வன்னியில் இறுதி யுத்தத்தின்போது பொது மக்களால் கைவிடப்பட்ட வாகனங்களின் உதிரிப்பாகங்களை கழற்றி வைத்திருந்த ஐந்து பேர் கிளிநொச்சியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வன்னியில் கைவிடப்பட்ட கனரக வாகனங்கள், உழவு இயந்திரங்கள், ஆகியவற்றின் உதிரிப்பாகங்களை வைத்திருந்த மூவரும், அவர்களிடமிருந்து அப்பொருட்களை கொள்வனவு செய்த இருவருமாக ஐவர் பொலிஸாரிடம் பிடிபட்டனர். இவர்கள் நேற்று (20-07-2010) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். எதிர்வரும் 3ம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இறுதிப்போரின் போது பொதுமக்களால் கைவிடப்பட்ட பல வாகனங்கள் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களிடம் அவற்றைக் கையளிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் அதிகளவிலானவை மோட்டார் சைக்கிள்களாகும் ஏனைய வாகனங்கள் சிறிதளவிலேயே கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் உதிரிப்பாகங்கள் பல கழற்றப்பட்ட நிலையிலேயே பெரும்பாலான வாகனங்கள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.