எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கலைப்பிரிவு பட்ட மேற்படிப்பை தொடர இந்திய புலமைப்பரிசில் பிரிவில் திட்டம்

india_map_.jpgகலைப் பிரிவின் பட்ட மேற்படிப்பை தொடருவதற்கான புலமைப்பரிசில் திட்டமொன்றினை இந்திய உயர்ஸ்தானிகராலயம் வழங்குகின்றது. இப்புலமைப்பரிசிலை பெற விரும்புவோர் 20 – 25 வயதுக்குட் பட்டவராகவும், க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடைந்தவராகவும் தெரிவு செய்யும் பிரிவிற்கான பாடத்தில் திறமைச் சித்தி (B) அடைந்தவராகவும், க.பொ.த.ச.பரீட்சை ஆங்கிலப் பாடத்தில் சாதாரண சித்தியும் (C) அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரி ஒரு விண்ணப்பப் படிவத்தை மாத்திரம் பெற முடியும் எனவும் விண்ணப்பங்களை பெற விரும்புவோர் வாரநாட்களில் காலை 9.30 மணி தொடக்கம் 1 மணி வரை இலக்கம் 133 பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 04 இல் அமைந்துள்ள இந்திய கலாசார நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பங்கள் எதிர்வரும் 2 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதிவரை விநியோகிக்கப்படவுள்ளது.

முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவத்தை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்பு, பகல் 2 மணி முதல் 4 மணிவரை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலதிக தகவல்களுக்கு 0112500014 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.  மலையகப் பகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரிகள் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

லிபியாவில் இலங்கையருக்கு வேலைவாய்ப்பு ஏப்ரலில் ஒரு பகுதியினர் செல்வார்கள்

topics_libya.jpgதேர்ச்சி பெற்ற தொழிலாளர்களில் ஒரு தொகுதியினர், வேலை வாய்ப்புக்காக ஏப்ரல் மாதத்தில் லிபியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர். சுகாதாரம் மற்றும் பராமரிப்பு துறைகளில் நிலவும் வெற்றிடங்களில் இவர்கள் வேலைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பெப்ரவரி நடுப்பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதிநிதிகள் லிபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். கடந்த வருடத்தில் இலங்கையும் லிபியாவும் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இலங்கையின் சுகாதாரத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்கள், லிபியாவில் தொழில்வாய்ப்பை பெறுவதில் ஆர்வமாக இருப்பதாகவும், பல வெற்றிடங்கள் இலங்கையருக்காக அங்கு உள்ளதாகவும் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டார். லிபியாவில் தொழில் வாய்ப்பு நிலைமைகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து சில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ள அதேநேரம், வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளும் ஏக காலத்தில் மேற்கொள்ளப்படுவதாக ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் முக்கிய வீதிகள் ஐந்து நாட்கள் மூடப்படும்

ranjith-gunasekara.jpgஇலங்கையின் சுதந்திரதின நிகழ்வின் ஒத்திகைகளை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் நான்காம்திகதி வரை கொழும்பில் முக்கிய வீதிகள் சில மூடப்படவுள்ளன. இதனால், கொள்ளுப்பிட்டி சந்தி முதல் செரமிக் சந்தி வரையான வீதி மற்றும் கொம்பனி வீதிச் சந்தி முதல் காலிவீதி வரையான வீதிகள் குறிப்பிட்ட நாட்களில் அதிகாலை 5 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை மூடப்பட்டிருக்குமென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் இவ்வீதிகளைப் பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வன்னி மக்களின் அவல நிலையை மூடிமறைக்க அரசு பெரு முயற்சி – ஐ.தே.க. குற்றச்சாட்டு

logo_unp.jpgயுத்தம் காரணமாக வன்னியில் நான்கு இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதாக மீண்டும் வலியுறுத்தி இருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இந்த உண்மையை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் பெரு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.  அகதிகளாக்கப்பட்டிருக்கும் மக்கள் உணவு, மருந்துவகை, குடிநீர் எதுவுமின்றி கஷ்டங்களை எதிர் நோக்கியிருக்கும் நிலையில் அரசாங்கம் நாட்டு மக்களைத் திசை திருப்பி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று முன்தினம்  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளித்த அவர் கூறியதாவது;

ஐக்கிய தேசியக் கட்சி இனவாதம், பிற்போக்கு வாதம் கொண்ட கட்சியோ, குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட கட்சியோ அல்ல, அதிகாரத்திலிருந்தாலும் எதிர்க்கட்சியிலிருந்தாலும் தேசியப் பிரச்சினைகளின் போது நாம் தூர நோக்குடனேயே செயற்பட்டு வருகின்றோம். யுத்தத்தையோ, யுத்த வெற்றிகளையோ ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதே இல்லை. எதிர்காலத்திலும் பயன்படுத்தப் போவதில்லை.

நாட்டின் இறைமை, சுயாதிபத்தியம் என்பவற்றை பாதுகாப்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பயங்கரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் முற்று முழுதாக நிராகரிக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே நிலைப்பாடு அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமை இருக்க வேண்டும் என்பதும் நாட்டில் எவரும் எங்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமாதானமாகவும் வாழக் கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும் என்பதும் தான்.

எனினும், நாட்டின் ஒரு பகுதியான வன்னியில் இன்று எமது சகோதர இனத்தவர்கள் 4 இலட்சம் பேர் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இதுவரையில் செய்து கொடுக்கப்படவில்லை. இந்த உண்மை நிலையை அரசாங்கம் தெற்கில் மூடி மறைக்கின்றது. உள்ளூரில் மறைக்கப்பட்டாலும் சர்வசேத்துக்கு அவை கிட்டியுள்ளன. ஐ.நா. செயலாளர் நாயகம் வரை இந்த விவகாரம் சென்றடைந்துள்ளது. தமிழ் மக்கள் விடயத்தில் அரசு வஞ்சகப் போக்கிலேயே செயற்பட்டு வருகின்றது. தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல எனக் கூறும் அரசு, மறு

புறத்தில் தமிழர்களை முற்று முழுதாக புலிகளாகவே பார்க்கின்றது. இந்தப் போலி நாடகம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கப் போகின்றது எனக் கேட்கவிரும்புகின்றோம். முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மாவட்டச் செயலகங்கள் மூடப்பட்டுள்ளன. அந்த அரசாங்க அதிபர்கள் வவுனியாவிலிருந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் ஒன்று புலனாகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி அன்று ஏற்படுத்திய சிவில் நிருவாகம் இந்த இரண்டு மாவட்டங்களிலும் இன்று முற்று முழுதாக செயலிழந்து போயுள்ளது தான். வடக்கிலும், வன்னியிலும் இன்று என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை தெற்கு மக்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு மறைமுகமாக வாய்ப்பூட்டுப் போடப்பட்டுள்ளது.

ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் சக்தி எழுச்சி பெறாது போனால் நாடு முற்று முழுதான சர்வாதிகாரத்துக்குள் தள்ளப்பட்டு விடும் எனவும் அவர் எச்சரித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கத் தயார் – தமிழக டாக்டர்கள் அறிவிப்பு

surgery.jpgஇலங்கையில் குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, மருத்துவ வசதிகளை அளிக்கத் தயாரென தமிழக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மனித உரிமைகளுக்கு எதிராக அப்பாவித் தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கும் இலங்கை அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும். அனுமதி வழங்கினால் தமிழக மருத்துவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சிகிச்சை வழங்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில்; முல்லைத்தீவுப் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் மீதான இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதனால், அப்பாவி தமிழர்கள் ஏராளமாகக் கொல்லப்படுகின்றனர்.

மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. போதிய மருந்துப் பொருட்களும், மருத்துவ வசதிகளும் இன்றி போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் அவதிப்படுகின்றனர். ஏராளமான குழந்தைகளும் பேறுகால தாய்மார்களும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், எல்லைகளற்ற டாக்டர்கள் அமைப்பு முழுமையாக பயன்படுத்த வேண்டும். அனுமதி வழங்கினால் தமிழக மருத்துவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சகிச்சை வழங்கத் தயார். மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும்.

ஐ.நா.சபை உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தவும், இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வு காணவும் இந்திய அரசும் சர்வதேச நாடுகளும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர்களால் 10.11.2008 இல் சேகரிக்கப்பட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபா மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் தமிழக அரசால் இலங்கைத் தமிழர்களுக்கு இதுவரை அனுப்பப்படாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதை உடனடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பிவைக்க வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் இன்று மாபெரும் மக்கள் பேரணி – தேச மக்கள் எழுச்சி பேரவை நடத்துகிறது

“வன்னி வாழ் எமது உறவுகளை மீட்க ஒன்றிணைந்து எழுவோம் வாருங்கள்” என்ற அழைப்புடன் யாழ். மாவட்ட தேச மக்கள் எழுச்சிப் பேரவை இன்று யாழ். குடாநாட்டில் மாபெரும் மக்கள் பேரணியை நடத்துகிறது.

யாழ். குடாநாட்டில் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதாக இந்த எழுச்சிப் பேரணி நடைபெறுகிறது.

பிப்ரவரி 4ஆம் தேதி தமிழகத்தில் கடையடைப்பு: இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு

flag_logo_sl.jpgஇலங்கை சுதந்திரதினமான பிப்ரவரி 4ஆம் தேதி தமிழத்தில் கடையடைப்பு நடத்துவதென இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னையில் உள்ள தியாகராய அரங்கில், இலங்கைத் தமிழர்கள்  பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில்  இலங்கைத் தமிழர்கள்  பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட  பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் இறுதியில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி இலங்கையின் சுதந்திரதினமான, இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டு வரும் அரசை கண்டித்தும், ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும்   தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் செய்வதென முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் வரும் 7ஆம் தேதி தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதவாச்சி வரையே எதிர்வரும் 6 ஆம் திகதி வரை யாழ் தேவி சேவைகள்

train.jpgகொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா வரை நடத்தப்படும்; யாழ். தேவி ரயில் சேவைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை மதவாச்சி வரை மாத்திரமே நடைபெறும் என இலங்கை புகையிரத  திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியா- மதவாச்சி இடையிலான புகையிரதப் பாதை  புனரமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தேர்தல் வன்முறை 32 ஆக அதிகரிப்பு

paffre.jpgவேட்பு மனுத் தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 32 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான “பவ்ரல்’ அமைப்பு தெரிவித்துள்ளதுடன் மக்கள் தேர்தல் தொடர்பில் ஆர்வத்துடன் செயற்படுவதாக தெரியவில்லையெனவும் கூறியுள்ளது. இது குறித்து அவ்வமைப்பின் தலைவர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில்;

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் கலைக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் (வெள்ளிக்கிழமை) வரை 32 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் அதிகூடிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் மத்திய மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன. வடமேல் மாகாணத்தில் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் முறையே 11,2 இடம்பெற்றுள்ளதாக பதிவு செய்துள்ளோம் . அதுபோல் மத்திய மாகாணத்தில் கண்டியில் 13 உம், மாத்தளையில் 5 உம் நுவரெலியாவில் ஒரு தேர்தல் வன்முறையும் இடம்பெற்றுள்ளதாகவும் பதிவு செய்துள்ளோம்.

இம்முறை தேர்தலில் மக்கள் ஆர்வம் கொண்டவர்களாக காணப்படவில்லை. புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் ஓரளவு மக்கள் பங்குபற்றுகின்றபோதும் மத்திய மாகாணத்தில் இதனைக் காணமுடியவில்லை. எதிர்வரும் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் வாக்காளர் அட்டைகளைப் பெறாதவர்கள் கிராமசேவகருடன் தொடர்பு கொண்டோ தபால் அலுவலகங்களில் தொடர்பு கொண்டோ பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக மத்திய மாகாண தோட்டப்புற மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையை பாவிப்பதற்கு முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தார்.

வடக்கு மோதல் குறித்த செய்திகளை சுதந்திரமாக வெளியிட அனுமதிக்குக!

reporters.jpgஇலங் கையின் வடபகுதியில் இடம்பெறும் படை மோதல்கள் குறித்து சுதந்திரமாக செய்தி வெளியிடுவதற்கு உள்ள தடையை இலங்கை அரசு நீக்க வேண்டுமென எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மோதல்கள் குறித்து சுதந்திரமாக செய்தி வெளியிடுவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்குமாறு அந்த அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் சுதந்திர ஊடகங்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவருமாறும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் காஸா விடயத்தில் செயற்படுவதுபோல,  ஊடகங்களும், மனிதாபிமான அமைப்புகளும் சுதந்திரமாக செயற்படுவதைத் தடுப்பதற்கு கொழும்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதாபிமானத் துயரம் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனச்  செய்திகள் வெளியாகும் தருணத்தில் இலங்கை அதிகாரிகள் ஊடகங்களை சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதி மறுக்கின்றனர் என்றும் ஊடக அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், வதந்திகளைப் பரப்ப வழிவகுக்கும் என்றும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.