அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி பத்திரிகைகள் மூலம்தான் தமக்குத் தெரிய வந்தது என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை சந்தித்துவிட்டு வெளியே வந்தபிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார். இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் வந்திருந்தடக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் வழக்குகள் நிலுவையில் உள்ள போது அவரை கைது செய்வதற்குப் பதிலாக அரசாங்க வரவேற்பளித்தது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
“டக்ளஸ் தேவானந்தா மீது நிலுவையில் வழக்கு உள்ளது பற்றி எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலும் மத்திய அரசுக்கு வரவில்லை. செய்தித்தாள்கள் மூலம்தான் இதுபற்றி அறிந்துகொண்டேன். இது குறித்த நீதிமன்றத் தீர்ப்புகள் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று அவர் கூறினார். விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் நடந்த குண்டுவெடிப்பு தமக்கு அச்சுறுத்தலா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர் அப்படிக் கருதவில்லையென்றும் எல்லா உயிர்களும் சமம்தான் என்றும் குறிப்பிட்டார்.