எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

61 சிவிலியன்கள் நேற்று வருகை

civilians-1002-09.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்லிருந்து பாதுகாப்பு தேடி 61 சிவிலியன்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி நேற்று வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தை நோக்கி நேற்று முன்தினம் இரவு வருகை தந்த 61 சிவிலியன்களும் ஆரம்பக் கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய ஜனவரி மாதம் முதல் இதுவரை 35,817 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு பாதுகாப்பு தேடி வருகை தந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

உயர் ஸ்தானிகர் ஒருவர் இருக்கும் போது விசேட பிரதிநிதி எதற்கு! – ஜீ. எல். பீரிஸ்

glperisss.jpgஎந்த வொரு நாட்டைச் சேர்ந்த எந்தப் பிரமுகரும் இங்கு வரலாம் அதற்குத் தடையில்லை. அவர்களை அரசாங்கம் வரவேற்கத் தயாராக இருக்கிறது. எனினும் அவர்களின் வருகையின் நோக்கம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் உயர்ஸ்தானிகர் ஒருவர் இருக்கும் போது அதே நாட்டைச் சேர்ந்த விசேட பிரதிநிதி ஒருவரின் அவசியம் இல்லை. அவ்வாறு ஒருவரை நியமிப்பதாயின் அது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடி இணக்கம் காணப்பட வேண்டும்.

எவருக்கும் இங்கு வந்து சகல விடயங்களையும் பார்வையிடலாம். இங்கு எதுவும் மூடி மறைக்கப்படவில்லை . அனைத்தும் பகிரங்கமாகவே உள்ளன. எனினும் நாட்டின் அபிமானத்துக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பபு ஏற்படும் வகையிலான விசேட பிரதிநிதி நியமனங்களை அங்கீகரிக்க முடியாது.

யுத்தம் ஒன்றுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் வரவேற்கத் தக்க வகையில் உள்ளது. மேல் மகாணத்தின் பொருளாதார வளர்ச்சி 14 வீதமாக கடந்த வருடம் அதிகரித்துள்ளது. இது சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒத்ததாக உள்ளது. முழு நாட்டினதும் பொருளாதார வளர்ச்சி 6.4 வீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏற்றுமதித் துறையை முன்னேற்றம் அடையச் செய்ய அரசாங்கம் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. ஏற்றுமதியை ஊக்குவிப்பதும் தேசிய உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையிலேயே ஏற்றுமதி அபிவிருத்திக் கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் சிறந்த வெற்றியை அளித்து வருவதாக அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் வெற்றி இறுமாப்பில் ஜே.வி.பி.யை அழிக்க நினைக்கக் கூடாது – ரணவீர பத்திரன எம்.பி.

sri-lanka-parliment.jpgமாகாண சபைத் தேர்தல்களில் வெற்றியீட்டிக் கொண்ட இறுமாப்பில் ஜே.வி.பி.யை அழித்து விடலாமென அரசு எண்ணி விடக் கூடாது. ஐ.தே.க.வுக்கும் ஜே.வி.பி.க்கும் அரசியல் வேறுபாடிருந்தாலும் நாட்டு மக்களின் நலன்கருதிய செயற்பாடுகள், நிலைப்பாடுகள் நன்மையளிப்பனவாக இருந்தால் அதனை நாம் ஏற்றுக் கொள்வோமென ஜே.வி.பி. எம்.பி. ரணவீர பத்திரன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான இறக்குமதித் தீர்வை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான இறக்குமதித் தீர்வை குறித்த ஐ.தே.க.வின் நிலைப்பாடுகள் வரவேற்கக் கூடியவை, ஐ.தே.க.வுக்கும் ஜே.வி.பி.க்குமிடையே அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும், நாட்டு மக்களின் நலன் கருதிய செயற்பாடுகள் நிலைப்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்வோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் படையினர் வெற்றி பெற்று வருவதைப் பயன்படுத்தி தேர்தல்களை நடத்தி அதில் அரசு வெற்றி கண்டுள்ளது. இந்த வெற்றியானது அரசுக்குக் கிடைத்த தேர்தல் வெற்றி என்பதை விட படையினரின் வெற்றிக்குக் கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும். இந்த வெற்றியை வைத்துக் கொண்டு ஜே.வி.பி.யை ஓரம்கட்டி விடலாம் அல்லது அழித்து விடலாம் என்று அரசு நினைத்து விடக் கூடாது.

தேர்தல்களில் வெற்றி தோல்வி என்பது பொதுவான விடயம். பிரதேச சபை மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை வரையறுத்து ஜே.வி.பி. பற்றிக் கணக்குப் போடுவது அரசுக்கு ஏற்புடையதல்ல அவ்வாறு செய்ய அரசுக்கு அருகதையும் இல்லை. யுத்தம், தேர்தல், மிஹின் எயார் போன்றவற்றுக்கு நிதி வீண்விரயம் செய்யப்படுவதால் எமது நாட்டின் நிதி நிலைவரம் மோசமடைந்து செல்கின்றது. நாட்டிலுள்ள சகல இனத்தவரும் ஒரே மக்கள் என்ற நிலை ஏற்படாதவரையில் எதனையும் சாதித்துவிட முடியாது

வவுனியா நிவாரண கிராமங்களுக்கு ஹோம்ஸ் இன்று விஜயம்

John_Holmes_UNஇலங் கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி செயலாளர் நாயகம் சேர். ஜோன் ஹோம்ஸ் இன்று 20 ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம் செய்கிறார்.

வன்னியில் புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள மக்களுக்கென வவுனியாவில் அமைக்க ப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள 35 ஆயிரத்து 756 பொதுமக்கள் 13 நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளனர்.

வவுனியாவுக்கு விஜயம் செய்யும் ஐ. நா. வின் பிரதி செயலாளர் நாயகத்திற்கு அரசாங்கத்தின் மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெளிவுபடுத்தவிருக்கிறார் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கூறினார். இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐ. நா. பிரதி செயலாளர் நாயகம் நாளை சனிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

முல்லைத்தீவு மீட்கப்பட்ட பின்பு நன்றி தெரிவித்தது போன்று மேல்மாகாணத்தில் தோல்வி கண்ட பின்பே ஜனநாயகமென ரணில் கூறுவார் – விமல் வீரவன்ச

wimal.jpgஎதிர்க் கட்சித் தலைவர் கிளிநொச்சிக்கு பின் முல்லைத்தீவு மீட்கப்பட்டதன் பின்பே நன்றி தெரிவித்தது போன்று மேல் மாகாண சபைத் தேர்தலிலும் தோல்வி கண்டதன் பின்பே மக்கள் ஜனநாயக முறையில் வாக்களித்து எம்மை தோல்வியடையச் செய்துள்ளனரென கூறுவாரென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் மாகாண சபைத் தேர்தல் வெற்றி தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும், பேசுகையில்;

2005 ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் பிரிவினை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றைத் தோற்கடித்து நாட்டை ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவதற்கே வாக்களித்தனர். கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அரசு தேர்தலை நடத்தியது. வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் மக்கள் நம்பிக்கை வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். அந்த நம்பிக்கை வீண்போகாது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மீட்கப்பட்ட நிலையில் வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் அதிகமான விசுவாசத்தை வைத்து மக்கள் வாக்களித்து கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளான ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் யுத்தத்தை தடுப்பதற்கு வெளிநாட்டினருடனும் அதன் முகவர்களுடனும் சதிசெய்து ஊழல் மோசடி என பொய்களைக் கூறிய போதிலும் மக்கள் அதனை ஏற்காது கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். தேர்தல் தொடர்பில் எஸ்.பி.திஸாநாயக்க தோல்வியை ஏற்பதாகக் கூறும் அதேநேரம் ஐ.தே.க. செயலாளர் முறையற்ற விதத்தில் தேர்தல் இடம்பெற்றதாகக் கூறுகின்றார். இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் என்ன சொல்வதென்று தெரியாதுள்ளார்.

கிளிநொச்சி மீட்கப்பட்ட போது எதனையும் தெரிவிக்காது தேசியக் கொடியினை கட்சி பேதமின்றி உயர்த்தி வெற்றியையும் கொண்டாடாது முல்லைத்தீவு மீட்கப்பட்டதன் பின்னரே நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மேல்மாகாணத்தில் தோல்விகண்ட பின்னரே மக்கள் ஜனநாயக முறையில் வாக்களித்துள்ளனர் எனக் கூறுவார். எமது தேசிய சுதந்திர முன்னணி உருவாக்கப்பட்டு 9 மாதம் ஆகின்ற நிலையில் மத்திய மாகாணசபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிட்டு எமது உறுப்பினர் 5 ஆவது இடத்தினை அடைந்துள்ளார். இந்நிலையில், 45 வருட கட்சியான ஜே.வி.பி. ஒரு ஆசனத்தையும் பெறவில்லை. மேல்மாகாணசபைத் தேர்தலில் எமது கட்சி மேலும் முன்நோக்கிச் செல்லும் என்றார்

நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் மூன்று கைதிகள் சுட்டுக்கொலை

gun.jpgநீர்கொ ழும்பு சிறைச்சாலை வளாகத்தி ற்குள் நேற்றுக்காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிறைக்கைதிகள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

நேற்றுக் காலை 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்ற விசாரணைகள் முடிந்து கைதிகள் சிறைச்சாலைக்குள் அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த போது இரு கைதிகளை இலக்கு வைத்து மற் றொரு கைதி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஒரு கைதி ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றைய கைதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கைதிகள் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவரை உடனடியாக சிறைச்சாலைக் காவலர்கள் மடக்கிப் பிடிக்க முற்பட்டுள்ளனர்.

இதன் போது அந்த கைதி தன்னிடமிருந்த துப்பாகியைப் பயன்படுத்தி சிறைக்காவலர்களையும் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து அவரை சிறைக்காவலர்கள் சுட்டுக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குள் சிறிது நேரம் பரபரப்பு நிலைவிய போதிலும் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த மூவரே இந்தச் சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இவர்களில் கைதியால் சுட்டுக்கொல்லப்பட்ட இருவர் சகோதரர்கள் என்றும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகவும், கைதியின் கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பது தொடர்பாகவும் பூரண விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ். எஸ். பி. ரஞ்சித் குணசேர குறிப்பிட்டார்.

புதுமாத்தளன் மருத்துவ நிலவரம் குறித்து சுகாதார அமைச்சுக்கு கடிதம்

puthumaattalan-hospital.gifமுல்லைத் தீவு மாவட்டத்தில் அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள புதுமாத்தளன் வைத்தியசாலையில் பல்வேறு வசதியீனங்கள், மருந்துத் தட்டுப்பாடு, மன உளைச்சல்களுக்கு மத்தியில் அரச வைத்தியர்கள் பணியாற்றி வருவதாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள அவசர கடிதம் ஒன்றில் தெரிவித்திருக்கி்ன்றார்.

இந்த வாரம் நடத்தப்பட்ட எறிகணை தாக்கதலில் இறந்துபோன பலரது உடல்களும், காயமடைந்தவர்கள் பலரும் புதுமாத்தளன் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மிகவும் குறைவான வைத்திய வசதிகளுடன், பெரும் எண்ணிக்கையில் வந்துள்ள காயமடைந்தவர்களுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்று தெரியாமல் தாங்கள் திகைப்படைந்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் டாக்டர் வரதராஜா தெரிவித்திருக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம் ஆகிய இடங்களில் இயங்கிவந்த வைத்தியசாலைகள் போர்ப்பதட்டம் காரணமாக கைவிடப்பட்டு, தற்போது புதுமாத்தளன் வைத்தியசாலை மாத்திரமே இந்தப் பிரதேசத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான ஒரேயொரு வைத்தியசாலையாக வசதியீனங்களுக்கிடையில் இயங்கி வருவதனால், இந்தப் பிரதேசத்தின் வைத்தியசேவை நிலைகுலைந்து ஸ்தம்பிதமடையும் அபாய நிலைமை நிலவுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு சிறிய பாடசாலை கட்டிடத்தில் ஆரம்ப வைத்திய நிலையமாக இயங்கி வருகின்ற புதுமாத்தளன் வைத்தியசாலையில் நாளாந்தம் 100 தொடக்கம் 200 வரையில் போர்க்காயங்களுடன் வருகின்ற காயமடைந்தவர்களை அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு இடவசதியோ ஏனைய உட்கட்டமைப்பு வசதியோ இல்லாத நிலையில் வைத்தியர்கள் அங்கு போராடிக்கொண்டிருக்கி்ன்றார்கள் என்றும் டாக்டர் வரதராஜா தெரிவித்திருக்கின்றார்.

மக்களின் தகவலறியும் உரிமையை இந்த அரசு பறித்துள்ளதாக ஊடக அமைப்புகள் கண்டனம்

tamil_news_bulletin_.jpgபி.பி.சி. தமிழோசை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டதன் மூலம் இலங்கை அரசு மக்களின் தகவலறியும் உரிமையை பறித்துள்ளதாக ஊடக அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் உட்பட ஐந்து ஊடக அமைப்புகள் விடுத்துள்ள அறிக்கையில்; பி.பி.சி. தனது நாளாந்த தமிழ், சிங்கள, ஆங்கில நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்புவதை இடை நிறுத்தியுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலுள்ள அரச அதிகாரிகளால் இந்த நிகழ்ச்சி தொடர்ந்தும் தணிக்கை செய்யப்பட்டு வந்ததால் பி.பி.சி. இந்த முடிவை எடுத்துள்ளது.

பி.பி.சி. நிகழ்ச்சியை தணிக்கை செய்தது மக்களின் தகவல் அறிந்து கொள்ளும் உரிமையைப் பறிப்பதாகும். பி.பி.சி. நிறுவனம் இணையத்தளம் மூலம் உலகெங்கும் வாழும் எந்தவொருவருக்கும் நேரடியாக செவிமடுக்கக் கூடிய இந்த பி.பி.சி. நிகழ்ச்சி ஒப்பந்தத்தின் படி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவைகளிலும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த சிலரால் நிகழ்ச்சியின் சில பகுதிகளை தணிக்கை செய்து ஒலிபரப்பாக்குவது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலுள்ள அரச “கோமாளிகளின்’ கோமாளித்தனமான செயற்பாடாகும்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூலம் பி.பி.சி. நிகழ்ச்சியை ஒலிபரப்ப இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும் பி.பி.சி. நிறுவனத்துக்குமிடையிலான ஒப்பந்தத்தின் படி அந்த நிகழ்ச்சி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூலம் உள்ளபடியே ஒலிபரப்பப்பட வேண்டும். பி.பி.சி. இலங்கை அரசின் வானொலிச் சேவையின் வளர்ச்சிக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களில் பங்களிப்புச் செய்வதென்பதே ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடாகும். அந்த நிகழ்ச்சியை தணிக்கை செய்து ஒலிபரப்புவது ஒப்பந்தத்தை மீறுவதாகும். மக்களது தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத செயற்பாடாகும்.

பி.பி.சி. நிகழ்ச்சி குறித்து ஏதாவது பிரச்சினை அரசுக்கு இருந்தால் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாட்டை மேற்கொள்ளாது பி.பி.சி.க்கும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் படி பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாட்டுக்கு வந்து இலங்கை மக்களுக்கு இலங்கை ஒலிபரப்புச் சேவையின் மூலம் முன்னரைப் போல் செவிமடுக்க வசதி செய்யும் படி இலங்கை மக்களுக்கு தகவல் அறிந்து கொள்வதற்கு அரசமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமையை வழங்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.

வவுனியாவில் நலன்புரி நிலையங்களுக்கு சமைத்த உணவு வழங்குவோருக்கு கடும் நிபந்தனைகள்

children-srilanka-02.jpgஇடம் பெயர்ந்து வந்துள்ள வன்னிப்பகுதி மக்கள் வவுனியாவில் தங்கியுள்ள நலன்புரிநிலையங்களுக்கு சமைத்த உணவு வழங்குபவர்களுக்கு சில நிபந்தனைகள் விடுக்கப்பட்டுள்ளது. தரமற்ற, அளவு குறைந்த, பழுதடைந்த உணவு வகைகள் நலன்புரிநிலையங்களுக்கு விநியோகித்தால் கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது.

உணவுப்பொதிகளில் ஈரம் வெளியே கசியாதவாறு கடுதாசியினால் பொதியிடப்படவேண்டும். விநியோகத்திற்கு முன்னர் உணவுப் பார்சலுடன் கச்சேரிக்கு தினமும் குறித்த நேரத்தில் சமூகமளித்து பரிசோதனையின் பின்னரே அவை விநியோகத்திற்கு அனுமதிக்கப்படும் என மாவட்ட செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்தப் பிரிவு கிராமசேவையாளருடைய சிபார்சுடனேயே உணவு விநியோக ஒப்பந்தம் வழங்கப்படுகின்றது. காலை உணவாக கௌப்பி, பாண், நூடில்ஸ் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இரவு உணவுப் பொதி 250 கிராம் கொண்டதாகவும் மதிய உணவுப் பொதி (சோறு) 600 கிராம் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

வன்னியில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அதிரடிப்படையின் 25 முகாம்கள் – பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத்சந்திர தெரிவிப்பு

sri-lanka-police.jpgவன்னியில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் விசேட அதிரடிப் படையின் 25 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியும் பிரதிப்பொலிஸ்மா அதிபருமான கே.எம்.எல். சரத்சந்திர கூறுகையில்;

தற்போது வன்னியில் 24 பிரதான முகாம்கள் உட்பட 25 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. “ஏ9′ வீதியில் ஓமந்தை முதல் மாங்குளம் வரை முகாம்களும், ஓமந்தை முதல் மணலாறு வரை 8 முகாம்களும், வவுனியா பூந்தோட்டப் பகுதியில் 8 முகாம்களும் , கனகராஜன் குளம் நெடுங்கேணி வீதியில் உப முகாமொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் இவர்கள் இங்கு இராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கும் உதவி வருவதாகவும் தெரிவித்தார்.