற்கொள்ளும். அத்துடன் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடிய சூழ்நிலைகள் தொடர்பாகவும் இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நபர்கள் அல்லது குழுக்களை அடையாளம் கண்டுகொள்வது குறித்தும் இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தும்.
இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி விரைவில் நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது. அத்துடன் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளால் அண்மைய வருடங்களில் தோற்றுவிக்கப்பட்ட மோதல் நிலைவரம் தொடர்பாக இலங்கைக்கு ஏற்பட்ட குழப்பமான தருணங்கள், நெருக்கடிகள் பற்றியும் இந்த ஆணைக்குழு ஆராயும். இன்றைய சூழ்நிலையானது வாய்ப்பான தருணத்தை வழங்கியிருக்கின்றதென்ற கருத்தை ஜனாதிபதி கொண்டுள்ளார்.
அண்மைய மோதல் கட்டம் மற்றும் நாட்டின் துன்பங்கள் கடந்து சென்றுவிட்ட நிலைமையை வெளிப்படுத்துவதாகத் தற்போதைய தருணம் அமைந்துள்ளது. மற்றும் மக்களின் பொதுவான அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டும் சமாதானம், சௌஜன்யம், சுபிட்சம் என்பவற்றுக்கான சகாப்தத்தைக் கொண்டிருப்பதற்கான உறுதியளிக்கப்பட்ட அவர்களின் தீர்மானத்தை வெளிப்படுத்துவதாகத் தற்போதைய தருணம் அமைந்துள்ளது என்ற அபிப்பிராயத்தை ஜனாதிபதி கொண்டிருக்கிறார்.
மோதலான சூழ்நிலைகளின் போது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் ஏதாவது மீறப்பட்டுள்ளனவா என்பது பற்றி ஆராயப்படும். அண்மைய மோதல் கட்டத்தின் போது கற்றுக்கொண்ட பாடங்களைக் கணிப்பீடு செய்யும் போது இந்த விடயம் ஆராயப்படும். அத்துடன், இத்தகைய நிலைமைகளுக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நபர்கள் அல்லது குழுக்களை அடையாளம் கண்டுகொள்ளுதல் தொடர்பாகவும் மதிப்பீடு செய்யப்படும்.
மேலும் மோதல் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களில் தங்கியிருப்போருக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டிய தன்மை குறித்தம் இந்த ஆணைக்குழு பரிந்துரை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோதலுக்குப் பின்னரான சூழ்நிலையில் நிறுவன ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் மற்றும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைகளை இந்த ஆணைக்குழு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் செயற்பாட்டுத்திரனுடன் எடுக்கப்படவேண்டிய மீள்கட்டுமானம், புனர்வாழ்வு, நல்லிணக்கம் தொடர்பாகவும் இந்த ஆணைக்குழு சிபார்சுகளை முன்வைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த மாதிரியான நிலைமைகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் தேசிய ஐக்கியத்தை மேம்படுத்தவும் சகல சமூகங்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் சட்ட நிர்வாக ரீதியான ஏற்பாடுகள் அவசியமானவையாக அமையும். இவையும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள ஆணையின் ஓரங்கமாக அமையும்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில் 7 மாண்புமிக்க இலங்கையர்கள் இடம்பெறுவர். இலங்கையிலும் மற்றும் வெளிநாடுகளிலுமுள்ள இலங்கையர்கள் இதில் அங்கம் வகிப்பார்கள். இந்த ஆணைக்குழுவின் விதிமுறைகள், பதவிக்காலம் என்பன தொடர்பாக அடுத்த சில நாட்களில் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.