எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஆகஸ்ட் மாத 3ஆவது கிழமை டெங்கு தடுப்பு வாரமாக அரசாங்கம் பிரகடனம்

mos.jpgஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது கிழமையை “டெங்கு தடுப்பு வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த வார நாட்களில் துப்புரவுபடுத்தும் நடவடிக்கைகள் டெங்குத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி மாநாட்டின்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, தேசிய டெங்கு தடுப்பு திட்டத்தின் ஓரங்கமாக சுத்தப்படுத்துதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மாதத்தின் முதலாவது, இரண்டாவது திங்கள் கிழமைகளிலும் மூன்றாவது, நான்காவது சனிக்கிழமைகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்த வருடம் மாத்திரம் டெங்கு நோயால் 158 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் 21 ஆயிரம் பேர் பீடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் கைவினைத் திறன் கண்காட்சி

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத் தொழில் அமைச்சு ஏற்பாடு செய்துள்ள கைவினைத் திறன் கைத்தொழில் கண்காட்சி இன்று கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாவதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார். மேற்படி அமைச்சின் கீழ் இயங்கும் பனை அபிவிருத்திச் சபை, தேசிய கைப்பணி சபை, கைத் தொழில் அபிவிருத்தி சபை, தேசிய வடிவமைப்புச் சபை ஆகியன இணைந்து ஒழுங்கு செய்துள்ள இக்கண்காட்சி இன்றும் 22ம் திகதி முதல் 25ம் திகதி வரை நடைபெறும்.

மூன்று அம்சங்களாக இடம்பெறும் இந்நிகழ்வில் கண்காட்சி, விற்பனை, நவீன கைத் தொழில் பயிற்சி ஆகியன உள்ளடங்குவதுடன் 156 கண்காட்சிக் கூடங்கள் இதில் இடம்பெறுகின்றன.

முதல் நாள் 22ம் திகதி மாலை 5.30 மணிக்கும் பின்னரும் அடுத்தடுத்த நாட்களில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை இக்கண்காட்சியைப் பொது மக்கள் பார்வையிட முடியும்

புனர்வாழ்வு முகாமில் 7980 பேர் மட்டுமே: டியூ குணசேகர

due.jpgசரணடைந்துள்ள முன்னாள் போராளிகள் 12,000 பேருள் 7980 பேர் மட்டுமே தற்போது புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் 364 பேர் பரீட்சை முடிவடைந்ததும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர் என அமைச்சு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர நேற்று தெரிவித்தார்.

சொந்த இடங்களில் 198 குடும்பங்கள் – முல்லைத்தீவில் நாளை குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 198 குடும்பங்களைச் சேர்ந்த 602 பேர் நாளை சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார்.

இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தங்கியுள்ள இவர்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 22 கிராமசேவகர் பிரிவுகளில் மீள் குடியேற்றப்பட உள்ளனர். ஏற்கெனவே 22 கிராமசேவகர் பிரிவுகளிலும் மீள்குடியேற்றங்கள் இடம் பெற்றதோடு இதுவரை மீள்குடியேற்றப்படாதவர்களே நாளை மீள்குடியேற்றப்படுகின்றனர். கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 23 கிராமசேவகர் பிரிவுகளில் இதுவரை மீள்குடி யேற்றம் இடம் பெறவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.

பிரித்தானியா வீசா அலுவலகம் இடமாற்றம்

london-uk.jpgகொழும்பு கொள்ளுப்பிட்டியில் இயங்கி வந்த பிரித்தானியா வீசா அலுவலகம், கொழும்பு யூனியன் பிளேஸூக்கு இடமாற்றம் செய்யப்பட்டவுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் வீசா அலுவலகம், யூனியன் பிளேஸில் இலக்கம் 278 , எக்சஸ் டவர் கட்டடத்தின் 5 ஆவது மாடியில் இயங்கவுள்ளது.

அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதால், 22 ஆம் 23 ஆம் திகதிகளில் கொள்ளுப்பிட்டி, டுப்லிகேஷன் வீதியில் உள்ள அலுவலகம் மூடப்பட்டிருக்கும் எனவும் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக மாத்திரம் 22 ஆம் திகதி பிற்பகல் 3 மணியில் இருந்து 5 மணி வரையும், 23 ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையும் அலுவலகம் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யஷ்வந் சிங்ஹ நிகழ்த்தும் டட்லி ஞாபகார்த்த உரை

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான யஷ்வந் சிங்ஹ (பா.உ), டட்லி சேனாநாயக்கவின் ஞாபகார்த்த உரையை இன்று வியாழாக்கிழமை 6 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் சர்வதேச கற்கை நெறிகளுக்கான பண்டாரநாயக்க நிலைய கேட்போர் கூடத்தில் நிகழ்த்துவார்.

திரு. யஷ்வந் சிங்ஹ இந்த ஞாபகார்த்த உரையாற்றும் முதலாவது இந்தியப் பிரமுகராவார்.

முன்னாள் போராளிகளை கண்ணி வெடியகற்றும் பணிகளில் ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்.

LandMine_Signகண்ணி வெடியகற்றும் பணிகளில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 30 பெண் போராளிகளை ஈடுபடுத்தவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு திர்மானித்துள்ளது. ஆறு தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் ஊடாக விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் அதிகளவிலான இராணுவத்தினர் தற்போது கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதே வேளை, வன்னியில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பல பெண்கள் தற்போது கண்ணிவெடி மற்றும் வெடிபொருட்கள் அகற்றுவது குறித்து பயிற்சியளிக்கப்பட்டு தொண்டு நிறுவனங்க@டாக பணிபுரிந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வன்னியில் பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்களின் உதிரிப்பாகங்களை வைத்திருந்த ஐவர் கைது!

வன்னியில் இறுதி யுத்தத்தின்போது பொது மக்களால் கைவிடப்பட்ட வாகனங்களின் உதிரிப்பாகங்களை கழற்றி வைத்திருந்த ஐந்து பேர் கிளிநொச்சியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வன்னியில் கைவிடப்பட்ட கனரக வாகனங்கள், உழவு இயந்திரங்கள், ஆகியவற்றின் உதிரிப்பாகங்களை வைத்திருந்த மூவரும், அவர்களிடமிருந்து அப்பொருட்களை கொள்வனவு செய்த இருவருமாக ஐவர் பொலிஸாரிடம் பிடிபட்டனர். இவர்கள் நேற்று (20-07-2010) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். எதிர்வரும் 3ம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இறுதிப்போரின் போது பொதுமக்களால் கைவிடப்பட்ட பல வாகனங்கள் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களிடம் அவற்றைக் கையளிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் அதிகளவிலானவை மோட்டார் சைக்கிள்களாகும் ஏனைய வாகனங்கள் சிறிதளவிலேயே கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் உதிரிப்பாகங்கள் பல கழற்றப்பட்ட நிலையிலேயே பெரும்பாலான வாகனங்கள் காணப்படுகின்றன என்பது  குறிப்பிடத்தக்கது.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட தாய்க்கும் அவரது இரு மகன்களுக்கும் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது!

கொலை குற்றச்சாட்டு காரணமாக ஒரு தாய் அவரது மகன்கள் இருவர் ஆகியோருக்கு மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2004ம் ஆண்டு ஒலுவில் பிரதேசத்தில் வைத்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்தததான குற்றச்சாட்டில் எஸ்.உம்மா(வயது45) என்ற பெண்ணுக்கும், அவரது மகன்களான எம்.பைஸால் (வயது 26) ஐ.றிசான் வயது (24) ஆகிய மூவருக்குமே நேற்று (21-07-2010) கல்முனை நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீhப்பளித்தது.

தர்சிகாவின் சடலத்தை தோண்டியெடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவமாது ச.தர்சிகாவின் சடலத்தை தோண்டியெடுத்து வைத்தியப் பரிசோதனை செய்ய ஊர்காவற்றுறை நீதவான் ஆர். வசந்தசேனன் நேற்று (July 20 2010) உத்தரவிட்டுள்ளார். தர்சிகாவின் தாயார் கொடுத்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதவான் தர்சிகாவின் சடலத்தை எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் தோண்டியெடுத்து கொழும்பிற்கு அனுப்பி சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கு நேற்று முன்தினம் (July 19 2010) நடைபெற்ற போது தர்சிகாவின் தாயார் தனது மகள் தற்கொலை செய்யவில்லை அவரது சடலம் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என நீதவானிடம் மனுவொன்றை கைளித்திருந்தார். அதனைப் பரிசீலித்த நீதவான் சடலத்தை பொலிசார் முன்னிலையில் தோண்டியெடுத்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார். இவ்வழக்கு விசாரண மீண்டும் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ளது.