சாவகச்சேரி நகர்ப்பகுதியில் இராணுவ மினி முகாம்களிலும், காவலரண்களிலும் மின்மானி (மீற்றர்) பொருத்தாமல் பெறப்பட்ட மின்சார விநியோகம் அகற்றப்பட்டுள்ளன. நகர்ப்பகுதி இராணுவப் பொறுப்பதிகாரியின் உத்தரவின் பேரிலேயே மின்சார சபை ஊழியர்களினால் இவை அகற்றப்பட்டுள்ளன.
இராணுவத்தின் 522 ஆவது படையணியின் மக்கள் தொடர்பாடல் கூட்டத்தில் சட்டவிரோத மின் பாவனையால் சீரான மின் விநியோகத்தை வழங்க முடியாமை குறித்து மின்சார சபையின் சாவகச்சேரி மின் அத்தியட்சகர் தெரிவித்ததையடுத்தே படையதிகாரியினால் இவற்றை அகற்ற மின்சார சபைக்கு பணிக்கப்பட்டது. இதனையடுத்து இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 32 மின் தொடர்புகள் அகற்றப்பட்டன. இனிவரும் நாட்களில் சட்டபூர்வமாக மின்மானிகள் பொருத்தப்பட்டு குறித்த இடங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதே வேளை, தென்மராட்சிப்பகுதியில் சட்டவிரோத மின்சார பாவனையாளர்களை கண்டுபிடிக்கவும் படைத்தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த முறையற்ற மின் பாவனையை படையதிகாரி உடனடியாக அகற்ற முன்வந்தமை ஒரு முன்மாதிரி நடவடிக்கை என தெரிவிக்கப்படுகிறது.