எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

காதலியின் கணவரைக் குத்திக் கொன்ற இலங்கை இளைஞருக்கு மரணதண்டனை

கொலைக்குற்றத்திற்காக ஆயுள்தண்டனை வழங்கிய இலங்கையரொருவருக்கு டுபாயின் மேன்முறையீட்டு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளது. தனது காதலியின் கணவரை கொலை செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞருக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஈசா ஷெரீப் மரணதண்டனை வழங்கித் தீர்பளித்துள்ளார்.

இச் சம்பவத்தில் பலியானவரும் இலங்கையராவார். நீதிமன்றம் ஏப்ரல் 5இல் பிரதிவாதிக்கு ஆயுள்தண்டனை வழங்கியதுடன் அதன்பின்னர் அவரை நாடுகடத்தும் தீர்ப்பையும் வழங்கியிருந்தது. பிரதிவாதி இறந்தவரின் மனைவியுடன் தொடர்பு கொண்டு இருந்ததாகவும் அவரைக் கொலைசெய்ய திட்டமிட்டிருந்ததாகவும் நம்பப்பட்டது. கணவன் அவரின் காதல் வாழ்வுக்குத் தடையாக இருந்ததால் அவரைக் கொல்ல திட்டமிட்டிருந்ததாக நம்பப்பட்டது. கடந்த வருடம் பெப்ரவரி 26 இரவு அவரை பல தடவைகள் குத்தியதாகவும் உடலின் பலபகுதிகளில் காயமேற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர் அன்றைய இரவு இரத்தவெள்ளத்தில் காணப்பட்டதாக பொலிஸ் அதிகாரி விசாரணையாளர்களுக்கு கூறியுள்ளார். அச்சமயம் அங்கிருந்த மனைவியிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது தனது கணவனை ஆபிரிக்க மனிதர் ஒருவர் குத்தியதாக அப்பெண் கூறியுள்ளார். வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போது வழியில் குத்தியதாக அப்பெண் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆனால் அந்தப் பெண் உடனடியாகவே தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டதாகவும் பிரதிவாதி தனது கணவரைக் குத்தியதாகவும் பின்னர் அவர் தெரிவித்துள்ளார். பிரதி வாதி தான் வேலை செய்யும் இடத்தில் தொழில் பார்ப்பவர் என்றும் அப்பெண் கூறியிருந்தார். குத்தியதற்குக் காரணம் பொறாமை என்று அவர் தெரிவித்துள்ளார். பின்னர் பிரதிவாதியை பொலிஸார் கைது செய்தனர்.

இந்தக் குற்றச்செயல் நடந்த இடத்தில் அன்றைய இரவு இருந்த டக்ஸி சாரதி கூறுகையில்; அல்யாப்ரியா பகுதிக்கு ஆட்களை தான் ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் இரண்டு ஆண்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததையும் பெண்ணொருவர் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததையும் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவர்களிலொருவர் மற்றவரை அவர் கீழே விழும் வரை குத்தினார். மற்றவர் மார்பில் குத்திக் கொண்டிருந்தார் என்று சாரதி தனது சாட்சியத்தின் போது தெரிவித்ததாக கலீஜ் ரைம்ஸ் தெரிவித்தது.

யாழ்ப்பாணத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் இளைஞர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை!

School_Girlsயாழ்ப் பாணத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் இளைஞர்களின் செயல்களைக்  கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீதியில் செல்லும் இளம்பெண்கள் குறிப்பாக, பாடசாலை மாணவிகள், தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகள் ஆகியோரிடம் தகாத முறையில் சில இளைஞர்கள் நடந்து கொள்ளும் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளமை தொடர்பாக பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

மாணவிகள் பாடசாலைகளுக்குச் செல்லும் வேளைகளிலும், பாடசாலை விட்டு வீடு திரும்பும் வேளைகளிலும் வீதிகளில் நின்று சே~ட்டைகளின் ஈடுபடும் இளைஞர்களின் செயற்பாடுகள் அண்மைக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, கட்டாக்காலிகள் போல் திரியும் இளைஞர் குழுக்கள் பல வீதிச் சண்டைகளில் ஈடுபடுவதையும் காணக் கூடியதாகவுள்ளது. இதனையடுத்தே பொலிஸார் இச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகாமையிலுள்ள வீதிகளில் பொலிஸார் தற்போது அதிகளவில் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதே வேளை, குடாநாட்டில் முறையான ஆவணங்கள், சாரதி அனுமதிப்பத்திரங்களின்றி வாகனங்களைச் செலுத்துவோர் மீதும் பொலிஸார் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வன்னி, யாழ்ப்பாணத்திற்கு ஜே.வி.பியினர் மூன்று நாள் விஜயம்.!

Chandrasekaran JVPஜே.வி.பி கட்சியின் குழுவினர் June 14 2010 வன்னிப் பகுதிக்குச் சென்று அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களை பார்வையிட்டுள்ளனர். ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர் சந்திரசேகரன், பிமல் ரட்ணாயக்க உட்பட்ட குழுவினர் இதில் அடங்குகின்றனர். வன்னியில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது பிரச்சினைகளை ஜே.வி.பியனரிடம் கூறி கண்ணீர் வடித்ததாக ஜே.வி.பியின் தமிழ் உறுப்பினர் ஆர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமான இவர்களின் பயணம் மூன்று தினங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதோடு, யாழ்ப்பாணத்திற்கும் இவர்கள் பயணம் செய்யவுள்ளனர். வவனியா அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களைப் பார்வையிட தாம் அரசாங்கத்தின் அனுமதியைக் கோரியுள்ளதாகவும் ஜே.வி.பியினர் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த மின்சார பாவனை அகற்றப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர்ப்பகுதியில்  இராணுவ மினி முகாம்களிலும், காவலரண்களிலும்  மின்மானி (மீற்றர்) பொருத்தாமல் பெறப்பட்ட மின்சார விநியோகம் அகற்றப்பட்டுள்ளன. நகர்ப்பகுதி இராணுவப் பொறுப்பதிகாரியின் உத்தரவின் பேரிலேயே மின்சார சபை ஊழியர்களினால் இவை அகற்றப்பட்டுள்ளன. 

இராணுவத்தின் 522 ஆவது படையணியின் மக்கள் தொடர்பாடல் கூட்டத்தில் சட்டவிரோத மின் பாவனையால் சீரான மின் விநியோகத்தை வழங்க முடியாமை குறித்து மின்சார சபையின் சாவகச்சேரி மின் அத்தியட்சகர் தெரிவித்ததையடுத்தே படையதிகாரியினால் இவற்றை அகற்ற மின்சார சபைக்கு பணிக்கப்பட்டது.  இதனையடுத்து இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 32 மின் தொடர்புகள் அகற்றப்பட்டன. இனிவரும் நாட்களில் சட்டபூர்வமாக மின்மானிகள் பொருத்தப்பட்டு குறித்த இடங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதே வேளை, தென்மராட்சிப்பகுதியில் சட்டவிரோத மின்சார பாவனையாளர்களை கண்டுபிடிக்கவும்  படைத்தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த முறையற்ற மின் பாவனையை படையதிகாரி உடனடியாக அகற்ற முன்வந்தமை ஒரு முன்மாதிரி நடவடிக்கை என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் எதிர்கால செயல் திட்டங்களுக்கென இந்தியா 1250 மில். அமெரிக்க டொலர் நிதியுதவி

g.jpgஇலங்கை யின் எதிர்கால செயற்திட்டங்களுக்கென இந்தியா 1250 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்குக் கிடைத்த பிரதிபலனாக இதனைக் குறிப்பிட்ட அமைச்சர்; ஐம்பதாயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் வடக்கில் ரயில் பாதைகள் நிர்மாணம் மற்றும் மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளுக்கும் இந்நிதி உபயோகப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு விளக்க மளித்த அமைச்சர்; 250 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 50,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான செயற்திட்டத்தை மேற்கொள்வது டன் 800 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடக்கில் மூன்று ரயில் பாதைகளை நிர்மாணிக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் ஓமந்தை-பளை, மடு-மதவாச்சி, மடு-பளை ஆகிய ரயில் பாதைகளே இந்நிதியில் நிர்மாணிக்கப்பட வுள்ளன. அத்துடன் சம்பூர் மின்சார நிலைய நிர்மாணிப்புக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் இந்தியா இலங்கைக்கு எதுவித அழுத்தத்தையும் வழங்கவில்லையெனவும் இலங்கை தனித்து தீர்மானமெடுப்பதையே இந்தியா விரும்புகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார். அதேவேளை; இந்தியாவின் பொருளாதார அபிவிருத்தியின் பயன் ஏனைய அயல்நாடுகளுக்கும் உபயோகமாக வேண்டும் என்பதே இந்தியப் பிரதமரின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புனர்வாழ்வு பெற்ற 53 ஜோடிகளுக்கு பம்பைமடுவில் நேற்று திருமணம். விவேக் ஒபரோயும் கலந்து சிறப்பித்தார்

marage.jpgவவுனியா பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ் வளிக்கப்பட்ட 53 ஜோடிகளுக்கு நேற்று அரச அனுசரணையில் திருமணம் செய்துவைக்கப்பட்டது. வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு முகாம் மைதானத்தில் நேற்றுக் காலை இந்நிகழ்வு விமரிசையாக நடைபெற்றதுடன் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ரிசாத் பதியுதீன், டியூ குண சேகர ஆகியோரும் கலந்துகொண்டு சாட்சிக் கையொப்பமிட்டனர்.

marage.jpgஇந்நிகழ்வில் பிரதியமைச்சர்களான டிலான் பெரேரா விஜித் விஜயமுனி சொய்ஸா, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் சிறப்பதிதிகளாகக் கலந்துகொண்டுள்ளதுடன் அரச மற்றும் இராணுவ உயரதிகாரிகள், மதத் தலைவர்கள், மணமுடித்த தம்பதிகளின் பெற்றோர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இவ்வைபவத்தின் போது 40 ஜோடிகளுக்கு இந்து மத முறைப்படியும் மேலும் 13 ஜோடிகளுக்கு கிறிஸ்தவ மத முறைப்படியும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டதுடன் திருமணப் பதிவு சான்றிதழ்கள் உடனடியாகவே கையளிக்கப்பட்டன. புதுமணத் தம்பதிகளுக்குத் தலா 10,000 ரூபா வழங்கப்பட்டது இதனை கொழும்பிலிருந்து வருகை தந்த ஸ்ரீ அம்மா பகவானின் இயக்கத்தினர் வழங்கினர்.

இவர்களுக்கான வைப்புக்கணக்கு வவுனியா மக்கள் வங்கிக் கிளையில் ஆரம்பிக்கப்பட்டு இந்தப் பணம் அதில் வைப்பிலிடப்பட்டது.  ட்ரைஸ்டார் நிறுவனம் 53 ஜோடிகளுக்கும் கைக்கடிகாரங்களைப் பரிசாக வழங்கியதுடன் புதுமணத் தம்பதிகளுக்கு மேலும் பல பரிசுப் பொருட்களும் இவ்வைபவத்தின் போது வழங்கப்பட்டன. நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்த புதுத் தம்பதிகளுக்கு தற்காலிகமாக தங்குவதற்கென தனித்தனி வீடுகளும் வழங்கப்பட்டன.

இத்திருமண நிகழ்வில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஒபரோயும் கலந்து சிறப்பித்தார். அவருடன் இலங்கையின் முன்னணி நடிகை அனோஜா வீரசிங்கவிடம் நடனப் பயிற்சிபெற்ற ஜோடிகளும் இணைந்து நடனமாடியமை திருமண வைபவத்தை மேலும் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மக்கள் விடுதலை முன்னணி தூதுக்குழு இன்று வன்னிக்கு விஜயம் – அநுர குமார

anurakumara.gifமக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையிலான தூதுக்குழுவொன்று வன்னிகான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள இந்த விஜயத்தின் போது வவுனியாவிலுள்ள இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகள் குறித்தும் கண்டறியப்படவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கா தெரிவித்தார். மூன்று நாட்களாக அமையவுள்ள இந்த விஜயத்தின் போது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் கூறினார்

இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணுமாறு டில்லியிடமிருந்து எந்த அழுத்தமும் இல்லை – பீரிஸ்

g.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதுடில்லி விஜயத்தின்போது இலங்கை இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியா எந்த அழுத்தமும் வழங்கவில்லையென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கை தொடர்பிலான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தற்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இருக்கும் அதேநிலைப்பட்டிலேயே அந்நாட்டு எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியும் (பி.ஜே.பி.) இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடனான இந்திய விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய அமைச்சர் பீரிஸ் அவ் விடயம் தொடர்பாக விளக்கமளிக்கும் பொருட்டு கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவல்களை வெளியிட்டார். அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது;

“புதுடில்லி விஜயத்தின்போது ஜனாதிபதி தலைமையில் நாம் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்படப் பல்வேறு உயர்மட்டப் பிரமுகர்களைச் சந்தித்து பேசினோம். அது மட்டுமல்லாது தமிழ் நாட்டு எம்.பி.க்கள் 21 பேரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தனர். இதன்போது அரசியல் தீர்வு பற்றித் தமிழ்க் கட்சிகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பேச்சுகள் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புகள் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறினோம்.

அது மட்டுமல்லாது இந்தப் பேச்சுகளை முன்னெடுத்து செல்லவிருப்பது பற்றியும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினோம். இதேநேரம், இந்திய அரசாங்கத்திடமிருந்து எமக்கு எந்த அழுத்தங்களும் வரவில்லை. இது தான் தீர்வு. இதைத்தான் நீங்கள் வழங்க வேண்டும் என்றெல்லாம் எந்த அழுத்தத்தையும் புதுடில்லி எமக்கு வழங்கவில்லை.

இரு நாடுகளுக்கும் இடையிலான சந்திப்புகள் மிகவும் வெளிப்படையானதாகவே இருந்தது. இந்தியா அதனது கருத்துகளை கூறியது. நாம் எமது முன்னுரிமைகள் மற்றும் நோக்கங்கள் பற்றி அவர்களுக்கு விளக்கிக் கூறினோம். அந்த வகையில் சந்திப்புகளானது மிகவும் சுமுகமானதும் முன்னேற்றங்கள் மிக்கதுமாக இருந்தன.அது மட்டுமல்லாது இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக நெருங்கிய உறவு இருந்து வரும் நிலையில் இலங்கை மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான எந்த சந்தர்ப்பமும் இல்லை.

அத்துடன், இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா ஸ்வராஜையும் நாம் சந்தித்துப் பேசினோம். இலங்கை தொடர்பாக காங்கிரஸ் அரசாங்கம் பின்பற்றும் வெளியுறவுக் கொள்கையை பி.ஜே.பி.யும் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார். இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதில் இந்திய அரசாங்கம் சந்தேகமடைந்தது போல் எதிர்க்கட்சியும் சந்தேகப்படுவதாக அவர் தெரிவித்தார். இலங்கையின் அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவிகளுக்கும் சுஷ்மா ஸ்வராஜ் இணக்கம் வெளியிட்டார். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த இந்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சி ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.அது மட்டுமல்லாது இலங்கையின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் இந்திய அரசாங்கம் போலவே எதிர்க்கட்சியும் ஏற்றுக் கொள்வதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்” என்றார்.

டக்ளஸ் மீதான வழக்குகள் குறித்து மத்திய அரசுக்கு தகவல் இல்லை ஊடகங்கள் மூலமே அறிந்தேன்; சிதம்பரம்

douglas-devananda.jpgஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி பத்திரிகைகள் மூலம்தான் தமக்குத் தெரிய வந்தது என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை சந்தித்துவிட்டு வெளியே வந்தபிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார். இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் வந்திருந்தடக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் வழக்குகள் நிலுவையில் உள்ள போது அவரை கைது செய்வதற்குப் பதிலாக அரசாங்க வரவேற்பளித்தது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:

“டக்ளஸ் தேவானந்தா மீது நிலுவையில் வழக்கு உள்ளது பற்றி எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலும் மத்திய அரசுக்கு வரவில்லை. செய்தித்தாள்கள் மூலம்தான் இதுபற்றி அறிந்துகொண்டேன். இது குறித்த நீதிமன்றத் தீர்ப்புகள் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று அவர் கூறினார். விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் நடந்த குண்டுவெடிப்பு தமக்கு அச்சுறுத்தலா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர் அப்படிக் கருதவில்லையென்றும் எல்லா உயிர்களும் சமம்தான் என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் ரயில்பாதை தகர்ப்புக்கு ஜெலட்டின் குச்சிகள் பயன்பாடு

track.gifவிக்கிர வாண்டி அருகே சித்தணி என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தண்டவாளத்தை தகர்க்க ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாமென கருதுவதாக ரெயில்வே பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெலட்டின் குச்சிகள் வழக்கமாக பாறைகளை வெடிவைத்து தகர்க்க பயன்படுத்தப்படுகின்றன. ஜெலட்டின் குச்சிகளை வைத்து மின் இணைப்பு கருவியின் மூலம் வெடிக்கச்செய்து தண்டவாளத்தை தகர்த்து இருக்கலாமென அந்த வட்டாரங்கள் கூறின.